கருப்புக் கயிறு

2023 அக்டோபர் 16-31, 2023 சிறுகதை

ஆறு.கலைச்செல்வன்

கராத்தே மாஸ்டர் அன்புச்செல்வன் நடத்தும் கராத்தே பள்ளியில் அங்கு பயிற்சி பெற்றுவரும் மாணவ- மாணவிகள் மிகவும் கவலையில் இருந்தார்கள்.

காரணம், பல ஆண்டுகளாக அவர்கள் கராத்தே பயிற்சி மேற்கொண்டும் அவர்களுக்கு கராத்தே போட்டிகளில் பங்கு பெற வாய்ப்புக் கிட்டவில்லை. ‘நாட்டில் எந்த இடத்திலும் மாவட்ட, மாநில அளவில் கராத்தே போட்டிகளே நடக்கவில்லையா?’அல்லது மாஸ்டர் நம்மை அழைத்துச் செல்லவில்லையா? எனத் தங்களுக்குள் பேசி வருத்தப்பட்டனர். எவ்வளவு காலம்தான் பயிற்சியில் இருப்பது, தங்களது திறமைகளை போட்டிகளில் கலந்துகொண்டால் மட்டும்தானே நிரூபிக்க முடியும் என அவர்கள் நினைத்தனர்.

அவர்கள் மட்டுமல்ல, மாணவ-மாணவிகளின் பெற்றோர்களும் அவ்வாறே நினைத்தனர். பயிற்சி பெறும் மாணவ- மாணவிகள் அனைவருமே பள்ளிப் பிள்ளைகள்
தான். அவர்கள் பள்ளியில் பயிலும் பிறமாணவர்கள் வேறு பல கலைகளில், விளையாட்டுகளில் சேர்ந்து போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வாங்கி வரும்போது கராத்தே கலை பயிலும் இவர்களை மட்டும் போட்டிகளில் கலந்துகொள்ளச் செய்யாமல் இருப்பது அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கவலையைக் கொடுத்தது.
ஆனால், அவர்கள் யாருக்கும் இதுபற்றி மாஸ்டரிடம் கேட்கத் துணிவு வரவில்லை. காரணம் அன்புச்செல்வன் மிகவும் கண்டிப்பானவர். கராத்தேயை மிகவும் நேசிப்பவர். சிறந்த முறையில், எவ்விதத் தவறும் இல்லாமல் இந்தக் கலையை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். இருப்பினும், சில பெற்றோர்கள் இதுபற்றி மாஸ்டரிடம் கேட்க வேண்டும் என முடிவு செய்தனர்.

அம்பிகா என்ற மாணவியின் தந்தை காளிமுத்துவும், சரவணன் என்ற மாணவனின் தந்தை சுந்தரமும் ஒரு நாள் மாஸ்டரைச் சந்தித்தனர்.

“மாஸ்டர் சார், கராத்தே போட்டிகள் எங்குமே நடக்கவில்லையா? கடைசி வரை எங்க பிள்ளைகள் பிராக்டிஸ் பண்ணிகிட்டே இருக்கவேண்டியதுதானா? பள்ளிப் படிப்பு முடிஞ்சி கல்லூரிக்குப் படிக்கப்போயிட்டா அவங்களால பயிற்சியைத் தொடர முடியாமலும் போய்விடலாம். இப்பவே ஏதாவது போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்று பரிசுகள் வாங்கினால்தானே நல்லாயிருக்கும்? கிரிக்கெட் போட்டி அடிக்கடி நடக்கிறது. பல மாணவர்கள் அதில் கலந்துகிட்டு பரிசுகள் வாங்கிட்டு வர்றாங்க. எங்களோட பிள்ளைகள் இதையெல்லாம் கேள்விப்பட்டு வருத்தப்படுறாங்க. கிரிக்கெட் போட்டியைப் போல கராத்தே போட்டி நடக்காதா?”, என்று மாஸ்டரைக் கேட்டனர்.
அன்புச்செல்வன் ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு பிறகு பேச ஆரம்பித்தார்.

“இந்தக் கராத்தே என்கிற தற்காப்புக் கலையை நான் பணத்துக்காகக் கற்றுத் தரவில்லை. காசுக்காக கராத்தே போட்டிகள் நடத்தப்படுவதும் இல்லை. போட்டிகளில் கலந்துகொள்ள நிறைவான பயிற்சி முடித்திருக்க வேண்டும். இல்லையேல் போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும். சண்டைப் போட்டிகள் சாதாரணமானது அல்ல. மாணவர்கள் அடிபட்டால் நம் எல்லோருக்குமே வருத்தமாக இருக்கும். அதனால், எப்போது மாணவர்களைப் போட்டியில் பங்குகொள்ள அழைத்துச் செல்லவேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதுவரை பொறுமையாக இருக்கவேண்டும்”, என்று விளக்கம் அளித்தார் அன்புச்செல்வன்.

“எங்க பிள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடங்களில் அவங்களோட நண்பர்கள் எல்லாம் கராத்தே போட்டியைப் பற்றிக் கேட்கிறார்
களாம். அவங்களெல்லாம் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு பரிசுகள், ,கோப்பைகள், சான்றிதழ்கள் எல்லாம் வாங்கிட்டு வர்றாங்களாம். அந்தப் பிள்ளைகள் கராத்தே பயிற்சி எடுக்கும் எங்கள் பிள்ளைகளைக் கிண்டலும் கேலியும் பண்றாங்களாம். அதனால்தான் கேட்டோம். தப்பாக நினைக்க வேண்டாம்”, என்று தங்கள் பிள்ளைகளின் நிலைமையினை எடுத்துச் சொன்னார் மாணவி அம்பிகாவின் தந்தை காளிமுத்து.

“‘நான் ஏற்கெனவே சொன்னதைத்தான் மீண்டும் சொல்வேன். நன்றாகப் பயிற்சி எடுத்ததும் போட்டிகளுக்கு அழைச்சிகிட்டுப் போவேன். உங்க மகள் அம்பிகா மிகவும் சிறப்பாகப் பயிற்சி எடுத்துகிட்டு இருக்கா. அதேபோல சரவணனும் மிகச்சிறப்பாகவே பயிற்சி எடுத்துகிட்டு இருக்கான். கொஞ்சம் பொறுமையா இருங்க. இவங்களெல்லாம் போட்டிகளில் நிறைய பரிசுகளைத் தட்டிக்கிட்டு வருவாங்க. அதற்கு நான் பொறுப்பு”, என்றார் அன்புச்செல்வன்.

மாதங்கள் சில கடந்தன. முறையான கராத்தே பயிற்சியினை அளித்து வந்த அன்புச்செல்வனுக்கு மாணவர்களின் பயிற்சியில் ஓரளவு திருப்தி ஏற்பட்டது. அதேநேரத்தில் தெலங்கானா மாநிலம் அய்தராபாத் நகரில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்துகொள்ள மாணவர்களை அழைத்து வருமாறும் அன்புச் செல்வனுக்கு சென்னையில் உள்ள அவரது பயிற்சியளிக்கும் சங்கத்திடமிருந்து அறிவிப்பு வந்தது.

அன்புச்செல்வன் அந்தப் போட்டியில் கலந்துகொள்ள மாணவர்களைத் தயார் செய்தார். மொத்த மாணவர்களில் நன்றாகப் பயிற்சியில் ஈடுபட்ட பத்துப் பேர்களை மட்டும் தேர்வு செய்தார். அம்பிகாவும், சரவணனும் அதில் இருந்தனர். கராத்தே போட்டிகள் அய்தராபாத்தில் நடக்க இருப்பதையும் அதில் கலந்துகொள்ள பத்துப் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும் அறிவித்தார் அன்புச்செல்வன். அதைக் கேட்ட அவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

தேர்வு செய்யப்படாத மற்ற மாணவர்கள் சற்று சோர்வடைந்தனர்.

“தேர்வு செய்யப்படாதவர்கள் கவலையடைய வேண்டாம். அடுத்த போட்டி விரைவில் பெங்களூருவில் நடக்க இருக்கு. நன்றாகப் பயிற்சி செய்ய வேண்டும். நிச்சயமா எல்லோரையும் அங்கே அழைச்சிகிட்டுப் போவேன். போட்டியில் பங்கு பெறுவது முக்கியம் இல்லை. வெற்றி பெறுவதும் முக்கியம் இல்லை. போட்டியில் பங்குபெற்று எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் திரும்பி வர வேண்டும். அதற்கு நமக்கு கடுமையான பயிற்சி அவசியம். எனக்கு இந்தப் பத்துப் பிள்ளைகளோட பயிற்சி திருப்திகரமாக இருந்ததால் இம்முறை இவர்களை அழைத்துச் செல்கிறேன்.”
இவ்வாறு தேர்வு செய்யப்படாத பிள்ளைகளின் பெற்றோர்களிடம் பதமாக எடுத்துக் கூறினார் அன்புச்செல்வன்.

அவர் சொல்வதும் சரிதான் என்பதை பெற்றோர்களும் உணர்ந்தனர். சிதம்பரத்திலிருந்து அய்தராபாத் சென்று போட்டியில் பங்கு பெற கடும் பயிற்சி அவசியம் என்பதையும், அன்புச்செல்வன் தேர்வு சரிதான் என்பதையும் பெற்றோர்கள் புரிந்துகொண்டனர்.

தேர்வு செய்யப்பட்ட பிள்ளைகளுக்குக் கடும் பயிற்சியளித்தார். அவர்களில் அம்பிகா மிகவும் திறமைசாலியாக விளங்கினாள். மிகவும் புத்திசாலிப் பெண். சண்டைப் போட்டியிலும், கட்டா போட்டியிலும் நிறையப் பதக்கங்களை வாங்கிக் குவிப்பாள் என நம்பினார் அன்புச்செல்வன். அவருக்கு அம்பிகா நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்தாள்.

“மாணவர்கள் சண்டைப் போட்டிகளில் கலந்துகொள்ளும்போது டேமேஜ் ஏதுமின்றி வரவேண்டும்” என்பதே அவரது குறிக்கோள். முகம், மார்பு, கைகளுக்குத் தேவையான தடுப்புக் கவசங்களை வாங்கிக் கொடுத்தார்.

ஒரு நாள் அய்தராபாத் செல்ல உள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி எடுப்பதற்காக அவர்களை வரச்சொல்லியிருந்தார். அவர்கள் வந்து காத்திருந்த நிலையில் அன்புச்செல்வன் வருவதற்குத் தாமதமானது.
அப்போது அந்த மாணவர்கள் அய்தராபாத் போவதைப் பற்றி மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

“அய்தராபாத்தில் பார்க்கவேண்டிய இடங்கள் நிறையவே இருக்கு”, என்றான் சத்யன்.

“சார்மினார்தான் அய்தராபாத்தின் லேண்ட்மார்க். இது 1591ஆம் ஆண்டு முசி ஆற்றங்கரையில் முகம்மது குலி குப்ஷா என்பவரால் கட்டப்பட்டது. ‘சார்’ என்றால் நான்கு, ‘மினார்’ என்றால் கோபுரம். சார்மினார் என்றால் நான்கு கோபுரங்கள் என்று அர்த்தம். அந்த நேரத்தில் பிளேக் நோய் அதிகமாக இருந்ததாம். பிறகு அந்த நோய் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டதாம். அதன் நினைவாகத்தான் சார்மினார் கட்டப்பட்டதாம்” என்று தனக்குத் தெரிந்த செய்திகளைச் சொன்னாள் அம்பிகா.’

“பிளேக் நோய் என்றால் என்ன?” என்று கேட்டான் சரவணன்.

“பிளேக் நோய் கொள்ளை நோய் எனப்பட்டது. இது ஒரு கொடிய தொற்று நோய். எலிகளின் மூலமாகப் பரவும் நோய். அதனால் எலிகளைக் கொல்ல பிரிட்டிஷ் அரசு உத்தரவு போட்டதாம். ஆனால், பாலகங்காதர திலகர் எலிகளைக் கொல்லக்கூடாது எனப் போராடினாராம்”, என்று பதிலளித்தாள் அம்பிகா.

“ஏன் எலிகளைக் கொல்லக்கூடாதாம்?”, என்று மீண்டும் கேட்டான் சரவணன்.

“எலியானது பிள்ளையாரின் வாகனமாம். அதனால் கொல்லக்கூடாதாம். கொன்றால் அது மத உணர்வுக்குத் தீங்காம். அதனால்தான் அப்படிச் சொல்லிப் போராடினார்” என்றாள் அம்பிகா.

“மக்களைப் பத்தி கவலைப்படாம இப்படியெல்லாமா போராடுவாங்க”, என்றாள் வாணி.

“போராடி இருக்காங்களே! கலவரம் பண்றதுதான் அவங்க நோக்கம். சரி, அதை விட்டு விட்டு வேற என்னென்ன பார்க்கலாம் என்பது பற்றிப் பேசுவோம். அய்தராபாத்தில் தலைமைச் செயலகம் அருகே நூற்றுஇருபத்து அய்ந்து அடி உயரத்தில் டாக்டர். அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டிருக்காம்,” என்றாள் அம்பிகா.

“ஆமாம். நான் கூட கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி பேப்பரில் படிச்சேன். இந்த ஆண்டு டாக்டர். அம்பேத்கர் பிறந்த நாளில் முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் திறந்துவைத்தார். உலகில் உயரமான அம்பேத்கர் சிலை இதுதானாம். அதை நாம் அவசியம் பார்க்கணும்”, என்றான் சேகர் என்ற மாணவன்.
மீண்டும் பேசினாள் அம்பிகா.

“அதுக்கு எதிரே உசேன் சாகர் ஏரி உள்ளதாம். இது 1562ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாம். அதை வெட்டி உருவாக்கியவர் உசேன் ஷா வாலி என்பவர். இந்த ஏரி இதய வடிவத்தில் இருக்குமாம். இதனுள் பெரிய புத்தர் சிலை உள்ளதாம். படகு மூலம் அங்குச் செல்லவேண்டும். மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோல்கொண்டா கோட்டை போன்ற இடங்கள் எல்லாம் இருக்கு. ஆனாலும் அதையெல்லாம் பார்க்க மாஸ்டர் விடுவாரோ என்னவோ”
இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டி-ருக்கையில் மாஸ்டர் அன்புச்செல்வன் அங்கு வந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது அவர் காதிலும் விழுந்தது.

“பயிற்சி பண்ணாம என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு-? நான் வர்றதுக்கு முன்னாடி நீங்க வாமிங் எக்சசைஸ் எல்லாம் முடிச்சிருக்க வேண்டாமா? டோர்னமென்டுக்கு இன்னும் ஒருவாரம்தான் இருக்கு. அம்பிகா, நீதான் சீனியர். நீ கூட இப்படிப் பேசிகிட்டு நேரத்தை வீணடிக்கிறீயா? நீ நிறையப் பரிசுகளை அள்ளி வருவாய் என்று நம்பிக்கிட்டு இருக்கேன். என் நம்பிக்கையை வீணாக்கிடாதே! எல்லோரும் கராத்தே டிரஸ் போட்டுக்கிட்டு வரிசையா நில்லுங்க”, என்று சற்றுக் கடுமையாகக் கூறியபடி பயிற்சியை ஆரம்பித்தார் அன்புச்செல்வன்.
சற்று நேரத்தில் அங்கு வந்த அம்பிகாவின் தாயார் லட்சுமி தானும் மற்றொரு பெண்மணியும் பெண் பிள்ளைகளுக்குத் துணையாக அய்தராபாத் வருவதாகத் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் வருவதை அன்புச்செல்வன் விரும்பவில்லை. காரணம், பெற்றோர்கள் வந்தால் பிள்ளைகள் செயல்பாடு சரியாக இருக்காது என்பது அவரது நம்பிக்கை. ஆனால், அவர்கள் விடாப்பிடியாக வருவோம் என்று கூறியதால் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளவேண்டியதாகிவிட்டது அன்புச் செல்வனுக்கு.
அய்தராபாத் செல்லும் நாள் வந்தது. அனைவரும் சென்னைக்குப் பேருந்தில் சென்றனர். அங்கிருந்து தொடர் வண்டியில் செல்ல வேண்டும். கராத்தே பயிற்சியாளர்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் பயணம் செய்தனர். அம்பிகாவின் அம்மாவும் அவருடன் மற்றொரு பெண்மணியும் உடன் வந்தனர். அம்பிகாவை விட்டு அவளது அம்மா லட்சுமி நகரவே இல்லை.

மாலை ஆறு மணிக்குப் புறப்பட்ட தொடர்வண்டி இரவு முழுவதும் பயணத்தைத் தொடர்ந்தது. விடிந்ததும் அனைவரும் விழித்து எழுந்தனர். அப்போது அவர்களிடம் அன்புச்செல்வன் வந்து பேசினார்.

“எல்லோரும் வெளியில் பாருங்க. நாம் அய்தராபாத் நகரை நெருங்கிக்கிட்டு இருக்கோம். சுற்றுச்சூழலையெல்லாம் கவனித்துப் பாருங்க. பிற்பாடு நான் உங்ககிட்ட சில கேள்விகள் கேட்பேன். பதில் சொல்லணும்.”

மாஸ்டர் இவ்வாறு கூறியதும் அனைவரும் தங்கள் பார்வைகளை சன்னலுக்கு வெளியே செலுத்தினர். அம்பிகா வெளியில் தென்பட்ட காட்சிகள் அனைத்தையும் தன் மனதில் பதிய வைத்துக்கொண்டாள்.

தொடர்வண்டி அய்தராபாத் நகரை அடைந்ததும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து அவர்களை வரவேற்று காரில் ஏற்றிச்சென்று, அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அன்று அவர்கள் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டு மறுநாள் அரங்கத்திற்குச் சென்று கராத்தே போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.
அன்று மாலை மாஸ்டர்களுக்கான சிறப்புக் கூட்டம் அரங்கத்தில் நடைபெற்றது. எல்லா மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த தலைமைப் பயிற்சியாளர்களோடு அன்புச்செல்வனும் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் வரவேற்று போட்டிகளுக்கான விதிமுறைகளைப் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார்கள். அவர்கள் கூறிய முக்கியமான விதிமுறைகள் என்னவென்றால், போட்டிகளில் பங்கு பெறும் கராத்தே வீரர்கள் யாரும் உடம்பில் எந்தவிதமான மதச்சின்னங்களையும் அணிந்திருக்கக்கூடாது என்பதுதான். மதச்சின்னங்களைக் கழற்றிவிட்டுத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும். மறைத்து வைத்துக்கொண்டு போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றாலும் கண்டுபிடித்துவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை மிகவும் கண்டிப்புடன் தெரிவித்தார்கள்.

மறுநாள் காலை போட்டி தொடங்கியது. அரங்கம் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது.
தொடக்கவிழா நிகழ்ச்சியாக ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் போட்டியில் பங்குகொள்ள வந்திருந்த கராத்தே வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து வந்த வீரர்களுக்கு தலைமை ஏற்று அம்பிகா முன்னால் பீடுநடை போட்டு வந்தாள்.

அம்பிகாவின் அம்மா லட்சுமிக்கு மிகவும் பெருமையாக இருந்தது. மகிழ்ச்சியில் திளைத்தார்.
தான் அழைத்துவந்த கராத்தே பயிற்சி பெற்ற பிள்ளைகள், (அதிலும் குறிப்பாக அம்பிகா) வெற்றி பெறுவதன்மூலம் தனக்கு பெருமைதேடித் தருவார்கள் என அன்புச்செல்வன் நம்பினார்.
கராத்தே வீரர்களின் அணி வகுப்பு முடிந்தவுடன் முறைப்படி போட்டி தொடங்கியது.

ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வந்திருந்த போட்டியாளர்கள் தங்கள் தனித்திறமைகளைக் காட்டினர். கற்பனைச் சண்டை எனப்படும் கட்டாபோட்டிகள் முதலில் தொடங்கின.
பல மாநிலப் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளைக் காட்டிக்கொண்டிருந்த நிலையில் அடுத்து அம்பிகாவின் முறை வரவிருந்தது. அம்பிகா கராத்தே உடையில் மிடுக்குடன் காணப்பட்டாள். மாஸ்டர் அன்புச் செல்வனை வணங்கி அவரது வாழ்த்துகளைப் பெற அவர் அருகே வந்தாள்.
அவர் அப்போதுதான் அவளது இடதுகை மணிக்கட்டைப் பார்த்தார். அவள் கருப்பு நிறத்தில் கயிறு கட்டியிருந்தாள்.

“அம்பிகா, கையில் என்ன கயிறு? மதச் சின்னங்களை அணியக்கூடாது என்று நான் முன்னமே சொன்னேன் இல்லையா? உடனே அதை அவிழ்த்துப் போடு”, என்று கடுமையுடன் கூறினார்.
மாஸ்டர் சொன்னவுடன் தன் கையில் கட்டியிருந்த கருப்புக் கயிற்றை அம்பிகா அவிழ்க்க எத்தனித்தபோது அவளது அம்மா லட்சுமி பதறியபடி அவள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு தடுத்தார்.

“அடியே அம்பிகா, அந்தக் கயிற்றை சாமியார் பூசை செய்து உன் கையில் கட்டியிருக்கார். அதை அவிழ்க்கவே கூடாது. அதை அவிழ்த்தா உனக்குக் கஷ்டம் வந்து சேரும். அது தெய்வக் கயிறு, நோன்புக் கயிறு,” என்றார்.

அன்புச்செல்வனுக்கு எரிச்சலாக வந்தது.

“அம்மா, மதச்சின்னம் இருந்தா தகுதி நீக்கம் செய்திடுவாங்க. நாம் இங்கு வந்ததன் நோக்கமே வீணாயிடும். அம்பிகாவின் எதிர்காலத்தை வீணாக்கிடாதீங்க! ரொம்ப காலம் பயிற்சி பெற்று இங்க வந்திருக்கா”, என்று எடுத்துச் சொன்னார்.

“அதெல்லாம் முடியவே முடியாது! ஏன் மாஸ்டர், கயிறும் கருப்பாயிருக்கு; அவளும் கருப்பாகத்தானே இருக்கா? கயிறு கட்டியிருக்கிறதே தெரியலையே. அப்படியே அனுப்பி விடுங்க.”
அம்பிகாவின் அம்மா இப்படிக் கூறியதும் மிகவும் கோபமடைந்தார் அன்புச் செல்வன். அவள் அம்மாவை அழைத்து வந்ததே தவறு என நினைத்தார். அப்போது போட்டிக்கு அவள் பெயரைக் கூறி அழைத்தார்கள். அம்பிகாவின் அம்மா அவளை போட்டி நடைபெறும் இடத்திற்குத் தள்ளிவிட்டாள்.

அம்பிகாவிற்கு வியர்த்துக் கொட்டியது. பயிற்சியளித்த ஆசானுக்கு அவமரியாதையைப் பெற்றுத்தர அவள் விரும்பவில்லை.
போட்டி துவங்கியது. அம்பிகா வணக்கம் தெரிவித்து நின்ற போதே நடுவர்கள் அவள் கையில் கட்டியிருந்த கயிறைப் பார்த்துவிட்டனர். உடனே அவளைத் தகுதி நீக்கம் செய்து வெளியேறும்படி கட்டளையிட்டனர்.

அம்பிகா அவமானம் தாங்க முடியாமல் வெளியேறினாள். அன்புச்செல்வன் தான்
அளித்த பயிற்சியெல்லாம் வீணாகிவிட்டதே என்று வருந்தினார்.

கனவுகள் தகர்ந்த நிலையில் வெளியேறிய அம்பிகா திடீரெனத் தன் கையில் கட்டியிருந்த கயிற்றைப் பிய்த்து எறிந்தாள். அதைக் கண்ட அவள் அம்மா பதறினார்.

“அம்மா, இது தெய்வக் கயிறு இல்லை; நோன்புக் கயிறும் இல்லை. எனது கனவுகளைத் தகர்த்த தூக்குக் கயிறு. எனக்கும் நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறியும் திறன் வந்துடுச்சி. உன்னோட மூடநம்பிக்கைகளை என்னிடம் இனியும் திணிக்க நினைக்காதே! அடுத்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று என் கனவை நனவாக்கி, எனக்குப் பயிற்சி கொடுத்த மாஸ்டருக்குப் பெருமை சேர்ப்பேன்” என்று ஆவேசத்துடன் பேசினாள் அம்பிகா.

அன்புச்செல்வன் அவள் செய்கையால் மகிழ்ச்சியுடன் திருப்தியடைந்து மற்ற பணிகளில் ஈடுபடலானார். ♦