சனாதனம் தகர்த்து  சமதர்மம் காத்தவர்  வள்ளலார்! – மஞ்சை வசந்தன்

2023 முகப்பு கட்டுரை ஜூலை 1-15, 2023
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மற்றும் அவற்றின் கிளை அமைப்புகளால் வெகுவாக உயர்த்திப் பிடித்துக் கொண்டாடப்-படுவது சனாதன தர்மம்.
செத்துப்போன காஞ்சிப் பெரிய சங்கராச்சாரி (சந்திரசேகரன்) தனது தெய்வத்தின் குரல் முதல் பகுதியில், ஆதிசங்கரர் நெறியே சனாதனம்தான் என்கிறார்.
ஆரியர் அனைவரும் சனாதன தர்மமே சிறந்தது; நிலையானது, சமுதாய நலனுக்கு ஏற்றது என்கின்றனர். காரணம், ஆரியர் மேலாதிக்கத்தை, நலத்தை, உயர்வை உறுதி செய்ய உருவாக்கப்பட்டது சனாதனம். எனவே அவர்கள், தங்கள் அடிப்படைக் கொள்கையாக சனாதனத்தைக் கொண்டனர்.
மற்றவர்களுக்கு எவ்வளவு கேடு செய்வதாய், இழிவு தருவதாய் இருந்தாலும், ஆரியர்களைப் பொறுத்தவரை, தங்களுக்கு நலம் பயக்கக் கூடியதாயின் அதைச் சிறந்தது, உயர்ந்தது, புனிதமானது என்பர். அதர்மத்தின் அசல் வடிவமான மனுசாஸ்திரத்தை மனுதர்மம் என்பர். அதேபோல் அதர்மத்தின் அடிப்படையாய் நிற்கும்
சனாதனத்தையும் சனாதனதர்மம் என்றனர்.
ஆரியர்களுக்கு எது நன்மை பயக்கக் கூடியதோ அது ஆரியர் அல்லாதாருக்குக் கேடு தரக்கூடியது என்பது அப்பட்டமான உண்மை. அதனால்தான் தந்தை பெரியார், ஆரியர்கள் எதை ஆதரிக்கிறார்களோ அதை ஆரியர் அல்லாதார் எதிர்க்க வேண்டும் என்று ஒரு கோட்பாட்டையே கொடுத்தார். அவர் சொன்னது நூறு விழுக்காடு நடைமுறைக்கு உகந்ததாகும். ஆரியர்கள் தூக்கிப்பிடிக்கும் சனாதனக்கொள்கைகள் என்ன என்பதை முதலில் அனைவரும் அறியவேண்டும்.
சனாதனம் என்றால் என்ன?
சனாதனம் பற்றிப் பேசுகின்றவர்களில் பெரும்பாலோர் அதைப் பற்றி என்னவென்று அறியாமல் பேசுகின்றவர்களே ஆவர். வேதம் உயர்ந்தது என்று காலம் காலமாக கண்மூடித்தனமாகச் சொல்லிக்கொண்டு வருவது போன்றதே, சனாதனம் உயர்ந்தது என்பதும். எனவே, சனாதனம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம்.
‘சனாதன தர்மம்’ என்றால் நிரந்தரம்  புராதன சட்டம் என்று பொருள்.
‘ஸ்மிருதி’ என்ற அடிக்கல் மீது எழுப்பப்பட்ட கட்டடம் போன்றது சனாதன தர்மம். செவிகளால் கேட்கப்பட்டது என்று இதற்குப் பொருள். ‘என்றும் நினைவில் நீங்காமல் இருப்பது’ என்று பொருள்.
தேவர்களிடமிருந்து கேட்டும் பெற்றும் அறிஞர்கள் வழங்கியது ‘ஸ்ருதி’. மனப்பாடமாக அவற்றை மனதில் பதித்துக் கொண்டவர்கள் தொடர்ந்து அவற்றை உச்சரித்து வந்ததால் ‘ஸ்ருதி’ பரவிப் படர்ந்தது.
ஆசிரியர் ஸ்ருதியைப் பாடப்பாட, அவரது சீடர்களும் தொடர்ந்து, நிறுத்தி நிதானமாக அவரைப் பின்பற்றிப் பாடுவது வழக்கம். மனதில் நன்கு பதியும் வரை அவர்கள் பாடி வந்தார்கள். பண்டைய நாள்களில் தங்கள் முன்னோர்கள் ஸ்ருதியைக் கற்றுக் கொண்டது போலவே இன்றும் பிள்ளைகள் கற்றுக் கொண்டு வருகிறார்கள்.
ஸ்ருதியில் நான்கு வேதங்கள் உள்ளன. அவை  ரிக் வேதம், சாம வேதம், யஜுர் வேதம், அதர்வ வேதம் ஆகியவையாகும்.
ஒவ்வொரு வேதமும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
1. மந்திரம் அல்லது சம்ஹிதா (தொகுப்பு), 2. பிராமணம், 3. உபநிஷதம்
மந்திரம் என்னும் முதல் பகுதி விசேஷ சக்தியும் நல்ல விளைவுகளும் தரக்கூடிய உச்சரிப்புகள் கொண்டதாய் நம்பப்படும் பகுதி. தேவர்களைத் துதிக்கும் பாடல்கள் வடிவில் இவை உள்ளன.
இரண்டாவது பகுதியான ‘பிராமணா’ ஒரு சடங்கு நடப்பதற்கான விதிமுறைகளை வழங்குகிறது. ஏற்கெனவே உச்சரிக்கப்பட்ட மந்திரங்கள் சார்ந்த பின்புலக் கதைகளைக் கூறும் ‘பிராமணா’, குறிப்பிட்ட சில சம்பிரதாயமான சடங்குகளை எப்படிச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்று விளக்குகிறது.
மூன்றாவது பகுதியான உபநிஷதம், பிரம்மனைப் பற்றியும், அகம்_புறம் பற்றிய உண்மையையும், மனிதனுக்கும் உலகத்திற்கு மிடையே உள்ள பிணைப்பு மற்றும் விடுதலைக்கான வழிகள் பற்றியும் கூறுவது.
ஸ்ருதிக்கு அடுத்தபடியாக ஸ்மிருதி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படை ஸ்ருதிதான். இதை தர்ம சாஸ்திரம் என்றும் கூறலாம். ரிஷி முனிகளால் படைக்கப்பட்ட நான்கு நூல்களை உள்ளடக்கியதே ‘ஸ்மிருதி’ (தர்ம சாஸ்திரம்).
அவை,
1) மனுஸ்மிருதி, 2) யக்ஞவால்க்ய ஸ்மிருதி, 3) ஷங்க லிகித ஸ்மிருதி, 4) பராசர ஸ்மிருதி _ ஆகியவை.
இவை நான்குமே தனிமனித, சமூக வாழ்வியல் கோட்பாடுகளை உள்ளடக்கியவை. ஆரியக் கோட்பாடுகளின் சுருக்கமே மனுஸ்மிருதி. ஆரிய இனத்திற்கே சட்டம் வகுக்கும் வல்லுநராக விளங்கியவர் மனு.
விவாஸ்வத் என்பவரின் மகன்தான் இந்த ஏழாவது மனு என்பது மனுஸ்மிருதியின் சில சுலோகங்கள் மூலம் தெரிய வருகிறது. இந்த ஏழாவது மனு வகுத்த சில கோட்பாடுகள் மனுஸ்மிருதியில் உள்ளன.
சனாதன தர்மத்தின் அடிப்படை ஸ்ருதியும் ஸ்மிருதியும் என்றாலும், அவற்றுக்குப் பலம் சேர்க்கும் தூண்கள் போல் மேலும் இரு நூல்கள் உள்ளன. ஒன்று ‘புராணானி’. மற்றொன்று ‘இதிஹாஸ்’. (Ithihas).
கல்வியறிவு குறைந்தவர்களுக்குப் புராணம் பல கதைகளை வழங்குகிறது. வேதங்களைக் கற்காதவர்களுக்கு புராணக் கதைகள் சுவையானவை. சில கதைகள் புரியாத புதிர்கள் போலவும் இருக்கும். ஓர் ஆசிரியரின் உதவியோடு புரிந்து கொள்ளலாம்.
இதிஹாஸ் (வரலாற்றில்) கவிதைகளால் ஆன இரு பெரிய தொகுப்பு நூல்கள். ஒன்று, ‘ராமாயணம்’; மற்றொன்று ‘மகாபாரதம்’.
சனாதனம் வாழ்வியலை இரு கூறுகளாகப் பிரிக்கிறது. ஷடங்கானி, ஆறு அங்கங்களைக் குறிக்கும் சொல். இந்த ஆறு அங்கங்களும் ஆறு கிளைகளாய்ப் பிரிந்து கருத்துக் கூறுகிறது. குறிப்பிட்ட ஆறு கிளைகளிலும் இலக்கணம், கைரேகை சாஸ்திரம், மொழியியல், கவிதை உள்பட 64 கலைகளும், 64 விதமான பாடங்களும் உள்ளன.
இரண்டாவது பகுதியை ‘ஷட்தர்ஷனானி’ என்று அழைக்கிறது சனாதன தர்மம். ஆறு விதமான சமூகப் பார்வை என்று பொருள். ஆறு வழிமுறைகள் ஆறு விதிகள் என்றும் கூறலாம். இவற்றின் நோக்கம் தனி மனிதன் ‘நான்’ என்ற உணர்விலிருந்து விடுபட்டு வெளியேறி, பரமாத்மாவுடன் அய்க்கியமாகிவிட வழிவகுப்பது.
நியாயா, வைஷேஷிகா
இறைவனைப் புரிந்து கொள்வது ஒன்றே உன்னதமான ஞானம் என்று பொருள். தனக்குள் இருக்கும் இறைவனை மனிதன் பல வழிகளில் புரிந்து கொள்ளலாம் என்பது மய்யக் கருத்து.
சனாதன தர்மம் விளக்கும் மேற்கண்ட ஆறு நெறிமுறைகளை கீழ்கண்டபடி பட்டியலிடலாம்.
1. நியாயா, 2. வைஷேஷிகா, 3. சங்க்யா,
4. யோகா, 5. மிமாம்ஸா, 6. வேதாந்தம்.
இவை அனைத்தையும் அறிந்தவன் உண்மையான ஞானம் பெறுகிறான் என்கிறது சனாதன தர்மம்.
மனிதன் தனது அனுபவங்கள் மூலமும், தர்க்கங்கள் மூலமும் அறிவு பெறுவதை ‘நியாயா’ ‘வைஷேஷிகா’ என்று சனாதனம் கூறுகிறது.
‘புருஷ்’ _ ‘பிரக்ருதி’ என்னும் இரண்டு அம்சங்களை ‘சங்க்யா’ என்ற பகுதி புரிய வைக்கிறது. ‘யோகா’ நமக்கு அய்ம்புலன்களின் ஆற்றலை விளக்குகிறது. அய்ந்து அங்கங்கள் நம்மை அன்றாடச் செயல்கள் புரிய வைக்கின்றன என்கிறது யோகா. இறைவனை அறிந்து கொள்ள அவற்றை மனிதன் சரியாகப் பயன்படுத்தி, தன்னை வளர்த்துக் கொள்ள முடியும். இறைவன் தனக்குள்ளேயே இருக்கிறான் என்ற புரிதல் மனிதனுக்கு ஏற்பட இவை யாவும் வழிவகுக்கின்றன.
‘மிமாம்ஸா’ என்னும் பகுதி ‘கர்மம்’ என்பதை விளக்குகிறது. நடப்பவை எல்லாமே கர்ம பலன்கள் என்பது மய்யக் கருத்து. கடைசிப் பகுதியான வேதாந்தம் _ கடவுள், ஆத்மா, ஜீவன் என்ற மூன்றையும் புரிய வைக்கிறது.
நான்கு வருணங்கள்
எண்ணற்ற பிறவிகள் மூலம் ஜீவாத்மாவின் நீண்ட பயணம் தொடர்கிறது. ‘வர்ணங்கள்’ என்ற பெயரில் அந்தப் பயணத்தில் நான்கு கட்டங்கள் உள்ளன என்கிறது மனு சாஸ்திரம்.
தான் வரையறுத்துள்ள சமூக ஆட்சி முறையில் அவற்றை நான்கு வகுப்புகள் அல்லது வர்ணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் மனு. சூத்திர ஜாதி, வைசிய ஜாதி, க்ஷத்திரிய ஜாதி, பிராமண ஜாதி என்பவை அவை.
ஜீவாத்மாக்கள் இந்த நான்கையும் கடந்தே செல்கின்றன. அந்த நான்கு நிலைகளையும் சமூக ஆட்சி முறையின் அடிப்படையாக்கி விட்டது சனாதனம்.
சூத்திர ஜாதி:
சூத்திரன் ஊழியம் செய்வது மட்டுமே அவனுடைய கடமையாகிறது. இப்படிப்பட்ட இளம் ஜீவாத்மா, சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள குடும்பத்தில் மட்டுமே பிறவி எடுக்கிறது. அப்படி பிறப்பவர்கள் சுமை கூலிகளாகவும், கைத்தொழில் செய்பவர்களாகவும், பிறருக்கு அடி பணிந்தே வாழ்பவர்களாகவும் காலம் கழிப்பார்கள். சனாதன தர்மத்தின் சமூகக் கோட்பாடுகளின்படி இப்படிப்பட்ட ஜீவாத்மாக்கள் சூத்திர ஜாதியில் பிறப்பார்கள்.
வைஸ்ய ஜாதி:
வைஸ்யர் சனாதன தர்ம கோட்பாடுகளின்படி இரண்டாம் நிலை ஜீவாத்மாக்கள் வைஸ்ய ஜாதியில் பிறந்தவர்கள். சுயநலமின்றிப் பொதுநலம் கருதி வாழ்வதும், பிறர் வாழ்வு வளம் பெற உதவுவதும் இவர்களுடைய நோக்கமாகி அதற்கேற்றபடி பொருள்களை உற்பத்தியிடத்திலிருந்து மக்களுக்குக் கொண்டு சேர்ப்பவர்கள்.
க்ஷத்திரிய ஜாதி:
க்ஷத்திரியர் சட்டங்கள் இயற்றுவதிலும், ஆட்சி புரிவதிலும் வல்லவர்கள். இந்தப் பிரிவில் மன்னர்கள், நீதியரசர்கள், வழக்குரைஞர்கள், போர் வீரர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை உள்ள அனைவரும் இதில் அடங்குவர். சனாதன தர்ம ஆட்சிமுறைக் கோட்பாடுகளின்படி, இவர்கள் க்ஷத்திரிய ஜாதியினர்.
பிராமண ஜாதி:
பிராமணர் ஆலய வழிபாட்டில் ஈடுபடுபவர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவ ஞானிகள், வேதாந்திகள்  இவர்கள் எல்லோரும் நான்காவது உயர்படிநிலை ஜாதியைச் சேர்ந்தவர்கள். இதற்கேற்ற ஜீவாத்மாக்களே பிராமணர்களாகப் பிறக்கிறார்
கள் என்கிறது சனாதன தர்மம்.
ஒவ்வொரு ஜாதியினரும் மற்ற ஜாதியினரின் பணிகளை வரம்பு மீறிச் செய்து விடுவதால்தான் பல தீங்குகள் விளைகின்றன. ஒவ்வொரு ஜாதியினரும் தங்கள் ஜாதிக்குரிய தங்கள் ஜாதிக்கேற்ற, கடமைகளைப் புறக்கணிப்பதால் பல தீமைகள் உருவாகின்றன.
அவரவர் தங்கள் ஜாதிக்குரிய பண்பு-களுடன், குணாதிசயங்களுடன் நெறி தவறாமல் வாழ்ந்தாலே போதும். ஒவ்வொரு ஜாதியினரும் தத்தமது தர்மங்களைக் கடைப்பிடித்து அவற்றின்படி வாழ்ந்தாலே நாளடைவில் ஜாதிகள் சார்ந்த குழப்பங்களும் விவாதங்களும் மறைந்தே போகும் என்கிறது சனாதனம்.
வேதங்களைக் கற்பது, கற்பிப்பது, வேள்வி, யாகம், வழி காட்டுதல், ஏற்பது, வழங்குவது போன்றவை பிராமணனுக்கு;
சமுதாய நலம், தியாகம், பற்றற்ற நிலை, வேதப் பாராயணம் போன்றவை க்ஷத்திரியனுக்கு; வணிகம், கால்நடை  பராமரிப்பு, உழவுத்தொழில் போன்றவை  வைஸ்யனுக்கு.
இறைவன் சூத்திரனுக்குக் கட்டளையிட்டுள்ள ஒரே கர்மம், கடமை – எவ்வித மறுப்பும் கூறாமல், தயக்கமில்லாமல் மற்ற மூன்று ஜாதியினருக்கும் கீழ்ப்படிந்து ஊழியம் செய்வது, சேவை செய்வது மட்டுமே.
சனாதன தருமத்தின் அடிப்படைக் கொள்கை வருணாஸ்ரமம். பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு வருணப் பிரிவுகளையும் கடவுளே படைத்ததால், இவை பிறப்பால் வருபவை. இவை மாற்ற முடியாதவை. பரம்பரை பரம்பரையாய் வருபவை. எனவே, இப்பிரிவுகள் நிலையானவை. இதுவே சனாதன தருமம். சனாதனம் என்றால் நிலையானது. நிலையான மாற்ற முடியாத வருணாஸ்ரம தர்மம் என்பதால் அது சனாதன தர்மம் எனப்பட்டது” என்று சனாதனத்திற்கு விளக்கம் கூறியுள்ளனர்.
இப்படிப்பட்ட சனாதனத்திற்கு வள்ளலார் உச்ச நட்சத்-திரம் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறுகிறார்.
இவருக்கு சனாதனமும் தெரியாது, வள்ளலாரையும் தெரியாது. அவரின் எஜமானர்களான ஆர்.எஸ்.காரர்கள் கூறுவதை அப்படியே இங்கு பேசுகிறார்; செய்கிறார். வள்ளலார் கொள்கை அறிந்த எவரும் அவரை ‘சனாதனவாதி’ என்று கூற மாட்டார்கள். வள்ளலார் கூறியவற்றை நன்கு படித்து, சிந்தித்தால் அவர் சனாதனத்திற்கு எதிரானவர் என்பதும் சமதர்மத்தை ஆதரித்தவர் என்பதும் விளங்கும்.
அவரது இறைக் கொள்கையில் மதம் இல்லை, ஜாதியில்லை, சம்பிரதாயங்கள் இல்லை, சடங்குகள் இல்லை, கால விரையம் இல்லை, கண்மூடி வழக்கம் இல்லை, பொருள் வீணடிப்பு இல்லை, போட்டியில்லை, பூசல் இல்லை, மூடநம்பிக்கை இல்லை.
பெரியார்
காலத்தைக் கொண்டே அறிவுத்திறனை, முடிவை, கொள்கையை எடை போட வேண்டும். இன்றைக்குக் கடவுள் இல்லையென்று முடிவெடுக்க எவ்வளவோ காரணிகள் புலப்பட்டு விட்டன. அறிவியலும், அனுபவமும், சிந்தனை வளர்ச்சியும் அதற்குத் துணை நிற்கின்றன. ஆனால், இவையெல்லாம் ஏற்படாத காலத்திலே ஒப்புரவு நோக்கி, உலக நோக்கில் ஒரு சிந்தனை தோன்றுவது என்பது ஒப்பிலா நிலையே ஆகும். கடவுள் நம்பிக்கையில் வள்ளலார் கருத்துக் கூறியிருந்தாலும், அவர் வாழ்ந்த காலத்தில், அதை விடச் சிறப்பாக, சரியாக, துல்லியமாக யாரும் கூறிவிட முடியாது.
வள்ளல் இராமலிங்க அடிகளார் அவர்கள், புரட்சித் துறவியாய், சமதர்மச் சிற்பியாய்க் கொடி உயர்த்தியவர். அவருக்கு இணையாக எந்தத் துறவியையும் சொல்ல இயலாது.
காரல் மார்க்ஸ்
எனது ஊருக்கு (மஞ்சக்கொல்லை)அருகில் தான் வள்ளலார் பிறந்த மருதூர் என்னும் ஊர் உள்ளது. சாதாரணமான சிற்றூர். வெளித் தொடர்பு அதிகம் இல்லாத உட்கிராமம். இப்போது, ஓரளவு போக்குவரத்து வசதிபெற்றுள்ளது. வள்ளலார் பிறந்த காலத்தில் எப்படியிருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அப்படியொரு சூழலில் பிறந்த வள்ளல் பெருமான் உலகுக்கே வழிகாட்டியாய் வாழ்ந்தார் என்றால், அது செப்பருஞ் சீர்மிக்க செயலாகும்.
சடங்குகளும் ஜாதிகளும் மதமும் மடமையும் மண்டிக்கிடந்த காலத்தில்  சூழலில் – சமரசத்தையும் பகுத்தறிவையும் ஒருவர் போதித்தார் என்றால் அது என்ன சாதாரணச் செயலா? மடமை மண்டிக்கிடந்த காலத்தில், அறிவுக்கும், ஆக்கத்துக்கும் உதவாத சாத்திரங்களை, சடங்குகளை, ஜாதியை, சமயத்தை (மதத்தை) எவ்வளவு துணிவோடு எவ்வளவு அக்கறையோடு சாடியுள்ளார் தெரியுமா?
வள்ளல் பெருமான் கொள்கையை வையகம் ஏற்றுக் கொண்டுவிட்டால், வேறு சீர்திருத்த இயக்கங்களுக்கே வேலையில்லாமல் போகும்! கம்யூனிஸ்ட்களுக்குக் கார்ல் மார்க்ஸ் சொன்னதை, பிற்காலத்தில் பெரியார் சொன்னதை அப்போதே சொல்லி அகிலத்திற்கு வழிகாட்டியவர் வள்ளல் பெருமான்.
ஆத்திகர் பலர், அவர் ஆரம்ப காலத்தையே அறிவர். அவரது சிந்தனையின் பரிணாம வளர்ச்சியை முழுமையாய் அறிந்தவர்கள், அத்தனைச் சீர்திருத்த இயக்கங்களுக்கும் அகிலம் முழுமைக்கும் அவரே வழிகாட்டி என்பதை எளிதில் அறியமுடியும்.
அவரது ஆறாந் திருமுறை அற்புதமான படைப்பு. அவரைவிட ஜீவகாருண்ய சீலர் வேறொருவர் இலர்; அவரைவிட மடமையை எதிர்த்தவர் மற்றொருவர் இலர்; பசிப்பிணி போக்க அமைப்புக் கண்டவர் பாரினில் அவர்போல் இன்னொருவர் இலர்.
இதோ வள்ளல் பெருமான் வழங்கிய சமதர்ம பகுத்தறிவு முத்துகள் சிலவற்றை வரிசைப்படுத்துகிறேன், படியுங்கள். அவற்றைப் படித்தபிறகு கூறுங்கள், வள்ளலார் சனாதானவாதியா? சமதர்மவாதியா? என்று. “இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமும் ஆம்
எவ்வகை உயிர்களும் இன்புற வேண்டும்’’
“உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக’’ 
“அருளே நம்மியல் அருளே நம்உரு
அருளே நம் வடிவு 
அருளே நம் அறிவு அருளே நம் மனம்
அருளே நம் குணம்
அருளே நம்துணை, அருளே நம் தொழில்
அருளே நம்விருப்பு
அருளே நம்பொருள், அருளே நம் ஒளி 
அருளே நம்குலம், அருளே நம் இனம் 
அருளே நம்சுகம், அருளே நம்பெயர்’’
எவ்வளவு உயர்ந்த நோக்கு பாருங்கள்! உலக உயிர்கள் அனைத்தும் இன்புற வேண்டும். அருள்நெறியே உயர்நெறி என்று கூறி அதற்காகப் பாடுபட்டவர் அவர்.
புத்தரும், மகாவீரரும் போதித்தார்களே தவிர, செயலில் இறங்கவில்லை. ஆனால், வள்ளல் பெருமான் வழிகாட்டியதோடு, வாழ்ந்தும் காட்டி அமைப்புகளை நிறுவி அதற்காக உழைத்தார். அவர், அருள் என்று சொல்வதெல்லாம் ஆண்டவன் அருள் என்று அர்த்தமில்லை. மனித நேயம், எல்லா உயிர்கள் மீதும் அன்பு, கருணை, பற்று, பாசம் வேண்டும் என்பதைக் குறிக்கும் ஒரே சொல்தான் அது.
அடுத்து, சமுதாயப் பிணிகளை, மூடநம்பிக்கைகளை, எப்படிச் சாடுகிறார் பாருங்கள்.
“கலை உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக’’ 
ஜாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் 
சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
நித்திய வாழ்க்கையும் சுகமும் 
ஆதியும் நடுவும் அந்தமும் எல்லாம்
அருட்பெருஞ்சோதி என்றறிந்தே’’’
“மலைவுறு சமய வலை அகப் பட்டே 
மதி மயங்கினேன்’’ 
“எல்லா உயிரும் இன்புற்று வாழ
மருளான் பற்பல மார்க்கங்கள் எல்லாம்
வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போக.’’
“இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை 
இருவாய்ப்புப் புன்செயல் எருவாக்கிப் போட்டு
மருட் ஜாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம 
வழக்கம் எலாம் குழிக்கொட்டி மண்மூடிப்போக’’ 
“நால்வருண ஆச்சிரம ஆசாரம் முதலாம்
நவின்றகலைச் சரிதம் எல்லாம் பிள்ளை விளையாட்டே’’ 
“இயல்வேதா கமங்கள் புராணங்கள் இதிகாசம் 
இவைமுதலா இந்திரசாலம் கடையாய் உழைப்பர்
மயலொருநூல் மாத்திரந்தான் சாலமென அறிந்தார்
மகனே நூல் அனைத்தும் சாலமென அறிக.’’
“உலகறி வேதாகமத்தைப் பொய்யெனக் கண்டுணர்வாய்’’
“ஜாதி சமயங்களிலே நீதி பல வகுத்த
சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று’’
என்று ஜாதி, மத, சாத்திரங்களைக் கண்டித்த வள்ளலார் சனாதனத்தை ஏற்பாரா? 
“மதத்திலே சமய வழக்கிலே மாயை 
மருட்டிலே இருட்டிலே மறவா 
மதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
கழிக்கின்றார்.’’ 
“குலத்திலே சமயக் குழியிலே நரகக்
குழியிலே குமைந்து வீண் பொழுது 
நிலத்திலே போக்கி மயங்கி யேமாந்து
நிற்கின்றார்’’  
“மதமெனும் பேய் பிடித்தாட ஆடுகின்றோர் 
தோத்திரஞ் செய்து ஆங்காங்கே தொழுகின்றார்’’’
இப்படி மதத்தைக் கடுமையாக எதிர்ப்பவர் சனாதனத்தை எப்படி ஏற்பார்? பலகடவுள் படைத்து அலைகின்ற ஆத்திகர் நிலை குறித்து, 
“நான் முகர் நல் உருத்திரர்க
ள் நாரணர் இந்திரர்கள் எல்லாம் வான்முகத்தில் தோன்றி மனம் போனபடியே தேன்முகந்து உண்டவர் எனவே விளையாடா நின்றசிறுபிள்ளைக் கூட்டமெனக் கண்டறிந்தேன்’’ 
“தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
சேர்கதி பலபல செப்புகின்றாரும் 
பொய்வந்த கலைபல புகன்றிடுவாரும் 
பொய்ச்சம யாதியை மெச்சுகின்றாரும் 
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்
மேல் விளைவு அறிகிலர் வீண்கழிக்கின்றார்.’’
என்கிறார். 
மேலும் மதவாதிகளின் மதிகெட்ட செயல் யானையைக் கண்ட குருடர் கதை போன்றதெனக் குத்துகிறார்.
“இறைவர் என்பது அறியாதே இம்மதவாதிகள் தாம் குருடர்கரி கண்ட கதை போலே கதைக்கின்றார்.’’
மதம் மதியைக் கெடுக்கும். பகையை வளர்க்கும், படுகொலைக்குப் பாதையமைக்கும் என்பதைப் பதறிச் சொல்கிறார்.
“மதியைக் கெடுத்து மரணம் எனும்
வழக்கைப் பெருக்கி இடர்ப்படும் ஓர் 
விதியைக் குறித்த சமயநெறி
மேவாது என்னைத் தடுத்து அருள்”
“பேருற்ற உலகில் உறு சமயமத நெறிஎலாம் 
பேய்பிடிப் புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டென உணர்ந்திடாது உயிர்கள் 
  பல
பேதம் உற்று அங்கும் இங்கும்
போர் உற்று இறந்து வீண் போயினார்… என்றார்.’’
ஜாதிவெறி கொண்டலைகின்ற சழக்கர்களைப் பார்த்து,
 “சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந் தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே’’ 
“நரைமரணம் மூப்பறியா நல்ல உடம்பினரே
  நற்குலத்தார் என அறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில் உயர்குலம் என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
‘‘வகுக்கின்றீர், இருகுலமும் மாண்டிடக் காண்கின்றீர் 
புரைஉறுநும் குலங்கள் எல்லாம் புழுக்குலம் என்றறிந்தே’’
என்று சலித்துக் கொள்ளும் வள்ளலார், பொருளாசையில் அலைகின்றவர்களைப் பார்த்து.
“வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்! 
பெட்டிமேல் பெட்டிவைத்து ஆள்கின்றீர் வயிற்றுப் 
பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டிஉள் இருந்தீர்
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர் 
பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் 
எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே.’’ 
என்று பலப்பலவாய் வேதனைப்படுகிறார்.
 ஒரு குலத்துக் கொரு நீதி சொன்ன ‘மனு’க்கள் போன்ற மக்கள் எதிரிகளைக் கண்டு,
“நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
நண்ணிடா அரயரை நாளும் 
கெடுநிலை நினைக்கும் சிற்றதிகாரக்
கேடரைப் பொய் அலால் கிளத்த 
படுநிலை யவரைப் பார்த்தபோது எல்லாம் 
பயந்தனன் சுத்த சன்மார்க்கம் 
விடுநிலை உலக நடையெலாங் கண்டே
வெருவினேன் வெருவினேன் எந்தாய்.” 
என்று வேதனைப்படுகிறார்.
வேதங்கள், ஆகமங்கள் என்று விடிய விடியப் பேசுகின்ற வீணர்களைப் பார்த்து.
“வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
 வேதாகமத்தின் விளைவறியீர் சூதராகச்
 சொன்ன அலால் உண்மை வெளித்தோன்ற உரைத்தல் இலை 
 என்ன பயனோ இவை’’
என்கிறார். 
மனித குலத்தை மட்டுமின்றி மற்றவற்றின் மீதும் பற்றுக் கொண்ட வள்ளலார்,
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே 
வீடுதோறும் இரந்தும்பசி அறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன். 
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்”
என்று வேதனையில் வெந்து போகிறார். இதைவிட ஒரு ஜீவகாருண்ய சீலரைப் பார்க்க முடியுமா?
புத்தனும், மகாவீரரும் வாடிய பயிரைக் கண்டு வாடியதாக வரலாறு இல்லை. ஆனால், அந்த வரலாற்றைப் படைத்து வையகத்துக்கு வழிகாட்டியவர் வள்ளலார். 
கடவுளின் பெயரால் பலியிடப்படுவதைப் பார்த்து,
“நலிதரு சிறிய தெய்வம் என்று அய்யோ
நாட்டிலே பல பெயர் நாட்டிப் 
பலிதர ஆடுபன்றி குக்குடங்கள்
பலிகடா முதலிய உயிரைப் 
பொலிவுறக் கொண்டே போகவுங்கண்டே 
புந்தி நொந்து உளம் நடுக் குற்றேன்”
என்று பதறுகிறார். 
ஜாதி ஒழியவும், சமயம் அழியவும், சாத்திரச் சடங்குகள் கழியவும், ஏற்றத்தாழ்வு அகலவும், பசிப்பிணி நீங்கவும், சமரசம் தழைக்கவும் வழியுங் கண்டார். அதுவே, “சமரச சுத்த சன்மார்க்கம்”
அப்படியொரு சமதர்ம நெறியைப் பின்பற்றி அகிலத்தோர் அமைதியாய் வாழவேண்டும் என்று அழைத்தார். 
“முயன்றுலகில் பயன் அடையா மூடமதம் அனைத்தும்
முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே
இயன்றவொரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும்
  முன் உள மார்க்கங்கள் யாவும் முடிந்தன 
மன் உள சுத்த சன்மார்க்கம் சிறந்தது’’ 
“ஜாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்திய சுத்த சன்மார்க்க 
வீதியில் உமைத்தான் நிறுவுதல் உண்மை
விளம்பினேன் வம்மினோ விரைந்தே.’’ 
சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றும்படி அழைத்த வள்ளலார் மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கும் வழிகாட்டினார்.
“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் 
தம்முயிர்போ லெண்ணி யுள்ளே 
யொத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்’’
எவரோ அவரே இறைவனுக்கு உகந்தவர். எனவே, இறைவனுக்கு உகந்தவாறு இப்படியெல்லாம் நட என்று உண்மையான அருள்நெறியை, அன்பு நெறியை நமது வள்ளல் பெருமான் வழங்கினார்.
கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் வள்ளலார் வழியைக் கடைப்பிடித்து வாழ்ந்தால், வையகத்
தில் எப்பிரச்சினையும், எந்த விரையமும், எந்தச் சீர்கேடும், எந்த ஏற்றத் தாழ்வும் ஏற்படாது. மாறாக, கடவுளை கருவியாக ஆக்கி, தங்கள் ஆதிக்கத்தை, சுரண்டலை, உயர்வை நிலைநிறுத்த சனாதன மதத்தை முன்னிறுத்தும் ஆரிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களாலே மக்களுக்கு கேடும், அழிவும் தாழ்வும் ஏற்படுகிறது என்பதை நன்றாக உள்ளத்தில் கொள்ள வேண்டும். அதனால்தான் வள்ளலார் மதம், வர்ணம், சாஸ்திரங்களை மறுத்து, வெறுத்து மக்களின் வளர்ச்சியை, நலத்தை, வாழ்வை முன்னிறுத்திப் பாடுபட்டார்.
உலகிலே முதன் முதலில் பசிப்பிணி மருத்துவராய் மாறி, தருமச்சாலை நிறுவி, வாடிய வயிற்றுக்கு உணவிட்டார். சமரச  (கம்யூனிச) சித்தாந்தத்தை முதன்முதலில் பரப்பிய, சன்மார்க்கத்துறவி வள்ளலாரைத் தவிர வேறு இலர். இன்றைய கம்யூனிசத்துக்கும் சோசலிசத்துக்கும் அவர் முன்னோடி!
இப்படிப்பட்ட பகுத்தறிவு சமதர்மக் கருத்துகளை கூறிய வள்ளலாரை, ஜாதி, மதம், வேதம், சாஸ்திரம் வருணாசிரமம் இவற்றை எதிர்த்த வள்ளலாரை மக்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட சமதர்மவாதியை சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்பது திட்டமிட்ட சதியாகும்.
சனாதனத்தை சமதர்ம சம்மட்டியால் அடித்து நொறுக்கிய வள்ளல் பெருமானை, சனாதனவாதி என்று பைத்தியக்காரன்கூட சொல்லமாட்டான். அப்படியிருக்க வள்ளலாரை சனாதனவாதி என்பது அயோக்கியத்தனம், மோசடிச் செயல் ஆகும்.  ♦