சிறுகதை – திருச்செந்தூர் முருகன்

2023 அக்டோபர் 1 - 15, 2023 சிறுகதை

… ஏ.வி.பி. ஆசைத்தம்பி …

திருநெல்வேலி ரெயில்வே ஸ்டேஷனில் அன்று ஒரே கூட்டம். காரணம் திருச்செந்தூரில் விசாகமாம். முருகனைத் தரிசிக்கவே பக்தகோடிகள் வெள்ளம்போல் கூடியிருந்தனர். திருச்செந்தூர் செல்லுகிற இரயில்வண்டி இழுத்துவிடப்பட்டது. ஒருவரை ஒருவர் ஆண் பெண் வித்தியாசமின்றி அத்வைத வேத அடிப்படையில் இடித்துக்கொண்டு இரயிலில் ஏறினர்.

‘ஏன்தான் இந்த அவசரமும் அவதியுமோ! நாளைக்குப் போனால் முருகன் இருக்க மாட்டாரா? அல்லது இரயில் போகாதா? இப்படித் துணிந்து எண்ணத் தூண்டும் அங்கிருந்த பரிதாப நிலை!
ஒரு வண்டியில் நெருக்கடி சாதாரணமானதல்ல. அதிலேதான் வள்ளி தன் பெற்றோருடன் முருகனைக் காணப் போய்க் கொண்டிருந்தாள். பழைய காலமாய் இருந்தால் முருகன் கிழவனாக மாறுவேடம் புனைந்து வள்ளியைக் காணத் தினைப்புனம் வருவான். வள்ளியும் கொஞ்சம் ‘பிகு’ பண்ணுவாள். ஆனால் காலத்தின் கோலம்,
வள்ளி பருவம் அடைந்து ஆறு வருடங்கள் ஓடியும் அவள் கழுத்தில் தாலி கட்ட ஒருவன்கூட வரவில்லை. முருகனைப் பூஜித்தால் பாவம் தீரும் எனக் கருதியே, வள்ளியின் பெற்றோர் திருச்செந்தூர் நோக்கிச் சென்றனர்.

வண்டியும் புறப்பட்டது. ஒருவன் வேகமாக ஓடிவந்து வள்ளியிருக்கும் வண்டியில் வந்து ஏறினான். ஜன்னல் வழியாக, “இடமில்லை; இடமில்லை” என்ற கூச்சல்! அவ்வாலிபன் அதைச் சட்டை செய்யவில்லை. அவ்வண்டியில் உள்ளோரின் பார்வை அவ்வாலிபன்மீது திரும்பியது. வள்ளியும் பார்த்தாள். அவனும் பார்த்தான். பட்டுத் தினுசுகளைப் பார்த்தறியாத பாட்டாளி வீட்டுப் பெண் ஜவுளிக்கடையில் நுழைந்தால், எப்படித் தனக்குப் பிடித்தமான சேலையையே ஏக்கத்துடன் பார்ப்பாளோ அதே போலத்தான் ஆறு வருடம் வீட்டிலே அடைபட்டுக் கிடந்த வள்ளி அவனையே பார்த்தாள்.

“என்னம்மா இப்படிப் பார்க்கிறே? இந்தச் சேலை வேணுமா?” என்று கடைக்காரன் கேட்பது போல, வள்ளியின் பார்வையின் ஜாடை தெரிந்த அவனும் கடைக்கண்ணைக் காட்டிச் சிரித்தான். இருவரும் பூரித்தனர். அந்த நெருக்கடியைப் பயன்படுத்தி வள்ளியின் காலை அவன் மெதுவாகச் சுரண்டினான். அவளும் அவ்விதமே செய்தாள். பிறகு என்னென்னவோ செய்தார்கள். இரயிலில் அடிக்கு இரண்டு பேர் இருந்த என்ன செய்ய? யாருமே இவர்கள் லீலையைக் கவனிக்கவில்லை. எல்லாருக்கும் திருச்செந்தூர் எப்போது வருமோ, சீக்கிரம் இரயிலைவிட்டு இறங்க என்று தோன்றியது. ஆனால், வள்ளிக்கும் அவனுக்கும் திருச்செந்தூர் வராமல் இரயில் இப்படியே ஓடாதா என்று இருந்தது. திருச்செந்தூர் வர ஒரே ஒரு ஸ்டேஷன்தான் இடையிலே இருந்தது.
‘இந்த அழகி யார்? எந்த ஊர்? என்ன பெயர்? இவளை விட்டுப் பிரிந்துவிடுவதா? முடியுமா? மறந்தாலும் மறக்க முடியாதே! எப்படி அறிவது?’ -இப்படி அவன் ஆராய்ந்தான். வழி ஒன்றும் தெரியவில்லை. சட்டைப் பைக்குள் கையை விட்டான். ஒரு ‘கவர் இருந்தது. அதில் அவன் விலாசம் இருந்தது. அதை மடித்து அவளிடம் நீட்டினான். பிச்சைக்காரன் சோற்றைக் கண்டதும் ஆவலோடு வாங்குவது போல, வள்ளி அதைப் பெற்றுக்கொண்டாள்.

திருச்செந்தூரில் வண்டியே காலியாகி விட்டது. அவன் வள்ளியை விடவில்லை. நிழல்போல் பின் தொடர்ந்து சென்றான். கோயிலில் ஒரே கூட்டம். உள்ளே நுழைவது பெருங்’கஷ்டமாக இருந்தது. கடவுளைக் காணப்போகும் போது, கழுத்துச் சரடு களவு போகும் கூட்டமாய் இருந்தாலும், நல்ல மலர் கசங்கி நாசமாகப்போகும் நெருக்கடியாய் இருந்தாலும் பொருட்படுத்த முடியுமா? கூட்டம் போகவும் வரவுமாகவே இருந்தது. வள்ளியின் பக்கத்தில் அவனும் பக்தனைப் போலவே நெருங்கி வந்தான். எல்லாருக்கும் கடவுள் மீது கண் இருக்கும்போது, இதை யார் கவனிப்பார்கள்?

“அதிலே, என் விலாசம் இருக்கிறது. கண்டிப்பாய் லெட்டர் போடு” இப்படி அவன்.

“சரி, போடுகிறேன்” இது அவள்.

அதற்கப்புறமும் கொஞ்சநேரம் வள்ளி பின்னாலேயே அவன் திரிந்தான். பின் பிரிந்தான். முருக தரிசனத்தை முடித்துக்கொண்டு வள்ளி தன் பெற்றோருடன் ஊர் வந்தாள். கடித விலாசத்தைப் பார்த்ததும் அவளுக்கு ஒரே ஆனந்தம். உண்மையிலேயே அந்தக் காலத்தில் வள்ளியாகப் பிறந்தது தானேதான் என ஊர்ஜிதம் செய்துகொண்டாள். காரணம், இரயில்வே காதலன் பெயரும் முருகன்! திருச்செந்தூர் முருகப் பெருமானே ஆறு வருடம் அலைமோதிய அபலை வள்ளியை ஆசீர்வதிக்க இளைஞன் ரூபத்தில் அவதாரம் எடுத்து இரயிலில் வந்தார் என்றுகூட எண்ணி மகிழ்ந்தாள்.

அன்று வள்ளியின் திருமணத்திற்கு நம்பிராஜன் இ,டையூறாக இருந்ததுபோல், தன் தந்தையும் இருப்பார் என உறுதியாக நினைத்தாள். காரணம் முருகனும் வள்ளியும் வெவ்வேறு ஜாதியினர். வள்ளி அன்று தெரியாமல் ஓடியது போல, தானும் முருகனோடு திருமணத்திற்கு ஓட வேண்டிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என முற்பட்டுக் கடிதம் எழுதினாள். பதில் எழுதப் பக்கத்து வீட்டிலுள்ள தன் சிநேகிதியின் விலாசம் கொடுத்தாள்.

ஒரு கடிதம், இரு கடிதம் என பெரிய நாவல் போல இருவர் கடிதங்களும் விரிந்தன. ‘இரண்டு நாளாய்த் தலை வலிக்கிறது’ என்று வள்ளி எழுதுவாள். ‘திருச்செந்தூர் கோயில் விபூதி இத்துடன் அனுப்பி இருக்கிறேன்’ என்று அவன் எழுதுவான். இப்படிப் பத்து மாதங்களுக்கு மேல் உருண்டோடின.

‘டைபாயிட் காய்ச்சலால் கஷ்டப்படுகிறேன்’ என்று ஒரு நாள் முருகன் எழுதி இருந்தான். ‘கோயிலுக்குப் போய் கடவுளைத் தினமும் பூஜை செய்யுங்கள்; நானும் தங்களுக்காக இங்கு கோயிலுக்குப் போகிறேன்’ என எழுதினாள் அவள். குணமாகிவிட்டது எனக் கொஞ்ச நாளில் கடிதம் வந்தது. குதூகலித்தாள் வள்ளி. புதுப் பூஜைகளும் நடத்தினாள்.
அடுத்த வருடமும் விசாகம் வழக்கம்போல் வந்தது. வள்ளிக்கு வரம் கேட்க ஆரம்பித்து வருடம் ஏழாகிவிட்டது. வள்ளியின் தந்தை எட்டாவது வருடமும் திருச்செந்தூருக்குக் காவடி தூக்க முடிவு செய்தார்.

இதையறிந்த வள்ளி முருகனுக்குக் கடிதம் தீட்டினாள். கடந்த வருடத்தைப்போல் திருநெல்வேலியில் சந்திக்க எழுதியிருந்தாள். அதற்கு முருகன் “இப்போதுதான் காய்ச்சலில் இருந்து எழுந்திருக்கிறேன்: இருந்தாலும் சந்திக்கிறேன்” என்று பதில் போட்டிருந்தான். வள்ளியும் தன் காதலனைக் காணும் ஆவலோடு அலுப்புத் தெரியாவண்ணம் திருநெல்வேலி வந்து சேர்ந்தாள்.
அங்கு தன்னைப்போல் திருசெந்தூர் பெருங்கூட்டம் இரயிலுக்காகக் காத்திருப்பதை வள்ளி கண்டாள். முருகனை எங்கே என்று அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தாள். கூட்டத்தில் முருகன் இருப்பதாகவே தெரியவில்லை. சோர்ந்து திரும்பினாள் வள்ளி. ஒரு மூலையில் முருகன் நிற்கக் கண்டாள். களிப்புற்றாள்; ஆனாலும் கவலையுற்றாள். பாவம், முருகன் காய்ச்சலால் மிகவும் மெலிந்திருந்தான்; நிற்கக்கூடச் சக்தியில்லாதபடி முருகன் நிற்பதைக் கண்டாள். சென்ற ஆண்டைப் போல இரயில் ஓடும் போது முருகனால் இந்த ஆண்டு ஏற முடியாது என்றும் உணர்ந்தாள். முருகனும் அவளைப் பார்த்தான். அவன் முகம் அப்போதுதான் மலர்ந்தது.

கொஞ்ச நேரத்தில் இரயிலும் வந்தது. எல்லாரும் ஏறினர். வள்ளி ஏறுகிற வண்டியைப் பார்த்துப் பதறாமல் முருகன் ஏறினான். வள்ளி
போய் அமர்ந்தாள். முருகனால் அவள் பக்கத்தில் போகமுடியவில்லை. பாவம், முருகனுக்கு நெருக்கடி மட்டுமல்ல, உடல்நலமும் சரியாக இல்லை. வண்டிக்குள் ஒரே புழுக்கம். மூச்சுப் போவதே கஷ்டமாக இருந்தது. முருகனுக்குத் தலை கிறுகிறுத்தது. வள்ளி தன் பக்கத்தில் முருகன் வரமாட்டானா என்று ஏங்கினாள்.

வண்டியைவிட்டுக் கீழே இறங்கிவிடுவோமா என்று முருகன் எண்ணினான். முருகனுக்கு வியர்வை கொட்டியது. தலைசுழன்றது, தன் நினைவிழந்தான். எல்லாவற்றையும் மறந்தான். நிற்க முடியவில்லை முருகனால். அப்படியே சாய்ந்தான். அடுத்திருந்தவர்கள் “ஒரு ஆள் மயங்கிவிட்டது” என்று கத்தினார்கள். வள்ளி விழித்தாள். விழிப்பதைத் தவிர பேதை வள்ளிக்கு வேறு வழி? பேய்ச் சமூகத்தில் வாய் திறக்க முடியுமா?

முருகனைக் கீழே இறக்கிப் போட்டார்கள். இரயில்வே டாக்டர் ஓடி வந்தார். சுற்றி இருந்த கூட்டத்தை விலக்கினார். நாடி பார்த்தார். கடிகாரத்தின் நாடி நின்றுவிட்டால் எப்படியும் ஓட்டிவிடலாம்: ஆனால் மனிதனின் நாடி நின்றுவிட்டால் என்ன செய்ய முடியும்? ‘இறந்துவிட்டான்’ என்று டாக்டர் சொன்னார். “உச்… உச்” என்று எல்லோரும் வருத்தத்தைத் தெரிவித்தனர். வாட்டமுற்று வகை தெரியாமலிருந்த வள்ளி, ‘கடைசி முறையாக முருகனை ஒருதடவை பார்த்துவிடலாம்’ என்று எல்லோரையும்போல் ஜன்னல் வெளியே தலையை நீட்டினாள். அது கண்டு அவள் தந்தை “உட்கார்” என்று அதட்டினார். மறு வினாடி இரயிலும் புறப்பட்டது. ஒரு மைல் போயிருக்கும். மனமுடைந்த வள்ளியும் மயங்கி விழுந்தாள். இரயிலில் ஒரே பரபரப்பு “அதைக் கண்டு பயந்தே பொண்ணும் மயங்கிவிட்டது.” என்று எல்லோரும் கூறினர். முகத்தில் தண்ணீர் தெளித்தனர். ஜன்னலோரம் காற்றுப் படும்படியாக வள்ளியைச் சாய்த்து வைத்தனர்.

இலேசாகக் கண்ணைத் திறந்தாள் வள்ளி. பிரக்ஞை வந்தது. “முருகா! முருகா!”” என்று புலம்பினாள். “இனிப் பயமில்லிங்க; குழந்தை தெய்வத்தை நினைச்சிடுச்சி” என்று பக்தகோடிகள் பலர் கூறினர். தன் மகளுக்கு முருகன்மீது ‘அபார பக்தி’ என்று வள்ளியின் பெற்றோர் கருதினர். இந்த ‘முருக பக்தி’ வள்ளியைப் பைத்தியமாக்கிவிடும் என்று அந்தத் திருச்செந்தூர் பக்த கோடிகளுக்குத் தெரியவா போகிறது? ♦