ஆசிரியர் பதில்கள்

2023 ஆசிரியர் பதில்கள் ஜூலை 16-31, 2023
சிதம்பரம் நடராசர் கோயிலை தமிழக அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர சட்டப்படி என்ன நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்? 
1. கே: சமூக நீதியைக் காக்கத்தான் ஒன்றிய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வருகிறது என்று மோடி அரசு கூறுவது பற்றி தங்கள் கருத்து என்ன?
– இரா. குருமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
ப : கடைந்தெடுத்த திரிபுவாதம் அவர் கூற்று. சமூக நீதி என்பது ‘அனைவருக்கும் அனைத்தும்.’ அதை முதலில் ஹிந்துலா கொடுக்கிறதா? ஜாதி- _ வர்ணமுறை _ அரசியல் சட்டப்படி பாதுகாக்கப்படுகிறதே, அதை ஒழிக்காமல் _ அதாவது ஒரே ஜாதி என்று அறிவிக்காமல் _ பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் சமூகநீதி _ கிட்டுமா? விளக்கட்டும் பிரதமர்!
2. கே: இந்தியா அளவில் பி.ஜே.பி.க்கு எதிராய் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்தபின்கூட, முரண்பாடுள்ள கட்சிகள் என்பதால் தங்க
ளுக்குள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் போக்கு எதிரிக்குச் சாதகமாகாதா? தமிழக காங்கிஸ் தலைவரே மம்தாவை விமர்சிக்கலாமா?
– கு. ரேணுகா, கழனிப்பாக்கம்.
ப :  பொது எதிரியை வீழ்த்தும் பேரால் ஒவ்வொரு எதிர்க்கட்சியும் 2024 தேர்தலை மனதிற்கொண்டு மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் சர்வாதி
காரம் வீழும். அதனைப் பாதிக்கும் எந்தப் பேச்சும், எந்த நடவடிக்கையும் தவிர்க்கப்படுவது முக்கியம்.
3. கே: ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று இவ்வளவு நாள் கழித்து அண்ணாமலை கூறுவதன் உள்நோக்கம் என்ன? நாடகமா?
– ம. எழிலரசி, திருவண்ணாமலை.
ப : அவர் பெற வேண்டிய ஊடக வெளிச்சம் என்ற கானல் நீரை ஆளுநரே அடித்துக்கொண்டு போகிறாரே என்ற எரிச்சலோ என்னமோ!
4. கே:ராகுல் காந்தியின் அரசியல் செயல் பாடுகளை முடக்க, நீதிமன்றங்களை மோடி அரசு பயன்படுத்தும்போது, அதை முறியடிக்க என்ன செய்யவேண்டும்? உச்சநீதிமன்றம்தான் ஒரே வழியா?
  – அ. ஃப்ரூக் அப்துல்லா, நாகப்பட்டினம்.
ப : ஆம். இன்றைய சூழ்நிலையில் உச்சநீதிமன்றம்தான் கடைசி நம்பிக்கை. அநேகமாக அதில் அவருக்கு நியாயம் கிடைக்க வாய்ப்புண்டு. அதற்குமுன் பல சட்டங்கள் உண்டு. அதைக் கடந்துதான் அவர் இனி உச்சநீதி மன்றத்தில் நியாயம் கோர முடியும். நிச்சயம் கோருவார்!
5. கே: சிதம்பரம் நடராசர் கோயிலை தமிழக அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர சட்டப்படி என்ன நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்? உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடையாக இருக்குமா?
– சு. யவனப்ரீஷா, விழுப்புரம்.
ப :  இதுபற்றி சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழ்நாடு அரசு_ ஹிந்து அறநிலையத்துறை எடுப்பதற்கு சட்டப்படி வாய்ப்புகள் ஏராளம் உண்டு.
முந்தைய வழக்கு சுப்ரமணியசுவாமி_ ஜெயலலிதா (மறைமுகக் கூட்டினால்)_ தமிழ்நாடு அரசு எதிர்த்து வாதாடாமல் ‘சைட்’ விட்டதால்தான் மீண்டும் தீட்சதர்களுக்குக் கிட்டியது.
இன்றைய தி.மு.க. ஆட்சி மீண்டும் அதைச் செய்தால் பல தீர்ப்புகள், சட்டங்கள் சாதகமாக உள்ளதால், மக்கள் விரும்புவதால் தீட்சதர்கள் கொள்ளை திமிரிலிருந்து தில்லை நடராசனையும் கோயில் சொத்தினையும், பக்தர்களின் உரிமையையும் பாதுகாக்கலாம்.
6. கே: உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில், கடன் உதவி, காப்பீட்டு உதவி என்று ஆசைகாட்டி தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர்களை மோசடியாகச் சேர்க்க முயலும் பா.ஜ.க.வின் முயற்சியை முறியடிக்க, தி.க.; தி.மு.க. தொண்டர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட செயல்திட்டம் வகுக்கப்படுமா?
– ச. வீரராகவன், சேலம்.
ப :  நல்ல யோசனை. கூடுதலாக தி.மு.க. தோழர்களும் இதனை கவனத்தில் கொண்டு, முறியடிக்க முன்வரவேண்டும். திராவிடர் கழகம் செயல்திட்டங்களை வகுக்கும் முன்னோடியாக பிரச்சாரம் மூலம்.
7. கே: ஆட்சியையே துச்சமாகக் கருதி கொள்கையில் உறுதியாய் நிற்கும் முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் போர்க் குணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– வை. குருமூர்த்தி, மதுரை.
ப :  பழுதுபடாத திராவிட ஆட்சிகளின் வீரம் செறிந்த விவேகம் நிறைந்த சாதனை-யாளராகப் பார்க்கிறோம்.
8. கே: மகளிருக்கான உரிமைத் தொகை அனைவருக்கும் என்பதை தமிழ் நாடு அரசு என்றைக்கும் ஏற்கக்கூடாது. தகுதியானவருக்கு மட்டுமே என்பதில் உறுதியாய் நிற்கவேண்டும் என்று வலியுறுத்துவீர்களா?
– சு. ஜான் மெக்கஸி, ஊட்டி.
ப :  சட்டியில் இருப்பதை முதலில் விநியோகிக்கத்தான் இன்றைய வறுமைக்கோட்டு அளவீடு
மற்றும் கூடுதலாகச் சில அடிப்படைகள்தான் சரியானது. பசியேப்-பக்காரருக்கு முதல் பந்தி!
9. கேள்வி: அ.இ.அ.தி.மு. க வில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கொள்கைகள் பற்றிப் பேசுவது பெரும் அளவில்  தவிர்க்
கப்படுகிறது,  இதன் விளைவு அ.தி.மு.கவிற்கு என்னவாக இருக்கும்?
– பொ. அறிவன், அணைக்கட்டு.
ப :  அண்ணாவையே தெரியாத தலைமையிடம் எப்படி இதையெல்லாம் எதிர்பார்ப்பது? அதிலும் அவாள்!  ♦