கட்டுரை குழந்தைத் திருமண குற்றவாளிகள்!

2022 கட்டுரைகள் நவம்பர் 1-15 2022

சிகரம்

சிதம்பரம் தீட்சதர்கள் மத்தியில் குழந்தைத் திருமணம் இன்றளவும் நடப்பது மாபெரும் குற்றச் செயல். அதன்மீது நடவடிக்கை எடுத்தால் சாலை மறியல் செய்து தங்கள் குற்றச் செயலை மேலும் கூட்டிக்கொண்டே செல்கின்றனர் தீட்சதர்கள். இவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்லர்; இவர்களின் செயல்களை சரியென்று நியாயப்படுத்தும் காஞ்சிபுரத்து சங்கராச்சாரியும் குற்றவாளியே!
காஞ்சிபுரத்து, காலஞ்சென்ற பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரன் தனது ‘‘தெய்வத்தின் குரல்’’ என்ற நூலில்,
“சாஸ்திரப் பிரகாரம், ஒரு பிள்ளைக்கு உபநயனம் செய்கிற ஏழாவது வயசில் பெண்ணுக்கு விவாஹம் செய்துவிட வேண்டும். காமம் தெரிகிற முன்பே இவள் பதியைக் குருவாக வரித்துவிடும்படி செய்ய வேண்டும். காமம் தெரியாவிட்டால்தான் இப்படி குருவாக வரிக்கவும் முடியும்! குருவை ஒருத்தன் தெய்வமாகவே மதிக்க வேண்டும் என்பதும் சாஸ்திரம் அல்லவா? அப்படியே இந்தப் பெண் குழந்தை சின்ன வயசில் பதியைக் குரு-தெய்வமாகப் பாவித்து ஹ்ருதயத்தை அவனுக்கு ஸமர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். அந்த இள வயசில்தான் இது ஸாத்தியமும் ஆகும். பிற்பாடு புத்தியால் எதிர்க்கேள்வி கேட்பது, அஹம்பாவத் தடிப்பு எல்லாம் உண்டாகிவிடும்.
‘இது இந்த காலத்தில் ஸாத்தியமா? சட்ட விரோதமல்லவா?’ என்று கேட்பீர்கள்.

‘ராஜாங்கத்தின் சட்டத்தை மீறு’ என்று சொல்லக் கூடாதுதான். அப்படிச் சொல்லவில்லை. சட்ட மறுப்பு (civil disobedience) என்று இப்போது ஆட்சி நடத்துகிறவர்களே ஒரு காலத்தில் பண்ணிக் காட்டித்தான் இருக்கிறார்கள். ‘சட்டம் என்று யாரோ எழுதினதற்காக எங்கள் ஸ்வாதந்தரியத்தை விட மாட்டோம்’ என்று அப்போது சொன்னார்கள். அதே மாதிரி, “ஜெயிலில் போட்டாலும் பரவாயில்லை; பிராணன் போனாலும் பரவாயில்லை; ஆத்ம க்ஷேமத்துக்காக ஏற்பட்ட விவாஹ ஸம்ஸ்காரத்தை வெறும் லௌகிக விஷயமாக்கிச் சட்டம் பண்ணினால் ஏற்க முடியாது’’ என்று கிளம்புகிற வேகம் நம் ஜனங்களுக்கு இல்லை.

அப்படி இல்லையே என்பது மட்டும் நான் ‘சட்டத்தை மீற வேண்டாம்’ என்று சொல்வதற்குக் காரணமில்லை. ஒரு விஷயத்தில் மீறினால், மற்றவற்றிலும் மீறுகிற எண்ணம் உண்டாகி, கட்டுப்பாடே போய்விடும். அதனால்தான் [சட்டத்தை மீறும்படிச்] சொல்லவில்லை. ஆனாலும் சட்டத்தை மீறாமலே ராஜாங்கத்துக்கு சாஸ்திர அபிப்ராயத்தை விடாமல் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ராஜாங்கத்துக்கு மட்டுமில்லை; ஜனங்களிலும் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு மேல் சாஸ்திர அபிப்ராயத்தை விட்டு விட்டார்களே!
அவர்களுக்கும் பாக்கியிருக்கிற ஸ்வல்ப சாஸ்திரக்ஞர்கள் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். சட்டத்தை மீறாமலே, முன்னேற்றம் எத்தனை நிதானமாக ஏற்பட்டாலும் அதனால் மனம் தளராமல் நூறு வருஷம் ஆனாலும் ஆகட்டும்! இன்னம் அதிகமானாலும் ஆகட்டும்! உன்னதமான இந்த தேசாசாரம் மறுபடி பழக்கத்தில் வரப் பண்ணுவதற்கு நம்மாலானதை சாந்தமான வழியிலேயே செய்வோம் என்று செய்ய வேண்டும். பலனைப் பார்க்க நாம் [உயிரோடு] இருக்க வேண்டும் என்பதில்லை. ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம்தான் பலன் உண்டாகும் என்றாலும், அதற்கு இப்போதே நம்மாலான விதையைப் போட்டுவிட வேண்டும். யத்தனத்தை இப்போது ஆரம்பித்தால்தான், என்றைக்கோ ஒரு நாளாவது பலன் கிடைக்கும். பிரயத்தனமே இல்லாவிட்டால் என்றைக்கும் பலன் ஏற்பட முடியாதல்லவா? விதையே

போடாவிட்டால் எப்படி மரம் உண்டாகும்?
தர்மசாஸ்திரமே பெரிய சட்டம் என்று ராஜாங்கத்தாருக்கும், பொதுஜனங்களுக்கும் புரியும்படியாக, ஹிதமான முறையில் (by persuasion) வற்புறுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.
த்ரீணி வர்ஷாண்யுதீக்ஷேத குமாரீ ரிதுமதீ ஸதீ |
ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத
ஸத்ருசம் பதிம்||
இதற்கு அர்த்தம், “வயசுக்கு வந்த பெண் அதற்கப்புறம் மூன்று வருஷம் வரன் தேடி வருகிறானா என்று காத்திருந்து பார்க்க-வேண்டும். வராவிட்டால் அதன்பின் அவளே பதியைத் தேடிக் கொள்ளலாம்’’ என்பது. இங்கே post-puberty marriage (ரிதுமதி ஆனபின்பே விவாஹம்) என்றுதானே தெரிகிறது? அது மட்டுமில்லை. “பெரியவர்கள் பார்த்துத்தான் பண்ணி வைக்க வேண்டும் என்றுகூட இல்லாமல் ஒரு பெண் தானே ஸ்வயேச்சையாகப் புருஷனைத் தேடிக் கொள்கிறதை அநுமதிக்கிறது என்று சீர்திருத்தக்காரர்கள் சொன்னார்கள்.
“வேத மந்திரங்கள், தர்ம சாஸ்திர ச்லோகம் இவற்றின் அர்த்தத்தைப் பார்த்தால் அவர்கள் சொல்வது சரிதானே? இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள், ஸ்வாமிகளே!’’ என்று கேட்டால், பதில் சொல்கிறேன்.
காதல் கீதல் என்று சித்த விகாரம் ஏற்படாமல், சரீர நினைப்பும் காமமும் வருகிறதற்கு முந்தியே ஒருத்தனை பர்த்தாவாக அடைந்தால்தான் குழந்தை உள்ளத்தில் உண்டாகிற பணிவினால் அங்கே உண்மையான சரணாகதி செய்து, “இவனே நமக்குக் குரு; இவனே நமக்கு ஈச்வரன்’’ என்று இருக்க முடியும்.
ஆந்திர தேசத்திலும் மஹாராஷ்டிரத்திலும் இன்றைக்கும் ஸ்திரீகளுக்கு விரதங்கள் அதிகம். அவற்றில் ஒன்று கன்னிகைகள் பரமேச்வரனையே பதியாக நினைத்துப் பூஜிப்பது. பிறகு ஒருத்தன் பதியாக வருகிறான். அவனையே பரமேச்வரனாகப் பூஜிப்பது, இப்போது பத்னியாகிவிட்ட அந்த கன்னிகைக்கு விரதமாக ஆகிறது. பரமேச்வரனைப் பதியாகப் பூஜித்து, முடிவில் எவன் பதியாக வந்தாலும் அவனே பரமேச்வரன் என்று பாவித்துவிட வேண்டியது.
கேள்வி கேட்காமல், நம்பிக்கையின் பேரில்-தான், அதாவது பால்யத்தில்தான் ஒருத்தனைப் பரமேச்வரனாக நினைக்க முடியும். விவரம் தெரியாத போது வந்த இந்த நம்பிக்கை மனஸில் ஊறி ஊறி, நம் ஸ்வாபாவிகமான ஸ்திரீதர்மத்தினால் மனஸில் உறுதிப்பட்டு விடுவதால், விவரம் தெரிந்த பின்னும் பதியே பரமேச்வரன் என்ற பக்தி நிலைத்து நின்றுவிடும். அவனிடத்திலேயே தன் மனஸை அர்ப்பணம் பண்ணித் தனக்கென்று மான அவமானம் எதுவும் இல்லாமல் ஒருத்தி இருந்துவிட்டால் அவளுடைய அஹம்பாவம் கரைந்து போய்விடுகிறது. அதுதான் ஜனன நிவிருத்தி, அதுதான் மோக்ஷம்.’’ என்கிறார்.
– ‘தெய்வத்தின் குரல்’, இரண்டாம் பாகம்
ஆக, குழந்தைத் திருமணம் இக்காலத்திலும் நடக்க காஞ்சிபுரத்து சங்கராச்சாரியே முதன்மைக் காரணம் என்பது மட்டுமல்ல; அவர், குழந்தைத் திருமணத்தை நடத்த சட்டத்தையே மீற வேண்டும் என்கிறார். அதைத்தான் தீட்சதர்களும் செய்கின்றனர்.
எனவே, சட்டத்திற்குப் புறம்பான சங்கராச்சாரி நூலைத் தடை செய்ய வேண்டும். குழந்தைத் திருமணம் செய்விப்போரைக் கடுமையாய்த் தண்டிக்க வேண்டும்.