ஆசிரியர் பதில்கள்

2023 ஆகஸ்ட் 16-31,2023 ஆசிரியர் பதில்கள்
தமிழ்நாடு அரசின் காதுகளுக்கு…
1. கே: காவல்துறையிலும், நிர்வாகத்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் அ,.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அதிகம் நுழைந்திருப்பதால், அவர்களை அடையாளங்கண்டு கண்காணிக்க வேண்டியது கட்டாயமல்லவா?
– சாந்தி, பொதட்டூர்.
ப:  தமிழ்நாடு திராவிட மாடல் அரசும் முதல் அமைச்சரும் இதனைக் கூர்ந்து கவனித்து, உடனடியாக தக்க பரிகாரம் தேடிட முனைப்புடன் உள்ளனர் 
என்பது ஆறுதலான செய்தியாகும்.
2. கே: பா.ஜ.க.வின் ஊழல், அராஜகம், வன்புணர்வுகள் இவற்றை பட்டியல் இட்டு துண்டறிக்கைகளாக இந்தியா முழுக்க அனைத்து மொழிகளிலும் மக்களுக்கு வழங்கினால் என்ன? முதல் முயற்சியாக தமிழ்நாட்டில் வழங்கினால். யாத்திரை  பேர்வழிகளை மக்கள் மடக்குவார்கள் அல்லவா?
– முருகன், நாகர்கோயில்.
ப:  நல்ல யோசனை. இவை பற்றி நிச்சயம் உரிய பிரச்சாரம் துண்டறிக்கை, திண்ணைப் பிரச்சாரம், தெரு முனைக்கூட்டங்கள் வாயிலாகத் தெரிவித்து அம்பலப்படுத்தும் பணி அயராது நடைபெறத் திட்டம் தீட்டுவோம். தமிழ் நாட்டில் நாமே தொடங்கியும் வைப்போம்.
3. கே: கொலை, கொள்ளைகளைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் காவல்துறை கண்காணிப்பும், நடவடிக்கைகளும் இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்ற கருத்து பற்றித் தங்கள் கருத்து என்ன?
– கோவிந்தன், வேப்பேரி.
ப: தற்போதைய காவல்துறைக்குச்  செயலாளராக உள்ள அமுதா அவர்கள் தொடங்கி, அதன் தலைவர் முதல் அனைவரும் இதில் தீவிர கவனம் செலுத்திடத் துவங்கியுள்ளனர் என்பது நம்பிக்கை ஊட்டக்கூடியதாகும்.
4. கே: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிரானது என்பதால், பி.ஜே.பி. ஆட்சி அகற்றப்பட்ட பின்பாவது அதை நீக்க முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
– மேனகா, ஆரணி.
ப: நிச்சயம் அது அரசியல் சட்ட அடிக்கட்டுமானத்திற்கு எதிரானது என்பதால் நிச்சயம் நீக்கப்படக்கூடும் அடுத்து!
5. கே: தனக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக ஒன்றிய அரசு பறித்து சட்டத்திருத்தம் செய்வதால், மீண்டும் மாநில அரசுகளிடமே அந்த அதிகாரங்களை ஆட்சி மாற்றம் மூலம் கொடுவர முடியுமா?
– வெங்கடேசன், ஆம்பூர்.
ப: மத்தியில் ஒன்றிய அரசு மாறினால் அடுத்து இவைகள் படிப்படியான மாற்றங்களுக்கு ஆளாகி மக்கள் மன்றத்திற்குக் கிடைக்கும் என்பது உறுதி!
6. கே: பா.ஜ.க. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பணக்காரர்களுக்கு, நிலஉரிமையாளர்களுக்கு கடன் உதவி, அரசியல் உதவிகளைச் செய்து, அவர்களை பி.ஜே.பி.யில் சேர்த்து, அவர்கள் வழி எளிய மக்களை வளைக்கும் சதிவேலையைச் சத்தமின்றி செய்து வருகிறார்கள்.  இதை முறியடிக்க திராவிட இயக்கங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது கட்டாயம் அல்லவா?
– மாறன், சிவகாசி.
ப: இந்தக் கேள்வியை தமிழ்நாடு அரசின் “காதுகளுக்கு’’ நுழையும் வண்ணமாக நாம் அர்ப்பணிக்கிறோம்.
7, கே: ஊர் தோறும் பகுத்தறிவு பிரச்சாரங்களை, மூடநம்பிக்கை ஒழிப்பு செயல் விளக்கங்களை தொடர்ந்து செய்ய ஒரு திட்டம் வகுப்பீர்களா?
– தனலட்சுமி, பெரம்பலூர்.
ப: வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் அது செயல்பட திட்டம் தொடங்கிவிட்டதே! ‘விடுதலை’ ஏட்டைப் பாருங்கள்!
8. கே: நூலகங்களையும் மாநில அதிகாரத்திலிருந்து பறிக்க சதி முயற்சி தொடங்கியுள்ளதால், உடனடியாக அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
– ப்ரியா, திருவள்ளூர்.
ப: தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு எம்.பிக்களும் இதுபற்றிப் போதிய தடுப்பு முயற்சிகளைச் செய்து தடுக்க வேண்டும். ஏற்
கெனவே நெருக்கடி நிலை காலத்தில்(Emergency Period) கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்ததை ஒத்திசைவு Concurrent Listக்கு பட்டியலுக்கு விவாதம் இன்றி மாற்றிவிட்டதால் இன்று எவ்வளவு அவதி!
அதுபோல மிக ஆபத்தான திட்டம் கருவிலேயே இதைக் கருச்சிதைவு செய்தால்தான் மாநில உரிமை பிழைக்கும். ♦