ஆசிரியர் பதில்கள்

2024 ஆசிரியர் பதில்கள் ஏப்ரல் 1-15, 2024

கதவைச் சாத்திக் கொண்ட
கதை மறந்துவிட்டதோ ?

1. கே: காங்கிரஸ் அணியிலும் இல்லாமல், பி.ஜே.பி. அணியிலும் இல்லாமல் தமிழகத்திலும் வெற்றி வாய்ப்பற்ற நிலையில், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள் நகைப்புக்கு உரியன அல்லவா?  – மு.செண்பகராஜ், அருப்புக்கோட்டை.
ப : என்ன செய்வது? தேர்தல் வந்துவிட்டது. தேர்தலில் நின்றாக வேண்டும். அதில் ஒரு முக்கிய அரசியல் சடங்கு இதுபோன்ற தேர்தல் அறிக்கை வெளியிடுவது. அக்கட்சி நண்பர்களின் அசாத்திய நம்பிக்கையைப் பாராட்டத்தானே வேண்டும்? இல்லையா?
2. கே: இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித ஒதுக்கீட்டிற்கு பா.ம.க. மட்டுமே சொந்தம் கொண்டாடுவதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?  – வேலன், காஞ்சிபுரம்.
ப : பிரதமர் வி.பி.சிங் மண்டல் அறிக்கையை நிறைவேற்றிவிட்டு பிரதமர் பதவி இழந்து பெருமகிழ்ச்சியோடு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் வந்தபோது தி.க., தி.மு.க., ஜனதாதள் மற்ற முற்போக்கு இயக்கங்கள் அவரை வரவேற்றன. ஆனால், அவர்களோ தம் கட்சியினரை வீட்டுக் கதவுகளை இறுக மூடச் சொன்னவர்கள் என்ற பழைய கதை மறந்துவிட்டதோ!
`அப்படியே மண்டலுக்குரிய 27% அமலாக்கத்திற்கு உரிமை கொண்டாடட்டும் பா.ம.க.
அதற்காகவே அவரது ஆட்சியைக் கவிழ்த்து, மண்டலுக்கு எதிராகக் கமண்டலத்தைத் தூக்கியவர்களோடு இன்று ஒன்றுபட்டு நிற்பது நியாயந்தானா, கேளுங்கள்!
சமூகநீதி _ ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிப்பவர்களா பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்? – பதில் கேளுங்கள்.
லட்சணம் பற்றி ஊடகங்களில் காண்க!
3. கே: கோவையில் பிரதமர் கலந்துகொண்ட ஊர்வலத்தில் பள்ளி மாணவர்களைக் காவி உடையில் பங்குகொள்ளச் செய்ததை மறைத்து, மாணவர்கள் வேடிக்கை பார்க்க வந்தனர் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?  – சின்னஅம்மா, கொளத்தூர்.
ப : பிரதமர் ‘ரோடுஷோ’ இப்படித்தான் நடந்தது என்பதை உலகறியச் செய்துவிட்டது – இந்தப் புகாரும் அதன்மீது வந்த நடவடிக்கையும்!
தானே சேர்ந்த கூட்டமல்ல என்பதைப் புரிய வைத்துவிட்டதே !
4. கே: தி.மு.க. தேர்தல் அறிக்கையை இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையாக, அதில் உள்ள மாநிலக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையாக சில மாற்றங்களுடன் வெளியிட்டால், இந்தியா முழுக்க நல்ல பலன் கிடைக்கும் என்பதால் ஆலோசனை வழங்குவீர்களா?  – வெ. காமாட்சி, ஆவடி.
ப  : ஆலோசனை வழங்குவது தேவையில்லை. அது கால ஓட்டத்தில் – தானே நடக்கும்!
5. கே :  “மதச்சார்பற்ற நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் அவசியம்” என்ற அமித்ஷாவின் கருத்தைப் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? 
– ஜானகி அம்மாள், செங்கோட்டை.
ப : முரண்பட்ட வாக்கு மூலம்; அர்த்தமற்ற கருத்து!
6. கே: தேர்தல் முடியும்வரை அரசியல்  கட்சித் தலைவர்கள்மீது E.D. போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க முடியாதா? – கோபி, பெரம்பூர்.
ப : சட்டப்படி செய்யமுடியாது !
தவறான பயன்பாடு _ Misuse of Laws. உரிய நீதிமன்றங்களை நாடுவதே ஒரே சட்டரீதியான முறை.
7. கே: சமூக நீதி, ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரும் பா.ம.க. – அதற்கு எதிரான பி.ஜே.பியுடன் கூட்டுச் சேர்ந்திருப்பது மக்கள் நலத்திற்கு என்று கூறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? – சின்னப்பொண்ணு, வண்ணாரப்பேட்டை.
ப : அந்த முடிவு ‘தம் மக்கள் நலத்திற்கு’ என்று திருத்தி சில ஏடுகளில் தகவல் வெளிவருகிறதே, படித்தீர்களா?
பி.ஜே.பியின் திரிசூல சக்தி என்றும் கூறுகிறார்கள்.
8. கே: அ.தி.மு.கவிலிருந்து பிரிந்துள்ளவர்கள் பி.ஜே.பி. அணியில் சேர்ந்து  பி.ஜே.பியை வளர்ப்பது இனத் துரோகம் அல்லவா?
– எம். ரகு, திருவள்ளூர்.
ப : சுயநலம் என்கிறபோது, இனத் துரோகமாவது வெங்காயமாவது!
முதலில் மனச்சாட்சிக்கு விரோதம். ♦