கட்டுரை – “ஒரே நாடு, ஒரே உறுப்புதான பதிவேடு’’ திட்டமும் தமிழ்நாடும் – ஒரு பார்வை

2023 ஏப்ரல் 1-15,2023 கட்டுரைகள் மற்றவர்கள்

சரவணா இராசேந்திரன்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேசிய அளவிலான பதிவேட்டைக் கொண்டு வரும் வகையில் “ஒரே நாடு, ஒரே உறுப்பு தானப் பதிவேடு’’ திட்டத்தை இந்திய சுகாதாரத் துறை வகுத்து வருகிறது. உறுப்பு மாற்று சிகிச்சையில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுமூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிகளை ஏற்படுத்தும்படி அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உறுப்பு மாற்று சிகிச்சைக்கென உள்ள 2014ஆம் ஆண்டின் ‘Transplantation of Human Organs and Tissues Rules’ என்ற விதிகளில் திருத்தும்படியும் நீதிமன்றம் கூறியது.

இதையடுத்து இந்திய சுகாதார அமைச்சகம் “ஒரே நாடு, ஒரே உறுப்பு தான பதிவேடு” என்ற கொள்கையை வகுப்பது தொடர்பாக மாநில அரசுகளோடு கலந்தாலோசித்து வருகிறது.
இதன்படி, இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் உறுப்புகளைத் தானமாகப் பெற பதிவுசெய்வதற்கு, ஒரே மாதிரியான விதிமுறைகள் உருவாக்கப்படும். இது தொடர்பான கூட்டம் ஒன்று கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி எல்லா மாநிலங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய உறுப்பு மாற்று சிகிச்சை விதிமுறைகளில் சில திருத்தங்களைச் செய்யும்படி கூறப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

முக்கியமான மூன்று திருத்தங்கள்

அதில் மூன்று திருத்தங்கள் மிக முக்கியமானவை.
 முதலாவதாக, உறுப்புகளைத் தானமாகப் பெற பதிவுசெய்ய அந்த நோயாளி 65 வயதிற்குள் இருக்க வேண்டும் என்ற விதி நீக்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா போன்ற பல மாநிலங்கள் உறுப்பு தானத்திற்காக பதிவு செய்யும்போது, நோயாளிகளிடமிருந்து ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை கட்டணமாக வசூலிக்-கின்றன. இது உறுப்பு தானம் குறித்த தேசிய விதிகளுக்கு முரணானது என்று கூறி, கட்டணங்களை நீக்கும்படி கூறப்பட்டுள்ளது.
 மூன்றாவதாக, இறந்தவர்களிடமிருந்து உறுப்புகளைத் தானமாகப் பெற விரும்புபவர்கள், அந்த
மாநிலத்தில் பதிவு செய்தவர்களாக இருக்க வேண்டும் என்ற விதியை நீக்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவமனையில் இருப்பவரும், இந்தியாவின் எந்த மருத்துவமனையில் இருந்தும் உறுப்புகளைத் தானமாகப் பெற முடியும்.

இந்த மூன்றாவது கொள்கைதான் தமிழ்நாட்டிற்குப் பாதகமாக முடியும் என கருதுகிறார்கள். இந்தத் துறையைக் கவனிப்பவர்கள்.
‘நீட்’ தேர்வைப் போல இதுவும் தமிழ்-நாட்டைப் பெரிதும் பாதிக்கும் திட்டமாகும்.

நீண்ட காலமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு, இந்தக் கொள்கையை ஏற்கக்கூடாது என்கிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் முன்னாள் தலைவரான மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.

“இதனை ஏற்க முடியாது. காரணம், சுகாதாரம் என்பது மாநிலங்களின் கீழ் உள்ள துறை. குறிப்பாக ‘ஒரே நாடு, ஒரே உறுப்பு மாற்றப் பதிவேடு’ என்பதைக் கடுமையாக எதிர்க்கவேண்டும். காரணம், ஒரு மாநிலத்தில் பதிவுசெய்கிறோம் என்றால், அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய மருத்துவர் அந்த நோயாளியை நேரடியாகப் பார்ப்பார். அந்த நோயாளிக்கு உண்மையிலேயே உறுப்பு மாற்றம் தேவையா என்பதை ஆராய்வார். அதற்குப் பிறகுதான் பதிவுசெய்வார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, உறுப்பு மாற்று சிகிச்சைக்கு நோயாளி நேரடியாகப் பதிவுசெய்ய முடியாது. சம்பந்தப்பட்ட மருத்துவமனைதான் அதனைச் செய்ய முடியும்.

ஏனென்றால், அவர்கள்தான் உண்மையிலேயே இந்த நோயாளிக்கு உறுப்பு மாற்று சிகிச்சை தேவையா என்பதை முடிவுசெய்ய முடியும். இதில் ஏதாவது பிரச்சினை என்றால் அந்த மருத்துவரும் மருத்துவமனையும்தான் பொறுப்பு.
நோயாளியே நேரடியாகப் பதிவுசெய்ய அனுமதித்தால், எல்லோரும் பதிவுசெய்வார்கள். உண்மையிலேயே தேவையா, தேவையில்லையா என்பதை ஆராயாமல் பதிவுசெய்தால், உறுப்பு கிடைக்கும்போது நோயாளி இல்லாமல் அந்த உறுப்பு வீணாகிவிடும்.
தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு என ஒரு வரிசை இருக்கிறது. முதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுக்கப்படும்.

அடுத்ததாக, வெளி மாநிலத்தைச் சேர்ந்த-வர்களுக்குக் கொடுக்கப்படும். அதற்குப் பிறகு, வெளிநாட்டவருக்குக் கொடுக்கப்படும். இந்த நடைமுறையில் ஒரு சிறிய பிரச்சினையோ, முறைகேடு புகாரோ வந்ததில்லை.

இந்த நிலையில், இந்த விதியை ஏற்றுக்-கொண்டால், நம் மாநிலத்தில் கிடைக்கும் உறுப்புகள் வெளி மாநிலங்களுக்கே செல்லும். வேறு மாநிலங்களில் இந்த அளவுக்கு உறுப்புகள் தானம் செய்யப்படுவதில்லை. அதிகம் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட தமிழ்நாடு நீட் தேர்வால் பெரிதும் பாதிக்கப்படுவது போல, இதனாலும் தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்படும். இது இங்கு பதிவுசெய்யும் நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்“ என்கிறார் டாக்டர் அமலோற்பவநாதன்.

உறுப்புகளுக்காகப் பதிவு செய்வதற்கு உள்ள வயது வரம்பை நீக்குவது பற்றி தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் விதியைச் சுட்டிக்காட்டும் அமலோற்பவநாதன், தமிழ்நாட்டில் எப்போதுமே அந்த விதி கிடையாது என்கிறார்.

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை என்ன செய்தோம் என்றால், 60 வயதுக்குக் கீழே உள்ள நோயாளிகளுக்கு முன்னுரிமை அளித்துவந்தோம். 60 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கு இரண்டாவது முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
அதேபோல, பதிவுக் கட்டணத்தை நீக்க வேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு எப்போதுமே பதிவுக் கட்டணம் கிடையாது” என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் உறுப்பு மாற்றுத் திட்டம் 2008இல் துவங்கப்பட்டது. அந்தத் தருணத்தில், மூளைச் சாவு குறித்து முடிவுசெய்வது தொடர்-பாக மாநில அரசிடம் சட்டம் ஏதும் இல்லை.

1994ஆம் ஆண்டின் இந்திய அரசின் சட்டம் மட்டும்தான் இருந்தது. ஆகவே, 1994இன் சட்டத்தை வைத்துக்கொண்டு, உறுப்பு மாற்று சிகிச்சைக்கென புதிதாக அரசாணைகளைப் போட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் திட்டம் துவங்கப்பட்டது.
அதற்கு முன்பாக, பெரும்பாலும் உறுப்புமாற்று என்பது உயிரோடு இருப்பவர்களி-டமிருந்து தானமாகப் பெறப்படும் உறுப்புகளை வைத்துத்தான் நடந்துவந்தது.

இதனை சட்டரீதியாகச் செய்ய முடியும் என வழிகாட்டியது தமிழ்நாடுதான். திட்டம் துவங்கிய இரண்டாம் ஆண்டிலேயே, இறந்தவர்களிடமிருந்து உறுப்புகளை தானமாகப் பெற்று சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றது.
இதற்குப் பிறகு இந்தியாவின் பல மாநிலங்கள் தமிழ்நாட்டைப் பார்த்து உறுப்பு மாற்று சிகிச்சைக்கான விதிகளை வகுத்தார்கள்.
2014ஆம் ஆண்டில் தேசிய அளவில் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான விதிகளை வகுக்க National Organ and Tissue Transplant Organization (NOTTO) கொண்டு வரப்பட்டது.

இந்த அமைப்பு முதன்முதலில் உருவாக்-கப்பட்டபோது, மாநிலங்களை பெரிய அளவில் கட்டுப்படுத்தப்போவதில்லை என்றும் மாநிலங்கள் தங்கள் விதிகளைப் பயன்படுத்தியே உறுப்பு மாற்று சிகிச்சையை அளிக்கலாம் எனக் கூறப்பட்டது.

2015இல் ஒன்றிய அரசு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்து, இந்த (NOTTO) குறித்து இரண்டு நாள்கள் விவாதித்தனர். அப்போது, தமிழ்நாடு அரசு புதிய விதிகள் குறித்த கவலைகளைத் தெரிவித்தது. இதையடுத்து, முதல் கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மட்டும் செயல்படுத்துவோம்; பிறகு அதன் அனுபவத்தை வைத்து முடிவுசெய்யலாம் என்றார்கள்.

2016வரை தமிழ்நாடு இந்த (NOTTO) விதிமுறைகளை ஏற்கவில்லை. அதற்குப் பிறகு ஒன்றிய அரசு அதீதமான அழுத்தம் கொடுத்த நிலையில், 2020இல் இதனை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டது.

தற்போதைய நிலையில், தமிழ்நாடு என்ன செய்ய முடியும்?

“இந்த நிலையில் தமிழ்நாடு அரசு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கென ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். மருத்துவம் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் வருவது என்பதால் அத்தகைய சட்டத்தை இயற்ற முடியும். அப்படி ஒரு சட்டத்தை உருவாக்கி, அடிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைப் பதிவை மேற்கொள்ள வேண்டும்“ என்கிறார் அமலோற்பவநாதன்.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள், இதற்கென ஏற்கெனவே உறுப்பு மாற்று சிகிச்சைக்கென சட்டங்களை இயற்றிவிட்டதால் நோட்டோ விதி அவர்களுக்குப் பொருந்தாது.

வேறு மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு உறுப்புகளை மறுப்பது குறுகிய மனப்பான்மையாக ஆகாதா? என்ற கேள்வி எழும். “நாம் எப்போதுமே பிற மாநிலத்தவரை ஒதுக்கியதில்லை. அவர்கள் நம் மாநிலத்தில் வந்து பதிவு செய்தால் அவர்களுக்கு உறுப்புகள் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இதுவரை தமிழ்நாடு அரசின் திட்டத்தில் ஒரு புகார் கூட வந்ததில்லை. ஒரு வெளிநாட்டவருக்கு உறுப்பைக் கொடுத்தால் கூட, ஏன் உள்ளூர் நபருக்குக் கொடுக்காமல் வெளிநாட்டவருக்குக் கொடுத்தோம் என தீவிரமான ஆவணப்படுத்தல் நடைபெறும்.
இந்தியாவிலேயே அதிக அளவிலான உறுப்பு தானம் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு முதல் இது தொடர்பாக விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடந்திருக்கிறது.

தவறு இல்லாமல் நடத்திக்காட்டியிருக்கிறோம். அதனால்தான் மக்கள் நம்புகிறார்கள். அதனால்தான் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடக்கிறது.

2015இல் உச்சகட்டமாக 186 உறுப்பு தான அறுவை சிகிச்சையை தமிழ்நாடு செய்துகாட்டியது. இது தொடர்பான தரவுகளை நாம் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அனுப்பலாம். ஆனால், இங்கே கிடைக்கும் உறுப்புகளை யாருக்கு அனுப்புவது என்பதை அந்தந்த மாநிலம்தான் முடிவு செய்ய வேண்டும்“ என்கிறார் அமலோற்பவநாதன்.

உலகிலேயே மிகச் சிறந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். நமக்கு ஏன் ஒன்றிய அரசு விதிகளை வகுக்க வேண்டும் என்கிறார் அவர்.
தமிழ்நாட்டில்Transplant Authority of Tamilnadu என்னும் அமைப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைக் கட்டுப்படுத்துகிறது.

1994இல் Transplantation of Human Organs Act என்ற சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றிய பிறகு, இறந்தவர் உடலில் இருந்து உறுப்புகளைத் தானமாகப் பெற்று முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 1995ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் செய்யப்பட்டது.

2008ஆம் ஆண்டில் இதற்கான விரிவான கொள்கைகளோடு, இறந்தோர் உடலில் இருந்து உறுப்புகளைத் தானமாகப் பெறும் திட்டம் துவக்கப்பட்டது. இதனை ஒழுங்குபடுத்த 2015இல் Transplant Authority of Tamil Nadu உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உறுப்பு தானம் என்பது தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது.

2008இல் 27 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் 2009இல் 309 அறுவை சிகிச்சைகளும் 2010இல் 510 அறுவை சிகிச்சைகளும் 2013இல் 653 அறுவை சிகிச்சைகளும் 2014இல் 705 அறுவை சிகிச்சைகளும் 2015இல் 861 அறுவை சிகிச்சைகளும் 2016இல் 1018 அறுவை சிகிச்சைகளும்,

2022ஆம் ஆண்டில் 878 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றிருக்கின்றன. இறந்தவர்கள் உடலில் இருந்து உறுப்புகளைத் தானமாகப் பெற்று, அறுவை சிகிச்சைகளை அளிப்பதிலும் தமிழ்நாடு பல ஆண்டுகள் முன்னிலை வகித்து வருகிறது.
வட இந்தியாவில் தானமாகப் பெறப்படும் உறுப்புகள் பெரும் செல்வந்தர்களுக்கு வெளிநாடு வாழ் நபர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் கிடைப்பதாக அதிகாரப்பூர்வமல்லாமல் பேசப்படுகிறது. இதில் மறைப்பதற்கும் ஒன்றுமில்லை, காரணம், வட இந்தியாவில் நடக்கும் உறுப்பு தானம் மற்றும் அதில் பயனடைந்தவர்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சரிவர வெளிவரவில்லை.

தமிழ்நாடு அரசு வெளிப்படையாக இந்தப் புள்ளிவிவரங்களை வைத்துள்ளதால் கூலித்தொழிலாளிக்கும் மாற்றுக் கல்லீரல், பெயிண்டருக்கு சிறுநீரகம், பட்டாசு தொழிற்சாலை தொழிலாளிக்கு தோல் போன்றவை கிடைத்துள்ளன. வடக்கே இதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

இத்திட்டம் நிறைவேறினால் தமிழ்நாட்டில் சாமானியர்களுக்கு உறுப்பு தான பலன் கிடைக்காமல் செய்துவிடும் என்கிற அச்சம் உள்ளது. எனவே, இது குறித்து தமிழ்நாடு அரசு ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுத்து, செயல்பட வேண்டியது கட்டாயமாகும்.