விழிப்பும் வியப்பும் தந்த பரப்புரைப் பயணம்!

2023 ஏப்ரல் 16-30,2023 கட்டுரைகள் மற்றவர்கள்

தி. என்னாரெசு பிராட்லா

திராவிட இயக்கத்தின் அடிநாதம் சமூகநீதிக் கொள்கை.தொடக்க காலத்தில் வகுப்புவாரி உரிமை என்று பேசப்பட்டு பின்நாளில் இட ஒதுக்கீடு என்று அறியப்பட்ட சமூகநீதிக் கொள்கைதான் இந்த இயக்கத்தின் பேச்சும் மூச்சும்!
அந்த சமூகநீதிக்கு மிகப்பெரிய அநீதியை இழைக்கும் விதமாக அந்த தத்துவத்தையே அடியோடு சிதைக்க நினைக்கும் ஒன்றிய மதவாத பாசிச பா.ஜ.க. அரசின் செயல்பாடு இன்று மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

அந்த சமூகநீதியை பாதுகாத்திடவும், இன்றைக்கு இந்திய ஒன்றியமே வியக்கும் வகையில் மக்களுக்கான ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் நோக்கங்களை விளக்கியும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒரு பெரும் பரப்புரை பயணத்தை மேற்கொண்டார்.

அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த மண்ணாண ஈரோட்டில் கடந்த பிப்ரவரி 3 ஆம் நாள் ஆம் தந்தை பெரியாரின் தலை மாணாக்கர் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளில் பயணத்தைத் தொடங்கினார். அவரோடு சொற்பொழிவாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கொள்கைப் பயணத் தோழர்கள் என நான்கு வாகனங்களில் மொத்தம் 25 பேர் உடன் பயணித்தனர். நாளொன்றுக்கு இரண்டு மாவட்டங்களில் இரண்டு பொதுக் கூட்டங்கள்.ஒன்று பெரிய நகரம் (நகராட்சி அளவில்). மற்றொரு கூட்டம் நடு நிலை நகரம் (பேரூராட்சி அளவில்). சென்றஇடமெல்லாம் கழகத் தலைவருக்கு பொது மக்கள் அளித்த வரவேற்பு மிகப் பெரியது.

ப.குமாரபாளையம், ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர், காரமடை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, முசிறி, குளித்தலை, பெரம்பலூர், திருவரங்கம், சிங்கப்பெருமாள் கோவில், பல்லாவரம், மயிலாப்பூர், புரசைவாக்கம், புழல், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், உத்திரமேரூர், செய்யாறு, வேலூர், திருவண்ணாமலை, ஒசூர், ஊற்றங்கரை,தருமபுரி, சேலம், மன்னார்குடி, ஆண்டிப்பட்டி, பேரையூர், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், நாகர்கோவில், திருநெல்வேலி, சங்கரன்கோவில், சேத்தூர், இராமேசுவரம், தேவகோட்டை, பொன்னமராவதி, சிவகங்கை, பேராவூரணி, அறந்தாங்கி, திருநாகேஸ்வரம், நன்னிலம், புதுச்சேரி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெண்ணாடம், ஆண்டிமடம், திருமருகல், காரைக்கால், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் என மொத்தம் 57 ஊர்களில் இந்த பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன.

அதிலும் பல ஊர்கள் நம் கழகத் தலைவர் உரையாற்றி ஏறத்தாழ 10 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் இருக்கும் என்ற செய்தி கூடுதல் தகவல். ஒவ்வொரு ஊருக்குள்ளும் தலைவர் வாகனம் செல்லும்போது கடைவீதியில் நிற்கும் பொது மக்கள் அய்யா, தலைவரே! ஆசிரியரே! என அன்போடு அழைப்பதை நேரில் கண்டு இன்புற்றோம்.
கருப்புச் சட்டை இயக்கமும் கழகத் தலைவரின் உழைப்பும் இன்னும் இன்னும் இந்த சமூகத்திற்கு தேவை என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது இந்த நிகழ்வுகள்.

அதிலும் குறிப்பாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆசிரியர் உரையாற்றி மேடையில் இருந்து இறங்கியதும் கூடி நின்ற பொதுமக்களில் இஸ்லாமிய பெரியவர் ஒருவர் கழகத் தலைவரின் இரண்டு கரங்களையும் பற்றிக் கொண்டு “அய்யா அற்புதமான உரை. சேது சமுத்திர திட்டத்தை பற்றி எளிய முறையில் விளக்கம் தந்து பேசியது மிகவும் பயனளிக்கிறது” என்று உணர்ச்சி பொங்க வாழ்த்தினார்.

அதேபோல,உடுமலைப்பேட்டையில் தி.மு.கழக மூத்த தொண்டர் ஒருவர் அய்யா இப்போதைக்கு நீங்கள் தான் எங்களுக்குக் கலைஞர் என்று உற்சாகமாகக் கூறியதும், மன்னார்குடியில் நெற்றி நிறைய திருநீறுப் பட்டை அணிந்த ஒருவர் வாகனத்தில் ஏறும் தலைவரை வழி மறித்து அய்யா நான் பக்தன்தான்; ஆனால், உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.ரொம்ப நன்றிங்கய்யா! என்றதும், மயிலாடுதுறையில் ஏறத்தாழ ஒரு மணிநேரம் உரையாற்றி மேடையில் இருந்து இறங்கிய தலைவரின் அருகில் வந்த பழுத்த பக்தராய் காட்சி தந்த ஒருவர் ” அய்யா இந்த வயசுல தண்ணீர் கூட குடிக்காம ஒரு மணி நேரம் பேசுறீங்களா!! சிவ சிவா!! என்று ஆச்சரியப்பட்டு தன் கன்னத்தில் போட்டுக் கொண்டதையும், விழுப்புரம் கூட்டத்தில் தலைவர் உரையாற்றி வாகனத்தில் ஏற வந்த போது 70 வயது நிறைந்த மூதாட்டி ஒருவர் கூட்டத்தை விலக்கிக்கொண்டு, ‘தள்ளுங்க.. தள்ளுங்க.. அய்யாவை பார்க்கனும்னு’
சொல்லிக் கொண்டே ஆசிரியரின் அருகில் வந்தவர் அய்யா என் பெயர் ராணி. நீங்களும் அய்யா பெரியாரும் இதே விழுப்புரம் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது பயணியர் மாளிகையில் வந்து தங்கியிருந்தீர்கள். அப்போது நான்தான் அய்யா பெரியாருக்கும் உங்களுக்கும் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். அப்ப கேட்ட அதே குரல் கணீர்னு இன்னமும் இருக்குய்யா.. நீங்க நல்லா இருக்கணும்’’ என்று நெஞ்சார வாழ்த்தியதும் இன்னமும் என் கண்களை விட்டு அகலவில்லை.

இது எப்படி நிகழ்கிறது? நாம் யார்? எந்தவொரு அரசியல் கட்சியினருக்கும் இதுபோன்ற மரியாதை கிடைக்குமா? இத்தனைக்கும் திராவிடர் கழகம் ஒரு கடவுள் மறுப்பு இயக்கம். ஜாதியைச் சாய்த்திட மதத்தை மாய்த்திட ஓயாது உழைக்கும் ஒரு தன்னல மறுப்பு இயக்கம். எப்படி இந்த இயக்கத்தின் மீது ஜாதி, மதங்களுக்கு அப்பாற்ப்பட்டு பொதுமக்கள் அமோக ஆதரவு அளிக்கின்றனர்!!

அனைத்தும் தந்தை பெரியாருக்கே உரியது! ஆம்! அவர் வகுத்துத் தந்த கொள்கை வழி, இலட்சியப் பாதை இன்னும் இந்த மானுடம் சிறக்க வழி வகுக்கும் என்பதில் அய்யமில்லை.

30 நாட்களில் நான்கு கட்டங்களாக பரப்புரையில் 6478 கி.மீ. பயணம் செய்து 57 பொதுக் கூட்டங்களில் உரையாற்றி ஒரு மாபெரும் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் நம் இனமானத் தலைவர் 90 வயது இளைஞர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!

இது சாதாரணமானது அல்ல. தினமும் தூங்கச் செல்வது இரவு 12:00 மணிக்கு மேல். காலை எழுவது
6:00 மணி. இயன்ற ஊர்களில் தன் தோழர்களோடு ஒரு நடைப்பயிற்சி‌. பிறகு நாளிதழ்கள் வாசிப்பு, தனக்கான பணிகளை முடித்து உள்ளூர்த் தோழர்களைச் சந்தித்து உரையாடுவது, இடையிடையே கழகத்தின் மூத்த பெருந்தொண்டர்களை அவரவர் இல்லத்திற்கே சென்று உடல்நலம் விசாரிப்பது, அறிக்கைகள் எழுதுவது, மதிய உணவுக்குப் பிறகு சின்னஞ்சிறிய ஓய்வு, மாலை 4 மணி ஆனால் போதும் தீப்பறக்கும் அனல் பிரச்சாரம் என இயந்திரமும் தோற்கும் நம் தலைவரின் உழைப்புக்கு முன்னால்!! அது மட்டுமா! இந்தப் பயணத்தில் வாழ்விணையேற்பு விழா, படத்திறப்பு விழா, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் சந்திப்பு, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டல் என பல்பொருள் அங்காடி போல் ஏராளம் ஏராளம் அவரின் பணிகள்.

கடும் குளிரிலும் கொளுத்தும் வெய்யிலிலும் இயற்கையே வியக்கும் தலைவரின் இயக்கம் அளவிடற்கரியது!
பெரும்பாலான ஊர்களில் தலைவரின் உரை குறைந்தது 40 நிமிடங்கள் இடம் பெற்றது.
அதில் குறிப்பாக சேது சமுத்திர திட்டத்தின் அவசியத்தையும் அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தென் மாவட்டங்கள் எந்தளவிற்கு பயன் அடையும் என்பதை விளக்கி பேசியது தென்மாவட்ட மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அதேபோல திராவிட மாடல் அரசின் சாதனைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அண்மையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தன் பெற்றோர்கள் என்னை நரபலி கொடுத்து விடுவார்கள். எனவே, எங்கள் மாநிலத்தில் பாதுகாப்பு கிடைக்காது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். எனவே, என்னை தமிழ்நாட்டை விட்டு அனுப்பாதீர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததை குறிப்பிட்டுச் சொல்லி,இதைவிட திராவிட மாடல் அரசின் சிறப்பிற்கு வேறு என்ன சான்று தேவை? என்று தலைவர் பேசியபோது கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் பலத்த கைதட்டல் தந்து ஆரவாரம் செய்து வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையை முதலில் தொடங்கியதும் ஆசிரியர் அவர்கள்தான். அங்கே ஈரோடு கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், ம.ம.க.பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதேபோல சங்கரன்கோவிலில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேரா.சுப.வீரபாண்டியன், பேரையூரில் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவன தலைவர் நாகை.திருவள்ளுவன், அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன், திருப்பூரில் தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மன்னார்குடி மற்றும் சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், பல்லாவரத்தில் ம.ம.க.துணைப் பொதுச்செயலாளர் யாக்கூப், பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் தமிழ்நாடு அரசு வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ்நாடு காங்கிரசு கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கழகத் தலைவருக்கு சென்ற இடமெல்லாம் தாரை, தப்பட்டை, மேள தாளம் முழங்கியும் பட்டாசு வாண வேடிக்கைகள் விட்டும் வியத்தகுமுறையில் வரவேற்பு அளித்தனர்.

அதில் முத்தாய்ப்பாக கடலூர் நிறைவு விழாவில் கழகத் தலைவரை கருஞ்சட்டைத் தோழர்கள் கைகளில் தீப்பந்தம் பிடித்தும், கழக மகளிரணியினர் மலர்களை தமிழர் தலைவர் மீது தூவியும் வரவேற்றது எழுச்சிமயமாக அமைந்தது.