காவிகளைக் கதறவிட்ட முதலமைச்சரின் முழக்கம்!

2023 கட்டுரைகள் மார்ச் 16-31,2023

மஞ்சை வசந்தன்

தமிழ்நாடு முதலமைச்சர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் அவர் ஆற்றிய உரை இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் எழுச்சி முழக்கமாய் அமைந்தது. ஆம். இதோ அந்த உரை4:

காங்கிரஸ் எனக்கு அளித்த பரிசு!

‘ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்தின் அடிப்படையில் ஒருமித்த சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து செயல்படத் தயார்’’ என்ற காங்கிரசு கட்சியின் தீர்மானத்தைத்தான் எனக்குக் கிடைத்த சிறந்த பிறந்தநாள் பரிசாக நான் சொல்கிறேன்.

இன்றைய காலத்துக்கு மிக மிகத் தேவை!

2024 நாடாளு மன்றத் தேர்தல், அதில், யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதற்கான தேர்தல் அது! ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தி ஒற்றைத் தன்மை எதேச்சாதிகார நாடாக மாற்ற நினைக்கக்கூடிய பா.ஜ.க.வை அரசியல் ரீதியாக வீழ்த்தியாக வேண்டும்!

பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் இதனையே, ஒற்றை இலக்காகத் திட்டமிட்டு ஒன்றுசேர வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே, வெற்றி பெற்று விட்டோம் என்று சொல்லி விடலாம். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து, தேசிய அரசியலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத்தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். இதனை காங்கிரசு உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்தே நான் சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டு காலமாக நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் இந்த ஒற்றுமை என்ற அந்த அடிப்படைதான்!

காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது!
இதனை 2021ஆம் ஆண்டே சேலம் பொதுக்கூட்டத்தில் அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை வைத்து கொண்டே நான் சொன்னேன். சாட்சி இருக்கிறார் அழகிரி அமர்ந்திருக்கிறார், தங்கபாலு அமர்ந்திருக்கிறார். தமிழ்நாட்டைப் போல ஒற்றுமையான கூட்டணியை அகில இந்தியா முழுமைக்கும் அமையுங்கள் என்று சொன்னேன். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து,விட்டுக் கொடுத்து, பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதேநேரத்தில், காங்கிரசு அல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சிலரால் சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது. தேர்தலுக்குப்பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் என்று சொல்வதும் நடை முறைக்கு சரியாக வராது.
Political parties should rise above their differences and stand together as a unified force to defeat BJP in the upcoming parliamentary elections.
Talks of third front are pointless.
I humbly request all the political parties opposed to BJP to understand this simple electoral arithmetic and stand united.

பா.ஜ.க. அல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் இல்லை!
முறையாக நிதிகளை வழங்குவது இல்லை!
ஜி.எஸ்.டி.க்கு பிறகு நிதி உரிமைகள் மாநிலங்களுக்கு இல்லவே இல்லை!
இழப்பீடுகளை உரிய காலத்தில் தருவதும் கிடையாது!

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு எந்த பெரிய திட்டங்களும் இல்லை!
இப்படி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களோடு நிருவாக யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க.அதனுடன் கொள்கை யுத்தம் தொடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம்.அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புதான் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் களம்! அந்தக் களத்தை நோக்கிய பயணத்துக்கு போர் வியூகங்களை வகுக்கும் பாசறைக் கூட்டமாக எனது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

வருகை தந்துள்ள அகில இந்தியத் தலைவர்கள் இந்தத் தகவல்களை டில்லிக்கு எடுத்துச் செல்லுங்கள். இந்திய துணைக் கண்டம் முழுமைக்கும் எடுத்துச் சொல்லுங்கள். ஒற்றுமையை வலியுறுத்துங்கள். வெற்றிக்கு அடித்தளமிடுங்கள். இப்போதே விதைப்போம்.
அடுத்த ஆண்டு மார்ச் என்பது அகில இந்திய அரசியலுக்கு அறுவடைக் காலமாக அமையட்டும்!

BJP is waging a war against the states governed by its opposition parties.
The 2024 General Elections is an opportunity to win our ideological battle.
Let us unite and march towards victory!’’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

தனது 70ஆம் பிறந்தநாளை வெறும் களியாட்ட நிகழ்வாகக் கழிக்காமல், காலத்தின் கட்டாயமாய் இன்று கண்முன்னே நிற்கும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, அதற்கான அடித்தளத்தை அமைக்கும் நிகழ்வாக அதை தன் திறமையால் மாற்றினார்.
பி.ஜே.பி., ஆட்சி இன்னும் அய்ந்து ஆண்டுகள் தொடர்ந்தால் இந்தியாவின் எதிர்காலம், மக்களாட்சி, மக்கள் உரிமை என்னவாகும்? இந்திய அரசமைப்பு நிற்குமா? நிலைக்குமா? என்பன போன்ற அச்சங்களும், வினாக்களும் அணிவகுத்து நிற்கும் நிலையில், அவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு பி.ஜே.பி. ஆட்சியை அகற்றுவதே என்பதை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு அதற்கான தீர்வை தன் உரையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அணி என்று காங்கிரசுக்கு எதிராய் கைகோத்தால் அது பி.ஜே.பிக்குத்தான் சாதகமாய் முடியும் என்பதை ஆணித்தரமாக அறிவித்தார்.
காங்கிரசோடு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அவற்றை முதன்மைப்படுத்தாமல், பெரும் ஆபத்தான பி.ஜே.பி. ஆட்சியை அகற்று-வதைத்தான் முதன்மை இலக்காகக்கொள்ள வேண்டும். அதற்கு காங்கிரசையும் உள்ளடக்கிய வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதை அழுத்தி, வலியுறுத்திக் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் இதை ஆழமாக உள்ளத்தில் பதித்து, ஓரணியில் இணையவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மாநில அளவில் காங்கிரஸ் கட்சியுடன் எதிர்நிலையில் இருக்கும் கட்சிகள் கூட நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.யைத் தோற்கடிப்பதில் காங்கிரஸ் கைகோக்க வேண்டியது கட்டாயம். அதில் தப்பு ஏதும் இல்லை.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் எதிர்நிலையில் உள்ள மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கூட பி.ஜே.பி.யைத் தோற்கடித்து, ஜனநாயகக் கட்சிகள்வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

இதை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலக் கட்சித் தலைவர்களும் கருத்தில்கொண்டு தேர்தல் களம் காணவேண்டும்.
அதற்காக இப்போதிலிருந்தே இந்தியாவி-லுள்ள எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் முயற்சி மேற்கொண்டு ஒற்றுமையுடன் ஒன்றிணைய வேண்டும். அதுவே இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும், மக்களாட்சிக்கும் நன்மைபயக்கும் முடிவாகும்.