நினைவு நாள் – சிறுகதை

2023 சிறுகதை மார்ச் 16-31,2023

ஆறு. கலைச்செல்வன்

அப்பா!…
கதிரவன் வாய் முணுமுணுத்தது. கண்களில் கண்ணீர் பெருகியது.

அப்பா இராஜகோபாலன் இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.

இந்த ஒரு வாரமும் கதிரவனுக்கு அவர் நினைவு தோன்றாத நேரமே இல்லை. தூக்கத்தில் விழித்துக்கொண்டாலும் அவர் நினைவு அவன் மனதைத் துளைத்தெடுத்தது.

அவர் உயிரோடு இருந்த காலங்களில் அவரோடு பழகிய நாள்களை எண்ணிப் பார்த்தான்.
அவரோடு நட்பாக இருந்தேனா?

அவர் எண்ணங்களை தான் சரியாகப் புரிந்துகொண்டேனா?

அவர் என்மீது அதிக அக்கறை கொண்டவர் என்பதை நான் உணர்ந்தேனா?

அவரது கருத்துகளை நான் ஏற்றேனா?அவரது அறிவுரைகளை என்றாவது நான் ஏற்று அதன்படி நடந்துகொண்டேனா?

உடல் நலமில்லாமல் அவர் இருந்த காலத்தில் அவருக்கு நான் நல்ல முறையில் பணிவிடை செய்தேனா?

அவரது கண்டிப்பு எனது நலத்திற்கானது என்பதை உணர்ந்தேனா?
இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றித்தோன்றி அவனை வாட்டி வதைத்தன.

சிறுவயதில் அவர் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான் கதிரவன்.
ஆனால், வயது ஏற ஏற மேல் வகுப்புகளுக்குச் சென்றபோது அவரிடம் நடந்துகொண்ட முறை-?…

நினைத்துப் பார்த்தான் கதிரவன்.

பள்ளி இறுதி வகுப்பில் படித்தபோது அடிக்கடி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பான் கதிரவன்.
அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டையே தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பான். இது இராஜகோபாலனுக்கு அறவே பிடிக்காது. எப்படியாவது அதைத் தடுக்க நினைப்பார். தனது துணைவியார் செந்தாமரையிடம் சொல்லிப் பார்ப்பார்.

“இதெல்லாம் ஒரு விளையாட்டுன்னு பார்த்துக்கிட்டு இருக்கானே!’’, என்று ஒரு நாள் கோபமாகக் கேட்டார்.

“உலகமே கிரிக்கெட்டைக் கொண்டாடுது. நீங்கள் மட்டும் ஏன் எதிர்ப்பா இருக்கீங்க?’’ என்றார் செந்தாமரை.

“கிரிக்கெட் என்கிறது மேல் ஜாதின்னு சொல்லிக்கிறவனுங்க விளையாடுற விளையாட்டு. நம்மையெல்லாம் முன்னேறவே விடமாட்டானுங்க’’

“நம்ம பசங்க திறமையா விளையாடி உள்ளே நுழைய வேண்டியதுதானே’’

“செந்தாமரை, கிரிக்கெட் விளையாட்டைப் பத்தி அறிஞர் பெர்னாட்ஷா என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?’’

“என்ன சொல்லியிருக்காரு? சொல்லுங்க.’’

“பதினோரு முட்டாள்கள் விளையாடு-கிறார்கள். அதை பதினோராயிரம் முட்டாள்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று சொன்னாராம். ஆனால் இப்போ பல கோடி முட்டாள்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.’’

“ஆர்வத்தோடுதானே பார்க்கிறார்கள்?’’

“அதைப் பார்க்கிறதாலோ விளையாடறதாலோ எந்தப் பயனும் இல்லை. கபடி, வலைப்பந்து, கூடைப்பந்து கால்பந்து போன்ற நல்ல விளையாட்டுகள் நிறையவே இருக்கு. வெள்ளைக்காரன் வெயில் குளியலுக்காக கடற்கரைக்குப் போய் பந்தைப் போட்டு விளையாடிக்கொண்டிருந்தான். அதுதான் கிரிக்கெட்டா உருமாறிடுச்சு. நம்ம பசங்க அதையே பெரிய விளையாட்டா நெனச்சுக்கிட்டு படிக்காம டி.வி. முன்னாடி உட்கார்ந்து பார்த்து வாழ்க்கையை வீணடிச்சிகிட்டு இருக்காங்க.’’
இவ்வாறு பதில் சொல்லுவார் இராஜகோபாலன்.

அதை கதிரவன் காதிலும் விழும்படியாக சத்தம் போட்டுச் சொல்லுவார்.
அதுமட்டுமல்லாமல், யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று மின்சாரத்தைத் துண்டித்து விடுவார். தொலைக்காட்சி நின்றுவிடும். கதிரவனும் மற்றவர்களும் உண்மையிலேயே மின்தடைதான் என்று எண்ணி எழுந்து சென்றுவிடுவார்கள். அதற்குப் பிறகு மீண்டும் மின் இணைப்பைச் சரிசெய்வார் இராஜகோபாலன்.

இதையெல்லாம் சில நாள்களிலேயே தெரிந்துகொண்ட கதிரவன் தந்தையின் மீது கடும் சினம் கொண்டான். அவரை, தனது எதிரியாகவே நினைத்தான். அவர் செய்வதற்கு எதிர்மாறாகவே நடக்க ஆரம்பித்தான்.

மேல்நிலைக் கல்வியை முடித்துவிட்டான் கதிரவன். சுமாரான மதிப்பெண்களையே பெற்றான். கல்லூரியில் சேரவேண்டும் என்றிருந்த நிலையில் ஊரில் சிலரது பேச்சைக் கேட்டு, அவர்களோடு மலைக்குச் செல்ல மாலை போட்டுக்கொண்டு விரதம் இருக்க விரும்பினான். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடலானான்.

அதை அறிந்த இராஜகோபாலன் கொதித்தெழுந்தார்.

“கல்லூரியில் சேரவேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய வேலையா இது? படிப்புக்குத்தானே முக்கியத்துவம் கொடுக்க வேணும்’’, எனக் கத்தினார்.

“ஊரில் நெறைய பேர் மாலை போட்டுக்கிட்டு போறாங்க. எப்படியோ இவனுக்கு அதில் ஆர்வம் ஏற்பட்டுப் போச்சி. வருஷா வருஷம் போனா அப்புறம் இவனே குருசாமி ஆயிடலாமாம். இப்ப போயிட்டுத்தான் வரட்டுமே,’’ என்று மகனுக்காகப் பரிந்து பேசினார் செந்தாமரை.

“செந்தாமரை… ஊரில் எனக்கு உள்ள மரியாதை உனக்குத் தெரியும். நானும் சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தவன்தான். ஆனாலும் கோயிலுக்குப் போய் வீணாகச் செலவு செய்ததும் இல்லை. ஆனா, இப்ப நான் சாமி கும்பிடறதைக்கூட சுத்தமா விட்டுட்டேன். காரணம், நாட்டு நடப்புதான். வேண்டும்னே எங்க பார்த்தாலும் மதவெறியைத் தூண்டிவிட்டுக்கிட்டு இருக்காங்க. இந்தநேரத்தில் மக்கள் எல்லோருமே ஜாக்கிரதையா இருக்கணும். மதவெறிக்கு ஆளாயிடக்கூடாது. அதுவும் படிக்கிற வயசில ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ஒரு சின்ன மதவெறிக் கும்பல் பெரும்பாலான மக்களைத் தூண்டிவிட்டு இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டத் துடிக்கிறார்கள். ஜாதிவெறியை ஊட்டி வருகிறார்கள். அதுக்கு நம்ம மகனும் துணை போயிடக்-கூடாது’’, என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் இராஜகோபாலன்.

இதையெல்லாம் கதிரவனிடம் எடுத்துக் கூறினார் செந்தாமரை. ஆனால், அவன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.
இராஜகோபாலன் குடும்பத்தின்மீதும் அவர்மீதும் பொறாமை கொண்ட சிலர் கதிரவனுக்குக் தூபம்போட்டு அவனை பக்தியில் மூழ்கச் செய்தனர். இராஜகோபாலன் படிக்கவில்லை என்றாலும் ஊரில் அவர் ஒரு பெரிய மனிதர். செல்வாக்கானவர். அவர் சொல்வதை பலர் கேட்பார்கள் என்ற அளவுக்குச் செல்வாக்கு படைத்தவர். அவர் தனது மகனை நிறைய படிக்கவைக்க வேண்டும் என விரும்பினார்.

கதிரவன் மலைக்குச் சென்று வந்தான். பிறகு எப்படியோ ஒரு வழியாக அவனை வெளியூரில் உள்ள கல்லூரியில் இடம் வாங்கி விடுதியிலும் சேர்த்துவிட்டார்.விடுமுறை நாள்களில் கதிரவன் வீட்டிற்கு வந்து செல்வான். வீட்டிற்கு வந்தவுடன் அப்பாவிடம் எப்போதும் முரண்பாடாகவே பேசுவான். உள்ளுக்குள் மகன்மீது அவர் உள்ளத்தில் புதைந்துகிடக்கும் அன்பையும் அக்கறையையும் அவன் உணரவே இல்லை.

அதுமட்டுமல்லாமல் அவனைப் பற்றி அறிந்த சில மதவாத அமைப்புகள் அவனை அணுகி அவனை மதவாத மாணவர் அமைப்புடன் இணைத்துவிட்டன. இதனால் அவன் படிப்பில் கவனம் செலுத்தாமல் மதவாத அமைப்புகளுடன் சுற்ற ஆரம்பித்தான். இதை அரசல்புரசலாகக் கேள்விப்பட்ட இராஜகோபாலன் மிகவும் மனம் வருந்தினார்.

ஒருமுறை அவன் விடுமுறையில் வீட்டுக்கு வந்த நேரத்தில் செந்தாமரை அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

“தம்பி கதிரவா, அப்பா எப்போதும் உன் நெனைப்பாவே இருக்காங்க. உழைச்சி சம்பாதிக்கிறாங்க. அவருக்கு இருக்கிற நல்ல பேரு ஊரில் யாருக்குமே இல்லை என்பதும் உனக்கும் தெரியும். யாருக்கும் தீங்கு நெனைக்கமாட்டாங்க’’ என்றார் செந்தாமரை.

“எனக்கு அவர் என்ன சம்பாதிச்சு வைச்சிருக்கார்? சுத்த வேஸ்ட்’’, என்றான் கதிரவன்.

“நம்ம குடும்பத்துக்கு நல்ல பேரைச் சம்பாதிச்சு வைச்சிருக்காங்கடா. உன்மேல உசிரையே வைச்சிருக்காங்க. நீ படிச்சி வேலைக்குப் போகணும்னு கனவு கண்டுகிட்டு இருக்காங்க.’’

“எனக்கும்தான் நெறைய கனவு இருக்கு. அதுக்கு அவருதான் தடையா இருக்காரு.’’
இப்படி கதிரவன் கூறியதைக் கேட்ட செந்தாமரை மனம் நொந்து போனார்.

ஒருமுறை கதிரவனுக்காக அவனுக்குப் பிடித்த மீன், ஆட்டுக்கறியெல்லாம் வாங்கி வந்தார். அவர் எது வாங்கி வந்தாலும் தான் சாப்பிடாமல் அனைத்தையும் கதிரவனுக்கே வைக்குமாறு செந்தாமரையிடம் கூறிவிடுவார். அன்றும் அப்படித்தான் செய்தார். ஆனால், அதையெல்லாம் புரிந்துகொள்ளாத கதிரவன்,

“நீ எனக்காக என்ன சேர்த்து வைச்சிருக்க’’ என வாக்குவாதம் செய்துவிட்டு அவரிடம் சொல்லாமலும் செலவுக்குப் பணம் வாங்காமலும் ஊருக்குப் புறப்பட்டுவிட்டான்.

செந்தாமரையும் கோபத்தில் பேசாமல் இருந்துவிட்டார்.

“கதிரவன் எங்கே? ஊருக்கு கிளம்பிட்டானா? பணம் கேட்டானா? அவன் கிட்ட பணம் இருக்காதே!’’ என்று செந்தாமரையிடம் கேட்டார்.

“இல்லை’’ என்பதுபோல் தலையை ஆட்டினார் செந்தாமரை.
அவருக்கு மனம் கேட்கவில்லை. அவனிடம் கொடுக்க பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்து நிலையம் நோக்கி விரைந்தார். அவன் சென்றுவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தோன்றியவுடன் ஓடவும் ஆரம்பித்தார். அவருக்கு மூச்சு இரைத்தது. இதயத்தில் ஒரு வலியும் ஏற்பட்டது. நெஞ்சில் கை வைத்தவாறே ஓடினார்.

பேருந்து நிலையத்தை அடைந்தவுடன் அவனைத் தேடினார். ஒரு பேருந்தில் கதிரவன் உட்கார்ந்திருந்தான். அவனைக் கண்டதும் அதில் ஏறி பணத்தை எடுத்து கதிரவன் கைகளில் திணித்தார். அவரால் எதுவும் பேச முடியவில்லை. மூச்சு வேகமாக இரைத்தது. எதுவும் பேசாமல் கீழே இறங்கி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அடுத்த இரண்டு நாள்களுக்கு கல்லூரியில் கதிரவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. தந்தை மூச்சு இரைக்க ஓடிவந்து பணத்தைக் கொடுத்துச்சென்ற காட்சியே அடிக்கடி அவனுக்கு நினைவுக்கு வந்தது.

அந்த நேரத்தில் மதவாத மாணவர் அமைப்பினர் அவனை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைத்தனர். அந்த மதவாத அமைப்பு மிகச்சிறிய கூட்டம்தான். தான் மனக்கவலையில் இருப்பதைப்பற்றி அந்தக் கூட்டம் சிறிதும் நினைக்கவில்லை என்பதையும் உணர்ந்தான்.
பாடத்தில் நாட்டம் செல்லாமல் தவித்தான். வீட்டிற்குச் சென்று அப்பாவைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது. வரும் சனிக்கிழமை செல்லலாமா என யோசித்துக் கொண்டிருந்தபோது அதற்குத் தேவையில்லாமல் அப்போதே புறப்பட வேண்டியதான இடிபோன்ற செய்தி அவனுக்கு வந்து சேர்ந்தது.

ஆம்! இதயவலி அதிகமாகி இராஜகோபாலன் இறந்துவிட்டார்.
அழுது புரண்டான் கதிரவன்.

நாள்கள் நகர்ந்தன. தந்தை இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அந்த நினைவு கதிரவனை வாட்டியது.

அவர் உயிருடன் இருந்தபோது அவரிடம் நடந்துகொண்ட விதத்தை நினைத்து மிகவும் வருந்தினான். ஆறுதல் கூறக்கூட மதவாத சக்திகள் வரவில்லை என்பதையும் உணர்ந்தான்.
ஆனால், இந்துமதவாத சக்திகள் அவருக்கு கருமகாரியம் செய்யத் திட்டமிட்டனர். அதற்காக இராஜகோபாலனின் புகைப்படத்தை எடுத்து அதற்கு காவி உடை போட்டு நெற்றியில் மதக்குறியீடுகளை இட்டு பேனர் வைத்தனர். மதவாதிகளை அழைத்து வந்து கரும காரியம் செய்யவும் திட்டமிட்டனர்.

இதையறிந்த கதிரவன் கடும் சினம் கொண்டான். தனது தந்தை என்றுமே காவி உடை போட்டதில்லை. ஆரம்பத்தில் சாமி கும்பிட்டாலும் மதக்குறியீடுகளை நெற்றியில் வைத்துக்கொண்டதே இல்லை என்பது கதிரவனுக்கு நன்றாகவே தெரியும். ஊரிலுள்ள செல்வாக்குள்ள பெரிய மனிதர்களையெல்லாம் தங்களுடையதாக்கி அவர்களை இழிவுபடுத்தி மதச்சாயம் பூசும் செயலை அவன் அறிவான். அது மிகத் தவறு என்பதை இப்போது உணர்ந்த அவன் அந்தப் பேனர்களையெல்லாம் அகற்றினான். மதவாதிகளோ அதுசார்ந்த மாணவ அமைப்புகளோ வீட்டுப்பக்கம் வரக்கூடாது என கடுமையாகக் கூறிவிட்டான். ஆனால், அந்த சக்திகள் அவனை விட்டபாடில்லை. அடிக்கடி தொல்லை கொடுத்தனர். கரும காரியம் செய்ய வற்புறுத்தினர். மதவாத சக்திகளிடம் ஒருமுறை சிக்கினால் மீளவே முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்தான் கதிரவன். ஆகவே மிகவும் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்து அவர்கள் தொடர்பைத் துண்டித்தான் கதிரவன்.
அவன் உள்ளத்தில் படர்ந்த அறியாமை என்னும் இருள் அகன்றதும் புதிய சிந்தனை ஒளி அவன் உள்ளத்தில் படர ஆரம்பித்தது.

தனது தந்தையின் கருமகாரியத்தை படத்திறப்புடன் நினைவு நாளாக நிகழ்த்த முடிவு செய்தான்.
தனது தந்தையைப் பற்றியும் அவரோடு தனக்கிருந்த உறவுகள், முரண்பாடுகள் பற்றியும் மறைக்காமல் எழுதினான். அதை நினைவு மலராகவும் வெளியிட முடிவு செய்தான்.

தந்தையுடன் நெருங்கிய நட்பில் இருந்த அவருடைய நண்பரைக் கொண்டு தந்தையின் படத்தைத் திறக்கவைத்தான். நினைவு மலரையும் அன்று வெளியிட்டான். தந்தையிடம், தான் நடந்துகொண்ட விதம்பற்றிப் பேசி வருத்தப்பட்டான். நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளும் விடுத்தான்.

அதாவது, பகுத்தறிவைப் பரப்பும் செய்தித்தாள்களையும் நூல்களையும் வீட்டில் வாங்கிப்போட வேண்டும். பிள்ளைகள் ஒருநாள் இல்லையென்றாலும் ஏதாவது ஒரு நாளில் அதை எடுத்துப்படிப்பார்கள், மதவாத சக்திகளிடம் சிக்கிவிடக்கூடாது என்று பேசி முடித்தான்.
அவன் பெற்ற தெளிவை மற்றவர்களும் பெற்றார்கள்.