ஒன்றிய அரசு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும்!

2023 மற்றவர்கள் ஜனவரி 16-31 ,2023

அனைத்துக் கட்சியினரின் ஆதரவோடு சட்டமன்றத்தில்
தீர்மானம் நிறைவேற்றம்!

”தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்ட மாக சேது சமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது.
1860 ஆம் ஆண்டு 50 இலட்சம் ரூபாயில் Commander Taylor என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன்பிறகு 1955 இல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் குழு, 1963 இல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964 இல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திரசிங், அய்.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக் குழு – ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப் பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டமாகும். இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் “Feasibility Study”-க்கு அனுமதியளித்தார்கள். அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது.
திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் 2004 ஆம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி அவர்களும் முன்னிலை வகிக்க இந்தத் திட்டத்தை பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் 2-7-2005 அன்று துவக்கி வைத்தார்கள்.

திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலை நிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய இந்தத் திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இந்த சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப் பட்டதோ, அதையே நிராகரிக்கக்கூடிய வகையிலே, தற்போது “இராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்” என்று ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு ஜிதேந்திர சிங் அவர்கள் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.

இப்படி ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு – வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி, இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது.
இனியும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.’

– சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம்.