சேதுக் கால்வாய்த் திட்டம் குறித்து அ.தி.மு.க.வின் மாறுபட்ட நிலைப்பாடு…

2023 மற்றவர்கள் ஜனவரி 16-31 ,2023

10.5.2001 அன்று அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது:
“இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாகத்தான் சேது சமுத்திரத் திட்டம். இத் திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலை மன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள். (இதுதான் ஆடம்ஸ் பாலம் – அதாவது ராமன் பாலம்). பாறைகள் இவற்றை யெல்லாம் அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது தான் சேது சமுத்திரத் திட் டத்தின் தலையாய நோக்கம்.

சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும் வாணிபமும் தொழிலும் பெருகும். அந்நிய முதலீடு அதிகரிக்கும். அந்தியச் செலாவணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயண தூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும். சுற்றுலா வளர்ச்சி அடையும். இன்ன பிற நன்மைகளைத் தர இருக்கும் இத்திட்டத்தின் தேவையை முக்கியத் துவத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக் கொண்டிருக்காமல், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதியைத் தேடி இத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு காலக் கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும்படி மய்ய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்”.

இது அதிமுகவினுடைய தேர்தல் அறிக்கையிலே கூறப் பட்டிருக்கின்ற தலையாய நோக்கம் என்று அவர்களுடைய கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலே இலங்கையின் தலை மன்னார்க்கு இடையில் உள்ள ஆடம்ஸ் பாலம் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் ஆகியவற்றை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் வெட்டுவதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்றுதான்.