உணவே மருந்து

2023 உணவே மருந்து! ஜனவரி 16-31 ,2023

இதயம் காக்கும் மசாலா பொருள்கள்

தமிழர்கள் தங்கள் உணவு முறையைத் தேர்ந்து, அனுபவத்தில் பயன் அறிந்து வழக்கப்படுத்தினர். உணவே மருந்து என்ற அடிப்படையிலே உணவு முறையை மேற்கொண்டனர்.
நாக்கு ருசிக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல் சுவையோடு உடல் நலம் காக்கவும் உகந்ததாய் உணவு முறையை அமைத்தனர்.
கீரைகள், காய்கறிகள் அதிகம் உண்ணும் முறையை முதன்மையாக்கினர். முருங்கை, அகத்தி, மனத்தக்காளி, அரைக்கீரை, சிறுகீரை, கொத்தமல்லி, பொதினா, கறிவேப்பிலை இவற்றை அதிக அளவில் அன்றாடம் இடம்பெறச் செய்தனர்.
கொழுப்பு, உப்பு, காரம் இவற்றை அளவோடு வைத்தனர். இட்லி, பழைய சோறு, இடியப்பம், புட்டு, புஞ்சை தானியங்களை அதிகம் உண்டனர். பருப்புக்கு உணவில் உரிய இடம் அளித்தனர்.

அதனடிப்படையில் உணவுக்குச் சுவையூட்டும், மணமூட்டும் மசாலாக்களை உரிய அளவில் கலந்து உடலுக்கு நலம் தேடினர்.
மஞ்சள், மிளகு, சீரகம், கிராம்பு, லவங்கப் பட்டை, கசகசா, திப்பிலி, சுக்கு, இஞ்சி, ஏலக்காய் போன்றவற்றை தவறாது உணவில் சேர்த்தனர்.
இந்த மசாலாப் பொருள்கள் உடல் நலங்காப்
பதோடு, இதயத்திற்குக் கவசமாகவும் அமைகின்றன.
கொரோனா பெருந்தொற்றில் மிளகு, கிராம்பு இவற்றின் பங்கு மகத்தானது.
சளி பிடித்தால், பாலில் மஞ்சள் பொடி, மிளகுப்பொடி கலந்து சாப்பிட்டால் சளி நீங்குவதுடன், உடலுக்கு நோய் எதிர்க்கும் ஆற்றலையும்
தருகிறது.
அனைத்து மசாலாப் பொருள்களையும் அளவோடு சேர்த்து உண்டால் நம் இதயத்தைக் காக்கிறது.
மருதம்பட்டைப் பொடி இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை அகற்றுகிறது.
தினம் ஒரு வெற்றிலை சுண்ணாம்பு தடவி சாப்பிடுவது இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். உடலுக்குத் தேவையான கால்சியமும் கிடைக்கும்.
– மஞ்சை வசந்தன்