அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (308

2023 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜனவரி 16-31 ,2023

120 இணையருக்கு
சுயமரியாதைத் திருமணம்
கி.வீரமணி

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் 30.7.2002 அன்று ‘தமிழர் உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் நாம் கலந்துகொண்டு, நூலை வெளியிட, ‘ஜெம் கிரானைட்ஸ்’ ஆர். வீரமணி பெற்றுக்கொண்டார். நிறைவாக நூலின் நோக்கம், உள்ளடக்கம் குறித்து சிறப்புரையாற்றினோம்.
விசாகப்பட்டணத்தில் சர்தார் கோது லட்சண்ணா அவர்கள் பெயரில் அமைந்துள்ள சர்தார் கோது லட்சண்ணா ஒடுக்கப்பட்டோருக்கான அமைப்பு (Gothu Latchanna Organisation for weaker sections) சார்பில், 16.8.2002 மாலை 6:00 மணியளவில் பித்தாபுரம் காலனி கலாபாரதி கலையரங்கில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் சமூகநீதிப் போராளியுமான முதுபெரும் தொண்டறச் செம்மல் டாக்டர் கோது லட்சண்ணா அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. நாமும், நீதியரசர் பி.எஸ்.ஏ. சாமி, எர்ரன் நாயுடு எம்.பி. ஆகியோரும் கோது லட்சண்ணாவின் சிறப்புகளை எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினோம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு கல்வியறிவு, தையல் பயிற்சி அளித்துவரும் கோது லட்சண்ணா பெயரில் நடைபெறும் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தை நல்ல முறையில் செயல்படுத்திவரும் ஜான்சிலட்சுமி அவர்கள் தலைமையில் அங்குள்ள ஆசிரியைகள், மாணவ- மாணவிகளைச் சந்தித்து அங்கு நடைபெறும் நற்பணிகளை நாமும், நீதியரசர் பி.எஸ்.ஏ. சாமி அவர்களும் பாராட்டினோம்.
பிறகு சீதாராம் மாதரா பகுதியில் உள்ள ‘தி கேர் மியூச்சுவல் கூட்டுறவு கடன் சொசைட்டி டைரக்டர் மம்மிடிச்செட்டி சிட்டய்யா இல்லத்தில் 100 முக்கிய பிரமுகர்களோடு எமக்கும் பகல் விருந்து அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் சமூகநீதி இயக்கத்தை எப்படி தந்தை பெரியார் ஒரு பலமுள்ள மக்கள் இயக்கமாகக் கட்டினார் என்பதையும், 69 சதவிகிதம் எப்படி 9ஆவது அட்டவணையில் 31சி சட்டம் மூலம் பாதுகாக்க

ப்பட்டது, அரசமைப்பு சட்ட முதல் திருத்தம் எப்படிச் செய்யப்பட்டது ஆகியவை பற்றி 1 மணி நேரத்திற்குமேல் ஆங்கிலத்தில் விளக்கினோம்.
டில்லி பெரியார் மய்யம் சட்டவிரோதமான முறையில் 2001 டிசம்பர் 3ஆம் தேதி டில்லி பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் இடித்துத் தகர்த்தப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்றப் போராட்டத்தின் விளைவாக, டில்லி பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (DDA) தென்டில்லிப் பகுதியில் மதுரா நொய்டா அகல சாலை அருகே உள்ள ஜெசோலா பகுதியில்-_ Institutional Area ஆன பொதுநல அமைப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பெரியார் மய்யம் கட்டவும், ஏற்கெனவே திட்டமிட்டபடி கம்ப்யூட்டர் கல்லூரி முதலியவற்றை நடத்திடவும் உதவும் வகையில் 1 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்காக உதவிய தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க,.
18.8.2002 அன்று மாலை 7:30 மணிக்கு முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களை அவரது இல்லத்தில் நாமும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன், சமூக நீதிக்கட்சித் தலைவர் கா. ஜெகவீரபாண்டியன், பெரியார் மய்ய இயக்குநர் பேராசிரியர் நல். இராமச்சந்திரன் ஆகியோரும் சென்று சந்தித்து நன்றி கூறினோம். அதன்பின், அந்த இடத்தில் ஒரு விளம்பரப் பலகை வைத்து, அவரே பணியைத் துவக்கி வைத்தார்.

புதுடில்லி பாலக்கோட்ரா ஸ்டேடியத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையோர் உரிமைப் பாதுகாப்பு அமைப்பு (National Union of Backward Class. Schedule Castes, Schedule Tribes and Minorities) சார்பாக அதன் ஆண்டு மாநாடும், அதன் நிறுவனரும் டில்லி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சவுத்திரி பிரம்பிரகாஷ் அவர்களது 9ஆம் நினைவு நாளும் டி.பி. யாதவ் அவர்கள் தலைமையில் 19.8.2002 அன்று காலை 10:00 மணிக்குத் தொடங்கி இடைவெளி ஏதுமின்றி 4:00 மணி வரையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இம்மாநாட்டிலும், சவுத்திரி பிரம்பிரகாஷ் நினைவு நிகழ்ச்சியிலும் நாம் கலந்துகொண்டோம்.
மாநாட்டில் சமூகநீதி மய்யத்தின் தேசியத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான சந்திரஜித் யாதவ், லல்லு பிரசாத்யாதவ், சமூகநீதிக்கட்சித் தலைவர் கா. ஜெகவீரபாண்டியன், பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் நல். இராமச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

22.8.2001 அன்று சென்னை பெரியார் திடலில் ‘பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி, பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் ‘பண்பாட்டுப் பாதுகாப்பரங்கம்’ _ கம்பராமாயண ஆய்வு மேடை பேரா. அ. இறையன் தலைமையில் நடைபெற்றது. வழக்கறிஞர் கோ. சாமிதுரை தொடக்கவுரையாற்றினார்.
‘கம்பன் என்னும் ஓர் அரிய அடிமை’ என்னும் தலைப்பில் வழக்கறிஞர் அ. அருள்மொழியும், ‘சூழ்ச்சியாளன்’ என்னும் தலைப்பில் பாவலர் மறைமலையானும் ‘தேர்ந்த புளுகன்’ என்னும் தலைப்பில் கவிஞர் கலி. பூங்குன்றனும், ‘மடமையாளன்’ என்னும் தலைப்பில் கு.வெ.கி. ஆசானும் ஆய்வுரை ஆற்றினர். நான் இறுதியாக நிறைவுரை ஆற்றினேன். இராமாயணத்தின் மோசடிகளை விளக்கி தந்தை பெரியார் செய்த பிரச்சாரத்தின் பெரும் பயனை நிறைவு செய்தேன்.

பெரம்பலூர் மாவட்டம் வதிட்டபுரம் பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவர் இரா. அரங்கராசன் -_ அசோதை ஆகியோரின் மகன் அரங்க இங்கர்சால், கடலூர் மாவட்டம் வதிட்டபுரம் இராகுணசேகரன்_ அல்லிராணி ஆகியோரின் மகள் குண.ஆனந்தி ஆகிய இருவருக்கும் திட்டக்குடி சி.ஆர். திருமண மண்டபத்தில் வாழ்க்கைத்துணை ஒப்பந்த விழாவினை 25.8.2002 அன்று காலை 8:00 மணிக்கு நாம் தலைமையேற்று நடத்தி வைத்து, சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிப் பேசினோம்.
தஞ்சை மாவட்டம் வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்வி வளாகப் பூங்காவில் 25.8.2002 ஞாயிறு மாலை 6:00 மணியளவில் தஞ்சை மாவட்டம், பசுபதி கோயில் திராவிடர் கழக மேனாள் துணைப் பொதுச்செயலாளர், காலம்சென்ற துரை. சக்கரவர்த்தி _ சூரியகுமாரி ஆகியோரின் செல்வி ச. நர்மதாவுக்கும் தஞ்சை மாவட்டம் அள்ளூர் சாமி. சம்பந்தம்- _ ச. நீலா ஆகியோரின் செல்வன் ச.அழகிரிக்கும் நடைபெற்ற மணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்து, சிறப்புரையாற்றினோம். துரை. சக்ரவர்த்தி அவர்கள் திருமண விழா நினைவாக வீரமணி-_ மோகனா உயிர் காக்கும் மருத்துவ உதவி நிதிக்கு, தன் குடும்பத்தின் சார்பில் ரூ.10,000/-_ எம்மிடம் வழங்கினர்.

காரைக்குடி மாவட்டம் காளையார் கோவிலில் 4.9.2002 அன்று மாலை 6:00 மணிக்கு மருதுபாண்டியர் கலையரங்கில் காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி ஆர். சுப்ரமணியம் நினைவு மேடையில், வட்டாரப் பகுத்தறிவாளர்கள் மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் சிறப்பாக நடைபெற்றது. கோட்ட அமைப்புச் செயலாளர் மா. பெரியார்குணாகாசன் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். மாநில நகராட்சி அமைப்புச் செயலாளர் சாமி. திராவிடமணி தொடக்கவுரையாற்றினார். காரைக்குடி மாவட்டத் தலைவர் சாமி. சமதர்மம், மாவட்டச் செயலாளர் வீர.சுப்பையா மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச. அரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி என்.ஆர். சாமி அவர்களின் நினைவுக் கொடிக் கம்பத்தில் நாம் கழகக்கொடியை ஏற்றிவைத்தோம். உலகத் தலைவர் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் இலட்சியங்களை ஏற்று தம் குடும்பங்களையும் ஏற்கச் செய்து அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற கருப்பு மெழுகுவத்திகள் காளையார்கோயில் மு. அழகர்சாமி, சிவகங்கை வீர. ஜெயராமன் ஆகியோரைப் பாராட்டி கைத்தறி ஆடைகள் அணிவித்து சிறப்பு செய்தோம்.

தொடர்ந்து காளையார்கோவில் மா. பெரியார் குணாகாசன் அவர்களின் துணைவியார் கலைச்செல்வி மாநாட்டு மேடையில் அடிமைச் சின்னமான தாலியை அகற்றிக்கொண்டார்.
சிதம்பரம் மாவட்ட கழகச் செயலாளர் த. செயக்குமார் தந்தையார் மறைந்த சா. தண்டபாணி அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 3.9.2002 செவ்வாய் காலை 10:30 மணியளவில் காட்டுமன்னார்குடி வட்டம் ஆண்டிப்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு தண்டபாணி அவர்களின் உருவப் படத்தினைத் திறந்து வைத்து தண்டபாணி அவர்களின் துணைவியார் தனக்கோடி, த. செயக்குமார், பொறியாளர் த.இராஜசேகரன் மகள்கள் சித்ரா, இளமதி, மருமகன் கோவிந்தசாமி, மருமகள் சுஜாதா இராஜசேகரன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினோம்.

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் 4.9.2002 அன்று காலை 8:00 மணிக்கு கு. மாரியப்பன்-_ முத்துமாணிக்கம் ஆகியோரின் மகள் மா.அருணுக்கும் விருதுநகர் மாவட்டம் குன்னூர் சு. பந்தன் _ ப. துளசியம்மாள் ஆகியோரின் மகன் குருவையாவுக்கும் இணையேற்பு விழாவினை மணமகள் இல்லத்தில் தலைமையேற்று சிறப்பாக நடத்திவைத்து சிறப்புரையாற்றினோம்.
அன்று காலை 10:00 மணிக்கு சிவகங்கை பேருந்து நிலையம் அருகிலுள்ள சிவமகால் அரங்கில் சிவகங்கை மாவட்டம் பகுத்தறிவாளர் கழகத் தலைவரும் மத்திய நிருவாகக்குழு உறுப்பினருமான_ உ. சுப்பையா_ மணிமேகலை ஆகியோரின் மகள் சு. சீதபிரியாவுக்கும் உரத்தநாடு தளிகை விடுதி இரா. கோவிந்தசாமி_ புஷ்பம் ஆகியோரின் மகன் கோ. இரவிச்சந்திரனுக்கும் நடைபெற்ற இணையேற்பு விழாவைத் தலைமையேற்று நடத்தி வைத்து, கொள்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினோம்.

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் 9.9.2002 அன்று காலை 10:00 மணிக்கு வை. பன்னீர்செல்வம்_ ப. உஷாராணி ஆகியோரின் மகள் ப. துபா (Vibgyor Graphics & Research Centre, Periyar Thidal, Chennai) உள்ளிக்கோட்டை மா.சுப்ரமணியன்_ சு. சம்பூர்ணம் ஆகியோரின் மகன் சு. செல்வராஜ் இருவருக்கும் வி.ஆர். திருமண மண்டபத்தில் மணவிழாவை நடத்திவைத்து வாழ்த்துரை வழங்கினோம்.
வா.செ. குழந்தைசாமி தலைமையில் எமது முன்னிலையில் சென்னை பெரியார் திடலில் 10.9.2002 அன்று தமிழ் எழுத்துச் சீரமைப்புக் கூட்டத்தில் உயிர்மெய் உகரம், உயிர்மெய் ஊகாரம் இவைகளுக்கு தனித்தனி குறியீடுகள் இருப்பதை மாற்றி உயிர்மெய் உகரத்திற்கு ஒரே குறியீடும் உயிர்மெய் ஊகாரத்திற்கு ஒரே குறியீடும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. தந்தை பெரியார் பிறந்தநாளில் ‘விடுதலையில்’ ஒரு பகுதியில் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
பொன்னேரியில் 11.9.2002 காலை 10:00 மணிக்கு ஆசிரியர் ச. சந்திரராசு -அவர்களின் பெரியார் இல்லத்தை திறந்து வைத்து, வாஸ்து சாஸ்திர மோசடி பற்றியும் மூடநம்பிக்கைகள் பற்றியும் விளக்கிப் பேசினோம்.

தஞ்சாவூரில் 12.9.2002 காலை 10:00 மணிக்கு தஞ்சாவூர் மோத்திரப்பா சாவடி வ. செங்கமலம்_ செ. பிரேமா ஆகியோரின் செல்வன் செ. செந்தில்குமார், தஞ்சாவூர் மோத்திரப்பா சாவடி க. மாரியப்பன்-_ மா. கலாராணி ஆகியோரின் செல்வி மா. பிரதீபா ஆகிய இருவருக்கும் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்திலுள்ள இராஜ்மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இணையேற்பு விழாவை தலைமையேற்று நடத்தி வைத்து, சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினோம்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 22.9.2002 ஞாயிறன்று மாலை 4.00 மணிக்கு, தந்தை பெரியார் 124ஆம் ஆண்டு பிறந்த நாள், கேரள சீர்திருத்தக்காரர் நாராயணகுரு 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றன. விழாவைத் துவக்கி வைத்து நாம் சிறப்புரையாற்றினோம். இவ்விழாவில் எர்ரன் நாயுடு, நீதிபதிகள் பி.எஸ்.ஏ. சாமி, உஷா சுகுமாரன் ஆகியோர் பங்கேற்றனர்.
அரசர் அண்ணாமலைச் செட்டியார் 122ஆம் ஆண்டு பிறந்தநாள்
விழாவும் அதனையொட்டி இசைப் பேரறிஞர் காஞ்சி ஆ. விநாயக முதலியார் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நிதியளிப்பு விழாவும் சென்னை ராணி சீதை மன்றத்தில் எமது தலைமையில் நடைபெற்றது. ஏழை எளிய மக்களுக்கு கல்விக் கண்ணைத் திறந்தவர் ராஜா அண்ணாமலையார் என்பதை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினோம்.

திருத்துறைப்பூண்டி வட்டம் தலைக்காடு கிராமத்தில் பெரியார் படிப்பகத் திறப்பு விழா மற்றும் கட்டட அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு படிப்பகத்தைத் திறந்து வைத்து, கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியபின் சிறப்புரையாற்றினோம்..
உரத்தநாட்டில் 6.10.2002 காலை 10:00 மணிக்கு, அன்றைய திராவிடர் கழக மாநில இளைஞரணிச் செயலாளரும் தற்போது பொதுச்
செயலாளர்களில் ஒருவருமான தஞ்சை இரா. செயக்குமார்_ ஜெகதாராணி ஆகியோ
ரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா,உதவிப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் வரவேற்புரையாற்ற, கழகப்பொருளாளர் கோ. சாமிதுரை, துணைப் பொதுச் செயலாளர் துரை சக்ரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. என் பெயரிலும் வாழ்விணையர் மோகனா அவர்களின் பெயரிலும் அனைவரையும் வரவேற்று அழைப்பிதழ் அனுப்பியிருந்தோம். ஏராளமான தோழர்கள் பங்கேற்று நடத்தி வைத்து, நிறைவாக பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளை விளக்கி உரையாற்றினோம். மணவிழாவில், உரத்தநாடு ஒன்றியம் சார்பில் 107 அரையாண்டு ‘விடுதலை’ சந்தாக்களை நம்மிடம் வழங்கினர்.

8.10.2002 அன்று சென்னை பெரியார் திடலில் “தமிழ் தெரியாத கடவுளும் சங்கராச்சாரியும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினோம்.
லால்குடியில் 11.10.2002 அன்று காலை 11:00 மணிக்கு லால்குடி பெரியார் திருமண மாளிகையில், பூவாளூர் ஆசிரியர் பரஞ்சோதி _ மதலைமேரி ஆகியோரின் மகனும் திராவிடக் கழக மாநில மாணவரணி செயலாளருமான வழக்குரைஞர் பூவை. புலிகேசி மற்றும் தஞ்சாவூர் ஆசிரியர் ஜோக்கின் _ தோமையம்மாள் ஆகியோரின் மகள் ஆசிரியை ஜோ. கேத்ரின் விமலா (தூய இருதய ஆண்டவர் தொடக்கப்பள்ளி, தஞ்சாவூர்) ஆகியோரின் இணையேற்பு நிகழ்வை நாம் தலைமையேற்று சிறப்பாக நடத்தி வைத்து உரையாற்றினோம்.
‘தமிழரசி’ இதழின் ஆசிரியரும், திராவிடஇயக்கச் செம்மல்களில் ஒருவரும், சிறந்த எழுத்
தாளரும், கருத்தாளருமான டாக்டர் எம்.நடராசன் எம்.ஏ.பி.எச்.டி. அவர்களது தமிழரசி திருமணக் கூடத்தில் அவரது மணிவிழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடியிருக்க, எமது தலைமையில், குரு மகா சந்நிதானம் மதுரை ஆதினம் அவர்கள் முன்னிலையில் மணிவிழா நாயகர் 120 இணையர்களுக்கு இலவச சுயமரியாதைத் திருமணங்களை நடத்திவைத்தார். இதில் பெரும்பாலானவை ஜாதி மறுப்புத் திருமணங்களாகவும் விதவைகள் மறுமணங்களாகவும், மதமறுப்பு மணங்களாகவும் அவை நடைபெற்றன. நிகழ்வின் நிறைவாக நாம் சிறப்புரையாற்றினோம்.

அன்று மாலை நடராசன் எழுதிய
‘மகளிர் விடுதலையில் இதழியல்களின் பங்கு’,
‘மனித உரிமைகள் மலர்ந்தனவா?’
‘பூலித்தேவன் வரலாறு’ ஆகிய 3 நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டோம்.
நூல்கள் வெளியீட்டுக்குப்பின் நடராசன் அவர்கள், பெரியார் மணியம்மை சயன்ஸ் அண்டு டெக்னாலஜி நிறுவனத்தில் ஓர் அறக்கட்டளை நிறுவ ரூ.2 லட்சம் வழங்கினார். எமது தலைமை உரையில் நடராசன் அவர்களின் தொண்டறத்தைப் பாராட்டியும், நன்கொடைக்கு நன்றி தெரிவித்தும், பகுத்தறிவுச் சிந்தனை பற்றியும் விளக்கி உரையாற்றினோம்.

சென்னை வானகரத்தில் 28.10.2002 திங்கள் காலை 9:30 மணிக்கு ஆர்.டி.எஸ். திருமண மண்டபத்தில் எமது அண்ணன் கி. தண்டபாணி _ ஞானசவுந்தரி ஆகியோரின் பேத்தியும் சென்னை கொரட்டூர் ஜெயபாலன் -_ தேன்மொழி ஆகியோரின் மகளுமான செல்வி ஜெ. சுபாஷினிக்கும் சென்னை தண்டையார்பேட்டை ஜி. தாமோதரன்_- பாக்கியலட்சுமி ஆகியோரின் செல்வன் தா. ராஜேந்திரன் பி.இ. அவர்களுக்கும் இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 11.11.2002 திங்கள் மதியம் 1:00 மணிக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவிற்கு திருச்சி மாநகராட்சி மேயர் சாருபாலா தொண்டமான் அவர்கள் ரிப்பன் வெட்டி புத்தக விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்தார். நிறைவாக நாம் சிறப்புரையாற்றினோம்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சென்னை தரமணி) பேராசிரியர் ந.வேலுசாமி அவர்களால் நிறுவப்பட்ட பெரியார் ஈ.வெ. ராமசாமி அறக்கட்டளையின் முதல் சொற்பொழிவு 12.11.2002 காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத்தலைவர் வா.செ. குழந்தைசாமி தலைமை வகித்தார். முனைவர் சா. கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். “பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி’’ என்னும் தலைப்பில் நாம் அறக்கட்டளைச் சொற்பொழிவை நிகழ்த்தினோம். அவ்வுரை நூலாக அச்சிடப்பட்ட நிலையில் அதனை முனைவர் வா.செ. குழந்தைசாமி வெளியிட, அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் ந.வேலுசாமி பெற்றுக்கொண்டு ஏற்புரை நிகழ்த்தினார்.

(நினைவுகள் நீளும்…)