முகப்புக் கட்டுரை – “சமூகநீதியை நிலைநாட்ட ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உடனே செய்க!

2023 அக்டோபர் 1 - 15, 2023 முகப்பு கட்டுரை

… மஞ்சை வசந்தன் …

ஒன்றிய அரசை ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சி செய்யும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குப் பதிலாள் என்று கருதப்படும் பி.ஜே.பி.., ஆரிய பார்ப்பனர்களுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமான, பலன்தரும் எந்த முடிவையும் ஓரிரு நாள்களில் செய்து முடிக்கும்போது, 95% மக்களுக்கு நன்மை தரும். எந்தவொரு கோரிக்கையும் அவர்கள் நிறைவேற்ற முன்வருவதும் இல்லை, விரைவு காட்டுவதும் இல்லை.

எடுத்துக்காட்டாக ஆரியப் பார்ப்பனர்களுக்கு நன்மை தரும், பலன் அளிக்கும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மூன்று நாள்களில் செயல்
படுத்தினார்கள். முதல் நாள் தீர்மானம், இரண்டாம் நாள் சட்டம் நிறைவேற்றம்; மூன்றாம் நாள் குடியரசுத் தலைவர் ஒப்புதல்.

உடனடியாக ஆரியப் பார்ப்பனர்கள் 10% இடங்களைக் கைப்பற்றினார்கள். இந்த ஒதுக்கீட்டிற்கு எந்தக் கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. எந்த விவாதமும் செய்யப்படவில்லை. 10% இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் தரப்படவில்லை; பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்றால் உயர்ஜாதியினருக்கு மட்டும் என்றும், மாற்ற ஜாதியினருக்கு இல்லையென்றும் வரையறை செய்யப்பட்டதுபோல் ஒரு சமூக அநீதி, மோசடி, அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. ரூ.8 லட்சம் ஆண்டு வருமானம் பெற்றால் அவர்கள் ஏழை என்பது அதைவிட அநீதி, மோசடி; பித்தலாட்டம் வஞ்சகம். இதை நீதிமன்றமும் ஏற்கிறது என்பது நீதிமன்றங்கள் எந்த அளவிற்கு உயர்ஜாதிப் பிடியில் சிக்கிச் சீரழிகிறது என்பதன் அடையாளம்.

ஆரியப் பார்ப்பனர்கள் இடஒதுக்கீடு பெற மூன்று நாளில் முடிவெடுத்து செயல்படுத்தியவர்கள், பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு அளிப்பதில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் காலம் கடத்திவிட்டு, இப்போது “இறைவன் தந்த அருளால் இதை நிறைவேற்றுகிறேன்” என்று மோசடியின் மொத்த வடிவமான மோடி கபடநாடகம் ஆடி, கண்ணீர் கசியவிட்டு, ஒரு சட்டத்தை நிறைவேற்றிவிட்டு, இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகே அது அமல்படுத்தப்படும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இவர்களைப் போன்ற சமூக விரோதிகளை, நம்பிக்கைத் துரோகிகளை உலகிலே காணமுடியாது என்று கொதித்து நிற்கிறார்கள்.

அதேபோல் கார்ப்பரேட்டுகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் பிரதம மந்திரியே அயல்நாடுகளுக்குக்கூட சென்று காரியம் சாதித்துத் தருகிறார்.
இதுதான் இந்த பா.ஜ.க. ஆட்சியின் அவலநிலை, அற்பநிலை, அநியாய நிலை. இப்படிப்பட்ட மக்கள் விரோத பாசிஸ்டுகள் இவர்கள் என்பதால்தான் 90% மக்களுக்குப் பயன்தரக்கூடிய ஜாதிவாரி கணக்கெடுப்பை அவர்கள் நடத்த மறுக்கிறார்கள். ஒன்றிய ஆட்சியில் இருக்கும் அவர்கள் தெரிந்தே தப்பு செய்கிறவர்கள். எனவே, அவர்களை மக்கள் எழுச்சி ஒன்றே மாற்ற முடியும். அதற்கு மக்கள் இது சார்ந்தவற்றில் தெளிவான புரிதல் பெறவேண்டும். அந்தப் புரிதல் மக்களுக்கு வரவேண்டும் என்பதால் கீழ்க்கண்ட விவரங்களை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயம் என்பதால் அவற்றை கீழே தெரிவிக்கின்றோம்.

2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மட்டுமே கணக்கெடுக்கப்படுவர்; பிற்படுத்தப்பட்டோரில் அடங்கியுள்ள ஜாதிவாரியான பட்டியல் எடுக்கப்பட மாட்டாது என்று ஒரு தகவல் அப்போது வெளியானது.

அதற்குச் சொல்லப்பட்ட காரணம்தான் விசித்திரமானது. பிற்படுத்தப்பட்டோரில் 40 லட்சத்துக்கும் மேலான ஜாதிகள் இருப்-பதாகவும், இந்த நிலையில் அவற்றைத் தொகுப்பது கடினமானது என்றும் சமாதானம் கூறப்படுகிறது. 1872 ஆம் ஆண்டு முதல் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு என்ற நடைமுறை எடுக்கப்பட்டுதான் வந்தது. அப்படி எடுக்கவேண்டியது சட்டப்படியானதும் கூட.

ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இருக்கிறது. அதில் போதிய விவரங்கள் உள்ளன. அதனடிப்படையில் மேற்கொண்டு கணக்கெடுப்பதில் கடினம் ஏதும் இல்லை.
உண்மை இவ்வாறு இருக்கையில், அதனைச் செயல்படுத்த வேண்டிய அரசு, செய்ய முடியவில்லை என்று கூறுகிறது. இவ்வாறு சொல்வதற்கு ஓர் அரசு தேவையா? பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும்போது, அதன் அடிப்படையில் ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு எடுப்பதில் என்ன சங்கடம்  என்ன இடர்ப்பாடு?

பிற்படுத்தப்பட்டோர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் 75 விழுக்காட்டுக்கு மேலும் இருக்கக்கூடிய உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்தால், தற்போது வழங்கப்படும் 27 விழுக்காட்டுக்குப் பதிலாக அதிக விழுக்காட்டில் இட ஒதுக்கீடு கேட்டு வலியுறுத்தும் நிலை பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் கிளர்ந்து எழும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், பிற்படுத்தப்பட்டோர் ஜாதிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் உண்மை.

ஏற்கெனவே அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இட ஒதுக்கீட்டிலும், பொருளாதார அளவுகோலைத் திணித்து உயர் ஜாதியினருக்குப் பட்டுக்கம்பளம் விரிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு, பிற்படுத்தப்பட்டோரின் உண்மையான மக்கள்தொகை வெளிவருமேயானால், இட ஒதுக்கீட்டுத் திசையில் மேலும் வலிமையான கோரிக்கை கிளர்ந்து எழுந்துவிடும் என்று கருதியே, திட்டமிட்ட வகையில் பிற்படுத்தப்பட்டோரின் ஜாதிவாரியான கணக்கை எடுப்பதைத் தவிர்க்கிறது.

அரசின் இந்தத் தந்திரத்தை, சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு பிற்படுத்தப்பட்ட மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். சமூக நீதியில் நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து பா.ஜ.க ஆட்சியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.

ஜாதியைப் பாதுகாக்கும் கொள்கையை அடிப்படையாக ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கான உண்மைப் புள்ளி விவரமும் வெளியில் வராமலும் பார்த்துக் கொள்வது – இந்த பாசிச, சனாதன அரசின் இரட்டை வேடத்தைத்தான் காட்டுகிறது.

இதனைப் புரிந்துகொண்டு, இட ஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையில் அளிக்கப்பட வேண்டும் என்று உரத்த குரல் கொடுக்கவும், வீதிக்கு வந்து போராடவும் மக்கள் முன்வர வேண்டும்.
உச்ச நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்-களிலும் இடஒதுக்கீடு குறித்த வழக்குகள் பலவுள்ளன. அந்த வழக்குகளில்- இடஒதுக்
கீட்டுக்கு எதிரானவற்றில், நீதிமன்றங்களால் சாமர்த்தியமான சில கேள்விகள் அடிக்கடிசமூகநீதி கேட்போரை நோக்கிக் கேட்கப்-படுகின்றன. இத்தனை விழுக்காடு தருவதற்கு என்ன அடிப்படை? புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டனவா? எதன்மீது இந்த ஒதுக்கீடு தரப்படுகிறது என்பதே அக்கேள்விகள்!

பாலாஜி வழக்கில் முன்பு 50 விழுக்காட்டுக்குமேல் இட ஒதுக்கீடு தரப்படக் கூடாது என்று அது பொத்தாம் பொதுவில், வழக்கிற்கு அப்பாற்பட்ட நிலையில் தீர்ப்பில், (Obiter Dicta) கூறப்பட்டதே – அது எந்தப் புள்ளி விவரம் அடிப்படையில்?

நீதிமன்றம் 50% என்று நிர்ணயிக்க புள்ளி விவரம் வேண்டாமா? ஆனால், புள்ளி விவரம் இல்லாமல்தான் 57%க்கு மேல் போகக்கூடாது என்று நீதிமன்றம் நிர்ணயம். இது சரியா?
அதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? எந்த அளவு? என்ற கேள்வி கேட்கப்பட்டதே கிடையாது!

அதுமட்டுமல்ல; அரசமைப்புச் சட்டத்தில் எத்தனை விழுக்காடு 50-க்குமேல் ,இடஒதுக்கீடு போகக்கூடாது என்று எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்றால், பதில் கிடையாது.
இப்போது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட்டதால் 50% மேல் போய்விட்டதே! அதற்கு நீதிமன்றம் எப்படிச் சம்மதித்தது? நீதிமன்றங்களே நீதி தவறினால் வேறு எங்குச் சென்று முறையிடுவது.? நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு இல்லாமல் ஆதிக்க ஜாதியினர் நீதிபதிகளாக அதிகம் இருப்பதே இதற்குக் காரணம்.

இந்நிலையில், சமூகநீதிக்கு எதிராக இப்படி ஓர் அஸ்திரத்தை நீதிமன்றங்கள் பயன்படுத்தி, அதை வீழ்த்தும் முயற்சியைத் தடுக்க, சரியான வழி ஜாதிவாரியான கணக்கெடுப்பை நடத்திடும் பணியை ஒன்றிய அரசு செய்வது தவிர்க்க முடியாத கட்டாயம் ஆகும். அப்படியிருந்தும் ஒன்றிய அரசு செய்யத் தவறுவது சமூகநீதியை ஒழிக்கும் செயலாகும்.
அதில், 1931 இல்தான் பிரிட்டிஷ் ஆட்சியில்தான் 92 ஆண்டுகளுக்குமுன் ஜாதி வாரி கணக்கெடுப்பு – நடந்தது. அதன்பின் அதிகாரவர்க்கமும் ஆட்சியும் உயர்ஜாதியின் பார்ப்பனியத்தின் ஏகபோக உடைமையானதால், அதைத் தவிர்த்து வந்தனர்! இதில் கட்சி வேறுபாடு இல்லாமல் – ஆதிக்கவாதிகள் ஓரணியில் நின்று எதிர்க்கின்றனர்.

பீகாரில் உள்ள 12 கோடி மக்களின் ஜாதிவாரி கணக்கெடுப்பை முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆட்சி தொடங்கியுள்ளது

நல்ல முன்னுதாரணமாகும்.. இந்தியாவுக்கே அவர் வழிகாட்டுகிறார்; மற்றவர்களும் பின்பற்ற வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு எந்தத் தவறும் இன்றிச் செய்யப்படவேண்டும்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரைப் பின்பற்றி, இதனைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்து முடிக் கலாம். – இது கணினி 5ஜி காலம் – முயன்றால், முடியாதது எதுவும் இல்லை. மற்ற மாநிலங்களும் தமிழ்நாடு உள்பட இதனைச் செயல்படுத்த முன்வரவேண்டும்!

20.4.2023 தேதியிட்ட இந்து ஆங்கில நாளேடு (இதுவரை ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்து வந்த ஏடு,) தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அது தார்மீக அடிப்படையில், இட ஒதுக்கீட்டுக்கும் மற்ற பல தேவைகளுக்கும் ஜாதி வாரி கணக்கெடுப்புத் தேவையே என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. – இது வரவேற்கத்தக்கது. காலம் பல பாடங்களைப் பலருக்கும் கற்றுத் தருகிறது! மூடிய கண்கள் திறக்கப்படுகின்றன! அதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

ஜாதி இன்னும் சட்டப்படி ஒழிக்கப்படாத நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்புக் கூறுவதே சமூகநீதிக்கு உகந்தது.
ஜாதிவாரி கணக்கெடுப்பால் என்ன பயன்? அது ஏன் உடனே செய்யப்பட வேண்டும்?

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல வகையான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இத்தகைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் சமூகத்தின் மிகவும் தேவைப்படும் பிரிவினருக்கு நீட்டிக்கப்படலாம் என்பது அதற்கு ஆதரவாகக் கூறப்படும் மிகப்பெரிய வாதம்.

​​”ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தரவுகள் கிடைத்தால், நலத் திட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்யலாம். இந்த வாதம் எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தரவுகள் இருப்பதால் மட்டும் நலத்திட்டங்களை மேம்படுத்த முடியும் அல்லது அவற்றைச் செயல்படுத்துவதை மேம்படுத்த முடியும் என்று சொல்லமுடியாது.” என்பது சிலரின் வாதம்.

“ஜாதிக் கணக்கெடுப்பில் இருந்து வெளிவரும் புள்ளிவிவரங்கள் மூலம், யாருக்கு என்ன எண்ணிக்கை உள்ளது மற்றும் சமூகத்தின் வளங்களில் யாருக்கு என்ன பங்கு உள்ளது என்ற உண்மைகள் வெளிவரும்.” என்பது சிலரது கருத்து.

“சமூகத்தில் சமத்துவமின்மை இருந்தால் அது இக்கணக்கெடுப்பின்மூலம் வெளிவருவது நம் சமூகத்திற்கு நல்லது. நீண்ட கால அடிப்படையில் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு அது மிகவும் முக்கியமானது. இதை எவ்வளவு நாம் சாதிக்கிறோமோ, அந்த அளவிற்கு நமது சமுதாயத்திற்கு அவ்வளவு நல்லது.”
இன்று ஜாதி தொடர்பான இரண்டு பெரிய பிரச்சனைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

“ஒன்று, ஜாதி அமைப்பால் அதிகம் பயனடைந்த ஜாதிகள் – அதாவது உயர் ஜாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள். அவர்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை. தரவுகளின் அடிப்படையில் அவர்கள் மறைந்திருப்பதால் அது அவர்களுக்குச் சாதகமாக உள்ளது. இரண்டாவது சிக்கல், இந்த வகுப்பில் மிகவும் வசதி படைத்தவர்களும், சக்தி வாய்ந்தவர்களும் தங்களுக்கு ஜாதி இல்லை என்ற மாயையில் உள்ளனர். தாங்கள் ஜாதியைத் தாண்டி உயர்ந்துவிட்டதாகக் கருதுகின்றனர்”. என்று சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்ற முறையான மற்றும் ஆட்சியமைப்பு நடத்தும் கணக்கெடுப்பில் ஒவ்வொருவரிடமும் உங்கள் ஜாதி என்ன என்று கேட்கும்போது, ​​​​சமூகத்தின் பார்வையில் அனைவருக்கும் ஜாதி உள்ளது என்ற எண்ணம் மக்களுக்கு வரும். இது ஜாதி உணர்வைப் புதுப்பிக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.

“உளவியல் அல்லது கலாச்சாரம் என்று எதுவாக இருந்தாலும் அதற்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கும். உயர்ஜாதிப் பிரிவினர் உண்மையில் சிறுபான்மையாக இருப்பது தெளிவாகத் தெரிந்துவிடும்” என்கின்றனர் சிலர்.

​​“ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சமூக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று வாதிட்டால், அப்படிப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பினால் ஏற்படும் சமூகப் பிளவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வியும் எழுகிறது,” என்று பேராசிரியர் பத்ரி நாராயண் குறிப்பிட்டார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒற்றுமையை வலுப்படுத்தும். ஜனநாயகத்தில் மக்களுக்கும் பங்கு கிடைக்கும் என்பது சிலர் வாதம். ஆனால், இதனால் சமூகத்தில் ஜாதிய ஒருமுனைப்படுத்தல் அதிகரிக்கலாம். அதன்மூலம் ஜாதி கட்டமைப்பு வலுப்படும் என்ற அச்சம் அனைவருக்கும் உள்ளது. இது சமூகத்தில் மக்களின் பரஸ்பர உறவுகளைப் பாதிக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பால் இந்து சமுதாயம் மேலும் பல ஜாதிகளாக பிரிந்துவிட்டால் என்னாவது என்று சிலரது கவலை.
“மறுபுறம், பிராந்தியக் கட்சிகளின் முழு அரசியலும் ஜாதிய ஒருமுனைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டது. ஜாதிக் கணக்கெடுப்பின் காரணமாக சமூகம் மேலும் பல ஜாதிகளாகப் பிரிந்தால், அதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.” என்று சிலர் கூறுகின்றனர்.
பேராசிரியர் சதீஷ் தேஷ்பாண்டேயும் இந்தக் கூற்றை ஒப்புக்கொள்கிறார்.

எல்லா ஜாதியினரைப் பற்றியும் துல்லியமான தகவல்களும் புள்ளி விவரங்களும் கிடைத்தால் மட்டுமே இடஒதுக்கீட்டின் நன்மைகளை, நோக்கங்களை அடைய முடியும். ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே இதை அடைய முடியும் என்றும், அரசின் நலத்திட்டங்களின் உண்மையான பலன்கள், இதுவரை கிடைக்காமல் இருக்கும் மக்களுக்கும் வழங்கப்பட இக்கணக்கெடுப்பு கட்டாயம் என்பதும் அவர்களின் உறுதியான நம்பிக்கை. ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே இதை உறுதிப்படுத்த உதவும் ஒரே கருவி.
மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் வரம்பை அதிகரிப்பது. இந்த வேலையைச் செய்ய, நம்பகமான ஜாதி தொடர்பான தரவுகள் தேவை. அதை ஜாதிக் கணக்கெடுப்பு மட்டுமே வழங்க முடியும்.

“ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியம்., ஏனென்றால் ஜாதி புள்ளி விவரங்கள் வெளிவர வேண்டும்” என்கிறார் பேராசிரியர் தேஷ்பாண்டே.
மறுபுறம் பேராசிரியர் பத்ரி நாராயண். அத்தகைய மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது சரியான நடவடிக்கையாக இருக்காது என்று கருதுகிறார். “இந்தியாவின் ஜனநாயகம் மிகவும் முன்னேறிவிட்டது. ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற நடவடிக்கையை மேற்கொண்டு அதை மீண்டும் பின்னுக்குக் கொண்டுவரவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“ஜாதிவாரி கணக்கெடுப்பு 1931க்குப் பிறகு நடைபெறாதபோது நீங்கள் தன்னிச்சையாக உங்கள் விருப்பம்போல 69 சதவிகிதம் கொடுத்தது எப்படி சரி என்று விஜயன்கள் இதற்கு முன்பு பலமுறை கேட்டனர். அவர்கள்தான். இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு கூடாத என்கின்றனர்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியின் கட்டாயத்தை, அதன் பலன்களை உலகறியச் செய்யும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருப்பது நியாயங்கள்தானே என்று எவருக்கும் புலப்படுவது உறுதியாகிவிடும் என்ற அச்சம்தானே இவர்களைக் கதறச் செயகிறது.
நாடும் நல்லவர்களும், இவர்களைத் தூக்கிப் பிடிக்கும் ஏடுகளும், ஊடகங்களும் இனியாவது இவர்களைப் புரிந்து கொள்ளுவார்களா? ஜாதியை ஒழிக்க ஜாதி விவரம் தேவை! கட்டாயம் அதுதான் பல மோசடிகளின் முகத்திரையைக் கிழித்து சமூகநீதியை நிலைநாட்டும்!
ஜாதி ஒழிக்கப்பட வேண்டுமானால் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட – கீழ்ஜாதியாக ஆக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கு நூறு படித்தாக வேண்டும்; (சமூக ரீதியாகவும், கல்வி

ரீதியாகவும் இடஒதுக்கீடு என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது மிக முக்கியம்). அதை அடைய ஜாதி பற்றிய புள்ளி விவரம் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஜாதியை ஒழிக்க இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தேவை. கல்வி வேலை வாய்ப்பு வளர்ந்தால்தான் ஜாதி ஒழிய முடியும். மேலெழுந்தவாரியாகப் பார்த்து ஜாதி விவரத்தைச் சொல்லத் தயங்க வேண்டாம் என்று ஜாதி ஒழிப்பு இயக்கத்தவர் என்ற முறையில் இதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இடஒதுக்கீடு இருப்பதால்தான் ஜாதி அழியாமல் இருக்கிறது என்று வாதிடும் அதே பிரிவினர்தான், ஜாதிவாரி கணக்கெடுப்பு ஜாதியைக் காப்பாற்றும் என்று கருத்துக் கூறுகின்றனர்.
ஆனால் உண்மை என்னவென்றால், ஜாதி வாரி கணக்கெடுப்பும், இடஒதுக்கீடும்தான் ஜாதியை ஒழிக்கும்; எல்லா மக்களும் கல்வியையும், பதவியையும், அதிகாரத்தையும் பெற உதவும் என்பதை மக்கள் ஆழமாகக் கருத்தில் கொள்ளவேண்டும்.

எனவே, ஜாதி வாரி கணக்கெடுப்பு, கட்டாயம் உடனே இந்தியா முழுவதும் செய்யப்பட வேண்டும். அதுவே சமூகநீதி காக்கவும், இந்தியாவின் மறு கட்டமைப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் வழிசெய்யும்! ♦