தலையங்கம்: தேர்தல் ஆணையர் நியமனம் உச்சநீதிமன்ற வினாக்களும் திருப்தி தரா ஒன்றிய அரசின் பதில்களும்

2022 டிசம்பர் 1-15 2022 தலையங்கம்

நமது அரசமைப்புச் சட்ட நெறிப்படி இது ஒரு “முழு இறையாண்மை படைத்த, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு’’ ஆகும். இறையாண்மையின் முழு இருப்பிடம் நாட்டு மக்கள்! மக்களேதான்!
இந்த மக்களாட்சி முறையில் பொதுத் தேர்தல், மற்ற இடைத்தேர்தல் எல்லாம் அந்த ஜனநாயகத்தை நிலைநிறுத்தும்_ மக்கள் தீர்ப்புகள்மூலம்.
அவற்றை ஒழுங்குற நடத்திடவே இந்தியத் தேர்தல் ஆணையம் என்ற சுதந்திரமாக இயங்கவேண்டிய ஓர் அருமையான அமைப்பு.
ஆனால், நடைமுறையில் காணும் காட்சிகளோ, அந்தத் தேர்தல் ஆணையத்தின் நியமனங்கள் அதன் சுதந்திரமான போக்கை உறுதி செய்ய இயலாத, வாக்காளர்களின் கேள்விகளுக்கு இடம்தரும் வகையில் அமைந்த ஒரு கெட்ட வாய்ப்பு என்றே சொல்லவேண்டும்.

தேர்தல் ஆணையர்களின் நியமனம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும்.
1. ஒன்றிய அரசு அவர்களின்_ முதன்மைத் தேர்தல் ஆணையர், மற்ற இரண்டு உறுப்பினர்களின் நியமனங்கள் நடைபெறும்போது. அவை சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதாக அமைதலே சாலச் சிறந்ததாகும்.
அண்மையில் ஒன்றியத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.., பி.ஜே.பி. அரசின் தேர்தல் ஆணையர், உறுப்பினர் பதவியை நிரப்பிய விதமும், வேகமும் உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட அய்வர் அமர்வின் அடுக்கடுக்கான கேள்விகளாயின.
அரசு வழக்குரைஞரான அட்டர்னி ஜெனரல் பதிலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அளித்த விளக்கமும் _ உச்சநீதி
மன்ற நீதிபதிகளின் கடும் அதிருப்திக்கே ஆளாக்கியுள்ளது-_ எதைக் காட்டுகிறது?

பிரதமரே குற்றம் செய்தாலும் _ தேர்தல் ஆணையர் தலையிடலாம்!
சீர்திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம் என்று சட்ட ஆணையம் (Law Commission) மற்றும் குழுக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாட்டில், அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. நன்னடத்தையுடன் சுதந்திரமாகச் செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் இருக்கவேண்டியது அவசியம்.
ஒருவேளை நாட்டின் பிரதமருக்கு எதிராகக் குற்றச்சாட்டு
கள் எழுந்து, அதன் தொடர்பாக தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்காமல் போனால், அது ஒட்டுமொத்த நடைமுறையும் செயல் இழந்ததற்கு ஒப்பாகும். தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், பிரதமர்மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், சுதந்திரமாக, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பவராக இருக்கவேண்டும்.
தலைமைத் தேர்தல் ஆணையர், ஒன்றிய அரசுக்குத் தலை ஆட்டுபவராக இருக்கக்கூடாது.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அவசர அவசரமாக அருண்கோயல் தேர்தல் ஆணை
யராக நியமிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
3. தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, அருண்கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது எப்படி? அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை.
4. எல்லாம் ஓரிரு நாட்களுக்குள்… கோப்புகள் நகர்வு மின்னல் வேகத்தில் நடைபெற்றுள்ளது.
5. முதல் நாள் விருப்ப ஓய்வு மனு தரப்பட்டு, அனுமதிக்கப்பட்டு, அடுத்த நாள் அவரது நியமனம்பற்றி ஒரு பட்டியல் சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு (அதில் உள்ள அத்துணை பேரும் 6 ஆண்டுகள் பதவி_ தகுதி இல்லாதவர்கள்தான்) ஓய்வு பெற்றவர்கள்- என்ற நிலையில், இவர் பெயர் ‘டிக்’ மார்க் செய்யப்பட்டு, நியமன ஆணை அவசர அவசரமாகத் தரப்பட்டு, பொறுப்பேற்கிறார்!
இதுமாதிரி வேகம், மற்ற விஷயங்களில் இல்லையே என்று வேதனையுடன் கேள்வி எழுப்புகிறோம்.
2014 இல் மோடி கொடுத்த வாக்குறுதி என்ன? இப்பொழுது நடப்பது என்ன?
பிரதமர் மோடி 2014இல் பதவியேற்ற உடன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் இரண்டு முக்கியமானவை.
1. எனது அரசாங்கம் குறைந்த அரசு, நிறைந்த ஆளுமை (Minimum Government with Maximum Governance) என்று கூறியது, இப்போது 8 ஆண்டு காலத்தில் அதுபோன்று நடந்துள்ளதா என்பது மக்களின் கேள்வி.
2. எனது, அரசு நம்பகத்தன்மை (Credibility) உள்ளதாகவே தொடரும். முந்தைய அரசு (காங்கிரஸ் அரசு) போன்று இருக்காது என்று கூறி, ஆட்சியைப் பிடித்தவர்.
முந்தைய ஆட்சி- பழைய நிகழ்வு இதில் மாறியிருக்கிறதா? என்பது போன்ற நாசுக்கான கேள்வி உச்சநீதிமன்றக் கேள்விகளில் எதிரொலிக்கிறது.
ஜனநாயகம், குடியரசு காப்பாற்றப்பட வேண்டாமா?

– கி.வீரமணி
ஆசிரியர்