தலையங்கம் : அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் பேசலாமா?

2022 தலையங்கம் ஜுலை 16-31 2022

தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தொடர்ந்து, தனது பதவியின் மாண்புக்கும், மரியா தைக்கும் இழுக்குத் தேடிடும் வகையில், பிரச்சினைக்குரியதாகக் கருதப்படும் கொள்கைகளைப்பற்றி விமர்சனம் செய்வது (Controversial Stories) அரசமைப்புச் சட்டப்படி அவர் எடுத்த உறுதிமொழிக்கு எதிரானது; அவரது அதிகார வரம்பின் அத்துகளை மீறிய நடவடிக்கை என்பதால் கண்டனத்திற்குரியதாகும்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆரியர் – திராவிடர் ஆராய்ச்சி

சில நாள்களுக்குமுன் அவரது ஆரிய- திராவிடர் ஆராய்ச்சியை உதிர்த்துள்ளார். அது அபத்தமானதாகவும், கலாச்சார மற்றும் மொழி பண்பாட்டுக்கு நேர் எதிரிடையாகவும் உள்ளது!
தற்போது நமது ஒப்பற்ற முதலமைச்சர் அவர்கள் தலைமையில் உள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சிகளை உலகமும், இந்திய நாட்டின் இதர மாநிலங்களும் மிகவும் பாராட்டி வரவேற்கும் நிலையில், ‘திராவிட’ என்னும் கருத்தியல் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மற்றும் பார்ப்பன ஏகபோக கல்வி, பதவிச் சுரண்டல்காரர்களுக்குப் பெரும் ‘ஒவ்வாமையை’ ஏற்படுத்துகிறது – அது அவர்கள் கொள்கை வயப்பட்டது.

ஆர்.எஸ்.எஸின் தத்துவ கர்த்தா கோல்வால்கரின் கருத்தை ஆளுநர் எதிரொலிப்பதா?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தத்துவகர்த்தாவான கோல்வால்கர் எழுதிய நூலில் (Bunch of Thoughts – தமிழில் ‘ஞானகங்கை’) ஆரிய – திராவிடர் கருத்தியல் பற்றி எவ்வகையில் விமர்சிக்கப்பட்டுள்ளதோ, அதனையே பிரதிபலிப்பதாக தமிழ்நாட்டு ஆளுநரின் பேச்சு – திட்டமிட்டே வம்புச் சண்டை இழுப்பதுபோலவே உள்ளது!
‘‘திராவிடம் என்பது இடம் சார்ந்தது மட்டுமே!’’
‘‘ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னே நாம் கல்வியில் சிறந்து விளங்கினோம்.
இந்தியாவை பல ராஜாக்கள் ஆண்டபோதும் ஒரே குடும்பமாக இருந்தோம். ஆங்கிலேயர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டார்கள். விந்திய மலையை அடிப்படையாக வைத்து, வடக்கில் உள்ளவர்களை ஆரியர்கள் என்றும், தெற்கே உள்ளவர்கள் திராவிடர்கள் என்றும் கூறினர்.
ஒருங்கிணைந்த மராட்டியம், ஒடிசா, ஆந்திரா, கருநாடகா போன்ற பகுதிகளும் திராவிடமாக இருந்தன. திராவிடம் என்பது இடம் சார்ந்தது மட்டுமே.’’
இந்த உரையின் கருத்துகள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை.

ஆங்கிலேயர் வருமுன் கல்வியில் சிறந்து விளங்கியோர் யார்?

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னே கல்வியில் சிறந்து விளங்கியதாகச் சொல்லப்படுவோர் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களா? விளக்குவார்களா?
ஜாதி, வர்ணாசிரம முறைப்படி உயர் ஜாதியினரான ‘பிராமணாள் மட்டுமேதானே – பெரும்பான்மையான கீழ்ஜாதியினரான சூத்திர மக்களுக்கு – ‘‘வேதக் கல்வி என்பது மறுக்கப்பட்டது. காதால் கேட்கவும், நாவால் படிக்கவும் கூடக் கூடாது; மீறினால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும், படிப்பவர் நாக்கை அறுக்கவும் வேண்டும்’ என்ற சாஸ்திரக் கட்டளை – சனாதனத்தின் சந்நிதானக் கட்டளை’’ என்பதை ஆளுநர் ரவியோ அல்லது அவருக்கு அந்தப் பேச்சை எழுதிக் கொடுத்த வர்களோ மறுக்க முடியுமா? அனைவருக்கும் கல்வி ஆங்கிலேயர் வருவதற்கு முன் உண்டா?

ஆங்கிலேயர் வருமுன் அனைவருக்கும் கல்வி உண்டா?

அனைவருக்கும் உத்தியோகம் ஆங்கிலேயர் வருவதற்குமுன் உண்டா?
ஒரே ஜாதியிலிருந்து நியமனங்கள் செய்வது நிறுத்தப்பட்டு, பரவலாகப் பல வகுப்பினருக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதற்குக் கால்கோள் விழா இட்டவர்களே ஆங்கிலேயர் என்பதை இவர்களால் மறுக்க முடியுமா?
துரோணாச்சாரி – ஏகலைவன் கதை (கட்டை விரலை வெட்டிகுருதட்சணை கேட்ட கொடுமைக் கதை) பாரதத்தின் பழைய கதை அல்லவா? அதன் தத்துவம் என்ன? பதிலளிப்பாரா இந்த ஆளுநரான அறிஞர்?

திராவிடம் என்பது வெறும் இடமா? இந்தியா ஒரே நாடா?

‘திராவிடம்’ என்பது வெறும் இடமா?; நிலத்திற்குக்கூட அந்த மொழி, பண்பாட்டு அடிப்படையில்தானே நாடுகளுக்குப் பெயர் உண்டாகிறது; இங்கிலாந்து (England) என்பது இங்கிலீஷ் மொழி பேசுபவர்களால்தானே! ஜெர்மனி – ஜெர்மானிய மொழிக்காரர்கள் – பண்பாட்டா ளர்களால் வந்த பெயர் அல்லவா? பிரெஞ்சு – பிரான்ஸ் என்பதன் அடிப்படை என்ன என்பதை சாதாரண அறிவுள்ளவரும் அறிவரே!
ஆதிசங்கரர், இராமானுஜர், சமஸ்கிருத,பாலி மொழிச் சுவடுகள், சமண, பவுத்த மதங்கள் நிலைத்த காலங்களுக்குப் பின்னும் தாயுமானவர் (18 ஆம் நூற்றாண்டு), கால்டுவெல் (1856), மனோன்மணியம் சுந்தரனார் (1891), இரவீந்திரநாத் தாகூர் (1911), மறைமலை அடிகள் போன்றோர் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினரே! மகாபாரதத்திலும் திராவிட, கேரளா, பிராச்பேடி, பூஷிகா வன வாசின (பீஷ்ம பர்வம், 6:10:57) என்று உள்ளதே, இதற்கு என்ன பதில்?
சிந்துச் சமவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனரே, அய்ராவதம் மகாதேவன் போன்றோரும் கூறிய துண்டே! நாகர்களும், திராவிடர்களே என்று டாக்டர் அம்பேத்கர் எழுதியுள்ளாரே!
என்ன பதில்? ஆங்கிலேயர்கள் வரும்முன் இந்தியா ஒரே நாடாக இருந்த வரலாறு உண்டா?

புருஷ சூக்தம் – அதாவது வருண தர்மத்தை ஏற்படுத்தியவன் ஆங்கிலேயனா – ஆரியனா?

தெருக்கூத்தில்கூட ‘‘56 தேசத்து ராஜாக்களும்’’ என்றுதானே வசனம் பேசுவர் என்பது – அவருக்குத் தெரியாதா?
ஒரே குடும்பமாக இருந்தால் ஏன் இத்தனைக் கடவுள்கள்? இத்தனை மதங்கள்?
ஒரே மதத்திற்கும் ஏன் தனிப்பிரிவு – சண்டைகள். அர்த்தமுள்ள ஹிந்து மதம் என்பதில் ஏன் நாலாயிரம் ஜாதிகள்?
பிரித்தாண்டவன் வெள்ளைக்காரனா? ‘‘புருஷ சூக்தம்’’ காட்டி தலையில், தோளில், தொடையில், காலில் பிறந்தவன், அதற்கும் கீழே – அடியில் பஞ்சமர்கள், அனைத்து ஜாதிப் பெண்கள் என்று படிக்கட்டு ஜாதி முறையை (Graded inequality-யுடன் கூடிய முறையை) உண்டாக்கியவன் யார்? வெள்ளையனா?

மனுதர்மம் என்ன கூறுகிறது?

ஆரிய ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தை ஆங்கி லேயனா எழுதினான்?
‘திராவிடம்’ என்பது மனுதர்மத்தில் பத்தாவது அத்தியாயத்தில் உள்ளது என்பதை இந்த பிரகஸ்பதியார் ஏனோ தெரிந்துகொள்ள மறுக்கிறார்? அபத்தமாக, அரசமைப்புச் சட்டத்தின் 259 ஆவது கூற்றின் – கிக்ஷீtவீநீறீமீ – படி எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் மக்களிடையே வேற்றுமையை விதைக்கும் பிரச்சாரம் செய்யலாமா?
தி.மு.க.வின் பொருளாளரும், நாடாளுமன்ற தி.மு.க. வின் தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான தோழர் டி.ஆர்.பாலுவின் அறிக்கை மிகத் தெளிவாக விளக்குகிறது – சரியான பதிலடியாகவும் உள்ளது.

தி.மு.க.வின் ‘திராவிட மாடலுக்கு’ எதிராக ஆளுநர் கூறி – அமைதியற்ற நிலையை உருவாக்குவதா?

ஓர் ஆளுநரின் வேலை அந்த மாநில அரசு ‘‘திராவிட மாடல் அரசு’’ என்று கூறும்போது, அதற்கு நேர் எதிரான கருத்தைக் கூறி, உள்ளே ஓர் அமைதியற்ற விவகாரத்தைக் கிளப்பிவிடுவதாக உள்ளது என்றால், ஏதோ ஓர் உள்ளார்ந்த திட்டத்துடன் இப்படி வலிந்த வம்புகள் தொடங்கப்படுகின்றனவோ என்கிற அய்யம் பரவலாக உள்ளது!
அதைத் தவிர்த்து, சுமுக உறவுடன் மாநில வளர்ச்சிக்கு, வேலி துணையாக இருக்கவேண்டுமே தவிர, வேலியே பயிரை மேய்வதாக இருப்பது கூடாது.
இந்திய அரசமைப்புச் சட்ட விதிக்கும், எடுத்த உறுதிமொழிக்கும், அவரது பதவியின் பெருமைக்கும் கூட அது விரோதமானதாகும்.

– கி.வீரமணி,
ஆசிரியர்