கவிதை : நரியாரை நடுங்கச் செய்த பெரியார்!

2022 கவிதைகள் செப்டம்பர் 16-30

முனைவர் கடவூர் மணிமாறன்

பெரியார்க் கெல்லாம் பெரியார் இவரே!
நரியார் கூட்டம் நடுங்கச் செய்த
அரிமா இவரே! ஆளுமை மிக்க
பெரியார் உழைப்பால் பிழைத்தோம்; மீண்டோம்;
வல்லிருள் மாய்த்த வைக்கம் மறவர்;
நல்லோர் எல்லாம் நாளும் வணங்கும்
தலைவர் இவரே! அறிஞர் அண்ணா
கலைஞர் போன்றோர் கடமையாற்றிட
முன்னேர் பூட்டி முனைப்பாய் உழுதவர்!
பன்னருஞ் சீர்த்திப் பண்பின் இமயம்;
பகுத்தறி வென்னும் பாதை காட்டி
மிகவும் தெளிவாய் மீட்சி விழைந்தவர்;
சுயமரி யாதை இயக்கத் தாலே
நயமுறு தொண்டால் பழுத்த பழமிவர்;
மண்டைச் சுரப்பை உலகே தொழுதிட
எண்ணம், சிந்தனை, எழுச்சி விளைத்தவர்;
இல்லாக் கடவுள் இருப்பதாய்க் கதைத்த
பொல்லா வஞ்சகப் போக்கை எதிர்த்தவர்;
அடித்தள மக்கள் அனைத்தும் பெற்றிட
இடியாய், முரசாய், எரிமலைப் பிழம்பாய்க்
கருத்தியல் விதைத்தே கவனம் ஈர்த்தார்;
பொருந்தா மந்திரப் புன்மை எரித்தார்!
மகளிர் உரிமை, மாண்பெலாம் பெற்றிட
தகவுறு சமத்துவம் தழைத்தே ஓங்கிட
யாவரும் யாவும் யாண்டும் பெற்றிட
மேவிடும் புகழுடன் மேன்மை எய்திடக்
களங்கள் கண்டவர்; கல்லாய், முள்ளாய்
உளம்தனைக் கொண்டோர் உறுதுயர் களைந்தார்!
மூடத் தனத்தின் முடைநாற் றத்தைப்
பீடுற அகற்றிப் பேதைமை மாய்த்தார்!
சாதி, மதங்கள், சமயச் சழக்கை
மோதி மிதித்தார்; முடமாய் ஆக்கினார்;
தமிழகம் என்றும் தலைநிமிர்ந் தெழவே
தமியராய்த் தமிழரைத் தடிகொண் டெழுப்பினார்!
நெருப்பென இருந்தே ஆரியப் புரட்டை
வெறுத்தார்; மறுத்தார்; வெல்புகழ் ஒளிருமே!