சிந்தனைக் களம் : ஹிந்துராஷ்டிராவை அமைக்கத் துடிக்கும் சங்கிகள்

2022 சிந்தனைக் களம் செப்டம்பர் 16 -30 2022

சரவணா ராஜேந்திரன்

கார்ப்பரேட் நலன், ஆட்சி, தொடர மக்கள் ஆதரவு வேண்டும் என்கிறார் மோடி. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக இவரது ஆட்சியின் அவலம் மக்கள் மனதில் பெருங்கோபமாக உருவெடுத்து உள்ளது. இதனால், ஹிந்துத்துவா என்ற வறட்டுக் கத்தலை ஹிந்து அமைப்புகள் முன்னெடுத்துச் செல்ல, அதன் பின்னால் வரும் வாக்குகளை தேர்தல் வெற்றியாக மாற்றும் வேலையில்தான் மோடி இறங்கியுள்ளார்.
நாடு முழுவதிலும் ஹிந்து தேசத்திற்கான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து விழிப்புணர்வுப் பரப்புரைகளை நடத்தும் ஹிந்துத்துவ அமைப்பான ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி (பியிஷி) இதை ஒப்புக்கொள்கிறது. ஹிந்து நாட்டைக் கட்டமைக்க கடுமையாக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என்று அந்த அமைப்பு கூறுகிறது.
மகாராஷ்டிராவில் நடந்த அண்மைக் காலத்திய கூட்டத்தில், அதன் ஆன்மிக அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் செய்தித் தொடர்பாளர் அபய்வர்தக், “இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றுவதற்குத் தியாகம் செய்யாவிட்டால், ஹிந்துக்களின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்ÕÕ என்று கூறியுள்ளார்.

2019 தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதில் இருந்து ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் முயற்சிகள் அதிகமாகியுள்ளன. “2019ஆம் ஆண்டுக்குப் பிறகு, அனைத்துமே மிகவும் தீவிரமாகிவிட்டன. புதிய சட்டங்கள், அரசியலமைப்பு திருத்தம் போன்ற பல செய்யப்பட்டன. ஹிந்து ராஷ்டிராவுக்காக வரலாறு மற்றும் பாடநூல்கள் மாற்றி எழுதப்படுகின்றன.
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வரலாற்றுப் பாடநூல்கள் எப்போதுமே இடதுசாரி அல்லது மார்க்சிய வரலாற்றா-சிரியர்-களால் எழுதப்படுவதாக வலதுசாரி அமைப்புகள் புகார் கூறி வருகின்றன. வரலாற்றில் தங்களின் கண்ணோட்டத்திற்கும் இடமளிக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். எவ்வாறாயினும் இடதுசாரி தரும் வரலாற்றின் விளக்கத்தை அவர்கள் வெறுக்கிறார்கள்.

வரலாறு என்கிற பெயரில் தாங்கள் கூறுவதை எதிர் கேள்வி இல்லாமல் ஏற்க வேண்டும் என்ற வலதுசாரி வரலாற்றாசிரியர்-களின் போக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு 26.5.2022 அன்று டில்லி தமிழ்க் கல்விக்கழக மேனிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து, தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறள் குறித்துக் கூறியது,
”திருவள்ளுவர் சனாதனக் கொள்கைகளை ஆதரித்தார், அவரது குறளே சனாதன நெறியில் தான் உருவாக்கப்பட்டது, திருக்குறள் முழுக்க முழுக்க ஆன்மிக நூல், திருக்குறளை மொழி பெயர்த்த கிறிஸ்துவ மத போதகரான ஜி.யூ.போப் திருக்குறளில் உள்ள ஆன்மிகச் சிந்தனைகளை நீக்கிவிட்டார். மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யூ.போப் தந்திருக்கும் திருக்குறளின் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல இருக்கிறதுÕÕ என்று பேசியுள்ளார்.
ஹிந்துத்துவ வாதிகளின் நோக்கமே இளைய தலைமுறையின் எண்ணங்களில் நச்சுவிதைகளை விதைக்க வேண்டும்; அவர்கள் கூறுவதை ஏன் எதற்கு என்று கேட்காமல் ஏற்கவேண்டும் என்பதுதான்.

சாவர்க்கரின் ஹிந்துத்துவா கருத்து, வெளிப்-படையாக, இரண்டு மிக முக்கியமான சிறுபான்மையினரான முஸ்லிம்களையும் கிறிஸ்துவர்-களையும் இந்தியாவில் வாழத் தகுதி அற்றவர்கள் என்கிறது. சாவர்க்கரின் ஹிந்து ராஷ்டிராவில் அவர்களின் இடம் என்னவாக இருக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிவிக்கப்- படவில்லை. ஆனால், அதிக உரிமைகளை எதிர்பார்க்காமல் இந்தியாவில் வாழக்கூடிய ஒரு வகையான இரண்டாம் தரக் குடியுரிமையை மட்டுமே அவர்கள் எதிர்பார்க்க முடியும் என்பதே இந்துத்துவாவாதிகளின் முடிவு.
ஆனால், ஆர்எஸ்எஸ் அண்மைக் காலமாக முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் கவலைப்படத் தேவையில்லை என்று நம்ப வைக்க முயன்று வருகிறது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், முஸ்லிம்களின் முன்னோர்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டனர் என்பதால் முஸ்லிம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் பொது-வான பாரம்பர்யம் உள்ளது. எனவே, இந்தியர்-கள் அனைவரும் ஹிந்துக்கள்தான் என்று அடிக்கடி கூறி வருகிறார்.

தற்போது முஸ்லிம்கள், தாங்கள் ஹிந்துப் பெரும்பான்மை ஆட்சியின் கீழ் இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதப்படுவோம் என்று அஞ்சுகிறார்கள். தாங்கள் அரசியல் தனிமை மற்றும் தேர்தல் பாகுபாட்டை எதிர்-கொள்ளக்கூடும் என்று அவர்கள் கவலைப்படுகின்றனர்.
ஹிந்துத்துவ தலைவர்கள் அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகள் அவர்களின் அச்சத்தை அதிகப்படுத்துகின்றன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர உறுப்பினரும் பாஜக தலைவருமான வினய்கட்டியார் ஒருமுறை, “முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருக்கக் கூடாது. மக்கள் தொகை அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டது. எனவே அவர்கள் ஏன் இங்கே இருக்கிறார்கள்? முஸ்லிம்களுக்கு அவர்களின் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வங்க தேசத்திற்கோ, பாகிஸ்தானுக்கோ செல்ல வேண்டும். அவர்களுக்கு இந்தியாவில் எந்த வேலையும் இல்லை,ÕÕ என்று கூறியிருந்தார்.

முஸ்லிம்கள் ஹிந்து ராஜ்ஜியத்தில் இருப்பார்கள். அதாவது கண்ணுக்குத் தெரியாத மக்கள்தொகையாக இருப்பார்கள். அந்த நாட்டின் மக்கள்தொகை மிகப் பெரும்பான்மை ஹிந்துக்களாக மட்டுமே இருப்பார்கள்.
பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, இந்தியா இன்னும் மூன்றரை ஆண்டுகளில் ஹிந்து நாடாக மாறும் என்று கடந்த ஆண்டு கணித்திருந்தார். 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியா ஓர் ஹிந்து நாடாக மாறும் என்று ஒரு முனிவர் கணித்ததாகத் தனது இணையதளத்தில் சனாதன் சன்ஸ்தா கூறியுள்ளது.
இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் வராமல் போனாலும், அதற்கான முயற்சிகள் தொடரும். அது அதிகாரபூர்வமாக நடக்காமல் போனாலும் ஹிந்து நாட்டிற்கான முன்னோக்கிய அணி-வகுப்பு தீவிரம் நிறைந்ததாக இருக்கும் என்று தோன்றுகிறது. சமூகத்தின் பெரும் பகுதியினர் அதை ஆதரிப்பதாகவோ அல்லது அமைதியாக இருப்பதைப் போலவோ தோன்றுகிறது. ஒருபுறம் ஹிந்துநாடு என்று ஹிந்துத்துவவாதிகள் தொடர்ந்து சொல்வதும் நாட்டை மிரட்டுவதும் மோடிக்கு அரசியல் செய்ய நல்ல வாய்ப்பு _ அதாவது உண்மை-யான பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்ப இது பயன்படுகிறது.

நாட்டின் உண்மையான பிரச்சினைகள் மிகவும் கவலை தருவதாக உள்ளன. பொருளாதார நிலைமை உண்மையில் கவலையளிக்-கிறது. வேலைவாய்ப்பின்மை, பண-வீக்கம் போன்றவை மக்களை மிகவும் பாதித்துள்ளன. எனவே, உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை-திருப்ப ஹிந்து அமைப்புகளின் மதவாத அரசியலைத் தனக்குச் சாதகமாக வளைத்துக்கொண்டுள்ளார்.
மோடியைப் பொருத்தவரை ஹிந்து ராஷ்டிரா -_ ஹிந்து தேசம் என்பதெல்லாம் அரசியல் செய்ய ஒரு சொல் மட்டுமே. இந்தியா அதிகாரபூர்வமாக சமயச் சார்பற்ற நாடு. அதிகாரபூர்வ மதம் இல்லாத நாடு; மற்றும் எல்லா மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் சம உரிமைகளை வழங்கும் ஒரு நாடு. ஆனால், இந்தியாவின் 130 கோடி மக்களின் வாழ்வில் மதம் ஆதிக்கம் செலுத்துகிறது. 2024இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இது மிக முக்கியமான விவாதப் பொருளாக இருக்கும் என்று பல வல்லுநர்கள் கருதுகின்றனர்.