அறிவியல் : தண்ணீரால் வாகனம் ஓட்டி அரசுப் பள்ளி மாணவர் சாதனை!

2022 அறிவியல் செப்டம்பர் 1-15-2022

வேலூர் வி.அய்.டி. பல்கலைக்கழகம் அறிவியல் அமைப்புகள் சிலவற்றுடன் இணைந்து ‘நாளைய விஞ்ஞானி’ என்னும் கண்காட்சியை நடத்தியது. இதில் பெண்ணாத்தூர் அரசுப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவர் தேவேந்திரன் கண்டுபிடித்த, பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் இரு சக்கர வாகனம் தகுந்த விஞ்ஞான விளக்கங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த வாகனத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மயில்சாமி அண்ணா-துரை மாணவரை வெகுவாகப் பாராட்டினார்.
வாகனத்தை ஆய்வு செய்த அவர் “ஹைட்ரஜனில் இயங்கும் இந்த இரு சக்கர வாகனத்தை நேரில் பார்த்தேன். அதை ஆய்வு செய்ததன் மூலம் ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது.
செல்போனில் உள்ள லித்தியம் அயன்-பேட்டரி அளவில் சிறியது என்றாலும், அதை சரியாகக் கையாளாத நிலையில் விளைவுகள் ஆபத்தானதாக அமையும்.
இதுபோன்ற நிலையில், பெட்ரோல், லித்தியம் அயன் பேட்டரி இரண்டும் வேண்டாம், நம் வீட்டிலுள்ள தண்ணீரே போதும் என்பது நமது மனதை நிறைவடையச் செய்யும் ஒன்றாகும். இன்று பெட்ரோலுக்கு மாற்றாக ஒன்றை உருவாக்கும் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம்’’ என்றார்.

மாணவன் தேவேந்திரன் கூறியதாவது:
“இந்த முயற்சிக்கு எங்களது பள்ளி ஆசிரியர்கள் அரிய ஆலோசனைகளை வழங்கி பெரிதும் ஊக்குவித்தனர். முதலாவது தண்ணீரில் ஹைட்ரஜனைப் பிரித்து அதை வாகன இன்ஜினுக்கு நேரடியாகப் பயன்-படுத்தினோம். முதலில் கண்ணாடிப் பாட்டிலில்தான் ஹைட்ரஜனைப் பிரித்தோம். அப்போது பாட்டில் வெப்பமாகியதால் பயந்துவிட்டோம். ஹைட்ரஜன் வாயு செல்லும் குழாயும் உருகும் நிலை ஏற்பட்டது. பிளாஸ்டிக்கால் ஆன பால் கேனைப் பயன்படுத்தி இதற்குத் தீர்வு கண்டோம்.
அலுமினியம், ரப்பர், துத்தநாகத் தகடுகள் கொண்ட வரிசைகள் அடங்கிய ‘டிரைசெல்’ அமைப்பில் தண்ணீரைச் செலுத்தி ஹைட்ரஜன் பிரிக்கப்பட்டு, அதை மீண்டும் தண்ணீர் கேனுக்குக் கொண்டு செல்லும் வடிவமைப்பு அடைந்தோம். ஒரு லிட்டர் தண்ணீரில் 3 தேக்கரண்டி உப்பைச் சேர்த்தோம். உப்பானது வினையூக்கியாக மாறி ஹைட்ரஜனைப் பிரிக்கும்’’ என்று கூறினார்.

வி.அய்.டி., பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சத்தியநாராயணன் “ஹைட்ரஜனை வெளியில் எரிபொருளாகக் கொண்டு வந்து, வாகனத்தின் கொள்கலனில் நிரப்பிப் பயன்படுத்துவதில்தான் பலவிதமான சிக்கல்கள் உள்ளன. இந்த மாணவர் குழுவினர் இந்தச் சிக்கலுக்கும் சேர்த்தே தீர்வு கண்டுள்ளனர். ஒரு பக்கம் ஹைட்ரஜன் உற்பத்தி நடக்கும்போது அதைச் சேமிக்கத் தேவையில்லாமல் எரிபொருளாக உடனுக்குடன் பயன்படுத்தப்படுவதை நன்றாக ஆய்வு செய்து உறுதி செய்து கொண்டோம். இதனால்தான் இந்தக் கண்டுபிடிப்பின் மீது மயில்சாமி அண்ணாதுரை மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்.
“இந்தக் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெறவும், அடுத்த கட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு உதவவும் வி.அய்.டி. பல்கலை தயாராக இருக்கிறது’’ என்று வேந்தர் கோ.விசுவநாதன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சாதாரண, எளிய குடும்பத்தில் பிறந்து பலரும் ஒதுக்கி வைக்கும் அரசுப் பள்ளியில் பயின்று வருகின்ற மாணவர்களின் இந்தச் சாதனை விளைவு பெரிதும் பாராட்டத்தக்க ஒன்றுதானே!