கவிதை : மனிதம் எங்கே?

2022 ஆகஸ்ட் 16-31 2022 கவிதைகள்

முனைவர் கடவூர் மணிமாறன்

அரசியலில் வாழ்வியலில் இன்றும் நம்மை
ஆள்வதுவும் ஆரியமே, அறிந்து கொள்வீர்;
அறிவியலை உலகியலை அறியா ராக
அழிக்கின்ற மடமையெனும் சேற்றுள் மூழ்கிப்
புரியாமல் பகுத்தறிவை இழந்தோம்; பொல்லாப்
பொய்களையே மெய்களென நம்பிக் கெட்டே
உரமிழந்தோம்; திறமிழந்தோம்; பழமை வாத
ஊளையிடும் நரிகளையும் நம்ப லாமோ?

சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி என்போர்
சாத்திரமும் கோத்திரமும் வேண்டும் என்பார்!
ஆணியையும் வைரமென அலறி நிற்பார்;
அழிக்கின்ற மனுதருமம் வேதம் என்பார்;
தூணினையே துரும்பென்பார்; துரும்பைக் கூடத்
தூணென்பார்; யாவருமே உயரே செல்ல
ஏணியென இருப்போராய் ஏய்ப்பார்; நந்தம்
ஏற்றத்தை, மாற்றத்தை விரும்பு வாரோ?

உள்ளத்தில் நஞ்சிருக்கும்; எனினும் அன்னோர்
உதட்டினிலே தேன்வழியும்! புதிய கல்விக்
கொள்கையெனப் பிதற்றிடுவார்! இந்தி மற்றும்
குலக்கல்வி, சமற்கிருதத் திணிப்பைச் செய்வார்!
குள்ளமனம் கொண்டோரோ சட்டம் மீறிக்
கூட்டாட்சி மாண்பையெலாம் குழியில் தள்ளி
விள்ளரிய இழிவையுமே செய்தல் கண்டும்
வேடிக்கை பார்க்கிறதே அறிஞர் கூட்டம்!

மதச்சார்புக் கிடமில்லா நாட்டை இந்நாள்
மதவெறியர் கைப்பற்றி ஆடு கின்றார்;
மதச்சார்பு நாடிதுவாம் என்றே இந்த
மாநிலத்தின் ஆளுநரும் துணிந்து கூறி
உதவாத வெற்றோலம் ஒலித்தே நாளும்
உருப்படாத கருத்துகளை விதைக்க லானார்!
மதம்கொண்ட யானையென ஒன்றி யத்தார்
மற்போரை நடத்துகிறார்! மனிதம் எங்கே?