தமிழர் மருத்துவம் : மலர்களின் மருத்துவப் பயன்கள்

2022 ஆகஸ்ட் 16-31 2022 மருத்துவம்


தாமரைப்பூவும் தண்டும்!
வெண் தாமரை மூளைக்கும். செந்தாமரை இதய வலுவுக்கும் நல்லது. கஷாயம் வைத்து 15 மில்லி வரை அருந்தலாம். தாமரைத் தண்டுக்கு கர்ப்பப்பையை வலுப்படுத்தும் தன்மை உண்டு.

ஆவாரம் பூ
நீரிழிவுக்கான சூரணத்தில் ஆவாரம் பூவையும் சேர்க்கிறோம். காய்ச்சிய பசும்பாலில் இரவு முழுக்க ஆவாரம்பூவை ஊறவைத்துக் குடித்தால் வெள்ளைப்படுதல் சரியாகும்.

நந்தியாவட்டை
கண்கள் சிவந்து இருத்தல், கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு நந்தியாவட்டை மலர் சிறந்த மருந்து. எறும்புகள் இல்லாமல் சுத்தம் செய்த நந்தியாவட்டைப் பூக்களை கண்களின் மேல் வைத்து ஒரு துணியால் கட்டி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் விட்டுவிட வேண்டும். படிப்படியாக பிரச்சனை சரியாகிவிடும்.

வேப்பம்பூ
வேப்பம்பூ அடிக்கடி உணவில் சேர்த்துவர கண் நோய் வராது; பார்வை கூர்மையாகும் என்று சித்தர் பாடல்கள் சொல்கின்றன.

செம்பருத்திப்பூ
இந்தப் பூவில் இருக்கிற வழுவழுப்புத் தன்மை வாய், குடல், கர்ப்பப்பைப் புண்களைக் குணப்படுத்தும். ஒற்றையடுக்கு செம்பரத்தம் மட்டுமே மருத்துவ குணம் கொண்டது. மலர் இதழ்களை பச்சையாக மென்று தின்னலாம்.

நித்ய கல்யாணி
200 ஆண்டுகளுக்கு முன்னால் நம் நாட்டுக்கு வந்த செடி இது. நித்ய கல்யாணிச் செடியிலிருந்து சத்துகளைப் பிரித்துதான் புற்றுநோய்க்கான மருந்தில் சேர்க்கிறார்கள். இந்த மலரை நேரடியாக மருத்துவத்தில் பயன்படுத்துவதில்லை. மற்ற பூக்களைப்போல இது நேரடியாக உண்ணத் தகுந்ததும் அல்ல.

மல்லிகைப்பூ
பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் கட்டும் பிரச்சினை அடிக்கடி வரும். மல்லிகை அல்லது முல்லையை அரைத்து மார்பில் பற்றுப்போட பால் கட்டு கரையும். தாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புகிறவர்களும் இந்தப் பற்றை மார்பில் போட்டுக்கொள்ளலாம். ஆனால், பச்சை வண்ணமேற்றிய பூக்களைப் பயன்படுத்தக்கூடாது.

பன்னீர் ரோஜா
பன்னீர் ரோஜாக்களில் செய்யப்படும் குல்கந்து வயிற்றுப்புண்ணை ஆற்றும்; மலச் சிக்கலைத் தீர்க்கும்;
மூலநோயைக் கட்டுக்குள் வைக்கும்: ரத்தச்சோகையைச் சரிசெய்யும். பல வண்ண ரோஜாக்களை எக்காரணம் கொண்டும் மருந்தாகப் பயன்படுத்தக் கூடாது. நீரிழிவு உள்ளவர்கள் குல்கந்து சாப்பிடக் கூடாது. பூச்சிமருந்து தெளிக்கப்பட்ட பூக்களை சாப்பிடக் கூடாது.

மருதாணிப்பூ
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மருதாணிப் பூக்களை உலர்த்தி தலையணையாகத் தயாரித்துப் பயன்படுத்தலாம். மருதாணிப்பூவை ஊறவைத்த தண்ணீரில் குளித்தால் அம்மையால் வருகிற உடல் எரிச்சல் தணியும்.

நொச்சிப்பூ
“மைக்ரேன்” எனப்படும் ஒற்றைத் தலைவலியால் துடிப்பவர்கள், நொச்சிப் பூக்களை உலர்த்தி தலையணையாகத் தயாரித்துப் பயன்படுத்தலாம். “அமீபியாசிஸ்” காரணமாக வரும் சீதபேதிக்கு சித்த மருத்துவரின் ஆலோசனையோடு நொச்சிப்பூ கஷாயம் அருந்தலாம்.