சிந்தனை:நீட் ;முதல் அமைச்சர் நரேந்திர மோடி – பிரதமர் நரேந்திர மோடி இடையிலான முரண்பாடு!

ஏப்ரல் 1-15,2021

கவிஞர் கலி.பூங்குன்றம்

பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடி அவர்கள் ‘நீட்’டைக் கொண்டு வந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறார். ஆனால், இதே மோடி அவர்கள் குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்தபோது ‘நீட்’டைப் பற்றிய அவரின் நிலைப்பாடு என்ன?

இதோ ஆதாரம் பேசுகிறது:

மோடியின் இரட்டை வேடம்: முதல்வராக இருந்தபோது ‘நீட்’ எங்களுக்குத் தேவையில்லை என்று கூறியவர்.

அகமதாபாத், நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அதன் வாயிலாகவே மருத்துவம் படிக்க சேர்க்கப்படுவர் என்று மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் அமல்படுத்தி உள்ளது.

ஆனால், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ‘நீட்’தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று கூறி வந்தார். ஆனால், தற்போது பிரதமராக வந்ததும் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து இரட்டை வேடம் போடுகிறார்.

கடந்த 2012_2013ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ‘நீட்’ நுழைவுத் தேர்வைக் கொண்டுவர அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. அதுகுறித்து மத்திய எம்.சி.அய். மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது.

அப்போது குஜராத் மாநிலத்தில் மோடி தலைமையிலான ஆட்சிதான் நடைபெற்று வந்தது. அப்போது, குஜராத் அரசு மத்திய அரசின் ‘நீட்’ அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போதைய குஜராத் மாநில அமைச்சர் ஜெய்நாராயணன் வியாஸ் எம்.பி.பி.எஸ் படிப்புகளில் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார்.

நீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என எங்களது மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் நாங்கள் தெரிவித்தோம் என்றும், மருத்துவக் கல்வியில் தேர்ச்சி பெற விரும்பும் குஜராத் மாணவர்களிடையே, இதுபோன்ற நீட் தேர்வு அறிவிப்பு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கூறினார்.

இவ்வாறு கடுமையாக அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்டுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த மோடியும், அவரது தலைமையிலான அமைச்சரவையும் தற்போது நீட் தேர்வை, மாநில அரசு மற்றும் மக்களின் விருப்பத்தை மீறி அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மோடியின் மற்றொரு முகம் மீண்டும் தெளிவாக தெரிய வந்துள்ளது.

இந்த இரட்டை வேடத்தை மனோநிலையை வாக்காளப் பெருமக்கள் உணர வேண்டும். சமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசம் எனும் இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பற்ற கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *