களஞ்சியம்: முப்படைகளின் வணக்கம்

ஏப்ரல் 1-15,2021

நம் முப்படைகள் ஏன் வெவ்வேறு மாதிரி ‘சல்யூட்’ (salute) – ‘வீரவணக்கம்’ செலுத்துகின்றன என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் அதைப் பற்றி நாம் அறிந்ததும் – அறியாததும்.

நம் முப்படைகளான இந்திய இராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கப்பற்படை ஆகியவற்றின் உடைகள் வெவ்வேறு நிறங்களில் இருக்கும், அவர்களின் போர் முறைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. அவர்களின் பதவிகளின் தரமும் (Rank) வெவ்வேறாக இருக்கும். அது மட்டுமின்றி அவர்கள் வீரவணக்கம் செலுத்தும் முறையும் வெவ்வேறாக இருக்கக் காரணம் என்ன என்று பார்க்கலாம்.

‘சல்யூட்’ அடிப்பது என்பது மரியாதை செலுத்துவதாகும். இந்த ‘சல்யூட்’ ஒரு தனிமனிதனுக்காக அளிக்கப்படவில்லை.

அந்த நபரின் சாதனைகளுக்காகவும், அவர் அணிந்திருக்கும் உடையின் மதிப்பிற்கும், அவருடைய பதவியின் பெருமைக்காகவும் அளிக்ககூடிய ஒரு சிறப்பான அங்கீகாரம் ஆகும்.

இந்தியாவின் ஒவ்வொரு படையிலும் எவ்வாறு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையையும் வரலாற்றையும் காண்போம்.

இந்திய இராணுவம்: உள்ளங்கை திறந்த நிலையில் முனோக்கி இருக்க வேண்டும்.

எப்படி?

அனைத்து விரல்களும் ஒன்றுடன் ஒன்று கட்டை விரலுடன் இணைந்திருக்க வேண்டும். நடுவிரல் கண் புருவத்தைத் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.

காரணம்:

போர்க் காலத்திலும் இயற்கைப் பேரிடர்களின் போதும் தங்கள் இன்னுயிரையும் கொடுக்கும் உன்னத வீரர்களை கவுரவப்படுத்தவும், அதுமட்டுமின்றி ‘சல்யூட்’ அடிக்கும்போது, தான் எந்தவிதமான தீய எண்ணத்துடனும் இல்லை, மற்றும் நான் என் கையில் எந்த வித ஆயுதங்களையும் மறைத்து வைத்திருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தவும் இந்திய இராணுவத்தில் இவ்வாறு சல்யூட் அடிக்கப்படுகிறது. (சனவரி 15 இந்திய இராணுவ படை தினம்)

இந்திய கடற்படை:

உள்ளங்கை திறந்த நிலையில் கீழ்நோக்கி இருக்க வேண்டும்.

எப்படி?

கையைத் திருப்பிய நிலையில் உள்ளங்கை தோள்பட்டையை நோக்கி இருக்குமாறு தலைக்கு 90 டிகிரி கோணத்தில் செங்குத்தாக இருக்க வேண்டும்.

காரணம்:

அந்தக் காலத்தில் கப்பலில் வேலை செய்யும் பணியாளரின் கைகளில் கிரீஸ், எண்ணெய்க் கறை போன்றவை படிந்திருக்கும். அந்த கறையோடு தன் உயரதிகாரிக்கு ‘சல்யூட்’ அடித்தால் அது அவரை அவமதிப்பதாகும். எனவேதான் சல்யூட் அடிக்கும்போது இந்திய கடற்படை வீரர் தன் உள்ளங்கையைக் கீழ்நோக்கி வைத்துள்ளார். (ஏப்ரல் 4 இந்திய கப்பல் படை தினம்.

இந்திய விமானப்படை:

உள்ளங்கை திறந்த நிலையில் 45 டிகிரி கோணத்தில் சாய்வாக தரையை நோக்கி இருக்க வேண்டும்.

எப்படி?

கையைத் திறந்த நிலையில் விரல்களை ஒன்றோடு ஒன்று இணைத்து 45 டிகிரி கோணத்தில் தரையை நோக்கியவாறு இருக்க வேண்டும். இந்திய விமானப்படை சல்யூட் மற்றும் இந்திய கப்பற்படையின் சல்யூட்டிற்கு இடையில் இருக்க வேண்டும்.

காரணம்:

பண்டைய காலத்தில் இந்திய விமானப்படை நம் இராணுவத்தின் சல்யூட் அடிக்கும் முறையையே பயன்படுத்தி வந்தது. ஆனால் விமானப்படை தனக்கென்று ஓர் அடையாளம் வேண்டும் என்று மார்ச் 2006 முதல் இந்தப் புதிய முறையை பின்பற்றத் தொடங்கியது. (அக்டோபர் 8 இந்திய விமானப்படை தினம்)

நன்றி: ஜவகர் ஆனந்த்

முகநூல் பகிர்வு – நெய்வேலி சார்லஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *