மூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை

ஏப்ரல் 01-15 2020

மூட நம்பிக்கையால் விளையும் கேடுகள்

 ம.ஆறுமுகம்

நம் தமிழ்ச்சமூகம் முடைநாற்றம் வீசுகின்ற மூடநம்பிக்கைகளால் பல்வேறு கேடுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதில்  படித்தவர்- படிக்காதவர் ஏழை பணக்காரர், நகரத்தார், கிராமத்தார், ஆண் – பெண் என்கிற பாகுபாடின்றி அனைவருமே இந்த மூடநம்பிக்கை நோய்க்கு ஆளாகி இருக்கின்றனர்.

அதில் குறிப்பாக ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், நியூமராலஜி என்கிற எண்கணிதம், சொர்க்கம், நரகம் என்கிற மூடநம்பிக்கை, திதி, தெவசம், ஆகியவை, நல்லநாள் கெட்டநாள், நல்ல நேரம், கெட்ட நேரம், என்கிற மூடநம்பிக்கை, அட்சயதிரிதியை என்கிற மூடநம்பிக்கை, கடவுள், மதம் என்கிற மூடநம்பிக்கை, ஜாதி என்கிற மூடநம்பிக்கை மக்களை மிகமிக அதிகமாக ஆட்டிப்படைக்கிறது.

ஒரு குழந்தை பிறக்கும்போதே மூடநம்பிக்கை நுழைய ஆரம்பிக்கிறது. குழந்தை நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்பதற்காக பிரசவம் பார்க்கும் மருத்துவரிடம் போய் இந்த நேரத்தில்தான் குழந்தை பிறக்க வேண்டும். அதற்குள் அறுவைசிகிச்சை செய்து குழந்தையை எடுத்து விடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அதுபோல ஆடி மாதத்தில் குழந்தை பிறக்கக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே அறுவைசிகிச்சை செய்து எடுத்து விடுங்கள் என்றும் மருத்துவர்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். ஒரு சில மருத்துவர்கள் பணத்திற்காகவோ கட்டாயத்தினாலோ இதனைச் செய்கின்றபொழுது அந்தக் குழந்தைக்கும் தாய்க்குமே பாதிப்புகள் ஏற்படுகிறது.

குழந்தை பிறந்த பிறகு அதற்குப் பெயர் வைப்பதற்கு ஜோதிடரிடம் போகிறார்கள். அவன் எண்கணித முறையில் இந்த எழுத்தில் வைக்க வேண்டும் என்று சொல்கின்றான். அதனால் பொருளற்ற வகையிலும் தமிழ் அல்லாத பிற மொழிகளிலும் பெயர்களை வைத்து மக்கள் இழிவைச் சுமக்கிறார்கள். ஒரு காலத்தில் பெயர்கள் வருணாசிரம அடிப்படையில் பிராமணனுக்கு உயர்வையும் சத்திரியனுக்கு வீரத்தையும் வைசியனுக்கு செல்வத்தையும் சூத்திரனுக்கு இழிவையும் அடிமை என்கின்ற பொருளையும் தரும் பெயர்களைத்தான் வைக்க வேண்டும் என்ற விதி நிலவியது. அய்யா வைகுண்டருக்கு முடிசூடும் பெருமாள் என்று வைத்த பெயரை உயர்ஜாதியினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் முத்துக்குட்டி என்று மாற்றியதாக அவருடைய வரலாறு நமக்குச் சொல்கிறது. நம்முடைய மக்கள் கருப்பன், மண்ணாங்கட்டி, பாவாடை, களித்திண்ணி என்று இழிவான பெயர்களையே சுமக்க வேண்டி இருந்தது.

ஆனால் இன்றைக்கு எண்கணிதம் என்ற பெயரில் அந்தத் தமிழ்ப் பெயர்கள் எல்லாம் வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டு வருவது மிக மிக வெட்கக் கேடு. எழிலரசி என்ற பெயரை திவ்யலட்சுமி என்று மாற்றுகிறான்.

இதுவரை எந்த பெயரியல் மேதையும் ஒரு வடமொழிப் பெயரைத் தனித்தமிழ்ப் பெயராக மாற்றியதாக சான்று இல்லை. இப்படித் திட்டமிட்டு தமிழ்ப்பெயர்களெல்லாம் வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டு வருவது மிகப்பெரும் பண்பாட்டுப் படையெடுப்பாகும்.

தமிழனும் அதனை இழிவு என்று அறியாமலேயே சாக்கடையை சந்தனம் என்று கருதிப் பூசிக்கொள்கிறான். இனி  தமிழ்நாட்டுப் பிள்ளைகளைப் பெயரை வைத்து இது தமிழ்நாட்டுப்பிள்ளை என்று கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு பெயர்களெல்லாம் வடமொழிமயமாகின்றன.

நம்முடைய தமிழ்ப்பெயர்களெல்லாம் பழைய பெயர்கள் என்று கூறி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வடமொழியிலுள்ள வேதகாலப் பெயர்களையெல்லாம் அதன் பொருள் தெரியாமல் தமிழ்ப்பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்வது மானக்கேடாக உள்ளது.

தமிழன்தான் இப்படி வடநாட்டுப் பெயர்களையும் வடமொழிப் பெயர்களையும் சூட்டிக் கொள்கிறானே தவிர வடநாட்டுக்காரன் எவனும் தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. இவையெல்லாம் நியூமராலஜி என்கின்ற மூடநம்பிக்கையால் விளைந்த கேடுகளே!

ஜோதிடம் என்கிற மூடநம்பிக்கை நம் மக்களைப் படுத்தும் பாட்டிற்கு அளவே இல்லை. ஒரு மனிதன்  பிறக்கும் போது இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்தான் அவனது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் நன்மை தீமைகள் அமைகின்றன என்று ஜோதிடன் கூறுகிறான்.                             ஒருவன் கொலை செய்வதற்கும் இன்னொருவன் கொலை செய்யப்படுவதற்கும் கிரகநிலைகளே காரணம் என்று கருதி கொலைகாரனைத் தண்டிக்காமல் விட முடியுமா? கொலையுண்டதற்கு நியாயம் கேட்காமல் இருக்க முடியுமா?

கிரகங்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன என்று இவ

ர்கள் கூறுவதை இவர்களே நம்பவில்லை என்றுதானே பொருள்?

இந்த ஜோதிடம், ஜாதகம் ஆகியவற்றால் பலரது திருமண வாழ்வே பாழாகிப் போவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ மனப் பொருத்தம்தான் அவசியம் என்பதை மறந்து ஜாதகப் பொருத்தம் பார்க்கிறோம் என்ற பெயரில் ஒருவருக்கே ஆயிரம் ஜாதகங்கள்கூடப் பார்த்தும் பொருந்தி வரவில்லை. நல்ல மணமகனுக்கும் நல்ல பெண்ணுக்கும் திருமணம் ஆகாமல் அவர்கள் தகுந்த வயதில் திருமணம் நடக்காமல் பல பெண்கள் முதிர் கன்னிகளாகவும் பல ஆண்களது இளமைக்காலமும் வீணாகப் போய்க்கொண்டிருக்கின்றன. பத்து பொருத்தமும் சரியாகப் பொருந்துகின்றன என்று கூறி நடத்தி வைக்கப்படும் திருமணங்கள் பல தோல்வியில் முடிந்து நீதிமன்றப்படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

நம் மக்கள் கடைப்பிடிக்கும் இன்னொரு மூடநம்பிக்கை திதி தெவசம் போன்றதாகும்.

ஆடுமாடுகள் விலங்குகளின் ஆத்மாவுக்கு சாந்தி அடைய எந்த சடங்கும் செய்வதில்லை. ஆனால் மனிதனுக்கு மட்டும் அவற்றைச் செய்யச் சொல்கிறான் என்றால் விலங்குகளுக்குச் செய்வதால் யாரும் பணம் பொருள் தருவதில்லை. மனிதனிடம்தான் பணத்தையும் பொருளையும் சுரண்டலாம் என்பதற்காக பார்ப்பனர்களால் செய்யப்பட்ட ஏற்பாடே இந்த ஆத்மா மோட்சம் நரகம் பிதிர்லோகம் என்பதாகும். இதனால்தான் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் இவற்றைக் கற்பித்தவனை அயோக்கியன் என்கிறார். நம்புகிறவனை மடையன் என்றும் இதனால் பலன் அனுபவிப்பவனை மகா மகா அயோக்கியன் என்றும் சொல்கிறார்.

முகத்திலிருந்து பிறந்தேன் என்று ஒருவன் கூறுவதும் அக்கினியிலிருந்து பிறந்தேன் என்று கூறுவதும் மூடநம்பிக்கைள்தான். இப்படியெல்லாம் மனிதன் பிறக்க முடியாது. அது மூடநம்பிக்கை என்று மனிதன் உணருகின்றபொழுதுதான் இந்த ஜாதி என்கின்ற சனியன் ஒழியும்.

மூடநம்பிக்கையிலேயே முதல்தரமான மூடநம்பிக்கை என்பது கடவுள் என்கிற மூடநம்பிக்கை. கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார். கடவுள்தான் எல்லாவற்றையும் இயக்குகிறார். கடவுள்தான் எல்லாம்வல்ல சக்தி மிக்கவர் என்பதெல்லாம் மிகப்பெரிய மூடநம்பிக்கைகள். கடவுள் என்ற ஒன்று இருந்தால் ஒன்றே ஒன்றுதானே இந்த உலகத்தில் இருக்க முடியும்? அது எல்லாம் வல்ல சக்தி என்றால் எதற்காக இத்தனை கடவுள்கள்? இத்தனை மதங்கள் எதற்கு? மதச்சண்டை ஜாதிச்சண்டை எதற்கு? என் கடவுள் பெரிசு. சக்தியுள்ளது. உன் கடவுள் சிறியது, சக்தியில்லாதது.

கடவுள் என்கிற மூடநம்பிக்கை இருப்பதாலேயே இந்த உலகில் ஏழை –  பணக்காரன் ஆண்டான்- – அடிமை உயர்ந்தவன் – தாழ்ந்தவன் ஆண் பெண் என்கிற பாகுபாடுகள் நிலவி வருகின்றன. இந்த செல்வத்தையும் வசதியான வாழ்க்கையையும் கடவுள் கொடுத்தார் என்று பணக்காரன் நம்புகிறான்.                                வருணஜெபம் செய்தால் மழை வரும் என்று மக்களை ஏமாற்றுவதே இந்த மூடநம்பிக்கையால்தான். பேய் பிசாசு பில்லி சூன்யம் என்பதெல்லாம் இந்த கடவுள் நம்பிக்கை என்ற மூடநம்பிக்கையால்தான் மேலும் மேலும் பரவி வருகிறது.

இந்த மூடநம்பிக்கைகள் அனைத்தையும் முறியடிக்க உலகில் ஒதேர ஓர் ஆயுதம்தான் இருக்கிறது. அதுதான் தந்தை பெரியார் கொடுத்த பகுத்தறிவு என்கின்ற சம்மட்டி.

                               

                                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *