சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு ‘போட்டிச் சுவர்’

அக்டோபர் 16-31 2019

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், யாரும் அறியாத ‘மால்டா பெருஞ்சுவர்’ பற்றிய தகவல் அண்மைக் காலமாக வெளிவருகிறது. 12 கிலோமீட்டர் நீளத்தில் பல கோட்டைகளைக் கொண்ட இப்பெருஞ்சுவர் மால்டா தீவின் வடபகுதியில் அமைந்துள்ளது.

விக்டோரியா லைன்ஸ் என்று அறியப்படும் இந்த மால்டா பெருஞ்சுவர், இட அமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாக, மேற்கில் போம் இர்ரிக் என்னும் இடத்தில் தொடங்கி, கிழக்கில் மெட்லீனா என்னும் இடம் வரை நீண்டிருக்கிறது. சீனப் பெருஞ்சுவருக்கு மால்டாவின் பதிலடியாக 19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் இங்கிலாந்து படையால் கட்டப்பட்டதுதான் விக்டோரியா லைன்ஸ். 1800களில் இங்கிலாந்து ராயல் பொறியாளர்களால் கட்டப்படத் தொடங்கிய விக்டோரியா லைன்ஸ், விக்டோரியா மகாராணியின் பொன்விழா ஆண்டான 1897இல் திறக்கப்பட்டது. பிரான்ஸ் மற்றும் அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட பிற நாடுகள், இங்கிலாந்தின் முக்கியத் தளங்களை முற்றுகையிடலாம் என்பதால் இங்கிலாந்து அப்போது மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட்டு வந்தது. ஆப்பிரிக்காவை சுற்றிச் செல்லாமல், தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்த இந்தியா மற்றும் ஆசிய நாடுகளுக்குச் செல்ல அய்ரோப்பிய நாடுகளை அனுமதிக்கும் சூயஸ் கால்வாயை 1869ஆம் ஆண்டு இங்கிலாந்து திறந்தது. அதுதான், விக்டோரியா லைன்சை கட்டுவதற்கு பின்னால் இருந்த முக்கிய காரணமாகும். மேற்கில் இயற்கையான பாறைகளும், தெற்கில் கோட்டை அரண்களும் மால்டா தீவின் பிற பகுதிகளைப் பாதுகாத்தன. ஆனால், கிழக்கில் உள்ள வாலெட்டா கிராண்ட் துறைமுகத்தின் பின்னால் இருந்து தொடுக்கப்படும் தரை தாக்குதல்களும், கடற்படைத் தாக்குதல்களும், இங்கிலாந்து கடற்படைக்கு பேரழிவை ஏற்படுத்தலாம் என்கிற அச்சம் இருந்தது.

இங்கிலாந்து அச்சம் கொண்டிருந்தாலும், விக்டோரியா லைன்ஸ் வழியாக எதிரிகள் யாரும் நுழைய முற்படவில்லை. 1907ஆம் ஆண்டு இது கைவிடப்பட்டதோடு, அங்கிருந்த படைவீரர்கள் தீவின் கடலோரப் பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜிக்கள் ஆக்கிரமிப்பின்போது, விக்டோரியா லைன்ஸ் புதுப்பிக்கப்பட்டது. இரண்டாவது பாதுகாப்புக் கோடாக புதிய பாதுகாப்பு நிலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், அந்தப் போரிலிருந்தும் இந்தக் கோட்டை அரண்கள் தப்பின. விரைவில் இந்த இடத்தை உலக சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகம் செய்ய மால்டா சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *