சிறுகதை : பாவமும் சாபமும்

அக்டோபர் 16-31 2019

தத்துவ மேதை  டி.கே. சீனிவாசன்

என்ன எழுதுகிறாய்?’’

“ஒரு கதையை உருவாக்குகிறேன்.’’

“காதல் கதைதானே?’’

“அய்யோ! ‘காதலைத் தவிர வேறு எதுவுமே கிடையாதா, கதையாக எழுத?’ என்று கேட்கிறார்களே படிப்பவர்களில் சிலர்.’’

“கட்டுத் தளர்ந்தவர்களுக்குக் காதல் கசப்பாகத்தான் இருக்கும். எங்கே, என்ன எழுதியிருக்கிறாய்? படி! கேட்போம்.’’

“படிக்கிறேன் கேள்! _ வானம் இருளோடு போராடத் தன்னிடத்தில் சிந்திச் சிதறிக்கிடந்த விண்மீன்களை எல்லாம் சேகரித்து ஒன்றுதிரட்டி நிலவுருவாக்கி வெற்றி பெற்றது. வெள்ளைக் காகிதத்தை விரித்து வைத்ததைப் போல நிலத்தில் படிந்திருந்தது நிலவின் ஒளி. ஆனால்…? காலம் கூதிர்காலம்! வெண்புகை மண்டலமாகச் சுற்றிச் சுழன்றது மூடுபனி. உயிர்கள் வீட்டுக்குள்ளும் கூட்டுக்குள்ளும் அடங்கி அடைபட்டுக் கிடந்தன. பால்வண்ண நிலா பாழாகிப் போனது.’’

“அய்யோ பாவம். ‘பனிக்காலம் _ நிலவு காயும் வானம்.’ இதைச் சொல்லவா இப்படி வார்த்தைகளையும் வர்ணனைகளையும் கொட்டிக் குவித்திருக்கிறாய்? அடர்ந்த கேசத்தில் தனித்து ஒரே ஒரு சிவந்த மலரைச் செருகினால்தான் மனோகரமாகத் தோன்றும்!’’

“அது பார்த்து ரசிப்பவர்களுக்கு! மலரைச் சூடிக் கொள்ளுபவர்கள் கொத்தாகவும் சரமாகவுந்தானே கூந்தலைச் சுற்றிக் கட்டுகிறார்கள்?’’

“சரி. வீண் கதை ஏன்? மேலே என்ன நடந்தது? தொடர்ந்து படி!’’

“அதுதானே எனக்கும் புலப்படவில்லை. ஊதும் புகையும் உதிரும் சாம்பலுந்தான் வளர்கிறதே தவிர, கதை உருவாகவில்லையே!’’

“நான் ஒரு கதை சொல்லுகிறேன். எழுதுகிறாயா? உன் முன்னுரைக்கேற்ற பின்னுரையாக அமையும்.’’

“யார் நீ? என்ன…? எவரையுமே காணோமே?!’’

“தெரியாமலா இதுவரையில் பதில் சொன்னாய்? நான் ஒரு பெண். உருவத்தை ஒளித்து வைத்திருக்கிறேன். எந்த உயிரும் வெப்பத்தைத் தேடும் இந்த வேளையில் மனித மிருகத்தின் வெறி உணர்ச்சிக்கு நீ மட்டும் விலக்காக முடியாதே என்றுதான்.’’

“நீ… ஒரு பெண்ணா? பொய் சொல்லாதே! பெண் உருவங்கள் பலவற்றை நான் பார்த்தவன்தான்_பழகியும் இருக்கிறேன். ‘பெண்மை’ என்னும் அந்தப் பண்புதான் தேடினாலும் தென்படவில்லை_அவற்றிடத்தில்.   பொம்மைகள் இருக்கின்றன_பேய்கள் நடமாடுகின்றன; எல்லாம் பெண் உருவத்தில்தான்.’’

“அசையுங் கொடியிலே அலரும் அழகான மலர் அசையாத சிலைக்கு அணியாக அமைவது அதன் குற்றமா? பறித்துப் பாழ் செய்பவன் தவறல்லவோ அது? உலகம் எப்படியோ ஆண்கள் ஆட்சியில் அகப்பட்டுக் கொண்டது. மடமையே உருவான அந்த முரடர்கள் பெண்ணை மண்ணாக மதிக்கின்றனர்_ கடவுளைக் கல்லாக ஆக்கியதைப் போல! இரங்கத்தக்க அந்த இரண்டு பொருள்களையும் விருப்பத்துக் கேற்றாற்போல உருவாக்குகின்றனர். வெறியின் பிடிப்பிலே விவேகம் சிக்கினால் அதற்குள்ள விளக்கமும் வேறுவிதமாகத்தானே அமையும்!’’

“அது சரி. உன்னைப்பற்றி இதுவரையில் ஏதும் சொல்லவில்லையே?’’

“என்னைப் பற்றித்தானே! சொல்கிறேன் கேள். மெருகிழந்த ஒரு மென்கொடி நான்_பார்வைக்கு! கற்பிழந்த காரிகை_காலட்சேபங்களில்! பாழாக்கப்பட்ட பாவை_பகுத்தறிவு மன்றத்தில்! என் பெயர் அகல்யா!’’

“அகலிகை என்று அழகாகத் தமிழில் சொல்லேன். ஏன் அகல்யா என்று வாயைப் பிளக்கிறாய்?’’

“நீயும் உன் தமிழும்! ஒரு பெயர்ச்சொல்லை மொழி காரணமாக உருமாற்றுவது பேதமை. அதனால் அதன் பொருள் சிதைந்துவிடும். என் பெயருக்கு மூலச் சொல் ‘அகல்யா’ என்பது.’’

“அதற்குள்ள அர்த்தம்?’’

“உழப்படாத என்பதுதான் அதன் பொருள்!’’

“அகல்யா என்றால் உழப்படாதவள் என்றல்லவா ஆகிறது? கவுதமரை மணந்து_இந்திரனால் கெடுக்கப்பட்டு…’’

“போதும் உளறாதே; நிறுத்து!. எழுதுபவன் எண்ணங்களுக்கு ஏற்றாற்போலத்தான் உருவாகின்றன ஏடுகள். மற்றவர்கள் கருத்துகளைக் கொண்டு முடிவுக்கு வருவது இயக்கப்படுவதே தவிர இயங்குவது ஆகாது. எப்போதும் பொருளாக இரு _ அதன் நிழலாக ஆகாதே.’’

“எல்லாம் உணர்ந்தவன் ஈசன் ஒருவன்தான். அவனுக்கோ உருவமே கிடையாது_ஆகவே, பேசவோ எழுதவோ முடியாது! உண்மையை எப்படித்தான் உணர்வது?’’

“நானே சொல்லுகிறேன் கேள். கோதமனை நான் மணக்கவில்லை_அவருக்கு என்னைக் கொடுத்தார்கள். இந்திரன் என்னைக் கெடுக்கவில்லை_என்னால் அவன் பாழானான்.’’

“சிக்கல் தீரவில்லை அம்மா_வளர்கிறது!’’

“முற்றுங் கேள்! நானும் இந்திரனும் சிறு வயதிலிருந்தே சேர்ந்து வளர்ந்தவர்கள். வானத்துச் சந்திரனை வட்டமான பந்தென்று நினைக்கும் வயதிலிருந்து வாட்டி வதைக்கும் ஒளிப்பிழம்பாக உணரும் பருவம் வரும்வரை ஒத்து வளர்ந்தோம்_விட்டுப் பிரிந்ததில்லை. இந்திரனை நான் நேசித்தேன்_அவன் உடலில் காமுற்றேன்_உள்ளத்தைக் காதலித்தேன்_உயிர்மேல் உயிர் வைத்தேன், ஏன் தெரியுமா? எல்லாம் என்னுடைய இன்ப வாழ்வுக்காகத்தான். ஆனால்… அவனோ…? ஆட்டி அசைத்துவிட்டு அப்பாலே பறந்து போகும் காற்றாகி மறைந்தான்.’’

“அடுக்குச் சொற்களை அழகாக அமைத்திருக்கிறாயே!’’

“அசடுகளைப்போல நீயும் உளறாதே. அறிவுள்ள கருத்துகளைப் பொருள்பட அடுக்கியிருக்கிறேன்.’’

“சரி. பக்கத்தைப் புரட்டு சீக்கிரம். அந்தக் காதல் கரைந்ததா_கவிழ்ந்ததா_காணாமலே போனதா என்பதைக் கவனிப்போம்.’’

“பெண்ணைத் தாமரைக்கு ஒப்பிடும்போது மலரை மனதால் நினைத்திருப்பாயே தவிர, இலையை மறந்திருப்பாய். இரண்டையும் சேர்த்துத்தான் ஒப்பிட வேண்டும். தனக்கு உயிர் கொடுத்து வாழ்வளித்த தண்ணீரை ஒட்டவிடாமல் ஒதுக்கிவிட்டு வானத்துச் சூரியனோடும் வட்டமிடும் வண்டோடும் உறவாடும் அந்த நன்றிகெட்ட தாமரை. நம் நாட்டுப் பெண்கள் நிலையும் அப்படித்தான். பிறந்த வீடு அவர்களுக்குத் தண்ணீர். போய்ச் சேருகிற வீடு வண்டும் கதிரவனும்!’’

“இது என்னுடைய கற்பனையல்லவா! எப்படியோ திருடி என்னிடமே சொல்லுகிறாயே _ சொந்தம்போல.’’

“எழுத்தாளர் வர்க்கத்தையே இந்தப் புத்தி விடுவதில்லை. கற்பனை, யாருடையதாக இருந்தால் என்ன? கதையைக் கேள். என்னைக் கவுதமருக்குக் கொடுத்தார்கள்.’’

“மந்தியின் கையில் மலர் மாலையை ஒப்படைத்ததைப் போலவா?’’

“அல்ல, கல்லாலான சிலையின் முன்னாலே கவர்ச்சி மிகுந்த கணிகையரை நடனமாட விடுவதைப் போல! நான் வாழ்வில் எதையும் இழக்க முடியாத இளம் பெண்_அவரோ எல்லாவற்றையும் துறக்கத் துணிந்த துறவி. இளந்துளிரின் நெளிவு வளைவுகளிலே என் இதயத் துடிப்பை உணர்ந்தேன் நான்_காய்ந்து சருகான ஓலைகளிலே கவனஞ் செலுத்தினார் அவர். எரிதழலிலே இருந்தான் என் ஈசன்; அணைந்த சாம்பலிலே மறைந்திருந்தார் அவருடைய ஆண்டவன்.’’

“பிறகு…?-’’

“பிறகென்ன? எல்லாப் பெண்களும் இன்ப நாள்களைக் கொஞ்சினோம்_குலவினோம் என்று வர்ணிப்பார்கள். ஆனால், நானோ….? கேட்டேன்_கெஞ்சினேன் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. உடலின்பத்தை எனக்கு மருந்தாக்கி அளவிட்டுக் காலங் குறித்துக் கட்டுப்பாடும் செய்தார் அந்த வைத்தியர்!’’

“கணவன் போகும் பாதைவழிச் செல்வதுதானே கற்புள்ள பெண்களின் கடமை?’’

“ஒத்துக்கொள்கிறேன். ஆனால்…? சதையையும் நரம்பையும் படைத்த கடவுள் ஏன் அவற்றிற்கு வெறியை உண்டாக்கினார் என்று அவரையே கேள்! கடவுள் அளித்த வேட்கையைக் கணவனுக்காகக் கட்டுப்படுத்துவது தெய்வ விரோதமாகாதா? கவுதமர் முனிவர்_முற்றுந் துறந்தவர். உடலைப் பூலோகத்தில் விட்டு விட்டு உள்ளத்தை மேலோகத்தில் மிதக்க விடுபவர். அவருக்கு மோட்சம் கிடைக்கும். ஆனால், நானோ பெண்! வேதசாஸ்திரங்களின்படி பாவத்தின் விளைவு. தப்பித் தவறி நான் மோட்சத்துக்குப் போனாலும் அங்கே நான் அனுபவிக்க ஆண்களா இருக்கிறார்கள்?_ஆண்களுக்காக ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை காத்துக்கொண்டிருப்பதைப்போல!’’

“பெண்கள் மோட்சத்துக்குப் போக முடியாதா? காரைக்காலம்மையார் போகவில்லையா?’’

“அது திராவிடர்கள் பண்பு. எங்கள் பண்பு வேறு. நாங்கள் பூசுரர்கள் புராணத்தின்படி_ஆரியர்கள் சரித்திரத்தின்படி.’’

“கற்புக்கரசிகளுக்குக் கணவன்தானே கடவுள்?’’

“கையாலாகாத கபோதிக் கடவுளை வழிபடுவதைவிட நாஸ்திகமே மேல்.’’

“அதைத்தான் நானும் சொல்லுகிறேன். ஆனால், கட்டுப்பாடு என்று ஒன்று இருக்கிறதே. அது உனக்குத் தெரியாதா?’’

“அது எனக்கும் தெரியும். ஆனால், கட்டப்படும் பொருளைவிடக் கட்டும் பொருள் வலிவுள்ளதாக இருக்க வேண்டும் என்பதுதான் உனக்குப் புரிந்ததில்லை.’’

“சரி. கதையைத் தொடர்ந்து சொல்.’’

“வறண்ட வயலைச் சாசனமாகப் பெற்ற நான் வளத்தைப் பக்கத்து வயல்களில் தேடினேன். தென்பட்டது_தின்றுகளித்தேன். காலப்போக்கில்….’’

“என்ன நடந்தது?’’

“எப்போதும் நடப்பதுதான் அப்போதும் நடந்தது. உடல் வலி நலிந்தது_உள்ளம் நைந்தது.

“அய்யோ பதிவிரதையே! சீதையும் சாவித்திரியும் பிறந்த நாட்டிலா போயும் போயும் நீயும் பிறந்தாய்?’’

“மடமையைப் பெரிய தீப்பந்தமாகப் பெற்றுத் திருப்தியடைகிறாயே தவிர, அறிவைச் சிறு அகல் விளக்காகக் கூடப் பெற மறுக்கிறாயே! சீதையும் சாவித்திரியும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்கள். கற்போடிருந்தார்கள். ஆனால், நானோ…? கல்யாணமான பிறகும் காதலிக்க முடியாதவள்.’’

“சரி. கதையை முடி விரைவில்’’

“அப்போதுதான் இந்திரன் வந்தான்_என் நடவடிக்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு.’’

“இளவயதுத் தோழன்தானே என்று இணங்கினாய் போலிருக்கிறது!’’

“சீச்சீ! முறிந்த பாலைத் துணிந்து எப்படி விற்பது_அதுவும் இனந் தெரிந்தவனிடம்? மறுத்துவிட்டேன். மாறுவேடத்தில் வந்தான்_என் கணவரைப்போல. என்னால் கண்டுபிடிக்க முடியாமற்போனது. அதனால்தான்…’’

“ஆமாம்! உன் அவல நிலை…?’’

“என்ன செய்ய முடியும் என்னால்? நான் என் கணவருக்குத் தர்மபத்தினி ஆயிற்றே_தட்டிப் பேச முடியுமா? இக்கட்டான அந்த நிலையை எப்படி மனம் விட்டு வாய்திறந்து விளக்க முடியும்? இணங்கினேன்.’’

“பிறகு முனிவர் வந்தார்_உன்னைக் கல்லாகச் சபித்தார். அதுதானே?’’

“நீயும் உன் மூளையும்! புதிதாக ஏதாவது புத்தகம் வெளிவந்தால் படிக்கிறாய்_ ஆராய்கிறாய்_அலசிப் பார்க்கிறாய்_முடிவுக்கு வருகிறாய். ஆனால், பழம் புராணத்தை மட்டும் அப்படியே ஏற்றுக்கொள்கிறாயே! வாழ்பவனைச் சந்தேகிப்பதும் செத்தவனை நம்புவதுந்தான் உங்கள் பண்போ? உருவமும் உணர்ச்சியும் வளர்ச்சியும் பெற்ற ஒரு பெண்ணைக் ‘கல்லாகப் போ’ என்றால் உருவமற்ற சிறு கல்லாக ஆக மாட்டாள்_உருவுள்ள சிலையாகத்தானே ஆவாள்?’’ “இந்திரன் உடலைக் கண்ணாகச் சபித்து…?’’ “பாவத்துக்குப் பரிகாரம் சாபம் ஆகாது. பாவம் கொடுமையின் விளைவு. சாபம் கொந்தளிப்பிலிருந்து பிறப்பது. கட்டுப்படுத்தி அடக்க வேண்டிய கொடுமைக்குத் தன்னாலே அடங்கிப் போகும் கொந்தளிப்பு சாந்தியாகாது!’’

“உண்மைதான் என்ன?’’

“கண்ணாகவுமில்லை, மண்ணாகவுமில்லை; உடம்பெல்லாம் புண்ணாகத்தான் ஆனது!’’

“ஏன்?’’

“வெட்கமோ விவஸ்தையோ இல்லாமல் என்னையே சொல்லும்படி வாயைக் கிளறுகிறாயே! உனக்கு மூளை இல்லையா? சிந்திக்க?’’

“சரி, பரிதாபத்துக்குரிய உன் உருவத்தைக் கொஞ்சம் காட்டு. பார்க்கிறேன்.’

“எனக்கேது உருவம்? நான் உனக்குள் அல்லவா, அடங்கியிருக்கிறேன்.’’

“அப்படியானால்… நீ அகலிகை அல்லவா?’’

“அகலிகையுமில்லை, அருந்ததியுமில்லை!’’

“பிறகு… நீ யார்?’’

“……………………………………..?’’

(“உலக அரங்கில்” சிறுகதை தொகுப்பிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *