முகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய – பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா? நியாயமா? தேவையா?

அக்டோபர் 16-31 2019

மஞ்சை வசந்தன்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை பாடமாம்! மருத்துவப் படிப்பிற்கு சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று அன்றைக்கு ஆரியப் பார்ப்பனர்கள் கூறியது எந்த அளவிற்கு கேலிக்குரியதாய் கருதப்பட்டதோ, அதே கேலிக்குரியது _ அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை பாடமாக்குவது.

மருத்துவத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு? ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவும் ஆரியப் பார்ப்பனர்கள் மருத்துவ இடங்களை அபகரிக்கவுமே அச்சூழ்ச்சி.

அதே அடிப்படையில், இன்றைக்கு ஆரிய ஆதிக்கத்தை, அறிவியல் பல்கலைக்கழகத்திலும் நுழைக்கும் அடாவடித்தனமே பகவத் கீதையை பாடநூலாக்கும் முயற்சி.

அண்ணா பல்கலைக்கழகம் என்பது முழுக்க முழுக்க அறிவியல் பல்கலைக்கழகம். அது ஒன்றும் தத்துவம் கற்கும் கல்லூரியல்ல. அது மட்டுமல்ல; அண்ணா பல்கலைக்கழகம் அரசு பல்கலைக்கழகம். அது தனியார் பல்கலைக்கழகம் அல்ல. அரசுக்கு உரிமையான, அதுவும் அண்ணா பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்தில், அறிவியல் பாடங்களைக் கற்கும் அப்பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை பாடம் என்பது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.

கீதை வர்ணாஸ்ரம தர்மத்தை நிலைநிறுத்தி மக்களைப் பிளவுபடுத்தும், இழிவுபடுத்தும் நூல். மூடநம்பிக்கைகளின் மொத்தத் தொகுப்பு. கொலைவெறியையைத் தூண்டும் வன்முறை நூல். அப்படியிருக்க அதைப் பாடநூலாக்குவது எப்படி நியாயம்?

அறிவியல் பல்கலைக்கழகத்தில் அறிவியல்சார் கல்வியே கற்பிக்கப்பட வேண்டும். பகவத் கீதை என்ன அறிவியல் நூலா? ஆசிரியர் தனது ‘கீதையின் மறுபக்கம்’ நூலில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:

கீதை அறிவியல் நூலா?

“கீதைக்கு அளவுக்கு மீறிய மதிப்பை உருவாக்கவேண்டுமென்கிற பேராசை கொண்ட கீதை வியாபாரிகள், உலகில் தற்போது கண்டறியப்படும் விஞ்ஞானம் முழுவதும் கீதைக்குள்ளே பகவான் கண்ணனால் காட்டப்பட்டுவிட்டது என்றுகூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஒருவர் ஹரிசித்பாய் விஜுபாய் திவேதியா (Harsidhbhai Vijubhai Divatia); பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர். இவர் எழுதிய“The Art of Life in the Bhagavad Gita” என்னும் நூலில்  “The Gita and the Modern Science” என்று ஓர் அத்தியாயம் உள்ளது.

இன்றைய அறிவியல் கலைச் சொற்களில் குறிப்பிடும் சில நிரந்தர உண்மைகளை ஞானிகள் வெளியிட்டிருக்கின்றார்கள். திறந்த மனதுடன் கீதையைப் படிக்கும் எந்த இயற்கை விஞ்ஞான மாணவர்களும் கீதைக்கும் நவீன அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் பொதுவான அடிப்படைக் கருத்துகளைக் கண்டுணர்வர்.

உலகப் புகழ்பெற்ற அணு விஞ்ஞானியான ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன் கருத்து இப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல; கீதை, ஆத்மா, கர்மா தத்துவத்தில் விஞ்ஞானம் நெளிகிறது என்பவர்களுக்கு ஓங்கி மண்டையில் அடித்ததைப்போன்று சொல்லப்பெறுகின்றது.

“I cannot imagine a God who rewards and punishes the objects of His creation. whose purpose are modelled after our own. A God, in short, is but a reflection of human frailty. Neither can I believe that the individual survives the death of his body, although souls harbor such thoughts through fear or ridiculous egotism.”

இதன் தமிழாக்கம்:-

“தான் படைத்த பொருள்களைத் தானே தண்டிக்கிறார் என்பதையும், தானே பரிசளிக்கிறார் என்பதையும் என்னால் கற் பனைகூட செய்ய முடியவில்லை.  இன்னும் – தனி ஒருவனுடைய உடலின் இறப்புக்குப் பிறகும் அவன் வாழ்கிறான் என்பதை – ஆன்மாக்கள் என்னும் தத்துவம் அச்சுறுத்தலின் மூலமாகவோ, இறுமாப்பின் அடிப்படையிலோ இத்தகைய கருத்துகளைப் பாதுகாக்க முயன்றாலும் – நான் நம்பமாட்டேன்.’’

இதுபோலவே பிரான்சிஸ் கிரிக் அவர்களும் (அவர் DN+ அமைப்புபற்றிய குழு உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப் பிடத்தக்கது) உலகில் உயிரினம் தோன்றுவதற்கு அடிப்படையில் திட்டமிடப்பட்ட ரசாயனம் கரிம வேதியியல்  (- is at bottom problem of organic Chemistry)  என்கிறார். பிரபல விண்வெளி பற்றிய ஆய்வாளரான விஞ்ஞானி கார்ல் சேகன் (Carl Sagan)அவர்களும், கிரிக்கின் இந்தக் கருத்தை அப்படியே ஏற்றுள்ளார். இதையெல்லாம் ஏற்காது, கீதையில் கண்ணன், பிறப்பு – ஜீவன் உயிர்கள் உற்பத்திபற்றி கூறுவதென்ன?

பிரம்மாதான் ‘யக்ஞம்’ யாகங்கள்மூலம் உயிர்களை உற்பத்தி செய்துள்ளார் என்பதாகும். இது அறிவியல் _- விஞ்ஞானத்திற்கு -ஏற்புடைத்தா? அதற்குப் பிறகு தங்களைப் பெருக்கிக் கொள்ள யாகத்தின்மூலமே முடியும் என்று கூறினார்.

அன்னத்திலிருந்து உயிர்கள் உண்டாகின்றன. அன்னம் மேகத்தால் உண்டாகிறது. மேகம் வேள்வியினால் உண்டாகிறது. வேள்வி கருமத்தால் உண்டாகிறது. கருமம் வேதத்தால் உண்டாகிறது. வேதம் அழிவற்ற பிரம்மத்திலிருந்து உண்டாயிற்று. ஆகவே, எங்கும் பரவியுள்ள அந்த வேதம் எப்பொழுதும் வேள்வியில் நிலைத்திருக்கிறது என்று அறிவியலுக்குப் பொருந்தாத _- அறிவுக்குப் புறம்பான விளக்கத்தை கண்ணன் கீதையிலே தருகிறார்.

கீதைப்படி சந்திரன் என்றால் என்ன? சந்திரன்தான் மிகப்பெரிய நட்சத்திரம் (அத். 10-, சுலோ.21 ) “நட்சத்திரங்களுக்குள் சந்திரன் நான்’’ என்று கண்ணன் கீதையில் கூறுகிறார். அவருடைய காலத்தில் சந்திரனை பெரிய நட்சத்திரமாகவே கருதினர். அறிவியல் வளர்ந்த பின்புதானே சந்திரன் என்பது பூமியைச் சுற்றும் கோள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிவேகம் பாயக்கூடியது ஒளி என்று அறிவியல் கூறுகிறது!

கீதாசார்யனோ அதிவேகம் செல்லக்கூடிய வாயு என்றே கூறுகிறான். அந்தக் காலத்தில் கீதை எழுதியவனுக்குள்ள அறிவின் அளவே அது!’’ என்று எழுதியுள்ளார்.

கீதை ஒரு கொலை நூல்!

மேலும் ஆசிரியர் தனது நூலில் கீதை ஒரு கொலை நூல் என்பதயும் ஆதாரங்களுடன் உறுதி செய்கிறார். அதிலிருந்து சில பகுதிகள் இதோ:

“ஸ்ரீமத் பகவத்கீதை எனும் விரிவுரை நூலில் கீதை ஒரு கொலை நூல் என்பதை பெருமையுடன் கூறி சுவாமி சித்பவானந்தரே அதை நியாயப்படுத்தி எழுதியுள்ளார். பாரதியின் மூடர் வரிசையில் இவரே முதல்வராகிறார் போலும்!

போர் நிலத்தில் நீ பாங்குடன் போர் புரிந்தால், போர் கடந்த பெரு நிலத்தைப் பண்புடன் பெற்றிடுவாய் என்பது கீதையின் கோட்பாடு. ஆக, பகவத்கீதை  கொலை நூலே. இயற்கை என்னும் கொலைக் களத்தில் வாழ்வு என்னும் கொலைத் தொழிலை நன்கு இயற்றுதற்கு பகவத்கீதை என்னும் கொலை நூலை ஒவ்வொருவனும் கற்றாக வேண்டும்.

(ஸ்ரீமத் பகவத்கீதை – சுவாமி சித்பவானந்தர் அவர்களின் வியாக்கியானம் – பக். 11 – 13.)

‘ஜிலீமீ விuக்ஷீபீமீக்ஷீ ஷீயீ tலீமீ விணீலீணீtனீணீ’ மகாத்மாவின் கொலை என்ற தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா அவர்கள் 1963-இல் ஒரு நூல் எழுதி, 1977 வரை மூன்று பதிப்புகளுக்கு மேல் அது விற்பனை யாகியுள்ளது.

அதில் அவர், காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக் கோட்சே என்கிற மராத்திப் பார்ப்பனர், அவருடைய சகோதரர் கோபால் கோட்சே, அவருக்கு மிகவும் உறுதுணையாக இந்தக் கொலையில் ஒத்துழைத்த நாராயண் ஆப்தே, தத்தாத்ரேயா இவர்கள் எல்லாம் இந்துமத தர்மத்தின்படிதான் இக் கொலையைத் தாங்கள் செய்யத் துணிந்ததாகவும், பகவத் கீதையின் தாக்கத்தின் விளைவு அது என்றும் தெளிவாக நீதி மன்றத்திலே அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். மேற்காட்டிய நூலில் இதை விரிவாக எழுதியுள்ளார் நீதிபதி கோஸ்லா அவர்கள்.

அர்ச்சுனன் பல கொலைகளைப் புரிவதற்குத் தூண்டு கோலாய் இருந்தது கீதை. அக்காலத்தில் மட்டுமல்ல; நம் கண்ணெதிரே – நிகழ்காலத்தில் தேசப்பிதா என வர்ணிக்கப்பட்ட காந்தியாரையும் பலி வாங்கிய கீதை ஒரு கொலை நூல்தான் என்பதில் அய்யமில்லை.

கீதை ஓர் ஆரிய நூல்! – தந்தை பெரியார்

நம் அதிகாரிகளும் மந்திரிகளும் கீதையைப் புகழ்ந்து கூறித்தான் தம் பதவிகளை நிலைக்க வைத்துக் கொள்ளுகிறார்கள்.

வாழ்க்கையிலே எந்த அளவுக்கும் உபயோகப்படாத மிகச் சாதாரண அந்த நூலுக்கு அவ்வளவு பெருமை இருக்கக் காரணம் அது ஓர் ஆரிய நூல். ஆரிய தர்மத்தை அதாவது ஆரிய உயர்வை வலியுறுத்தும் நூல் என்பதால்தான். இதை நீங்கள் உணரவேண்டும். திருக்குறளுக்கு அத்தகைய பெருமை இல்லாமற் போனதற்குக் காரணம் இது ஓர் திராவிடநூல் என்பதுதான். இதனையும் நீங்கள் நன்றாக உணர வேண்டும்.

நமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக்கூடியதாக ஒரு நூல் வேண்டுமானால் அது திருக்குறள்தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள். உணர்வது மட்டுமல்ல, நன்றாக மனத்தில் பதிய வையுங்கள்!

மேலும் திருக்குறள் ஆரிய தர்மத்தை – மனுதர்மத்தை – அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணரவேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க என்பதற்காகவே எழுதப்பட்ட ஒரு நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை.

மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்டு, ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்டதாகத்தான் என்னால் கருதமுடிகிறது என்ற தந்தை பெரியார் குறிப்பிடுகின்றார்.

கீதை வர்ணதர்மம் காக்கும் நூல் – அண்ணல் அம்பேத்கர்

“நான்கு வருணக் கோட்பாட்டிற்கும் தத்துவ ரீதியான பாதுகாப்பளிக்க முன்வருகிறது, கீதை. நான்கு வருணங்களை இறைவன் படைத்தான் என்று திட்டவட்டமாக கீதை கூறுகிறது.

புத்தர் அஹிம்சையைப் போதித்தார். அவர் போதித்ததோடு மட்டுமன்றி, பிராமணர்களைத் தவிர பெரும்பாலான பொதுமக்கள் அஹிம்சை வழியை வாழ்க்கை முறையாக ஏற்றனர். வன்முறைக்கு எதிராக வெறுப்புணர்ச்சி காட்டினர். நான்கு வருணத்தை எதிர்த்து, புத்தர் போதித்தார். வருணதருமத்தை எதிர்த்து புத்தர் அசைக்க முடியாத உவமைகளைக் கையாண்டார்.

சதுர் வருணக் கோட்பாடுகளை வலுவாக ஆதரிப்பது கீதை. அக்கோட்பாடுகளுக்கு அதற்கு முன்னில்லாத தத்துவக் கவசத்தையளித்து நிரந்தர வாழ்வளித்தது கீதை. இல்லையென்றால் அக்கோட்பாடுகள் அழிந்து போயிருக்கும். பகவத் கீதையின் முதன்மை நோக்கம் சதுர் வருணத்தைக் காப்பதும் நடைமுறையில் அவ்வமைப்பைக் கட்டிக் காப்பதுமேயாகும் என்கிறார் அம்பேத்கர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்

பெரியார் மண்ணில் அண்ணா பல்கலை கழகத்தில் பகவத் கீதை’ விருப்பப் பாடம் என்று துணைவேந்தர் சொல்வதா? என்று திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  கடுமையான தனது கண்டனத்தை அறிக்கை மூலம் வெளியிட்டார். அந்த அறிக்கை சென்ற இதழில் தலையங்கமாக பதிவாகியிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை திணிப்பு கண்டனம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதைத் திணிப்பைத் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கண்டனம் செய்துள்ளது.

அதன் தலைவர் முனைவர் அ.ராமசாமி, செயலாளர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் ஆகியோர் நேற்று (27.9.2019) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏ.அய்.சி.டி.யு.) 2018 ஆம் ஆண்டு நாடு முழுமையிலும்  உள்ள பொறியியல்  பல்கலைக்கழகங்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியது.

அதில், பொறியியல் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனவும் பொறியியல் படிப்புகளுடன் ஹூமானிட்டீஸ் (Humanities), சமூக அறிவியல்  (Social Science), நிருவாகம் (Management) ஆகியவற்றில் 32 பாடங்களைப் பட்டியலிட்டு, அதன் எட்டு செமஸ்டர்களில் 4,5 பாடங்களை கட்டாயம் நடத்த வேண்டும் எனவும், குறிப்பாகத் தத்துவ இயல் படிப்பில் பகவத் கீதை, வேதம், உபநிடதம் முதலிய பாடங்களை  நடத்த வேண்டும் என்று கூறியது.

கல்வி ஓடையில் ஆர்.எஸ்.எஸ். காவி முதலைகளின் நுழைவு அடையாளம் இது. இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் வந்தவரும் ஆளுநராலே நியமனம் பெற்ற துணைவேந்தர் சூரப்பா இக் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழக சி.ஈ.ஜி., ஏ,சி.டி., எஸ்.ஏ.பி.,  குரோம்பேட்டையில் உள்ள எம்.அய்.டி. ஆகிய நான்கு கல்லூரிகளின் பி.டெக்., எம்.டெக்., படிப்புகளில் பகவத் கீதை முழுதுமாகப் பாடத் திட்டமாகச் சேர்த்துள்ளார். காலஞ்சென்ற சுஸ்மா சுவராஜ் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும்  என்று முயன்றபோது தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரும் எதிர்ப்பு அலை பரவியதால் வாலை சுருட்டிக் கொண்டு விட்டனர்.

பகவத் கீதை ஒரு கொலை நூல். பகவத் கீதையினை இந்துக்களில் ஒரு பிரிவினரான சைவர்கள் ஏற்பதில்லை. பகவத் கீதை வருண பேதம் உருவாக்கும். கிருஷ்ணனே ‘சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’ அதாவது நான்கு வருணப் பாகுபாட்டை உருவாக்கியதாகக் கூறும் நூல். மேலும் பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள் எனும் சூத்திரர்கள் அதாவது பார்ப்பனர் அல்லாதவர் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என இழிவு படுத்தும் நூல். சூரப்பாவின் இத்தகு மோசமான ஒரு சமயச் சார்புடைய நூலைப் பொறியியல் பாடத்தில் சேர்த்திருப்பது கல்வியாளர்களுக்கும், மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.

பொறியியல் பாடம் உருவாக்கம் (கிரியேசன்)பற்றியது. கீதையோ அழிவுக்கு வழிவகுப்பது (டெஸ்ட்ரக்சன்). தமிழக அமைச்சர் மா.பாண்டியராஜன், கீதை பண்பாட்டு நூல்’’ என்கிறார். யாருடைய பண்பாட்டு நூல்? அது ஆரியருடைய பண்பாட்டு நூல். அண்ணா பெயரில் இயங்கும் ஒரு கட்சியின் அமைச்சர், அண்ணாவின் கருத்துக்கு எதிராகக் கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

சில பார்ப்பனச் சிசுக்கள் பகவத் கீதையில் நிருவாக இயல் இருப்பதாகவும், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பாடமாக இருப்பதாகவும் ஊடகங்களில் கதை பேசுகின்றன. நிருவாக இயலுக்கு ஆயிரம் நூல்கள் இருக்கின்றன. திருக்குறள் இருக்கிறது. எனவே, மத நூல் கல்விக் கூடத்தில் நுழையக் கூடாது.

குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகியுள்ள பகவத் கீதையைப் பாடமாகச் சேர்ப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது போன்ற நடவடிக்கைகள் இந்நாட்டில் ‘இந்துத்வா’ கொள்கைகளை மாணவரிடத்தில் திணிப்பது ஆகும்.  அண்ணா பல்கலைக்கழக அறிக்கையின்படி பொறியியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்குத் தத்துவ இயல் பாடப்பிரிவும் கட்டாயமக்கப்பட்டுள்ளது. தத்துவ இயல் பாடப்பிரிவின் கீழ் பகவத் கீதையும்  இடம் பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க மய்யத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய 2014 ஆண்டு முதல் கல்வி, பண்பாடு ஆகிய துறைகளில் சமஸ்கிருதத்தையும், பார்பனியப் பண்பாட்டையும், உயர் கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றவும் தீவிரமான முயற்சிகள் செய்து வருவதை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கண்டித்தே வந்துள்ளது. பா.ஜ.க.  அரசின் கீதைத் திணிப்பு இன்றைய முயற்சி மட்டும் இல்லை.

2015 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆணையின் பேரில் மய்ய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவின் நோக்கம் சமஸ்கிருதத்தையும்  வேதங்களையும்  வளர்ப்பதென்பதாகும். இக்குழு பத்தாண்டுத் திட்டமொன்றைத் தயாரித்தது.   அதேபோல 2016இல் தேசியக் கல்விக் கொள்கையினை உருவாக்கித் தந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரையிலும் இத்திட்டம் உள்ளது.

இப்படிப்பட்ட நீண்ட கால மோசடித் திட்டத்தின் அடிப்படையில் மோடி அரசு அய்.அய்.டி,பொறியியல் பல்கலைக்கழகங்கள் முதலியவற்றில் சமஸ்கிருதத்தையும் வேத புராணங்களையும்  புகுத்தி வருகிறது.  ஆர்.எஸ்.எஸ். ஆதரவினரையே துணை வேந்தராக நியமித்தனர். அவர்களிலொருவர் தான் அண்ணா பல்கலைக்கழகத்  துணை வேந்தர் சூரப்பா. அவர் பதவி ஏற்றதிலிருந்தே, தனியார்மய நடவடிக்கைகளும், காவிமய நடவடிக்கைகளும் பெருகியுள்ளன.

இன்று பகவத் கீதை, வேத புராணக் குப்பைகளை பாடமாக  வைப்பார்கள்.  நாளை அதைக் கற்றுக் கொடுப்பதற்கு  என்று ஆர்.எஸ்.எஸ்.ஊழியர்களை நியமிப்பார்கள். இத்திட்டம் நிறைவேறியதும் அடுத்து மருத்துவக் கல்வி, கலை அறிவியல் கல்வியில் இத் திணித்தல் தொடரும்.

எனவே, இம்முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியது என்பது கல்வியாளர் சமய சார்பின்மையில்  நம்பிக்கை உடைய எம் போன்றோர் கருத்தாகும்.

இதனை உணர்ந்தே எதிர்க்கட்சித்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதலான அரசியல் இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. திராவிடர் கழகம் இத்திணிப்புகள் எதையும் என்றும் எதிர்த்துப் போராடி வருகின்றது.

மேலும் மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் பொறியியல் படிப்பிற்கும், பகவத் கீதைக்கும்,வேத புராணங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று ஓங்கிக் குரல் கொடுத்துள்ளன.

இந்நிலையில் துணை வேந்தர் சூரப்பா தத்துவ இயலில் பகவத் கீதை உள்ளிட்டவை விருப்பப் பாடமாக வழங்கியுள்ளதாகவும், விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம் எனும் கண் துடைப்புப் பதிலை வெளியிட்டுள்ளார்.

நமது கண்டனமும் வேண்டுகோளுமே _ தத்துவ இயல் பாடமே பொறியியல் மாணவர்களுக்கு வேண்டாதது முழுமையாக நீக்கப்படவேண்டும் என்பதே. கல்வியில் இந்தப் பா.ஜ.க அரசின் குறுக்கீடனைத்தையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

இவ்வாறு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வர்ணபேதங்களைக் காத்து, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும், பெண்களை இழிவுபடுத்தும், கொலைவெறியைத் தூண்டும், மூடநம்பிக்கைகளை வளர்க்கும், முரண்பட்ட கருத்துகளைக் கூறும் மனித சமூகத்திற்கு எதிரான நூலை மாணவர்கள் கற்கும் நூலாக, அதுவும் பல்கலைக்கழகத்தில் நுழைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

மக்களாட்சியிலும், அரசியல் சாசனத்தின் மீதும், மனித உரிமையின் மீதும், சமத்துவத்தின் மீதும், அமைதியின் மீதும் நம்பிக்கை கொண்ட அனைவருமே இதை எதிர்க்கின்றனர் என்பதை இந்த மதவாத அரசு புரிந்துகொண்டு, பகவத் கீதையை பாடமாகத் திணிக்கும் ஆதிக்க முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும்.

இல்லையென்றால் ஆசிரியர் அவர்கள் அறிக்கையில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளதுபோல் அறப்போராட்டம் வெடிக்கும்! வெல்லும்!!

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *