ஆசிரியர் பதில்கள்

செப்டம்பர் 16-30

கேள்வி : ஆன்மீக எண்ணங்களில் மனிதர்கள் மிக எளிதில் அடிமையாகக் காரணம் என்ன? – சா.நாராயணன், மதுரை

பதில் : பேராசை, பயம், தெளிவற்ற பாதை குழப்பம் _ இவைதான். ஆன்மீகம் என்பதே புரட்டு. ஆத்மா – ஆன்மி – ஆன்மீகம் = ஆத்மாவே கற்பனைதானே!

கேள்வி : பழுதடைந்த கோயில்களை மிக துரிதமாக புதுப்பிக்க முனைவோர் பாழடைந்த கல்விச்சாலைகளை சீரமைக்க எந்த முயற்சியும் மேற்கொள் வதில்லையே? – வீ. அரசு, வேலூர்

பதில் : பக்திபோதை, மோட்ச ஆசை, குற்றங்கள் புரிந்தவர்கள் கழுவாய். பாப விமோசனம் தேடிடல் – இவைகளில் ஏதாவது ஒன்று அல்லது எல்லாமே காரணமாக இருக்கலாம்.

கேள்வி : உச்சநீதிமன்றத் தீர்ப்பையே துச்சமென மதிக்கும், சில பெரும்புள்ளிகளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகூட நெருங்க அஞ்சுவது பற்றி? இதற்குத் தீர்வுதான் என்ன? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : பலநாள் திருடர்கள் ஒருநாள் பிடிபடுவர் என்பதால் தொடர்ந்து விழிப்புணர்வு இயக்கம்தான்.

கேள்வி : இளம் பெண்கள் சின்ன வயதிலே நிறைய படிச்சி நல்ல வேலைக்குப் போய் அதிகம் சம்பாதிப்பவர்கள். அடுத்து என்ன? என்கிற தேடல் வரும்போது தான் என்னைப் போன்ற இளம் பெண்கள் சாமியார்களின் காலடியில்  விட்டில் பூச்சிகளாக விழுவதற்கு நித்தி-_ரஞ்சிதா மீது பாலியல் புகார் அளித்த ஆர்த்திராவ் கூறும் காரணம் சரியா?   – த.சுரேஷ், நாகர்கோவில்

பதில் : திடீர்க் குபேரர்களுக்கு கண்ணில் அதிக சதை வளர்ந்து விடுவதும், ஊரை ஏமாற்ற காவிகள் சரணாலயம் தேடுவதும் புதிய பேஷனாகி வருகிறதுபோலும்!

கேள்வி : விடுதலை இந்தியாவில் தமிழ்நாடு நதிநீர் பிரச்சினைகளில் வஞ்சிக்கப்படுவது போல்தான் விடுதலைக்கு முந்தைய வெள்ளையர் ஆட்சியிலும் இருந்துவந்ததா?
_ சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில் : கிடையாது; காரணம் உத்தரவு போட்டால் கேட்க வேண்டியவைகளாகவே அப்போது மற்ற (மாநில) அரசுகள் இருந்தன! அது காங்கிரசில்கூட இந்திரா காந்தி ஆட்சிக் காலம் வரை நீடித்தது; இப்போது மிகவும் மோசமாகி விட்டது. மயிலிடம் இறகுபோடச்செய்பவர்கள் தான் மத்திய ஆட்சியில் அமர்ந்து சர்க்கார் நடத்துகிறார்கள்.

கேள்வி : மத்திய அரசை மிரட்டுவதற்காகவே கலைஞர் அவர்கள் டெசோ மாநாடு நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு குறித்து…
-_ வீரநிதி, காஞ்சி

பதில் : மத்திய அரசை மிரட்டவேண்டிய அவசியம் அவருக்கென்ன வந்தது? இது பேதையர்களின் புலம்பல்கள் (அ) உளறல்கள்.

கேள்வி : புனித நதி என ஆன்மீகவாதிகளால் போற்றப்படும் கங்கையை பாழ்படுத்துவது ஆன்மீகவாதிகள்தானே?
_உமா, பெரம்பலூர்

பதில் : நம் நாட்டில் புனிதம் என்பதே பாழ்பட்ட பொருளில்தான் எங்கும் எதிலும் காணப்படுகிறது! கங்கையைவிட மோசமான நதி வேறு இல்லை. முன்பு 600 கோடி ஒதுக்கி சுத்தம் செய்ய முயன்றனர்.
பாரிசின் செபின் நதியில் இந்த நீரைக் கொண்டுபோய் கலக்கக் கூடாது என்று அந்நாட்டில் ஆணையே போட்டார் _ சுற்றுச்சூழல் அங்கே கெட்டுவிடும் எனக் கூறினார்கள்!

கேள்வி : ஈழத்தமிழர்கள் மீதான ஆரிய இந்தியர்களின் (இந்திய அரசின்) வெறுப்பின் இயற்கைத் தன்மையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது! ஆனால் இந்த சீனனுக்கும் ரசியனுக்கும் என்ன வந்தது?
_ சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில் : இந்தியா வளருவதற்கு ஒரு செக் வைக்க இலக்காக அவர்களுக்கு ஆயுதமாகாதா என்ற தப்பான செயலின் விளையே அது!

கேள்வி : சிவகாசி வெடி விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு முதல் உதவிக் கரத்தை மலையாள நடிகர் மம்முட்டி நீட்டியிருக்கிறாரே! தமிழ்நாட்டில்…?
_ முகிலா, திருப்பூர்

பதில் : பொறுத்திருந்து பார்ப்போம்!

கேள்வி : ஒழுக்கம், தன்னம்பிக்கை, பகுத்தறிவு இவற்றை வளர்க்காத வெறும் வேலை வாய்ப்புக்காக உள்ள இன்றைய கல்விமுறையை மாற்ற வேண்டாமா? மாற்றுவதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன-?
_ இறைவி, சென்னை

பதில் : கட்டாயம் மாற்ற வேண்டும். அதற்கு நம் பல்கலைக்கழகங்கள் போன்ற முற்போக்கு கல்விச் சிந்தனையாளர்களின் மதி விரைந்து கிடைக்கும் என்பது உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *