அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (336) – கி.வீரமணி

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் ஏப்ரல் 1-15, 2024

நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமிக்கு ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’

கு. நம்பிநாராயணன்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் திராவிடர் கழகத் தலைவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான கு. நம்பிநாராயணன் (வயது 86) பி.ஏ; பி.டி., அவர்கள் 5.1.2005 அன்று மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து வருந்தினோம்.

உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, திராவிடர் கழகப் பணிகளிலும் முழுமையாக ஈடுபட்டு, தான் மட்டுமின்றி தன்னுடைய குடும்பத்தினரையும் கொள்கை வழி பின்பற்றச் செய்த அரிய கொள்கையாளர். பணி ஓய்வுக்குப்பின் கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் பங்கேற்றவர்.

வள்ளியூர்ப் பகுதியில் மரியாதைக்குரிய மாமனிதராகத் திகழ்ந்த அன்னாரின் மறைவு இயக்கத்திற்கும், அப்பகுதி பொது நலப்பணிகளுக்கும் பெரும் இழப்பாகும் என்பதைக் குறிப்பிட்டு, அவரின் பிரிவால் வருந்தும் அவர்தம் குடும்பத்தினர்க்கும், இயக்கத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்தோம்..

ஆந்திரப்பிரதேசத்தில் விஜயவாடா மாநகரில் காலஞ்சென்ற கோரா மற்றும் அவருடைய துணைவியார் சரஸ்வதி அம்மையார் ஆகியோர் நிறுவியதுதான் இந்த நாத்திக மய்யமாகும். அம்மய்யத்தின் சார்பில் அய்ந்தாவது உலக நாத்திகர் மாநாடு 2005 ஜனவரி 7இல் தொடங்கியது.

ஆயிரம் பேருக்கும்
அதிகமாகக் கலந்து
கொண்ட மாநாடு சித்தார்த்தா கல்லூரி
அரங்கில் நடந்தது. வெளிநாடுகள் மற்றும்
வெவ்வேறு மாநிலங்
களிலுமிருந்தும் பேராளர்
கள் வந்திருந்தனர்.
பன்னாட்டு மனித நேய அறநெறி ஒன்றியத்தின் (IHEU) மேனாள் தலைவர், லெவிஃபிராகல் தலைமை தாங்கினார். அந்த அமைப்பின் அன்றைய தலைவர், முன்னிலை வகித்தார். திருமதி சரஸ்வதி கோரா முன்னுரை நிகழ்த்தினார். முன்னதாக டாக்டர் செல்வி பெமாஸ் கோராவின் அழகிய வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. நாத்திக மய்யத்தின் செயல்முறை இயக்குநர் டாக்டர் விஜயம், மாநாட்டுப் பொருளாகிய “நாத்திகமும், சமுதாய முன்னேற்றமும்” என்பது பற்றிக் கருத்துரையாற்றினார். சில்வா என்பவரின் தலைமையில் பன்னாட்டுப் பண் பாடப்பட்டது. பல நாடுகளையும் சேர்ந்த கொடிகள் ஒன்றாகக் கட்டப்பட்டு, மாநாடு தொடங்கியதற்கு அடையாளமாக ராய் பிரவுன் அவர்களால் கூடியிருந்தோர் முன் அசைத்துக் காட்டப்பட்டது.

உலக நாத்திகர் மாநாட்டில் கழகப் பொறுப்பாளர்களுடன் ஆசிரியர்

மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலரை, ஈரான் நாட்டு அம்மையார், அஜாம்காம்- குலாம் வெளியிட்டார். கோராவைப் பற்றிய ஒளிப்படங்கள் அடங்கிய நகரும் கண்காட்சியை, அமெரிக்க நாத்திக அம்மையார் பாபிகிர்கார்ட் தொடங்கி வைத்தார்.

உலக நாத்திகர் மாநாட்டில் கழகப் பொறுப்பாளர்களுடன் ஆசிரியர்

மாநாட்டை வாழ்த்தியும், “நாத்திகத்தின் தேவை” என்ற தலைப்பில் கருத்துகளை முன்வைத்தும், நாம் உரையாற்றினோம். மனித வாழ்வு பொருள் உள்ளதாக அமைய, சுயமரியாதை உணர்வு தேவை. அவ்வுணர்வைப் பெறுவதற்குப் பகுத்தறிவு முறையில் சிந்திக்கவேண்டும். பகுத்தறிவு- நாத்திகப் பார்வையைத் தரும். அமெரிக்காவில் நாத்திகம் என்பது அசிங்கமான சொல்லாகக் கருதப்படுகிறது என மாநாட்டுத் தலைவர் கூறினார். ஆனால், அதை ஓர் அழகிய சொல்லாகத் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் ஆக்கியுள்ளர். சுனாமி வந்தபொழுதும், அதற்குப் பின்பும் கடவுள்கள் அசையாமல்தான் இருந்தன. மனிதர்கள்தான் மனம் இளகி, ஓடோடிச் சென்று இடருக்கு உள்ளானவர்களுக்கு உதவினார்கள்.
கடவுள் எனும் வெறும் கற்பனை, மனிதனை ஏமாற்றிச் சுரண்டுவதற்கு ஏற்பட்டுள்ளது. நாத்திகம் உண்மையை நோக்கியது. ஒரு விலங்குக் கூட்டம் மற்ற விலங்குகளுக்காக வாழ்வதில்லை; ஆனால், மனிதன் அப்படி இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் பிறரைச் சார்ந்து வாழவேண்டியிருக்கிறது. என்பதை அறிவு மனிதருக்குத் தெரிவிக்கிறது. அதற்குத் தக அவன் பிறர் நன்மை அடையும் வகையில் வாழவேண்டும்.

உலக நாத்திகர் மாநாட்டை ராய் பிரவுன் தொடங்கி வைக்கிறார்.

கடவுளால் அனைத்தும் நடக்கின்றன என நம்புகிறவன் மரக்கட்டை- உணர்வற்றவன். மத அடிப்படை வாதத்தை எதிர்த்து மனித நேயச் சிந்தனையாளர்கள் ஒன்று திரண்டு கடினமாக உழைக்கக் கோருகிறோம். மனிதநேயம் மற்றும் நாத்திகக் கருத்துகளுக்கு முதலில் எதிர்ப்பு இருக்கும். ஆனால், நாளடைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பேசினோம். தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

ஓய்வு பெற்ற நீதி அரசர் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களுக்கு அமெரிக்க பன்னாட்டு மய்யத்தின் சார்பில் ‘சமூகநீதிக்கான வீரமணி விருது’ வழங்குவிழா அய்தராபாத் நகரில் 9.1.2005 ஞாயிறு அன்று காலை 11 மணிக்குச் சிறப்புற நடைபெற்றது.

ஆந்திர ஆளுநரும், தம் ஆட்சிக் காலத்தில் மராட்டிய மாநிலத்தில் தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டுக்கு ஆணை பிறப்பித்த செயல் மறவரும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவராக இருந்தாலும் நான்குமுறை பொதுத் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்ற சாதனையாளருமான சுசில்குமார் ஷிண்டே தலைமையேற்றார். பெரியார் பன்னாட்டமைப்பின் பொறுப்பாளர்களான டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் இலக்குவன் தமிழ் ஆகியோர் விருதின் நோக்கம் குறித்து உரையாற்றினர்.
நெல்சன் மண்டேலாவின் தியாகத்தால் விடுதலை பெற்ற தென் ஆஃப்ரிக்க நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை எழுதிட அழைக்கப்பட்டவராகிய பெங்களூர் பேரா ரவிவர்மகுமார், பாபுராவ் வர்மா, முகுந்த ராவ் பத்திரிகையாளர் ஏ.வி.பி. பிரசாத், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் எம். சுப்பாராவ் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.
எமது உரையில், சமூகநீதிப் போராட்டக் களத்தில் பி.எஸ்.ஏ. சாமி அவர்களின் பங்களிப்பைச் சிறப்பித்துக் கூறினோம். அவர் ஒரு தலைதாழாச் சிங்கம்- சிங்கங்களை யாராலும் ஆடுகளாக்கிட முடியாது.

இடஒதுக்கீட்டுக்கான போராட்டக்களத்தில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு எனும் கோரிக்கை முன் வைக்கப்பட்டபோது மராட்டிய முதல்வராய் இருந்தபோது சுசில் குமார் ஷிண்டே அவர்கள் தம் மாநிலத்தின் இடஒதுக்கீட்டுக்கான ஆணை பிறப்பித்து பெருமை பெற்றவர்.

மக்கள் கருத்து முன்னே செல்லும்; சட்டம் நொண்டியடித்துக் கொண்டே பின் தொடரும் எனும் மொழிக்கேற்ப தந்தை பெரியார் மக்கள் கருத்தை உருவாக்கினார். அவர் வழியில் நாமும் மக்கள் கருத்தை உருவாக்குவோம் இடஒதுக்கீட்டுக்கான சட்டம் தானே வரும் என்று உரையாற்றினோம்.

ஆந்திர மாநில ஆளுநர் சுசில்குமார் ஷிண்டே அவர்கள் விருது வழங்க ஓர் இலட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கி உரையாற்றினார். தம் உரையில், “சமூக நீதிக்காகப் போராடும் நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமிக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். பெரியார் ராமசாமி அவர்களின் வழியில் ஓய்வறியாது உழைப்பவர். ஜோதிபாஃபுலே, பெரியார், டாக்டர் அம்பேத்கர், நாராயண குரு ஆகியோரின் சமூகநீதி இயக்கங்கள் நடைபோட்ட பாதையில் தொடர் நடைபோடும் திரு. சுவாமி வெற்றி கிட்டும்வரை ஓய்வின்றிப் போராடுபவராவார்.

“சமத்துவமின்மை எங்கிருந்தாலும் சமூக ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஆதலால் திரு.சுவாமியின் தொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் நரம்புகளையும் தசைகளையும் முறுக்கேற்றி “ஒரு சிலருக்கே இந்த உலகம்” என்ற நிலையை மாற்ற வேண்டும்.
அறியாமை இருளை அகற்ற – சமூக சமத்துவமின்மை இருளை அகற்ற – கல்லாமை இருளை அகற்ற – அடிமை ‘வாழ்வெனும் இருளை அகற்ற அயர்வின்றி உழைப்போம்” என்று ஆளுநர் உரையாற்றினார்.

‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையாளர்
திரு.சுபாஷ் சந்திரன் நன்றி கூறினார்.
நீதியரசர் பி.எஸ்.ஏ. சாமி தமது ஏற்புரையில்,

உலகம் முழுவதும் மகாத்மா ஜோதிபா ஃபுலே, நாராயண குரு, சாகுமராஜ், டாக்டர் அம்பேத்கர், பெரியார் ராமசாமி ஆகியோர்களது கருத்துப் பேரொளியைப் பரவச் செய்து வருபவர் திரு. வீரமணி. தனி மனிதராக- பதவியில் நாட்டமின்றி என்னைப் போன்ற – மனிதகுல முன்னேற்றத்தில் நாட்டமுள்ள அனைவருக்கும் உந்து சக்தியாக -தனி மனித சக்தியாக ஊழலுக்கு எதிராக எதையும் எதிர்பாராமல் போராடுபவராக வீரமணி எங்களுக்கு விளங்குகிறார். திரு.வீரமணி அரசியல் அதிகாரத்திற்காக ஏங்குபவர் அல்லர். அவருடைய தளராத உழைப்புதான் பெரியார் பன்னாட்டு மய்யம் உதயமாவதற்குக் காரணம். அதன் வாயிலாகத்தான் உலகெங்கும் உள்ள “பெரியாரிஸ்ட்கள்” ஒரே மேடையில் இணைந்து பெரியாரின் தத்துவங்களைப் பரப்ப முடிகிறது.

ஓய்வு பெற்றதற்குப்பின் ஏழைய எளிய மக்களின் கண்ணீரைத் துடைப்பதா? சிறிய ஆதாயங்களுக்காக அதிகார மய்யங்களின் தாழ்வாரங்களைத் தஞ்சம் அடைவதா? என்ற எண்ண ஓட்டம் என்னுள் எழுந்தபோது – பெரியார் பன்னாட்டு மய்யம் எனக்கு ‘சமூகநீதிக்கான வீரமணி விருது’ அளித்திட அறிவித்ததும்- இங்கே பலரும் அது குறித்து உரையாற்றியதும்- பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு வலுவூட்டின எனக் குறிப்பிட்டார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
ஆறுதல் கூறும் ஆசிரியர்

வல்லத்திலிருந்து 13.1.2005 அன்று காலை புறப்பட்ட நாம் சுனாமி கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளுக்கு லாரி மூலம் நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் வழங்கி ஆறுதல் கூறினோம். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் கொடுத்தனுப்பிய மருந்துப் பொருட்களையும் நாகூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினோம். பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் மருத்துவம், வீட்டுப் பொருட்கள், நிவாரண உதவிகள் ஜாதி, மதம் கட்சி வேறுபாடுகளைக் காட்டாமல் ஒற்றுமையோடு இருந்து அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தோம்.
கடலூர் நகரையொட்டி உள்ள சிங்காரத்தோப்பு பகுதிக்கு 18.1.2005ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியளவில் நாம் சென்று அங்கு சுனாமிப் பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட பகுதிகளில் வசித்து வந்த மீனவர் குடும்பங்களைப் பார்த்து ஆறுதல் கூறி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தோம்.
அடுத்து முற்பகல் 11 மணிக்கு சோனகர்குப்பம் பகுதிக்கும், 11:20 மணிக்கு அக்கரைகோரி பகுதிக்கும் 11:45 மணிக்கு தேவனாம்பட்டினம் பகுதிக்கும் சென்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினோம். பாதிக்கப்பட்ட மக்கள் விடுத்த கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடமும் தமிழ்நாடு அமைச்சரிடமும் எடுத்துக் கூறி நிறைவேற்றித் தரும்படி கேட்டுக்கொண்டோம்.

கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் துரை.சந்திரசேகரன், மாநில இளைஞரணி அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன், கடலூர் மாவட்டத் தலைவர் இரா.இரமணன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

( நினைவுகள் நீளும் …)