நூல் மதிப்புரை – வரலாற்றுப் புரிதலை உருவாக்கும் நூல் – வை. கலையரசன்

2024 நூல் மதிப்புரை மார்ச் 1-15, 2024
நூல் : ‘நேரு சிந்தனை இலக்கும் ஏளனமும்’
ஆசிரியர் : ஆ.இராசா
வெளியீடு : கருஞ்சட்டை பதிப்பகம்
சென்னை–_600 087.
கிடைக்குமிடங்கள் : 120, என்.டி.ஆர் தெரு,
ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்,
சென்னை–_600 024.
:பெரியார் புத்தக நிலையம், 
பெரியார் திடல், சென்னை–_600 007.-
பக்கங்கள் : 28;  விலை : ரூ.30/-
நவீன இந்தியாவை மதச்சார்பற்ற இந்தியாவாக, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட நவீன இந்தியாவின் சிற்பி நேரு.
அவர் இன்னும் சிலகாலம் உயிருடன் இருந்திருந்தால் இந்தியா சோசலிச நாடாக உருவாகியிருக்கும் என்று தந்தை பெரியார் கூறியிருக்கிறார்.
அண்மை காலமாக நேரு, இந்துத்துவ அரசியல்வாதிகளாலும், நடுநிலை என்கிற போர்வை போர்த்தியுள்ள வலதுசாரிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். நேரு அவர்களுக்கு எதிரானவராகக் காட்டப்பட்டு பட்டேல் போற்றப்படுகிறார். குறிப்பாக காஷ்மீர் பிரச்சனையில் நேருவின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேருவின் காஷ்மீர் குறித்த பார்வையையும் மதச்சார்பின்மை குறித்த ஒரு தெளிவையும் ஏற்படுத்தும் வகையில் மேனாள் ஒன்றிய அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.இராசா அவர்கள் எழுதியுள்ள சிறு நூல் இது.
மானமிகு ஆ.இராசா அவர்கள் இளைஞர்களிடம், தந்தை பெரியாரையும் திராவிட இயக்கத்தின் உயிர்நாடிக் கொள்கைகளான சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, மொழியுணர்வு ஆகியவற்றை நேர்த்தியாகப் பரப்புவதில் வல்லமை கொண்டவர். எளிய எடுத்துக்காட்டுகளின் மூலம் எத்தகைய கருத்தையும் விளக்கிடும் ஆற்றலாளர். அதே வழியில் பாமர மக்களுக்கு, சிக்கலான புரிதல் உள்ள காஷ்மீர் பிரச்சனையில் நேரு மற்றும் பட்டேல் ஆகிய இருவரது நிலைப்பாடுகளையும், நேரு அவர்களின் மதச்சார்பின்மை கொள்கைப் பற்றியும் விளக்குகிறது இந்த நூல்.
நேருவுக்கு எதிரானவராக இவர்கள் நிறுத்தும் பட்டேல் நேருவுடன் இறுதிவரை பேணிய நட்புறவை முதலில் விளக்குகிறார்.
1946 காலகட்டத்தில் நேருவின் அரசியல் ஆளுமைக்கு எதிரானவராக இருந்திருந்தாலும், அமையப்போகும் புதிய தேசத்தின் தகுதி வாய்ந்த தலைவராக வயதில் இளையவரான நேருவைக் காந்தி எப்படிக் கண்டுணர்ந்தார் என்பதைப் பட்டேல் மிக விரைவிலேயே உணர்ந்து கொண்டார். நேருவுக்கு மக்கள் மத்தியில் இருந்த பெரும் செல்வாக்கை உணர்ந்து காந்தியின் விருப்பத்திற்கு இணங்கினார் பட்டேல். பதிலுக்கு நேருவும் அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படாத பதவியாக இருப்பினும், பட்டேலை ‘துணைப் பிரதமர்’ என்று உயர்த்தி மற்றவர்கள் அவரை மதிப்புடனும் நம்பிக்கையுடனும் போற்றிடச் செய்தார். ‘என் அமைச்சரவையின் வலிமை வாய்ந்த தூண் (The strongest Pillar of the Cabinet) என பட்டேலை நேரு அழைத்தபோது. ‘‘எனது சேவை உங்களின் விருப்பத்திற்கானது; கொண்ட லட்சியத்திற்காக இந்தியாவில் வேறு எவரும் செய்திடாத தியாகத்தைச் செய்துள்ள உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் என்னுடைய விசுவாசமும் அர்ப்பணிப்பும் தொடரும். நம்முடைய இப்பிணைப்பு உடைக்க முடியாதது என்பதுதான் நம் பலம்’’ என்று பட்டேல் பதிலுரைத்தார். இருவரின் இத்தகைய பிணைப்பு புதிய சுதந்திர இந்தியாவின் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தது என்பதைப் பட்டேலின் சொற்கள் உணர்த்துகின்றன என்கிறார்.
இதன் மூலம் நேரு – பட்டேல் இடையிலான நட்பை மறைத்து அவர்களை எதிரெதிரே நிறுத்தும் வலதுசாரி முகமூடியணிந்த இந்துத்துவ குள்ளநரிகளின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கிறார்.
காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்ட போது இருந்த வரலாற்றுச் சூழலை விளக்கும் முக்கியச் செய்திகள் காஷ்மீர் மேனாள் பிரதமர் மெகர் சந்த் மகாஜன் சுயசரிதையில் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். மகாஜன், பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் காஷ்மீரின் இடைக்கால
– தற்காலிக பிரதமராகவும் இறுதியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தவர்.
பதான் தீவிரவாதிகள் காஷ்மீரை ஆக்கிரமித்த போது, இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டதையும், அதனைத் தொடர்ந்து காஷ்மீர் பகுதிக்கு ஷேக் அப்துல்லா தலைமையில் ஓர் இடைக்கால அரசு 5.3.1948இல் அமைத்ததையும் சுட்டிக்காட்டுகிறார்.
‘‘காஷ்மீருக்குத் தனி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பொருட்டு அம்மாநில அரசியல் நிர்ணயசபையைக் கூட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அப்போது இருந்தே காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. மார்ச் 15, 16 தேதிகளில் நேருவுடன் பட்டேல் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகியோர் சந்தித்து காஷ்மீரில் எடுக்கப்படவேண்டிய அரசமைப்புச் சட்டப் பணிகள் குறித்து ஆலோசித்தனர். இராணுவம், வெளியுறவு, தொலைத் தொடர்புத் துறைகள் தவிர்த்த பிற துறைகளை உள்ளடக்கிய அரசமைப்புச் சட்டம் மற்றும் தனிக்கொடி ஆகியவற்றை உருவாக்குவது குறித்து அரசியல் நிர்ணயசபையில் விவாதிக்கப்பட்டன. மத்திய அரசு நிருவகிக்கும் பிற துறைகள் குறித்து காஷ்மீர் மாநிலத்தின் நிர்ணயசபை கூடும்போது முடிவெடுக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இம்முடிவுகள் அனைத்திலும் அப்போது நேருவின் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியும் பங்கு கொண்டார்.” என்று தெரிவித்து நேருவுக்கும் பட்டேலுக்கும் இடையே இருந்த புரிதலையும் இலக்கை அடைய அவர்களுக்கு இருந்த வேட்கையையும் விளக்குகிறார்.
மேலும், தற்போது மோடி அரசால் நீக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 370ஆம் பிரிவு குறித்தும் அது கொண்டுவரப்பட்ட காலத்தில் இருந்த வரலாற்றுச் சூழலையும் விவரிப்பதுடன் மற்றொரு செய்தியையும் சொல்கிறார்.
இறுதியாக காஷ்மீருக்கான அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 இந்திய அரசியல் நிர்ணயசபையில் 17.10.1949 அன்று நிறைவேற்றப்பட்டபோது. நேரு அயல்நாட்டுப் பயணமாக அமெரிக்காவில் இருந்தார் என்பதும், இங்கு அரசுப் பணிகளைப் பட்டேல்தான் கவனித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க முக்கிய நிகழ்வாகும். அரசியல் நிர்ணய சபையில், பிரிவு 370யை முன்மொழிந்து பேசியவர் கோபால்சாமி அய்யங்கார். சபையில் ‘காஷ்மீருக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட பாரபட்சம்’ என்று அவரிடம் எழுப்பப்பட்ட வினாவிற்கு ‘இது காஷ்மீர் மக்களுக்கும் அரசுக்கும் நாம் கொடுத்துள்ள உத்தரவாதம்…. இந்தப் பாரபட்சம் காஷ்மீரின் வேறுபட்ட சூழலுக்காகத் தரப்பட்டது. தேசத்தோடு முழுமையாக இணைத்துக்கொள்ளும் நிலையில் அந்த மாநிலம் இப்போது இல்லை என்று கோபால்சாமி அய்யங்கார் பேசியதை எடுத்துக் காட்டுகிறார்.
5.11.1951 அன்று காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையில் ஷேக் அப்துல்லா ஆற்றிய உரை காஷ்மீர் குறித்த நேரு – பட்டேலின் இணக்கத்தை இப்படிப் பிரதிபலிக்கிறது: “காஷ்மீர் விடுதலையைக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளது. சமஸ்தானங்களின் எதேச்சாதிகார ஆட்சி ஒழிக்கப்பட்டு அங்கே அரசுப் பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ளனர். அங்கு ஜனநாயகம் செழித்திட முயற்சிகள் தொடர்கின்றன. சுதந்திர உணர்ச்சியை ஊட்டவும், சமூக மறுகட்டமைப்பை மேம்படுத்தவும். அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும். இம்முயற்சிகள் பயனளித்து வருகின்றன. நிலப்பிரபுத்துவம், எதேச்சாதிகாரம் போன்ற அபாயங்களிலிருந்து விடுபட இயற்கையாகவே நாம் இந்தியாவோடு இணைய வேண்டியுள்ளது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய அரசு நம்முடைய தன்னாட்சியில் எப்போதும் தலையிட்டதில்லை. இந்த அனுபவமே இந்திய ஜனநாயகத்தின் மீது நம்முடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. ஒரு நாட்டின் உண்மைத்தன்மை அதன் அரசமைப்புச் சட்டத்தில் பிரதிபலிக்கின்றது. சுதந்திரம்,நீதி, சமத்துவம் ஆகியவற்றை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்கும் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை லட்சியமாகக் கொண்டு இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் திகழ்கின்றது. நவீன ஜனநாயகத்தின் அடிநாதம் இதுதான். வெகுவாக எண்ணிக்கையில் இந்துக்கள் இருக்கும் ஒரு நாட்டில் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்கிற வாதத்தை அது முறியடிக்கிறது. மதப்பிரிவுகளுக்கு இடையிலான இயற்கைக்கு முரணான பிளவுகள் சர்வாதிகார அரசின் வழிமுறையாகும்; முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் விரும்பும் எந்த நவீன அரசும், அத்தகைய செயற்கையான பிளவுகளை ஊக்கப்படுத்தாது. வர்க்கம், நிறம், ஜாதி, மதம் ஆகியவற்றைக் கடந்து சமத்துவத்தை உறுதி செய்யும் இந்திய அரசியல் சட்டம் மிகச்சரியாகவும், நிறைவாகவும், மதச்சார்புள்ள நாடு என்ற நிலையை ஏற்க மறுத்துப் புறக்கணித்துள்ளது’’ என்னும் ஷேக் அப்துல்லாவின் உரையைக் கொடுத்துள்ளார் நூலாசிரியர். இது காஷ்மீர் சிங்கத்தின் நேரு மற்றும் இந்தியா மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது. அதே நேரத்தில் அவரது நம்பிக்கை இந்துத்துவ வெறியர் கூட்டத்தால் சிதைக்கப்பட்டுள்ளதையும், இந்த நாட்டை மீட்டு அதன் மதச்சார்பின்மை மாண்பை காக்க வேண்டியதன் தேவையையும் உணர்த்துகிறது.
மேலும் மதச்சார்பு குறித்து நேருவும் பட்டேலும் ஒன்றுபடும் இடங்களைத் தெளிவாக விளக்குகிறார்.
நேருவின் மதச் சார்பின்மைக் கொள்கை போலியானது என்றும், சிறுபான்மை மக்களுக்குச் சாதகமானது என்றும், பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்றும் வலதுசாரிகள் பிரச்சாரம் செய்து வரும் சூழலில், நேரு அவர்களின் மதச்சார்பின்மைக் கொள்கை மத சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வலியுறுத்தப்படுவதையும் சிறுபான்மை மக்களின் கண்ணியத்தையும் தெளிவாக விளக்குகிறார். இது குறித்த பட்டேலின் பார்வையும் மென்மையாகவும் பிளவற்ற தன்மையாகவும் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.
அரசமைப்பு வரைவுக் குழுவுடன் தொடர்புடைய கிரேன்வில்.ஆஸ்டின் கருத்தையும் கூறி அவர்களின் உறவை விளக்குகிறார்.
கஜினியின் படையெடுப்பில் சேதமான சோமநாதர் கோயிலைப் புதுப்பிக்க வேண்டும் என்று கே.எம்.முன்ஷி கேட்ட போது, அரசு பணத்திலிருந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பட்டேல் தெரிவித்த போது அதற்கு நேரு எதிர்ப்பு தெரிவித்தார். நேருவின் வேண்டுகோளின் படி காந்தி பொது மக்களிடம் இருந்து பெறப்படும் நிதியிலிருந்து புதுப்பிக்கப்படும் என்று கூறினார். சுதந்திர இந்தியாவின் பாதை மதத்திலிருந்து அரசு விலகி இருக்க வேண்டும் என்னும் திடமான மதச்சார்பின்மை கொள்கையில் நேரு உறுதியாக இருந்தார் என்பதை விளக்குகிறார். இந்து தேசம் என்று இந்து மகாசபை கோரிக்கையை முன்வைத்த போது சமதர்ம ஜனநாயகத்தை மட்டுமே வலியுறுத்தியவர் நேரு.
மேலும் பல்வேறு செய்திகளைத் தருகிறார்.
இந்து தேசியவாதிகளின் கொள்கைகளை அணுகுவதில் நேருவும் பட்டேலும் வேறு பட்டாலும் மதச்சார்பின்மை என்ற நாணயத்தின் இரு பக்கங்களாகவே விளங்கினார்கள். பட்டேலின் அணுகுமுறை தர்க்க ரீதியான மற்றும் அனுபவரீதியான முடிவுகளின்றி வெறும் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தின்பாற்பட்டது. நேருவோ மதப்பழைமையிலிருந்து விலகி அதற்குப் பதிலாக அறிவியலையும் பகுத்தறிவையும் முன்னிறுத்தினார். ‘பழைமையான மூடநம்பிக்கையில் சிறைப்பட்டிருக்கும் மனித மூளையை விடுவிக்கவே கல்வி’ என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராக இருந்தார். காந்தி மறைவிற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் அவர் உரையாற்றிய போது “பனாரஸ் பல்கலைக் கழகம் ‘இந்து பல்கலைக் கழகம்’ என்று அழைக்கப்படுவதை நான் ஏற்காததைப் போலவே இந்தப் பல்கலைக்கழகத்தையும் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. குறிப்பிட்ட பண்பாட்டுக் கூறுகளையோ மற்றும் அதுதொடர்பான படிப்பையோ ஆராய்வதில் ஒரு பல்கலைக்கழகம் ஈடுபடக்கூடாது என்பதல்ல இதன் பொருள், இஸ்லாமிய சிந்தனை மற்றும் பண்பாடு குறித்து இப்பல்கலைக்கழகம் சிறப்புக் கவனத்தோடு செயல்படுவது என்று குறிப்பிட்டார். அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பது, மற்றும் சகிப்புத் தன்மையை ஊக்கப்படுத்துவது ஆகிய அவரது இலட்சியங்களே அவரது மதச்சார்பின்மை கொள்கைக்கும் அடிநாதமாக இருந்தன.
இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.♦