அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (330)

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜனவரி 1-15, 2024

கரூரில் திராவிடர் எழுச்சி மாநாடு
— கி.வீரமணி —

தேர்தலில் அ.தி.மு.க.வை திராவிடர் கழகம் எதிர்த்ததால், பழிவாங்கும் நடவடிக்கையாக அ.தி.மு.க. அரசு சிலவற்றைச் செய்தது. 02.07.2004 ஒரே நாள் தேதியிட்டு, நான்கு நோட்டீஸ்களை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக்கழக அறக்கட்டளைக்கு அ.தி.மு.க. அரசு அனுப்பியது. 9.7.2004 அன்று வல்லம் கல்லூரி நிலங்களைப் பார்வையிட வருவதாக ஒரு கடிதமும், அறக்கட்டளைகளைக் கைப்பற்றும் நோக்கில் தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை மற்றும் இந்து அறநிலையத்துறை ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தது. அறக்கட்டளைகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் இரண்டு நோட்டீஸ்களுக்கு தடையாணையும், இரண்டு நோட்டீஸ்களுக்கு 3 வார கால அவகாசமும் அளிக்கப்பட்டது.
1988ஆம் ஆண்டில் 27 ஆண்டுகளுக்கான குத்தகையாக பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரிக்கு அளிக்கப்பட்ட 40 ஏக்கர் நிலங்களை அரசே ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஒரு கடிதத்தில் காரணம் கேட்கப்பட்டுள்ளது

30.1.1988இல் அரசு ஆணை எண் 173இன் படி பொறியியற் கல்லூரிக்கு 40 ஏக்கர் நிலம் 27 ஆண்டு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. இந்த நிலத்தில் கல்லூரிக் கட்டடமும், விடுதியும் கட்டப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும கண்டனக் கூட்டங்களும், விளக்கக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. அறக்கட்டளை பாதுகாப்பு வழக்கு நிதியும் மக்களிடம் வசூல் செய்யப்பட்டு வழக்குச் செலவுக்குப் பயன்படுத்தியது.

15.7.2004 அன்று காலை 11 மணிக்கு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதி செயலாளர் மு. மூர்த்தி _ இராஜலட்சுமி ஆகியோருக்கு ஜாதி மறுப்புத் திருமணம் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் நடைபெற்றது. திருமண நிலையப் பொறுப்பாளர் திருமகள், பார்வதி, ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், கு. தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சந்தா ரூ.1000 மற்றும் சட்டப் பாதுகாப்பு நிதிக்கு ரூ.300ம் தமிழர் தலைவரிடம் திருமண நிகழ்ச்சியன்று வழங்கப்பட்டது. ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

மு.மூர்த்தி – இராஜலட்சுமி ஆகியோரின் இணையேற்பு நிகழ்வை நடத்தி வைக்கும் ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி வட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், பெரியார் பெருந்தொண்டருமான ஆலத்தம்பாடி சு.பரிசுத்தம் தந்தை பெரியாரிடமும் தலைமையிடத்தும் மாறாப் பற்றுக் கொண்டவர். அப்பகுதியில் மிக்க செல்வாக்குப் படைத்தவர். அவர் தனது 93ஆம் வயதில் 17.7.2004 காலை மாராச்சேரியில் மறைவுற்றார். தலைமைக் கழகத்தின் சார்பில் கழகத் தோழர்கள் மறைந்த பெரியார் பெருந்தொண்டரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நான் இரங்கல் செய்தி அனுப்பினேன்.

கும்பகோணம் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரில் பார்த்து, பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினோம். நம்முடைய நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிர்ச்சிக்கும் பெரும் துன்பத்திற்கும் ஆளாகியது. யாருக்குமே எங்குமே நிகழக்கூடாத ஒரு சோகமான நிகழ்வு அது. மொட்டுகளாக இருந்த மழலைகள் மலர்ந்து, பிறகு அவை வளர்ந்து சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பயன்பட வேண்டிய நிலையில்
தீ நாக்குக்கு இரையாக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையாகும்.

கும்பகோணம் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினரை தமிழர் தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

மிகப்பெரிய அளவில் 93 குழந்தைகள் தீ விபத்தில் கருகி மடிந்தார்கள் என்பது மிகுந்த வேதனை தரும் சோக வரலாற்று நிகழ்வாகும்.

நத்தம் கருப்பூர் என்ற ஒரே கிராமத்தில் 13 பிஞ்சுகளுக்கு மேலாக இறந்திருக்கிறார்கள் என்ற செய்தி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அன்றாடம் வியாபாரம் செய்து பிழைக்கும் ஏழ்மையான குடும்பங்கள். எனவே அவர்களுக்கு உதவி என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் எதிர்காலத்தில், வளர்ச்சிக்குரியதாக உருவாக்க வேண்டும் என்பதைச் சிந்தித்து அந்த கிராமம் பெரியார் அறக்கட்டளையால் தத்து எடுக்கப்பட்டது. பெரியார் கல்வி நிறுவனங்களும் இணைந்து, செயல்படும் நோக்கத்துடன் அந்தக் கிராமத்திற்குச் சென்று, குறைபாடுகள், தேவைகள் என்ன என்பதை ஆராய்ந்து செயல்பட திட்டம் வகுக்கப்பட்டது.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மறைந்த துரை. சக்ரவர்த்தியின இல்லத்திற்கு தமிழர் தலைவர் 13.7.2004 அன்று மதியம் சென்று, குடும்பத்திலுள்ளவர்களைச் சந்தித்தோம்.

துரை. சக்ரவர்த்தி அவர்களின் மகள் நர்மதா அழகிரிக்கு முந்தைய மாதம் பெண் குழந்தை பிறந்தது. தாயும் _ சேயும் நலமுடன் பசுபதி கோவில் என்ற ஊரில் உள்ள வீட்டில் இருக்கின்றனர். துரை. சக்ரவர்த்தி அவர்களின் துணைவியார் நற்சோனை, மகன் ச. வெற்றிச்செல்வன், மகள் நர்மதா அழகிரி, ச. கவின்மதி ஆகியோர் அன்புடன் வரவேற்றனர். பின்னர் குழந்தைக்கு ‘சக்ரவர்த்தினி’ என்ற பெயரைச் சூட்டினேன். சிறிது நேரம் உரையாடிவிட்டு தஞ்சை _ வல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றோம்.

துரை.சக்கரவர்த்தி அவர்களின் பேரக்குழந்தைக்குப் பெயர் சூட்டுகிறார் ஆசிரியர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நாடாளுமன்றவாதி பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி அவர்கள் கொல்கத்தாவில் தமது 97ஆம் வயதில் 30.7.2004 அன்று காலமானார் என்பதை அறிந்து வருந்தினோம்.

“பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி அவர்கள் மிகப்பெரிய பொதுவுடைமைச் சிந்தனையாளர்; வரலாற்று வல்லுநர்; கொண்ட கொள்கையில் இறுதி மூச்சு உள்ளவரை சாகும்வரை உறுதியோடு இருந்தவர்.

ஹிரேன் முகர்ஜி

தந்தை பெரியார் அவர்கள்பால் அவர் கொண்டிருந்த மரியாதையும் மிகவும் சிறப்புடையதாகும். ‘விடுதலை’யின் சார்பில் ஆண்டுதோறும் தந்தை பெரியார் தனது பிறந்த நாள் விழா மலருக்கு வாழ்த்துச் செய்தியைக் கேட்டபோதெல்லாம் மிகவும் ஆர்வத்துடன் உடனே எழுதி அனுப்பும் பண்பாளர்.
‘ஹிரேன் பாபு’ என்று அனைத்துத் தலைவர்கள், அரசியல்வாதிகள் ஆகியவர்களால் அழைக்கப்பட்ட அவரது வாழ்க்கை ஒரு முழு வாழ்க்கையாகும்.
அவருடைய இழப்பு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு மட்டும் ஈடு செய்ய முடியாத இழப்பு அல்ல; பொது வாழ்க்கைக்கே _ அனைவருக்கும் மிகப்பெரும் இழப்பு ஆகும்.

ஆக்ஸ்போர்டில் படித்த பேராசிரியர், பாட்டாளி மக்களுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த, ஏழை_ எளியவர்களின் ஏற்றத்திற்குப் பாடுபட்ட, ஏந்தல் அவர்! அய்யா உருவாக்கிய சுயமரியாதைத் திருமணத்தை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்.
அவருக்கு திராவிடர் கழகம், தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது குடும்பத்திற்கும், கொள்கைக் குடும்பமான இந்திய கம்யூனிஸ்ட்

கட்சிகளுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது” என்று அறிக்கை வெளியிட்டேன்.
கரூரில் 31.7.2004 அன்று, “திராவிடர் எழுச்சி மாநாடு” காலை 10 மணிக்கு கரூர் பேருந்து நிலையம் அருகில் ஜி.ஆர். திருமண மண்டபத்தில் மேட்டுப்பாளையம் தன்னாசி நினைவரங்கத்தில் தொடங்கியது.

கரூர் திராவிடர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றுகிறார்

முதல் நிகழ்ச்சியாக காலை 10 மணிக்கு பாப்பாநாடு எஸ்.பி. பாஸ்கரின் கலை நிகழ்ச்சி வெகு எழுச்சியுடன் நடைபெற்றது.
அடுத்து இளைஞர் அணியின் கருத்தரங்கம் தொடங்கியது. மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ந.முருகேசன் வரவேற்புரையாற்றினார். மாநில இளைஞரணி அமைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் தொடக்கவுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு கழகப் பிரச்சார செயலாளர்துரை. சந்திரசேகரன் தலைமை வகித்துப் பேசினார்.

அடுத்து பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் விதத்தில் கருத்தரங்கம் தொடங்கியது. ‘ஜாதியை ஒழிப்போம்!’ என்ற தலைப்பில் விருத்தாசலம் மு. கதிரவன், ‘மதத்தை மாய்ப்போம்!’ என்ற தலைப்பில் திருப்புகளூர் கோ.வி. சண்முகசுந்தரம், ‘கடவுளை மறுப்போம்!’ என்ற தலைப்பில் திருவரங்கம் சீனி. விடுதலையரசு, ‘சாத்திரம் எரிப்போம்!’ என்ற தலைப்பில் வழக்குரைஞர் பூவை புலிகேசி, ‘காவியை எதிர்ப்போம்!’ என்ற தலைப்பில் தஞ்சை இரா. பெரியார் செல்வன், ‘இயக்கத்தைக் காப்போம்’ என்ற தலைப்பில் ஆவடிஇரா.மனோகரன் ஆகியோர் உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து மதியம் மகளிர் அரங்கம் தொடங்கியது. பொதுக்குழு உறுப்பினர் இரா. சாவித்திரி அம்மையார் மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. பார்வதி தொடக்க உரையாற்றினார். மாநில தகவல் தொடர்பு அமைப்பாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி தலைமையுரையாற்றினார்.

அடுத்து ‘அர்ச்சகர் உரிமை ஏன்?’ என்ற தலைப்பில் சென்னை ம.வீ. கனிமொழி, ‘பெண்கள் இடஒதுக்கீடு ஏன்?’ என்ற தலைப்பில் அகரப்பேட்டை வீ. கலைவாணி, ‘தனியார் துறைகளில் இடஒதுக்கீடு ஏன்?’ என்ற தலைப்பில் தகடூர் தமிழ்ச் செல்வி. ‘மதச் சார்பின்மை ஏன்?’ என்ற தலைப்பில் வடமணப்பாக்கம் தமிழ்மொழி, ‘பாடத் திட்டங்களில் மாற்றம் ஏன்?’ என்ற தலைப்பில் தாம்பரம் தாட்சாயினி ஆகியோர் உரையாற்றினர்.

மாலை மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில்,பெரியார் அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள்மீது தமிழ்நாடு அரசின் பழிவாங்கும்நடவடிக்கைகளைக் கண்டித்தும்,
ஆரிய பண்பாட்டுப் படை எடுப்பினை முறியடிக்கும் திசையில் திட்டமிட்ட முறையில் பணிகளை முடுக்கிவிட வேண்டியும்,
தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,தமிழர்களின் நீண்ட நாள் கனவான சேது சமுத்திரத் திட்டத்தைத் தாமதமின்றி நிறைவேற்றக் கோரியும்,மதக் கலவரங்களைத் தூண்டும் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும்,
பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவதைக் கைவிடக் கோரியும்,
பாசனத்திற்குத் தண்ணீர் இல்லை_ ஆடிப்பெருக்கிற்கு மட்டும் காவிரி நீரா? என்று அரசின் செயலைக் கண்டித்தும்,
பிள்ளையார் சதுர்த்தி விழாவால் சுற்றுச்சூழல் கேடடையச் செய்வதை தடை செய்ய வலியுறுத்தியும் மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் நிறைவுரையில்,

“பெரியார் அறக்கட்டளையைக் கையகப்படுத்தக்கூடிய அளவிற்கு, சூழ்ச்சி வலை பின்னப்படுகின்றது. அதை அறுப்பது எப்படி என்பதற்காக இந்த மாநாடு அல்ல.
அதைப் பார்த்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு தமிழ் மக்களே துணையாக இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
பெரியார் என்பவர் திராவிடர் கழகத்திற்கு மாத்திரம் சொந்தமான ஒரு தலைவர் அல்லர்.

பெரியார் கடவுளையே ஒப்புக்கொள்ளாதவர். ஆனால், அவரையே இவர்கள் சிலர் கடவுள் என்று சொல்லுவார்கள். இதைச் சொல்லிவிட்டு பின்னாலே அந்தப் பெரியவர் நன்றி உணர்ச்சியோடு சொல்லுவார்_

“அவர் இல்லாவிட்டால் என்னுடைய மகன் டாக்டராகியிருக்க முடியாது என்றும் இன்றைக்கு அவரால் அல்லவா டாக்டராகியிருக்கிறார்” என்றும் அவர் ஒரு பக்கம் கண்கண்ட கடவுள் என்றும்” சொல்லுவார்.

பெரியாரை அழிக்க இந்த நாட்டிலே எந்தச் சக்தியும் கிடையாது. கரூர், ஈரோட்டிற்கு மிக அருகில். உள்ளது. எனவே தான் கரூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கு திராவிடர் எழுச்சிக்குக் கருவூர் தேவைப்படுகின்றது.

கொள்கையிலே நாங்கள் உறுதியாக இருக்கின்ற காரணத்தால்தான், பல நேரங்களில் பல பேருக்கு நாங்கள் எதிரிகளாகத் தென்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது. அதைத்தான் எங்களுடைய வாழ்நாளிலே நாங்கள் பேறாகக் கருதுகின்றோம்.

இந்த இனம் வீழ்ந்து பட்டுக்கொண்டிருக்கின்றதே _ ஒரு பக்கத்திலே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் போன்றவர்கள் எல்லாம் கல்வி அறிவு, பகுத்தறிவு இவற்றிற்காக உழைத்தார்கள். நண்பர்கள்இங்கே சொன்னார்களே, சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கலாகாது. நெருங்கக்கூடாது என்றெல்லாம் சொன்னதை மாற்றி இன்றைக்கு ஒரு சமுதாய எழுச்சியை உருவாக்கியிருக்கின்றார்கள்.

திராவிடர் எழுச்சி என்பது _ அது மூலபலத்தை முறியடிப்பது. அதில்தான்; தந்தை பெரியாரின் வெற்றி அடங்கியுள்ளது.

‘திராவிடர் இனம், மொழி, பண்பாடு இவற்றைச் சிதைக்கும் வகையிலும் ஆரியப் பண்பாட்டைத் திணிக்கும் தன்மையிலும், சங்பரிவார் கூட்டமும், பார்ப்பனர்களும், அவர்களின பிரச்சார ஊடகங்களும் திட்டமிட்ட வகையில், செயல்பாடுகளை ஊக்குவித்து வருகின்றன.

இந்துராஷ்டிரம் என்ற பெயராலே பார்ப்பன மனுதர்ம ஆட்சியை நிலைநாட்ட மதவெறியைத் தூண்டி வருகின்றன. பார்ப்பனர் அல்லாத மக்களின், திராவிட இன மக்களின், தன்மானம், பகுத்தறிவு, பண்பாடு, வாழ்வுரிமை இவற்றுக்காகப் பாடுபட்டு வருகின்ற தலைவர்களையும், அமைப்புகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து வருகின்றன.”

திராவிடர் எழுச்சி என்ற பெயராலே திராவிடர் இயக்கத் தலைவர்களையோ அல்லது கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களாக இருக்கின்ற காரணத்தால் ‘இந்துத்துவாவை’ இவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காகவோ, அதுவும் காவிமயமாவதை எதிர்த்து, கொடிபிடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதற்காகவோ, கம்யூனிஸ்ட் தலைவர்களையும், நண்பர்களையும் சேர்த்துக் கொச்சைப்படுத்துவது என்று ஆரம்பித்திருக்கின்றார்களே, இந்த நிலையில் ஒத்த கருதுள்ளவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு பண்பாட்டுப் பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தினுடைய நோக்கம்.
இந்த கரூரிலே முதலில் அது பிரகடனப்-படுத்தப்படுகிறது என்று கழகத்தின் தொலை நோக்கைப் புலப்படுத்தியது.

குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி முதலமைச்சராக இருக்கும்பொழுது இந்துத்துவா கொள்கைகளை ஒரு பரிசோதனைக்கூடமாக வைத்து ஆட்சி நடத்திப் பார்க்கிறார்கள். அங்கே என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? பள்ளிப் பிள்ளைகளின் எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்திலே சொல்லிக் கொடுக்கின்றார்கள்- _ ‘வர்ணாசிரம தரும முறை முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட வரப்பிரசாதம். இது நல்ல முறை’ என்று அவர்கள் பாடத்திட்டமாக வைத்திருக்கின்றார்கள். எங்கே? குஜராத்திலே!

ஆனால், தமிழ்நாட்டில் ‘இந்துத்துவா’ வாலாட்ட முடியவில்லை. நல்ல வாய்ப்பாக தமிழ்நாட்டில் நீங்கள் கொடுத்த தீர்ப்பு _ மிகச் சரியான தீர்ப்பு! பாராட்டக்கூடிய மக்கள் தீர்ப்பு.

தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குக் கால்கோள் விழா செய்தது.
ஆரியத்தைத் தோற்கடிக்க வேண்டுமானால், வெறும் தேர்தல், வெற்றி தோல்விகளால் மட்டும் அது முடியாது. அது ஒரு கட்டம். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அதைவிட சமுதாயத்திலே, பண்பாட்டிலே என்ன நிலை?

ஆகவே இந்து, மதம் என்று சொன்னாலும், இந்துத்துவா என்று சொன்னாலும், சமஸ்கிருதம் என்று சொன்னாலும், பண்பாட்டுப் படையெடுப்பு என்பதுதான் மிக முக்கியம் என்று கருதக்கூடிய நிலையிலேதான் அவர்கள் அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை அவர்கள் மய்யப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அரசியல் கட்சிகள் மட்டுமல்ல; அரசியலுக்கு அப்பாற்பட்டிருக்கின்ற தமிழ் இனஉணர்வாளர்களைக்கூட எல்லோரையும் அழைத்துப் பேசவேண்டும்.
மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரு-டைய ‘குளோனிங்’ மாதிரி இருக்கக்கூடிய தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் சொன்னார், “இந்த நாட்டில் கும்பாபிஷேகத்தைப் பற்றித்தான் அதிகம் கவலைப்படுகின்றார்களே ஒழிய, பள்ளிக்கூரைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்களா?-” என்று கேள்வி கேட்டார்.

இப்படிப்பட்ட புரட்சிகரமான சிந்தனை கொண்டவர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னால் அவர்கள் எந்த உடை அணிந்திருக்கின்றார்கள், எந்த இடத்திலே இருக்கின்றார்கள் என்பது முக்கியமல்ல; இந்த இனஉணர்வுக்கும், பண்பாட்டுப் பாதுகாப்பிற்கும் அவர்கள் எல்லாம் உரியவர்கள் என்பதே முக்கியம்.
இந்த இயக்கம் ஒரு புதிய திருப்பத்தைக் கருவூரிலே உருவாக்கியிருக்கிறது. அந்த வகையிலே அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சமுதாயக் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அது நாளை முதலே தொடங்கப்படும். அதற்கு ஒரு திருப்பமாக இந்த திராவிடர் எழுச்சி மாநாடு அமையும், அமையும் என்று சொல்லி, வந்திருக்கின்றவர்களுக்கும், ஆதரவு காட்டியவர்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டு உரையை நிறைவு செய்தேன்.

(நினைவுகள் நீளும்)