நேர்காணல் – இணையரின் எண்ணத்தை நிறைவேற்றிய ஈடில்லா மகளிர்!

2023 கட்டுரைகள் டிசம்பர் 16-31, 2023 மற்றவர்கள்

– வி.சி.வில்வம் 

‘‘தனது வாழ்விணையர் அ.பழனியப்பன் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட வாள் ஒன்று கொடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து சொல்லி வந்தார்கள். ஆனால் அவர்களால் இயலாமல் போனது. இந்நிலையில் இணையர் மறைவுக்குப் பிறகு எப்படியாவது அவரது எண்ணத்தை ஈடேற்ற வேண்டும் என நினைத்து அதன்படியே செய்தும் முடித்தேன்,” என வேலூர் மாவட்டக் கழகக் காப்பாளராக இருக்கும் கலைமணி அவர்கள் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத் தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர் அ.பழனியப்பன் அவர்கள். அவர்களின் வாழ்விணையர் மானமிகு கலைமணி அவர்களை, “உண்மை” மாதமிருமுறை ஏட்டிற்காக வேலூரில் அவரது இல்லத்தில் சந்தித்தோம்!
தங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள் அம்மா…

என் பெயர் கலைமணி. வயது 73 ஆகிறது. எனது சொந்த ஊர் தருமபுரி மாவட்டம், வாலிப்பட்டி எனும் கிராமம். உடன் பிறந்தவர்கள் 9 பேர். நான் அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி முடித்துள்ளேன். மூன்று பேர் மருத்துவர்கள், ஒருவர் வழக்குரைஞர், ஒருவர் ஆசிரியர், மற்றொருவர் மருந்தாளுநர். எங்கள்
கிராமத்தில் 5 ஆம் வகுப்பு வரை தான் பள்ளிக்கூடம் இருக்கிறது. எனினும் அனைவரையும் வெளியூரில் சென்று படிக்க வைத்தனர் எங்கள் பெற்றோர்.

அப்பா பெயர் ராஜா தந்தியப்பன், அம்மா பெயர் தனக்கோட்டி. அம்மாவின் சொந்த ஊர் நாகரசம்பட்டி. சம்பந்தம், விசாலாட்சி அம்மாள், பொறியாளர் ஏகாம்பரம், டாக்டர் சரோஜினி, துரைசாமி, ஆறுமுகம், தர்மலிங்கம் இப்படி எண்ணற்ற தோழர்கள் வசித்த ஊர் அது! திராவிடர் கழகக் கோட்டை என்று அழைக்கப்பட்ட ஊர். பெரும்பாலும் சுயமரியாதைத் திருமணங்கள் தான் நடைபெறும். இறப்பு என்றால் காரியங்கள் இருக்காது; படத்திறப்பு தான் நடக்கும்!

உங்கள் பெற்றோர் திராவிடர் கழகத்தில் இருந்தார்களா?

இயக்கத்தில் இல்லை. எனினும் எங்கள் கிராமத்திற்குப் பெரியார் பலமுறை வந்திருக்கிறார். எங்கள் கிராமத்தில் இருந்த விசாலாட்சி அம்மாள் அவர்கள் பெரியார், மணியம்மையார் ஆகியோருடன் கழகக் கூட்டங்களுக்குப் பயணத்தில் உடன் செல்வார். விசாலாட்சி அவர்களை “அத்தை அம்மாள்” என்று தான் அன்போடு அழைப்பார்கள். நகை அணிய மாட்டார், கருப்பு உடையில் தான் இருப்பார். ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களை முன்னின்று நடத்தி வைத்துள்ளார். பொதுவாகவே எங்கள் கிராமத்தில் பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் செய்யும் முறை அப்போது இல்லை. பொதுவாக, கொள்கைத் தொடர்புடைய நிகழ்வுகள் நிறைய நடந்ததால், எங்கள் பெற்றோரும் உணர்வுடன் இருந்தார்கள். ஆனால் நேரடி கொள்கையில் இல்லை.

நீங்கள் இயக்கத்திற்கு வந்தது எப்போது?

கடத்தூர் எனும் ஊரில் எனக்குத் திருமணம் நடந்தது. அப்போது வயது 19. எனினும் திருமணமான 37 ஆவது நாளில் கணவர் மறைந்துவிட்டார். அவருக்கு ஏற்கெனவே இருதயக் கோளாறுகள் இருந்ததை நாங்கள் அறியவில்லை. இந்நிலையில் கரூரில் மருத்துவராக இருந்த அண்ணன் வீட்டிற்குச் சென்று 6 மாதங்கள் இருந்தேன். மருத்துவப் படிப்புப் படிக்கவும் ஆசைப்பட்டேன்.

எனினும் எனக்கு மறுமணம் செய்ய வேண்டும் எனச் சகோதரர்கள் விரும்பினர். ஆனால், எங்கள் தந்தை ஒப்புக் கொள்ளவில்லை. அதே சூழலில் அதே கடத்தூரில் வசித்த வந்த பழனியப்பன் அவர்கள், என்னைத் திருமணம் செய்து கொள்வதாக என் அண்ணன்களிடம் கூறியிருக்கிறார். தொடர் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இரு வீட்டார் ஒப்புதலுடன் திருமணம் நடந்தது. இணையர் பழனியப்பன் அவர்கள் திராவிடர் கழகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தவர். எனது முதல் கணவர் இறந்த அன்றே, என்னைத் திருமணம் செய்ய வேண்டும் எனத் தாம் முடிவு செய்திருந்ததாகப் பின்னாளில் கூறினார்!

திருமணத்திற்குப் பிந்தைய உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருந்தது?

1972 நடந்த அந்த மறுமணம் என்பது, பெரிய புரட்சியாகப் பார்க்கப்பட்டது. அதேநேரம் சாஸ்திர, சம்பிரதாயங்களின் பேரால் பல நிகழ்ச்சிகளில் நான் புறக்கணிக்கப்பட்டேன். ஆனால், பக்குவப்பட்ட ஒரு கொள்கையாளர் எப்படியான மனிதராக இருப்பார் என்பதை என் இணையர் மூலம் நான் தெரிந்து கொண்டேன். பின்னர் ஊற்றங்கரை சென்று வசித்தோம். அங்கே மருந்துக்கடை வணிகம் தொடங்கினோம். வீட்டில் எப்போதும் கழகப் பாடல்கள் (கேசட்) ஒலிக்கும். அதைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் கூட்டங்கள், மாநாடுகளுக்குச் செல்லத் தொடங்கினேன். ஊற்றங்கரை பகுதியில் காட்டுப்பட்டி சிதம்பரம், வார்டன் வெங்கடாச்சலம், இணையர் பழனியப்பன் மூவரும் இணைந்து இயக்கத்தை வளர்த்தனர்.

திராவிடர் கழகத்தில் மறக்க முடியாத நினைவுகள் ஏதும் இருக்கிறதா?

நிறையவே இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், அப்போது மாநாடுகள் 2 நாட்கள் நடக்கும். முதல் நாள் ஊர்வலம், அடுத்த நாள் நிகழ்ச்சிகள். எனக்குத் தெரிந்து விடுதிகளில் யாரும் அறை எடுத்துத் தங்கியது கிடையாது. மாநாட்டுப் பந்தலில்தான் தூங்குவோம். ஆண்கள், பெண்கள் எனக் குடும்பம், குடும்பமாகப் பாலின வேறுபாடு இன்றித் தங்குவோம். என்றாலும் ஒரு சிறு அசம்பாவிதத்தை இயக்க வரலாற்றில் கண்டதில்லை. இயக்கத்திற்கு அப்போது நான் புதிது. “இப்படி ஓர் இயக்கமா!”, என வியந்து, வியந்து போனேன்!

இப்படியான சூழலில் ஒரு பத்து ஆண்டுகள் போயிருக்கும். எனது இணையர் மருந்துக்கடை சென்றுவிட்டு, மதிய உணவிற்காக வீட்டிற்கு வருகிறார். நான் தாலியைக் கழற்றி, இணையர் கையில் கொடுத்து, இனி இது வேண்டாம் என்றேன். இணையர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பெரியார் கூட்டங்களுக்குச் செல்லும் வாய்ப்புகள் ஏதும் கிடைத்ததா?

கரூரில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இருவரையும் ஒருமுறை சந்தித்தேன். தனிப்பட்ட வாழ்விலும், இயக்க நிகழ்விலும் நாங்கள் வளர்ந்து வந்த வேளையில், மீண்டும் ஓர் அதிர்ச்சி என் வாழ்வில் நிகழ்ந்தது. ஆம்! இணையர் பழனியப்பன் அவர்கள் தமது 43ஆம் வயதில் இயற்கை எய்திவிட்டார்கள் சில காலம் கழித்து அதிலிருந்து மீண்டு வந்து, மருந்துக் கடை வணிகத்தை 10 ஆண்டுகள் கவனித்து வந்தேன். பிறகு இயக்க நிகழ்ச்சிகளுக்கும் செல்லத் தொடங்கினேன்.
கேட்பதற்கே சங்கடமாக இருக்கிறது? பிறகு எப்படி சமாளித்து வந்தீர்கள்?

பிரபு, ஜெகன்பாபு என எங்களுக்கு இரு பிள்ளைகள். அவர்கள் படிப்புப் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே நான் கடையைப் பார்த்துக் கொண்டேன். பலரும் பல விமர்சனங்கள் செய்தார்கள். ஒரு கட்டத்தில் “போங்கடா” என்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன். கொள்கை தந்த உணர்வு, இயக்கம் தந்த துணிவு, உறவுகளாய் மாறிய தோழர்கள் இருக்கையில் எனது மனஉறுதி இரட்டிப்பானது! பின்னாட்களில் விமர்சனம் செய்தவர்களே, என்னை முன்னுதாரணமாக சொல்லத் தொடங்கினார்கள்.

நீங்கள் பொறுப்புகளில் இருந்திருக்கிறீர்களா?

தருமபுரி மாவட்ட மகளிரணித் தலைவர் பொறுப்பில் இருந்துள்ளேன். இப்போது வேலூர் மாவட்ட கழகக் காப்பாளராக இருக்கிறேன். எனினும் 1994 ஆம் ஆண்டு மகளிர் இணைந்து நடத்திய பாலியல் நீதி மாநாட்டை மறக்க முடியாது. திருமகள், மனோரஞ்சிதம், பார்வதி போன்றோர் எல்லாம் இரண்டு நாள்களுக்கு முன்பே வந்துவிட்டார்கள். ஊற்றங்கரை முழுக்க மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்தினோம். ஆசிரியர் அய்யா அவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அந்நிகழ்வில் தான் வெள்ளியால் செய்யப்பட்ட வாள் வழங்கினோம். இணையர் பழனியப்பன் அவர்கள் நீண்ட நாட்களாக ஆசிரியர் அவர்களுக்கு வெள்ளி வாள் கொடுக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் மறைவுக்குப் பிறகு அதைக் கொடுக்கும் வாய்ப்பை நான் பெற்றேன்!
மறைவுக்கு ஒரு மாதத்திற்கு முன் பார்வதி அம்மா பேசினார்கள். அப்போது பாலியல் நீதி மாநாடு குறித்தும், வெள்ளி வாள் வழங்கியது குறித்தும் நினைவு கூர்ந்து பேசினார்கள். மறக்க முடியாத பேச்சாக அது நினைவில் தங்கிவிட்டது!

இயக்கத்தில் குறிப்பிடத்தகுந்த அனுபவங்களைப் பெற்ற வகையில், ஆசிரியர் குறித்த தங்களின் பார்வை என்ன?

முதலில் அய்யா அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் அவர்களை எங்கள் குடும்பத்தின் மூத்தவர் போல உணர்கிறேன். முதன் முதலில் ஆசிரியர் அவர்களைச் சந்திக்கும் போது எப்படி இருந்தார்களோ, அதில் இருந்து கடுகளவும் இன்று மாற்றமில்லை. அதே உற்சாகம், அதே சுறுசுறுப்பு, அன்றாட நடவடிக்கைகள் என நம்மை வியக்க வைக்கிறார் ஆசிரியர்!

நாட்டு நடப்பைச் சிந்திக்கிறார், வாழ்வியல் சிந்தனைகள் எழுதுகிறார், ஏராளமான பேச்சுகள், எழுத்துகள், நாள்தோறும் நடைப் பயிற்சி என அவரின் உழைப்பிற்கும், நேர்த்திக்கும் ஈடுஇணை கிடையாது! எங்கள் வீட்டிற்கு ஆசிரியர் அவர்களும், மோகனா அம்மையாரும் வந்துள்ளார்கள். அம்மா அவர்களும் என்மீது மிகுந்த அன்பைச் செலுத்துவார்கள். குடும்பம் வேறு, கொள்கை வேறு என்றில்லாமல் இந்த இயக்கம் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கியுள்ளது. இவ்வளவு நேரம் நான் சொன்ன அத்தனை செய்திகளுக்கும் பின்னால் இந்த இயக்கமும், இந்தக் கொள்கையும்தான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது! நன்றி. ♦