சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற தண்டனைக்கு எதிரான உடன்படிக்கை

2023 கட்டுரைகள் டிசம்பர் 16-31, 2023 தொடர்கள்

அய்.நா. பொதுச்சபையால் 10.12.1984 அன்று ஏற்கப்பட்டு 26.6.1987 அன்று நடைமுறைக்கு வந்த இந்த உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள்:
இந்த உடன்படிக்கையில் பங்கேற்கும் அரசுகள்: அய்.நா. அமைப்புத் திட்டத்தின் தத்துவங்கள், நோக்கங்கள் ஆகியவை சொல்வது போல மானிடக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உரித்தான மாற்ற முடியாத சமானமான உரிமைகளை ஒப்புக்கொள்வதே உலகில் சுதந்திரமும் சமாதானமும் நீதியும் நிலவ வழி என்பதைக் கருத்திலிருத்தியும், மனிதப்பிறவியின் உள்ளார்ந்த மாண்பிலிருந்து அவ்வுரிமைகள் பிறப்பதை ஒப்புக்கொண்டும்,

_அய்.நா. திட்டத்தில் குறிப்பாக விதி 55இன் கீழ் மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் உலகம் முழுவதிலும் மதிக்கப்படவும் நடைமுறைப்படுத்தப்படவும் வகை செய்ய அரசுகளின் கடப்பாட்டைக் கருத்திலிருத்தியும்,

_சர்வதேசிய மனிதவுரிமைப் பிரகடன விதி 5, குடியுரிமையும் அரசியலுரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையின் விதி 7 ஆகிய இரண்டுமே எவரும் சித்திரவதை, கொடுமையான மனிதத்தன்மையற்ற அவமானப்படுத்தும் வகையில் நடத்தப்படுதல், அத்தகைய தண்டனை ஆகிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்படக்கூடாது என்று கூறுவதை மதித்தும்,

_அய்.நா. பொதுச்சபை 9.12.1975இல் ஏற்றுக்கொண்ட சித்திரவதை முதலிய கொடுமையான மனிதத்தன்மையற்ற அவமதிக்கும் வகையில் நடத்தப்படுதல் அத்தகைய தண்டனைகள் ஆகியவற்றுக்கு ஆளாக்கப்படுவதிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பளிப்பது பற்றிய பிரகடனத்தை மதித்தும்,

_ உலகெங்கும் சித்திரவதை முதலிய கொடுமையான மனிதத் தன்மையற்ற அவமதிக்கும் வகையில்
நடத்தப்பட்டால், அத்தகு தண்டனைகளுக்கெதிரான போராட்டத்தை இன்னமும் வலுவாக்க விரும்பி கீழ்க்கண்டவாறு ஒப்பந்தம் செய்து
கொள்கின்றன.

பகுதி 1

விதி 1

இந்த உடன்படிக்கையைப் பொறுத்த வரையில் ‘சித்திரவதை’ என்ற சொல் ஒருவருக்கு, அவரிடமிருந்தோ, மூன்றாவது ஆளிடமிருந்தோ தகவல்களையோ ஒப்புதல் வாக்குமூலத்தையோ பெறுவதற்காக மனதார தெரிந்தே உடலுக்கோ, மனதுக்கோ கடும் வலியையோ, துன்பத்தையோ ஏற்படுத்தக்கூடிய செயலைச் செய்தல் என்று பொருள். அவரோ, மற்றவரோ செய்த அல்லது செய்ததாகக் கருதப்படுகிற ஒரு குற்றத்துக்குத் தண்டனையாக அச்செயல் அமைந்தாலோ, அவரையோ வேறொருவரையோ அச்சுறுத்தவோ கட்டாயப்படுத்தவோ செய்யப்பட்டாலோ அல்லது பாகுபாடு காரணமாக அமைந்தாலோ கூட அது ‘சித்திரவதை’தான். அரசு அதிகாரி அல்லது அரசினால் அதிகாரம் தரப்பட்ட ஒருவரால் அந்த வலியோ, துன்பமோ இழைக்கப்பட்டால் அல்லது அவரது அனுமதி, தூண்டுதல்
அல்லது அவருக்குத் தெரிந்து இழைக்கப்பட்டால் இந்த உடன்படிக்கையின்படி அது ”சித்திரவதை’என்று பொருள். ஆனால், அத்தகைய வலியோ
துன்பமோ சட்டபூர்வ தண்டனைகளாக அமைந்தாலோ, அத்தகைய சட்டபூர்வ தண்டனைகளின் பகுதியாகவோ, தொடர்புடையதாகவோ அமையும்போது அது இந்த வரையறையுள் வராது…

விதி 2

1. ஒவ்வொரு அரசும் தனது கட்டுப்பாட்டில் உள்ள நாட்டில் சித்திரவதைக் கொடுமை நிகழ்வதைத் தடுக்க சட்டமியற்றல், நிர்வாக ஆணை, நீதித்துறை நடவடிக்கை உள்ளிட்ட பலவித நடவடிக்கைகளையும் பயனுள்ள வகையில் எடுக்கும்.

2. சித்திரவதையை நியாயப்படுத்துவதற்காக போர், போர் அச்சம் ஏற்படுத்தும் சூழல் எந்தவித பொதுவாழ்வு நெருக்கடி நிலைமையும் உட்பட எந்தவித அசாதாரண சூழ்நிலையையும் காரணம் காட்டக்கூடாது.

3. சித்திரவதையை நியாயப்படுத்த மேலதிகாரியின் ஆணையையோ ஒரு பொது அதிகாரியின் ஆணையையோ காட்ட முடியாது.

விதி 3

1. ஒரு மனிதரை தன் நாட்டிலிருந்து வெளியேற்றவோ, திருப்பியனுப்பவோ, இன்னொரு நாட்டிற்கு விசாரணைக்காக அனுப்பவோ இந்த அரசுகள் நினைக்கும் வேளையில், அவ்வாறு அனுப்பப்படக்கூடிய நாட்டில் அந்த மனிதர் சித்திரவதைக்கு ஆட்படுத்தப்படக்கூடிய ஆபத்திருக்கிறது என்று நம்புவதற்கு வலிய காரணங்கள் இருந்தால் அவர் அப்படி வெளியேற்றப்படக்கூடாது.

விதி 4

1. ஒவ்வொரு அரசும் எல்லா சித்திரவதை நடவடிக்கைகளும் தனது குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றங்கள் என்று நிர்ணயிக்கப்
படுவதை உறுதி செய்யும். சித்திரவதை செய்வதற்கான முயற்சியில் இறங்குவதும், சித்திரவதையில் பங்கேற்றல் அல்லது ஒத்துழைத்தல் ஆகியவையும் அதே விதமாக நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்யும்.

2. இவ்வரசுகள் இக்குற்றங்களின் தீவிரத் தன்மையையும் கணக்கிலெடுத்துக்கொண்டு அதற்குப் பொருத்தமான தண்டனைகளை நிர்ணயிக்கும்.

விதி 10

1. சித்திரவதைக்கு எதிரான தடை பற்றிய கல்வியும் தகவலும் சட்டத்தை நிலைநாட்டும் பணியாளர்கள், காவல்துறை, ராணுவம் இருசாராரும் பெறும் பயிற்சிகளில் முழு இடம் பெறும். மருத்துவப்பணியில் உள்ளோர், பொது நிருவாகிகள், மற்றபடி கைது, சிறைவைப்பு- அடைப்பு முதலியவற்றோடு பணி நிலைத் தொடர்புடையோர் அனைவரது பயிற்சிகளும் அப்படியே. இது விடுபட்டு விடாமல் இவ்வரசுகள் பார்த்துக்கொள்ளும்.

2. மேற்கண்ட பணி செய்வோரின் பணி
களும் கடமைகளும் பற்றிய விதிகள் நியதிகள் ஆகியவற்றில் இத்தடைபற்றிக் குறிப்பிடப்படும்.

விதி 11

எவ்வித கைது- _ சிறைவைப்பு அடைக்கப்படல் ஆகியவற்றுக்கு ஆட்படும் நபர்கள் எப்படி
வைத்துக்கொள்ளப்பட வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கான விசாரணை விதிகள், நியமங்கள், முறைகள், பழக்கங்கள், ஏற்பாடு
கள் ஆகியவற்றை தத்தம் நாட்டில் இவ்வரசுகள் சீரான விமர்சனங்களுக்கு உட்படுத்தும்.

விதி 12

தனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் எங்கேனும் சித்திரவதைச் செயல் ஏதும் நடந்திருக்கலாம் என்று நம்ப நியாயமான காரணங்கள் இருந்தால் அங்கெல்லாம் இதற்குத் தகுந்த தனது அதிகாரிகள் உடனே, நேர்மையான விசாரணை நடத்துவார்கள் என்பதற்கும் இவ்வரசுகள் உறுதி செய்யும்.

விதி 13

இவ்வரசுகள் ஒவ்வொன்றும் அதன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தான் சித்திர
வதை செய்யப்பட்டதாகக் கூறும் எவருக்கும் அதன்கீழ் பணியாற்றும் தகுந்த அமைப்பிடம் முறையீடு செய்யவும், வழக்கு விரைவாகவும் நியாயமாக விசாரிக்கப்படவும் உறுதி செய்ய வேண்டும். அந்தப் புகாரினாலோ, அதில் சாட்சியாக வந்ததனாலோ அவரோ மூன்றாவது நபரோ அச்சுறுத்தப்படவோ அநியாயமாக நடத்தப்படவோ பாதுகாக்கப்படுவார்கள் என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதி 14

1. இவ்வரசுகள் ஒவ்வொன்றும் தனது சட்ட அமைப்புமூலம், சித்திரவதைக்கு ஆளான ஒருவர், பரிகாரம் பெறவும் எந்த அளவு முடியுமோ அந்த அளவு மறு சீர்மை உட்பட இழப்பீடு பெறவும் நடைமுறைப்படுத்திக் கொள்ளக்கூடிய உரிமையை உறுதிப்படுத்தும். சித்திரவதையால் ஒருவர் உயிரிழந்தால் அவரைச் சார்ந்திருந்தவர்கள் இழப்பீடு பெறுவர்.

2. இவ்விதியில் கண்ட எதுவும் பாதிக்கப்பட்டவரோ மற்றவர்களோ தத்தம் தேசியச் சட்டத்தின்கீழ் இழப்பீடு பெறும் உரிமையைப் பாதிக்காது.

விதி 15

சித்திரவதை செய்யப்பட்டு ஒரு வாக்குமூலம் பெறப்பட்டது என்று நிறுவப்பட்டுவிட்டால், அந்த வாக்குமூலம், சித்திரவதை செய்தவர் என்று குற்றம்சாட்டப்பட்டவர்க்கு எதிராக அன்னியில், எந்த விசாரணையிலும் சாட்சியாக ஏற்கப்பட முடியாதென்பதையும் இவ்வரசுகள் உறுதி செய்யும். ♦