அய்யாவின் அடிச்சுவட்டில் – இயக்க வரலாறான தன் வரலாறு (320) – கி. வீரமணி

2023 அப்படிப்போடு ஆகஸ்ட் 1-15,2023

துடிக்கச் செய்த துரை. சக்ரவர்த்தி மரணம்

சென்னை பெரியார் திடலில் 21.12.2003 அன்று நீதியரசர் பி.வேணுகோபால் அவர்களுக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினோம். அவ்வுரையில்,பாராட்டுதலுக்கும் நம்முடைய நிரந்தர போற்றுதலுக்கும் என்றென்றைக்கும் உரியவராகவும், நாங்கள் பல்வேறு நிலைகளிலும் அவர்களுக்குக் கடமைப்பட்டவர்கள் என்ற உரிமையுடையவர்களாகவும் இருந்துகொண்டு பார்க்கக்கூடிய 85 வயது நிறைந்த இளைஞர் எங்கள் அய்யா நீதியரசர் வேணுகோபால் அவர்கள்!

அய்யா விழா நாயகர் நீதியரசர் அவர்களுடைய இந்த 85ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவென்று சொல்லும்போது எத்தனையோ சிறப்புகளை உள்ளடக்கியது. அவர்களுடைய அனுபவங்கள் என்பவை நமக்கெல்லாம் இப்படிப்பட்ட பாடங்கள் மூலமாக, அந்தச் செய்திகள் பாடங்களாக என்றென்றைக்கும் கிடைக்கக்கூடிய வண்ணம். இங்கே அருமையாக நூல் வாயிலாகத் தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான் இங்கு வெளியிடப்பட்ட “நீதியரசர் வரலாற்றுச் சுவடுகள்’’ என்ற நூலாகும். ஆங்கிலத்திலே, நமது மேதகு ஆளுநர் அவர்கள் அவருடைய மாளிகையிலேயே சிறப்பாக நீதியரசர்கள், மற்றவர்களையெல்லாம் அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதற்குப் பிறகு தமிழிலே இங்கே ஒரு நிகழ்ச்சி இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையிலே வாழ்க்கைக் குறிப்புகள், வரலாற்றுச் சுவடுகளிலே முதல்பாகம். இனி வரவேண்டிய பாகங்களும் இருக்கின்றன என்பதற்கு அதுதான் முன்னோடியான ஓர் அறிவிப்பு.

அந்த வகையிலே,இந்த வாழ்க்கைக் குறிப்புகள் இயக்க வரலாற்றிலே, இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுச் சுவடுகள் மட்டுமல்ல, திராவிட இயக்க வரலாற்றிலேயே ஒரு நினைவு கூரத் தகுந்த ஒரு சுவடு, மாற்ற முடியாத, மறைக்கப்பட முடியாத ஒரு சுவடு என்பதை ஒரு வரியிலே சொல்லிவிட்டார். ஏனென்றால், தீர்ப்புகளை எழுதிப் பழக்கப்பட்டவர் அவர்.

நாம் பல மணி நேரம் சொல்லக்கூடியவற்றை ஒரு சில மணித் துளிகளிலே நீதியரசர் அவர்கள் சொல்லக்கூடியவர்கள். இது அவர்களுக்குக் கைவந்த கலை. உங்களுக்கும் எனக்கும் அது வராது. கேட்க வேண்டியதைக் கேட்பார்கள். புடைக்க வேண்டியதைப் புடைப்பார்கள். சலித்து எடுக்க வேண்டியதைச் சலித்து எடுப்பார்கள். பிறகு எதைக் கொடுக்க வேண்டுமோ அந்தச் சத்தான விஷயங்களை முத்தான வார்த்தைகளிலேதான் அவர்கள் கொத்தாகக் கொடுப்பார்கள். இதுதான் தீர்ப்பாக அமையும் என்று அப்போது குறிப்பிட்டேன்.

நமது அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களது நினைவு நாள்  டிசம்பர் 24 என்பதால், திடலுக்கு அதிகாலை 6:30 மணிக்கெல்லாம் அய்யா நினைவிடத்திற்கு, ம.தி.மு.க.வின் இரு அமைச்சர்களும், மற்ற தோழர்களும் வருவார்கள் என்பதால், அதிகாலையிலே பெரியார் திடலுக்குள் வந்து நுழைந்தேன்; வழக்கமாக என்னைச் சந்திக்கும் கழகத் துணைப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் அவர்களும் பெரியார் திடல் நிருவாகி ப. சீதாராமன் அவர்களும் நான் அழைத்தவுடன் இல்லை; எங்கே என்று தோழர்களிடம் கேட்டேன். அவர்கள் தயங்கிக்கொண்டே மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர் என்றவுடன், எனக்கு ஓர் அதிர்ச்சி. ஏன் என்று நான் கேட்க ஆயத்தமாகும் முன்பே, குரோம்பேட்டை அருகில் நம் ஜீப் விபத்துக்குள்ளாகி, அதில் வந்தவர்களுக்கு சரியான அடி, காயம், ஒருவர் உயிர் பிழைப்பது கடினம் என்று தயக்கத்துடன் கூறினர்; யார். யார் என்று வினவினேன்; பொதுச்செயலாளர் துரை. சக்ரவர்த்தி, கழகத்துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு குணசேகரன் மற்றும் தோழர்கள் தான் அதில் வந்தனர் என்றனர்.

அவர்களில், உரத்தநாடு குணசேகரன் மற்றும் சில தோழர்கள் சென்னை (ஜி.எச்) பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கூறினர்.கழகப் பொதுச்செயலாளர் துரை. சக்ரவர்த்தி அவர்கள் என்னவானார்? என்ற என் கேள்விக்கு, தயக்கத்துடன் மரணம் அடைந்தவர் அவராகத்தான் இருக்கக் கூடும் என்றவுடன், எனது இதயத்தில் சம்மட்டி கொண்டு தாக்கிய பெரும் அதிர்ச்சி; மனம் பதறியது. செயலிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

‘உறுதியாகத் தெரியுமா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டேன்; தகவல் தவறான தகவலாக ஆகிவிடக் கூடாதா என்று ஒரு பகுத்தறிவுக்கு இடம் தராத ஓர் ஆசை என்னை மாறி மாறிப் புரட்டி எடுத்தது!

நிருவாகி சீதாராமன் பல்லாவரம் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று, அங்கே உறுதி செய்த பிறகு, தொலைபேசி பக்கத்தில் சிலையாகி அமர்ந்திருந்த என்னை, அவர் குரல் மீண்டும் இந்த அதிர்ச்சி வார்த்தைகளால் வருணிக்க முடியாத சோகத்திற்கும் இடையில் தள்ளாடிய என்னை_ மிகப்பெரிய துயரப் படுகுழியில் தள்ளியது.

என் சுமையைச் சுமக்க வந்த சுமை தாங்கியை, என் பாசத்திற்குரிய கட்டுப்பாட்டின் இலக்கணத்தை, கடமையின் கொள்கலனை, கொள்கை விளக்கத்திற்கு நம் ஆசான் கொடுத்த பணியை முகம் சுளிக்காமல், முடித்துக் கொடுத்திடும் செயல் வீரனாய்த் திகழ்ந்த கழக ராஜ்யத்தின் எம் சக்ரவர்த்தி எங்கே? எங்கே?
என்று நான் எழுதிய இரங்கல் அறிக்கையில்,

“என் அருமைச் சகோதரனே!
உங்களை கழகத்தில் வளர்த்து, படிப்படியாகப் பக்குவப்படுத்தி, கடமைகளை ஆற்றும் பொறுப்புணர்ச்சி கண்டு ஆயத்தமானவர் என்பதை அறிந்துதானே, கழகப் பொதுச் செயலாளராக்கி, நான் உங்களோடு ஒரு சாதாரண உறுப்பினர் பணிக்கு ஆயத்தமானேன்.

அந்த இடத்தைக் காலியாக விட்டுவிட்டுச் சென்று விட்டீர்களே! இந்தச் சொக்கத் தங்கம் இருந்த இடம் மட்டுமா சூன்யமாகிவிட்டது; என் உள்ளத்திலும்கூட உங்கள் இடம் சூன்யமே!

இன்று அய்யாவின் நினைவு நாள் என்று வந்தோம்; உங்கள் முடிவும் இன்றோ? கொடுமையிலும் கொடுமை இது!

‘பெரியாரின் ஊழியன்’ என்று கூட்டந்தோறும் கூறிடும் கட்டுப்பாட்டுக்குச் சின்னமான சிங்கமே! உன் உயிர் குடிக்கவோ இந்த பாழும் விபத்து!
தாங்கிக் கொள்ள முடியவில்லை; சுமை இறக்க நினைத்தேன்; சுமையை ஏற்ற நீங்கள் எங்களுக்கே எனக்கே விட்டு விட்டுச் சென்றது குறித்து என்ன கூறுவேன்?
என் உடலின்மீது உங்கள் கண்ணீர் விழும்; என் பணி தொடர்வீர் என்பதைத் தலைகீழாக மாற்றி விட்டாயே சகோதரா!’’ என்று என்னுள்ளம் ஏங்கி, அழுது புலம்பும் அளவிற்கு அவரது இழப்பு என்னை இடித்து நிலை குலையச் செய்தது.’’ என்று குறிப்பிட்டேன்

தலைவர்கள் நேரில் இரங்கல்

தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி 24.12.2003 அன்று காலை சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் ம.தி.மு.க. பிரமுகர்கள், தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் டாக்டர். கா. காளிமுத்து, மனித நேய நண்பர்கள் குழுத் தலைவர் இரா. செழியன், தமிழகக் காங்கிரசின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மேனாள் அமைச்சர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன், நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம், பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியின் தாளாளர், நிதி வல்லுநர் ச. இராசரத்தினம், பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளர் டாக்டர் வீ. சுந்தரராசுலு,டாக்டர் ஏ. இராசசேகரன், டாக்டர் எம்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் திராவிடர் கழகப் பொதுச்செயலாளரின் எதிர்பாரா மரணச் செய்தியை அறிந்து எம்மிடம் தங்கள் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டனர்.
செய்தி அறிந்து, அன்றைய தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின், பத்திரிகையாளர் சின்னகுத்தூசி அவர்களுடன் பெரியார் திடலுக்கு வந்து எம்மிடம் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.

அய்யம்பேட்டையில் துரை. சக்ரவர்த்தி அவர்களின் உடல் வைக்கப்பட்டு இருந்த அவரது இல்லத்தின் வாயிலில் 25.12.2003 அன்று நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்குத் தலைமை வகித்து நாம் உரையாற்றுகையில்,

“திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராய் எனக்கு ஓர் அங்கமாய், பெரியாரின் போர்ப்படைத் தளபதிகளில் ஒருவராய், கழகத் தோழர்களுடைய உற்ற காவலனாய், சமுதாய நீதிக்கும், பெரியாரின் லட்சியங்களுக்கும் ஒரு பெரிய விளக்க உரைப் பேராசிரியராக வாழ்ந்து அண்மைக்காலத்திலே சிறப்பான ஒரு பொறுப்பை ஏற்று, மிகப் பெரிய அளவுக்கு திராவிடர் கழகத்திற்கு இரண்டாம் தலைமுறை தலைமை ஏற்கிறது. பொறுப்பு ஏற்கிறது, தலைமுறை இடைவெளி இல்லாமல், தந்தை பெரியார் கண்ட கொள்கைகள் உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கு நல்ல அளவிற்கு கொள்கைப் பட்டறையிலே தயாரிக்கப்பட்ட வாட்படையாக பல்வேறு சோதனைகளும், பல்வேறு சவால்களும் கொள்கைகளுக்கு தோன்றியுள்ள இந்தக் காலகட்டத்தில் ஓர் அற்புதமான, அரிய, சிறப்பான, என்றென்றைக்கும் கிடைக்க முடியாத அளவிற்கு பல வகையான ஆற்றல்களை உள்ளடக்கி நல்ல பேச்சாளராய், சிறந்த எழுத்தாளராய், கட்டுப்பாடுமிக்க ஒரு தொண்டனாய், தோழர்களிடம் பாசத்தோடு பழகக்கூடியவராய், தன் குடும்பம் என்பது எங்களுக்கெல்லாம் எப்படி வெறும் முகவரியுள்ள ஒரு தெருவில் இருக்கிற இல்லத்துக் குடும்பம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தமிழர்கள் மட்டுமல்ல, மனித நேயமிக்கவராய் கட்சி, ஜாதி, மதம் இவற்றையெல்லாம் கடந்து, பால் உணர்வு இவற்றையெல்லாம் கடந்து, மனித நேயத்தை முன்னிலைப்படுத்தி, தன்னைப் பின்னாலே தள்ளி தொண்டறம் என்பதைச் செய்வதிலே 54 வயதிலே அவர் பதித்த முத்திரையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

அதன் காரணமாகத்தான் 45 நாள்களுக்கு முன்னாலே அவருக்கே கூட தெரியாத அளவுக்கு அவரே விரும்பாத நிலையிலேகூட அவரை வற்புறுத்தி சுமையை நான், அவருடைய தோள்கள் வலிமையான தோள்கள், அவருடைய கால்கள் பயணத்தைச் செய்யக்கூடிய கால்கள், அவருடைய சிந்தனை பெரியாரின் சிந்தனை; அவருடைய கட்டுப்பாடு மிகப் பெரிய அளவிற்கு இந்த இயக்கத்தை கட்டிக் காக்கக் கூடிய கட்டுப்பாடு என்ற உணர்வோடு அவர் மீது சுமத்தினோம். திருச்சி ஒரு வரலாறு படைத்தது என்று சொல்லக்கூடிய வகையிலே எடுத்துக் கொண்ட நேரத்திலிருந்து பறக்கும் தேனீயாய், கொள்கை வீரராகச் சுழன்று சுழன்று வந்தார். அவர்கள் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியவராக இருந்தார்.

அவருடைய ஒவ்வொரு சிறப்பும் சாதாரணமானதல்ல என்ற கொள்கைக்குரிய அளவிலே, அவர்கள் எத்தனையோ சிறப்புகளை, வாய்ப்புகளை உள்ளடக்கியவர். எவ்வளவு இருந்தாலும், பல்கலைக் கொள்கலனாய், பல்வகை ஆற்றலாளராய், இருந்த அவர் மிகுந்த அடக்கம் கொண்டவர். அன்பு கொண்டு எவரிடமும் பேசக்கூடியவர்; எங்களிடமெல்லாம் ஒரு சகோதரனைப்போல நாம் கருதிப் பழகுகிறபோது, ஒரு தந்தையிடம், ஓர் அடக்கமுள்ள தனயன் எப்படி தூரத்திலே மிகுந்த அடக்கமாக இருப்பாரோ அப்படித்தான் இருப்பார். அவரது மறைவு என்பது இன்னமும் எங்களால், என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்துகொண்டிருக்கிறது.

கண்ணீராய், பல நேரங்களிலே ரத்தக் கண்ணீராய் வடித்து சுமக்கக்கூடிய அளவிற்கு இந்தச் சோகத்தை அவர் நமக்கு ஏற்படுத்தியிருக்கிறார். அவர் விரும்பி ஏற்படுத்திய சோகமல்ல. இழப்புகள் எத்தனையோ முறை நமக்கு ஏற்பட்டிருக்கின்றன. அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய இழப்பிலே இருந்து, அண்ணாவின் இழப்பிலே இருந்து, அன்னை மணியம்மையாரின் இழப்பிலே இருந்து, திராவிடர் கழகம் – திராவிடர் இயக்கங்களுக்கு எத்தனையோ இழப்புகள் அடுக்கடுக்காக வந்தாலும், அந்த இழப்புகளிலே மாறுபட்ட இழப்பு இது. காரணம் என்னவென்றால், அவர்கள் அந்த இழப்பிற்கு, நாம் அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு கொஞ்சம் நம்மை தயாரித்து தந்தார்கள். அந்த இழப்புக்கு ஆயத்தப்படுத்தினார்கள். ஆனால், இப்படி ஆயத்தப்படுத்தக் கூட இவர் தயாராக இல்லை காரணம், இயற்கை அவர் உயிரைப் பறித்தது.

நான் இங்கே வந்தபோது, அந்தச் செல்வங்களையெல்லாம் பார்த்து, அவருடைய துணைவியாரை அன்புச் சகோதரியாரைப் பார்த்து, அவர்கள் கதறியபோதெல்லாம், என்னால் நிற்க முடியவில்லை; இந்தக் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம், ஈடு செய்ய முடியாத சோகம் என்று சொன்னால், கழகத் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கிற சோகம் அதைவிட அதிகம் என்ற உணர்வோடுதான் நாங்கள் எல்லோரும் துயரத்திலே தள்ளப்பட்டிருக்கிறோம் என்றாலும், பயணங்கள் தொடரவேண்டும்.

இந்தக் குடும்பம் என்பது எங்கள் குடும்பத்திற்கு மாறுபட்ட வேறுபட்ட குடும்பம் அல்ல. பெரியாரின் குடும்பம். பெரியார் பயணம் எப்படி முடிவுறாத பயணமோ அதேபோலத்தான் என்னுடைய சகோதரர், கழக சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி, கொள்கை வானத்தில் உயர்ந்திருக்கிற அந்தச் சகோதரர், அந்தத் தளபதியுனுடைய பயணமும், நிற்க முடியாத பயணம்! லட்சியம் நிறைவேறுகிற வகையிலே கஷ்ட நஷ்டங்களை, இனிமையான முகத்தோடு, ஏற்கவேண்டிய பயணம். அந்த எண்ணத்தோடு நம்முடைய பயணத்தை நாம் தொடருகிறோம்.

அவரை அடக்கம் செய்கிறோம் என்று நாம் கூற முடியாது, அவரை நாம் இன்னும் சில மணித் துளிகளில் புதைக்கப் போகிறோம் என்பது ‘சடங்கான’ வார்த்தை. ஆனால் எங்களைப் பொருத்தவரையிலே இன்றைக்கு நாம் அவரைப் புதைக்கப் போவதில்லை… விதைக்கப்போகிறோம். அதிலே முளைகள் கிளம்பும்.
நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். பணியின் வேகம், லட்சியத்தின் தீவிரம், கொண்ட குறிக்கோளை அவர் இல்லாத நிலையில், சோர்வில்லா உறுதியோடு பணியாற்றி, சக்ரவர்த்தி மறையவில்லை; நம்மில் நிறைந்திருக்கிறார்  நம் ரத்த நாளங்களிலே உறைந்திருக்கிறார் என்று காட்டுவோம். வையச்சேரி என்ற சிற்றூரில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்திலே பிறந்த ஒரு சகோதரன். வையச்சேரி என்ற சிற்றூர் எங்கிருக்கிறதென்று தெரியாது. ஆனால், வையச்சேரி என்ற சிற்றூரில் பிறந்த அந்தச் சகோதரன், இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கிற எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒரு சகோதரராக, வையச்சேரியிலும், ஏன் அதற்குப் பிறகு வையம் புகழ வாழ்ந்த அய்யம்பேட்டையிலும், உலக வரைபடத்திலே தன்னுடைய தொண்டறத்தால் நிறுத்தியிருக்கிறார். எனவே, அவருக்கு வீரவணக்கம்!

நாங்களெல்லாம் பெரியாருடன் பயணம் செய்தவர்கள், பெரியாருடைய கொள்கைகளை எடுத்துச் சொன்னவர்கள் என்ற பெருமை மட்டும்தான் உண்டு. ஆனால், பெரியாருடன் இணைந்தேன் என்று சாவிலும் காட்டிய சகோதரா…! உன்னுடைய சரித்திரம் மற்றவர்களுக்குக் கிடைக்க முடியாத ஒரு சரித்திரம். பெரியாருடைய நினைவு நாள் உன்னுடைய நினைவு நாள்! எங்களுடைய இயக்கத்தின் வரலாற்றிலும் சிறப்பான ஓர் ஏடு! மறக்க முடியாத ஏடு!! புதிய அத்தியாயத்தை
நீ தொடங்கி வைத்திருக்கிறாய். முடிப்பது

எங்கள் கடமை! இந்த உறுதியை நிறைவேற்றுவோம்! வீர வணக்கம்!
வீர வணக்கம்!! வீரவணக்கம்!!!

இந்த இரங்கல் கூட்டத்தில் மேனாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்டச் செயலாளருமான கோ.சி. மணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் ஆர். நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் உரையாற்றினர்.இந்த அதிர்ச்சிச் செய்தியைத் தாங்கமுடியாது நிலை
குலைந்திருந்த நேரத்தில் ‘விடுதலை’ மேலாளர் துரை. ராகவன் 26.12.2003 அன்று மறைவுற்றது. நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

‘விடுதலை’ மேலாளர் துரை ராகவன்

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவர் கொள்கை உணர்வோடு‘விடுதலை’ மேலாளர் பொறுப்பேற்று,எவ்வித ஊதியமும் பெறாது தொண்டறமாக திறம்பட நிருவாகப்பணிகளைச் செய்தவர் ஆவார். ‘விடுதலை’க்குப் புதிய இயந்திரம் வாங்குவதில் பெரும் பொறுப்பு ஏற்றுக்கொண்டு செயல்பட்டவர்; சிறப்பாக அதனை நிறைவேற்றிக் கொடுத்தவர். சிறிது காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டன; அந்நிலையிலும் அலுவலகப் பணிகளைத் தம் கடமையெனச் செய்தவர்.தலைமைக் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் மானமிகு கோ. சாமிதுரை அவர்களும், தலைமைச் செயற்குழு உறுப்பினர் துரை. சந்திரசேகரன், கடலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஏ.வி. இரமணன், சிதம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ஆர். பன்னீர்செல்வம், விழுப்புரம் மாவட்டக் கழகத் தலைவர் கா.மு. தாஸ் முதலிய பொறுப்பாளர்கள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.