ஆசிரியர் பதில்கள்

2023 ஆசிரியர் பதில்கள் ஜூன் 1-15, 2023
தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்!
1. கே:  கர்நாடக வெற்றியும், கலைஞர் நூற்றாண்டு விழாவும் வெற்றிக் கூட்டணிக்குக் களம் அமைக்கும் நிலையில் மதச் சார்பற்ற தலைவர்களுக்கு தாங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்ன?      – எம். சுரேஷ், மதுரவாயல்.
ப : ஒன்றுபட்டால்  (அனைத்துக் கட்சித்தலைவர்கள்) உண்டு வாழ்வு; இன்றேல் அனைவருக்கும் தாழ்வு. – மீண்டும் ஜனநாயகம்
இருக்க வாய்ப்பிருக்காது!
2. கே: கள்ளச் சாராயம் காய்ச்சுவது காவல் துறைக்குத் தெரியாமல் போகுமா? காவல் துறையை இன்னும் கடுமையாகச் சீர்செய்ய வேண்டியது கட்டாயம் அல்லவா?                                                             – எம். காமாட்சி, செஞ்சி.
ப : நூற்றுக்கு நூறு சரி–_தங்கள் அனுமானம். பாழாய்ப் போன, ‘பழைய மாமூல்’ நாதன்களின் திருவிளையாடல்தான்!
3. கே: பழங்குடி மக்களையும், பட்டியல் இனத்தவரையும் வாக்கு வங்கிக்காக பதவி தந்து ஏமாற்றும் பா.ஜ.க. அரசு, அவர்களை ஒதுக்கி வைப்பதிலும் உறுதியாக உள்ளதை நாடு தழுவிய அளவில் எதிர்க்க வேண்டாமா?     – அ. வைகுண்டன், திருச்சி.
ப : அவர்களுக்கான ஸ்காலர்ஷிப் இடங்கள் குறைக்கப்பட்டுவிட்டது எதைக் காட்டுகிறது? ஆதிவாசிகளான பழங்குடி காட்டுவாசி -‘வனவாசி’களான இவர்களை அவமானப்படுத்துபவர்கள் யார்? புரியவில்லையா? குடியரசுத் தலைவரையே பா.ஜ.க. ஸிஷிஷி அரசு _ புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பில் அவமானப்படுத்தும் அளவுக்கு சென்றுள்ளது. அதன் எதிர்விளைவாய் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எங்கும் கிளம்பிவிட்டதே!
4. கே: ஆளுநருடன் அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்கள் புகார் மனுவுடன் சந்திப்பதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– வை. செல்வன், கள்ளக்குறிச்சி.
ப : ஆளுநர் -அ.தி.மு.க. உறவு அவர்களுக்கே கூட வருங்காலத்தில் ஆபத்தான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று சிந்திக்கக்கூடத் தெரியாத அறியாமையின் வெளிப்பாடு ‘அண்ணா’ – ‘திராவிட’ இரண்டு சொற்களைக் கட்சிப் பெயரிலிருந்து அகற்றிட்ட அரசியல் அவலம் அது!
5. கே: கர்நாடகாவின் புதிய காங்கிரஸ் அரசு கல்வி நிறுவனங்களில் புர்கா (ஹிஜாப்) அணிவதை உடனே அனுமதித்துள்ளது. ஒன்றிய ஆட்சியையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றினால் பா.ஜ.க. சீர்கேடுகள் விரைந்து களையப்படும் என்பதற்கான முன்னோட்டமாக இதைக் கொள்ளலாமா? – ஈ.  மகேஷ்,  சேலம்.
ப : நிச்சயமாக, இதிலென்ன சந்தேகம்? சிறுபான்மை மக்கள் மத்தியில் இப்போது
தான் மகிழ்ச்சி கலந்த நம்பிக்கை _ கர்நாடகத்தில் பிறந்திருக்கிறது! இல்லையா?
6. கே: டில்லி நிர்வாகம் சார்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் சட்டம் இயற்றும் ஒன்றிய அரசின் செயல் பாசிசம் அல்லவா?
– ஏ. கலையரசன், திண்டுக்கல்.
ப : பச்சையான பாசிசம்  உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை  இது சட்டப்படி நீதிமன்றத்தில் அடிபட்டுப் போவது உறுதி
7. கே: திராவிட மாடல் அரசுக்கு மக்களிடமிருந்து மின்துறை, டாஸ்மார்க், காவல்துறை இவற்றிலிருந்துதான் கெட்டபெயர். சரி செய்யவில்லை என்றால் எதிர்காலத்தில் பின்னடைவு ஏற்படும் என்ற கருத்து சரியா?     – ச. சிவசங்கர், காஞ்சிபுரம்.
ப : நூற்றுக்கு நூறு சரியான கருத்தல்ல இது; என்றாலும் கவனத்தில் கொள்ளவேண்டிய அலட்சியப்படுத்தக் கூடாத கருத்து இது!
8. கே: முற்றும் துறந்த முனிவர்கள், ஞானிகள் என்று சொல்பவர்களிடம் ரூபாய் பல இலட்சம் கோடிகளும், சொகுசு பங்களாக்களும் உள்ளனவே! இவர்களிடம் (மிஜி) வருமான வரி சோதனை நடைபெறுவது இல்லையே! காரணம் என்ன?   – பொ. அறிவன், வேலூர்.
ப : அவர்கள் ‘முற்றும் துறந்தவர்கள் அல்ல’; முற்றும் திறந்தவர்கள்  வருமான வரி சோதனையில் எல்லா அறை, அலமாரி, பூஜை அறை முதற்கொண்டு திறந்து காட்டும் முதலாளி சந்நியாசிகள் கடவுளர்களுக்கு சொத்து உள்ளபோது
எங்களுக்குக் கூடாதா என்று காவிகள் கேட்கும் குரல் கேட்கிறதா உங்களுக்கு?