நம்மை நமக்கு அடையாளம் தெரியவேண்டும்! 

2023 கட்டுரைகள் மற்றவர்கள் ஜூன் 1-15, 2023

வி.சி. வில்வம்

“கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு உட்காருவான்,” என்பது பொன்மொழி.

“கோபம் என்பது தற்காலிக பைத்தியம்“, என்பதும் இன்னொரு பொன்மொழி! கோபத்தில் இருக்கும் போது, மனநிலை சரியில்லாதவர்கள் போல நடந்து கொள்வோம் என்பது இதற்குப் பொருள்!

கோபத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏராளமான பொன் மொழிகளும், எண்ணற்ற பழமொழிகளும் காணக் கிடைக்கின்றன.
ஒரு மனிதர் திறமைக் குறைவாக கூட வாழ்ந்துவிடலாம். கோபம் இருந்தால் அழிவு பலவகைகளில் ஏற்படும்! கோபம் வரும் போது நிதானம் குறைகிறது, வார்த்தைகளில் கடுமை ஏற்படுகிறது, செயல்கள் தவறாகின்றன. மனநிலை பிறழ்ந்து போகிறது!

மனிதன் உருவாகி பல இலட்சம் ஆண்டுகள் ஆகின்றன. அதுமுதலே மனித கோபத்தால் உலகம் சந்தித்த அழிவுகள் கோடி!

ஒரு மனிதருக்கு இருக்கவே கூடாத குணங்கள் எனப் பட்டியல் இட்டால் நிறையவே சொல்லலாம். அதில் 90 விழுக்காடு கோபத்தால் உருவானவை!

கோபம் கொள்ளாத மனித வாழ்க்கை மிக எளிதாக இருக்கும். அவர்களிடம் பதற்றம், மன அழுத்தம் இருக்காது, துன்பத்தில் கூட முகம் தெளிவாகக் காட்சியளிக்கும், நெருக்கடி நிலையை அவர்களிடம் காணவே முடியாது. ஏனெனில் கோபமற்ற மனிதர் நிதானம் இழப்பதில்லை; அப்படியான மனிதர் பக்குவத்தில் வாழ்கிறார்!

கலைஞர் அவர்களைக் கூர்ந்து கவனித்தவர்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கும். கலைஞரை ஜாதி ரீதியாக, குடும்ப ரீதியாக, அரசியல் ரீதியாக திட்டமிட்டு குழு, குழுவாகச் சேர்ந்து காழ்ப்புணர்ச்சியைக் கொட்டினார்கள்.

கலைஞர் அவர்கள் புகழின் உச்சியிலும், அதிகாரத்தின் எல்லையிலும் இருந்து சென்றவர்.
ஆனால் எந்த எதிரிகளையும் பழிவாங்கியதில்லை. யார் மீதும் தேவையற்ற கோபத்தை வெளிப்படுத்தியவர் இல்லை. அதேநேரம் பார்ப்பன சூழ்ச்சியால் கலைஞர் குறித்து தவறான தகவல்கள் பொதுப் புத்தியாக மாற்றப்பட்டன.

செய்தியாளர்கள் கூட மிக அதிகமாக சூழ்ந்து கொண்டு, கலைஞரை அசிங்கப்படுத்த நினைத்து கேள்வி
களைக் கேட்பர். கலைஞருக்குக் கோபம் ஏற்படுகிற அத்தனை குட்டிக் கரணங்களையும் நிருபர்கள் செய்வர். ஆனால் கலைஞர் சாதுர்யமாகப் பதில் சொல்வாரே தவிர ஒருபோதும் கோபம் கொண்டதில்லை. யார் கோபத்தை உமிழ்ந்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுப்பது தான் கலைஞர் பாணி.

கேள்வி கேட்காமல் இருந்திருக்கலாமோ என்கிற மனநிலையும், தம் உள்நோக்கம் வெளிப்பட்டு விட்டதே என்கிற குடைச்சலும் சம்பந்தப்பட்டவருக்கு ஏற்படும். அதை ஏற்படுத்தும் திறன் படைத்தவர் கலைஞர். அதனால் தான் எந்த மன அழுத்தமும், துன்பமும் இல்லாமல் நீண்ட காலம் தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்தவர்; மறைந்தும் வாழ்பவர்!

பொதுவாக மூக்கு மேல் கோபம் என்று சொல்வார்கள். எதற்கெடுத்தாலும் “படக் படக்“ எனக் கோபம் கொள்வது. ஒரு சிலர் உரையாடலின் போது 2 நிமிடம் கூட தாக்குப் பிடிக்க மாட்டார்கள், கோபம் வந்துவிடும். சிலருக்கு 5 நிமிடம் தாக்குப் பிடிக்கும்; சிலரோ அரை மணி அமைதி காப்பர். ஆக அவரவர் பக்குவத்தின் அடிப்படையில் கோபம் வெளிப்படுகிறது.

சிலர் இருக்கிறார்கள், அவர்களை அரிதாகவே பார்த்திருப்போம்! அமைதியாகப் பேசுவார்கள், நிதானமாகச் செயல்படுவார்கள், அவர்கள் மீது விமர்சனம் எனும் நெருப்புத் துண்டுகளை வைத்தாலும் கோபமே இல்லாமல் பதில் சொல்வார்கள். இடையிடையே சிரித்தபடியும் இருப்பார்கள்.
ஒரு மனிதருக்கு எவ்வளவு சிறப்புக் குணங்கள் இருந்தாலும், அடிக்கடி கோபப்படுகிற போது மற்ற அனைத்து மதிப்புகளையும் இழந்துவிடுவார்கள்!

“குண்டூசி தங்கத்தில் இருப்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?”, என்கிற சொற்றொடர் ஒன்று உண்டு. ஆக கோபம் கொண்ட ஒருவர் குணமிழந்த மனிதரே ஆவர்!

கோபத்தை எப்படி குறைத்துக் கொள்வது? எல்லாம் பழக்கம் தான்! சுய பயிற்சியால், தொடர் முயற்சியால் அனைத்துமே சாத்தியம்! அதற்கு முன் நம்மிடம் உள்ள நல்ல குணங்கள், கெட்ட குணங்கள் என்ன என்பதை உணர்ந்து கொள்ளும் பகுத்தறிவுச் சிந்தனை அவசியம். பிறர் நம்மைக் குறித்துக் கூறுவதை விட, நமக்கே நம்மைப்பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும்!

நம்மை நமக்கு அடையாளம் தெரிந்து
விட்டால் நாம் வெற்றி பெற்றுவிடலாம்!