மரணத்திற்குப் பின்… பேய்? – மருத்துவம்

2023 மருத்துவம் மார்ச் 16-31,2023

மருத்துவர் இரா. கவுதமன்

மனிதனுக்கு அறிவுத் தெளிவு ஏற்பட்ட காலத்திலும், அதற்கு முன்பும் மரணம் என்பது ஒரு பெரும் புதிராகவும், விடை தெரியாத கேள்வியாகவும் இருந்தது.
மனிதனின் நாகரிகமோ, அறிவோ வளராதகாலத்தில் மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப்பின் என்ன நடக்கும் என்ற எண்ணமும் பல கற்பனைகளை மனித மனதில் தோற்றுவித்தது. அறிவியல் வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும், அறிவியல் பொறிகள் மூலமும், மிக அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த மூடநம்பிக்கைகள் மக்களிடையே வெகு எளிதாகப் பரப்பப்படுகின்றன.

மரணத்திற்குக் காரணம் என்ன, இத்தனை நாள்கள் இயங்கிய மனிதனின் இயக்கம் திடீரென ஏன் நின்றது? அதன் காரணம் என்ன? போன்றவையும், மரணத்திற்குப் பின் என்ன நிகழும் போன்ற எண்ணங்களே பலவித எண்ணங்களுக்கும், கற்பனைகளுக்கும் காரணமாகின்றன. ஆதி மனிதன் தன்னோடு அத்தனை நாள் உடனிருந்தவர்கள், இயங்கிய-வர்கள் திடீரென இயக்கத்தை நிறுத்தியதையும், அவர்களின் நீங்காத நினைவுகளும் புரியாமல் என்ன செய்வது என்று தவித்த காலமும் ஒன்று இருந்தது. உயிரோடு இருந்த காலத்தில் அவர்களோடு வாழ்ந்த, அவர்கள் இயங்கிய நிலைகளை அவ்வளவு எளிதாக, அவனைச் சுற்றி இருந்தவர்களால் மறக்க முடியவில்லை.

ஒன்றாக வாழும் சமூக அமைப்பு, குடும்ப வாழ்க்கை என்று மனிதர்கள் வாழத் தலைப்பட்ட பொழுதுதான் மரணத்தின் தாக்கத்தை அவர்கள் உணர்ந்தனர். அதுவும் மரணம் என்பது ஒரு மீளமுடியாத நிகழ்வு என்பதையும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் மனிதன், தூங்கி எழுவதைப் போல, மீண்டும் எழுந்து வருவார்கள் என்று எண்ணியதன் விளைவே இறந்த உடலோடு, பணியாளர்களுடன், உணவுப் பொருள்கள், காசுகள் போன்றவற்றையும் வைத்து ‘மூடும் பழக்கம் (பிரமிடுகள்) ஏற்பட்டது. நாளடைவில் மாண்டவர் மீளமாட்டார் என்பது தெளிவான பொழுது இறந்த பிணத்தை அப்படியே விட்டு விட்டு மாற்றுக் குடியிருப்புக்கு மாறி வசிக்கும் நிலைமை வந்தது.

பிற்காலத்தில் மனித அறிவு வளர வளர இறந்தவர் மீண்டும் வரமாட்டார் என்று உறுதியாக உணரத் துவங்கிய நிலை வந்ததும், பிணங்களைப் புதைக்கும் பழக்கமும், பிற்காலத்தில் மரப்பெட்டிகளில் வைத்துப் புதைக்கும் பழக்கமும், எரிக்கும் பழக்கமும் மனித சமூகத்தில் நடைமுறைக்கு வந்தன.

மனித நாகரிக, அறிவு வளர்ச்சி ஏற்பட, ஏற்பட மரணமடைந்தவர் உடல்களைப் பதப்படுத்தும் முறை ஏற்பட்டது. மரணமான
உடல்களை அந்தந்தப் பகுதிகளில் பலவகைகளிலும் அகற்றினாலும், மரணமடைந்தவர்களின் நினைவுகள் மட்டும் அழியவில்லை. நிலைத்து நின்றுவிட்ட அந்த நினைவுகளே பல கற்பனைகள் தோன்றவும் காரணமாகிவிட்டன. இந்த நிலை நாகரிகம் வளராத காலகட்டத்-திலிருந்து, அறிவியல் வளர்ந்துள்ள இந்தக் காலம் வரையிலும் நிலை பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் அவர்கள் (இறந்தவர்கள்) நினைவுகள் கடவுள்களாக வழிபடும் நிலையை ஏற்படுத்தியது. அதன் விளைவாகவே நடுகல் வழிபாடு,
குலதெய்வ வழிபாடு, மறைந்த தலைவனை கடவுளாக்கி வழிபடுதல், உயிரோடு இருந்தபொழுது வழிநடத்தியது போல், இறந்த பின்னும் வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கை போன்றவையே கடவுள் வழிபாட்டுக்கும், “பய’’பக்திக்கும் அடிப்படையாக அமைந்தன. நாளடைவில் மரணமடைந்தவர்களைப் புதைத்த இடங்களே கோவில்களாக வழிபடும் இடங்களாக மாறிப்போயின.

நமது நாட்டில் ஆரிய(பார்ப்பன) ஊடுருவலுக்குப்பின் புதிய, புதிய தெய்வங்கள் படையெடுத்தன. குலதெய்வ வழிபாடுகள் ஊரைவிட்டே துரத்தப்பட்டு, ஊருக்கு வெளியே ‘சூத்திர’சாமிகளாக மாறிப்போயின. நம் முனியப்பனும், மதுரை வீரனும், சுடலையாண்டியும், மாரியாத்தாக்களும் ஊருக்கு வெளியே உட்கார வைக்கப்பட்டன. ஆரியப் பார்ப்பனர்களின் தெய்வங்கள் ஊருக்குள் பெரிய, பெரிய கோயில்கள் கட்டப்பட்டு அதில் அமர வைக்கப்பட்டன. ஆரம்பத்தில் மரணமடைந்தவர்கள் தெய்வங்களாகக் கருதப்பட்டாலும் ஆரியப் பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட நம் மக்கள் மரணமடைந்த-வர்கள் ஆவிகளாகவும், பேய்களாகவும் மாறியிருப்பதாக நம்ப வைக்கப்பட்டனர்.
இதுபோன்றே உலகின் பல பகுதிகளிலும் நம்பிக்கைகள் மாறுபட்டன. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஆவிகள், பேய்கள் பற்றிய பயம் பல வகைகளிலும் பரப்பப்பட்டன. மதங்களும், மதத்தலைவர்களும், தங்கள் சுயநலத்தை முன்னிலைப்படுத்தி இந்த நம்பிக்கைகளை குறையாமல் பார்த்துக்கொண்டனர் –  பார்த்துக் கொள்கின்றனர். நாகரிகமும், அறிவும் வளர்ந்
துள்ள மேலை நாடுகள் தொடங்கி, படிப்பறிவில்லாத பழங்குடிகள் வாழும் ஆப்ரிக்கா கண்டம் தாண்டி கீழை ஆசியா நாடுகளிலும் இந்த மூடநம்பிக்கைகள் பரவலாக உள்ளன.
நம் நாட்டிலோ சொல்லவே வேண்டாம். ஆவிகள், பேய்கள் பற்றிய பயம், நோய் வந்தால் அதை மருத்துவரிடம் காண்பிக்காமல் “பேய் சேட்டை’’ என்று நம்புவது போன்றவை கிராமப்புறத்து படிக்காத ஏழை பாமர மக்களிடம் இன்றளவும் நீக்கமற நிறைந்துள்ளன. இதன் விளைவாகவே கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் ஊருக்கு வெளியே உள்ள காவல் தெய்வங்கள் கோயில்களிலும் பேய் ஓட்டுவது, ஆவிகளைத் துரத்துவது போன்ற செயல்பாடுகள் வெற்றிகரமாக பூசாரிகளால் நடத்தப்படுகிறது.

இதில் மதவேறுபாடுகள் இல்லை. பல தேவாலயங்களில் பாதிரியார்கள் யேசுவின் திருநாமத்தை(?) ஜபித்து பேய், ஆவிகளை ஓட்டுவதைப் பார்த்திருக்கிறோம். அதேபோல் அவர்கள் “பரிசுத்த ஆவிகள்’’ பற்றிப் பேசுவதையும் பலமுறை கேட்டிருக்கிறோம். முஸ்லிம்கள் தர்காவில் பேய் ஓட்டுவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த எல்லாஇடங்களிலும் ஒரு பார்ப்பானோ, பார்ப்பனப்பெண்ணோ பேயாடி நாம் பார்த்திருக்கவே முடியாது. அதேபோல் பேயாடுகின்ற ஆண்களையும் நாம் பார்த்திருக்க முடியாது. மரணத்தால் ஏற்படும் பயம், பலவித கற்பனைகள் வளர காரணமாகின்றன. அதையும் மக்கள் முழுமையாக நம்புகின்றனர். மரணமடைந்தவர்கள் “உயிர்’’ போன உடன், அந்த உயிர் உடலைவிட்டு வெளியேறி, அதே அறையில் சில மணி நேரங்கள் இருந்து அனைவரையும் கவனிக்கிறதாம்.

மதவாதிகள் உயிரை, “ஆன்மா’’ என்றே குறிப்பிடுகின்றனர். உடல்தான் அழியுமே ஒழிய, உயிரோ, ஆன்மாவோ அழிவதில்லை என்று இவர்கள் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகின்றனர். பேய் இருப்பதாகவும், ஆவிகள் பிடித்து ஆட்டுவதாகவும் கூறும் எந்த மதவாதி
யும், ஆன்மாவைப் பற்றி பேசும் எந்த ஆன்மிகவாதியும் இதுவரை பேய்களையோ, ஆவிகளையோ, ஆன்மாவையோ பார்த்திருப்பார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

இயற்கைப் பேரழிவுகளால், பூகம்பம், ஆழிப்பேரலை(சுனாமி) வெள்ளப்பெருக்கு, பனிச்சரிவு அடைமழை போன்றவற்றால் அழிந்தவர்கள் எத்தனை லட்சங்கள்? விபத்துக்கள் உண்டாக்கிய மரணங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

இதுதவிர இயல்பான, இயற்கை மரணங்களில் எண்ணற்றோர் மறைந்தனரே! இத்தனை பேரும், ஆவிகளாகவும், பேய்களாகவும் உலவும் நிலை உண்மையானால் இந்தப் பூமிப் பந்தில் அவை மட்டுமே நிறைந்திருக்கவேண்டும். நமக்கு இடமே இருந்திருக்காது. ஒரே, ஓர் உயிரியான மனித குலத்தில் மட்டும் இத்தனை கோடி இறப்பு  இழப்பு நிகழ்ந்ததென்றால், மற்ற உயிரிகளான, மிருகங்கள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள்,

நீரிலும் நிலத்திலும் வாழும்உயிரினங்கள், பூச்சிகள், புழுக்கள் என்று உலகில்
உள்ள அனைத்து உயிர்களும் ஒருநாள் இறந்துவிடுகின்றனவே! அந்த உயிர்கள் எல்லாம் ஏன் ஆவியாக மாறி அலைவதில்லை. உடலைவிட்டு உயிர் பிரிகிறது, என ‘உயிர்’ என்னும் சொல்லாடல்வழக்கில் உள்ளதே! மதவாதிகள் இதையே ‘ஆன்மா’ என்றும், “ஆவிகள்’’ என்றும், “பேய்’’, ‘பிசாசு’என்றெல்லாம் கூறிப் பயமுறுத்தி ஏய்த்துப் பிழைத்து வருகிறார்களே தவிர, அவையெல்லாம் கிடையாது என்பதே உண்மையாகும்.
இந்தப் பித்தலாட்டக்காரர்களுக்கு மரண அடி தரக்கூடிய டாக்டர் கோவூர் அவர்களின் ஆவி உலகம் எனும் நூலை வாங்கிப் படியுங்கள்; தெளிவடையுங்கள்.
சிந்திப்போம், சந்திப்போம்!!