ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் செயல்பாடு என்ன?

2023 Uncategorized பிப்ரவரி 16-28, 2023 மற்றவர்கள்

அதன் மூளையாகச் செயல்படுவது யார்?

இதன் தலைவர் நேதன் ஆண்டர்சன் ஆவார்.
கன்னெக்ட்டிகட் பல்கலைக் கழகத்தில் இண்டர்நேஷனல் பிசினஸ் படிப்பை முடித்துவிட்டு மான்ஹாட்டன் பகுதியில் வாழ்ந்து வந்தார் நேதன் ஆண்டர்சன். படித்த படிப்புக்கு ஏற்ப FactSet Research Systems Inc என்ற நிறுவனத்தில், பொருளாதாரத் துறையில் தனது பணியைத் தொடங்கினார். இஸ்ரேலில் சில காலம் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகவும் இவர் பணியாற்றியதாக ராய்ட்டர்ஸ் தளம் தெரிவிக்கிறது. இந்த அனுபவம் நேதனுக்கு அழுத்தமான சூழ்நிலைகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், சிந்திக்கும் கூர்மைத் திறனையும் கற்று கொடுத்திருத்திருக்கிறது.

கார்ப்பரேட் வகைகளின் முழு ஆதரவாளரான நேதன், பொருளாதார ரீதியாக அந்த வகைமை செய்யும் மோசடிகளை மட்டும் ஏற்கத் தயாராக இல்லை. கார்ப்பரேட் என்னும் நல்ல கட்டமைப்பை இந்த மோசடிகள் கெடுப்பதாக அழுத்தமாக நம்பினார். எனவே, கார்ப்பரேட் மோசடிகளை அம்பலப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தார். அதற்கான வேலைகளில் இறங்கினார்.
கார்ப்பரேட் உலகில் நடைபெறும் பொருளாதார மோசடிகளை அம்பலப்படுத்துவதுதான் தனது இலக்கு என்று முடிவெடுத்த நேதன் ஆண்டர்சன், இதன் ஒரு பகுதியாக 2017ஆம் ஆண்டு ‘ஹிண்டன்பர்க்’ என்னும் நிறுவனத்தை நியூயார்க்கில் தொடங்கினார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் புரியும் முறைகேடு
களை தடயவியல் ரீதியில் ஆராய்ந்து பொது வெளிக்குக் கொண்டு வருவதுதான் இந்த ‘ஹிண்டன்பர்க்’ நிறுவனத்தின் நோக்கம்.
நிறுவனங்களின் கணக்கு வழக்கு முறைகேடுகள், தவறான நபர்கள் நிருவாகத்தின் முக்கிய பதவிகளில் இருப்பது, கம்பெனி தொடர்பான பரிமாற்றங்கள் ரகசியமாக வைக்கப்படுவது அல்லது பொதுவெளியில் அறிவிக்கப்படாமல் இருப்பது, முறைகேடாக வியாபாரம் செய்வது, முதலீட்டாளர்கள் மற்றும் அரசுத் தரப்பை ஏமாற்றுவது, ஒரு நிறுவனத்துக்குள் நடந்திருக்கும் நிதி முறைகேடுகள்… போன்ற பிரச்சினைகளை நேதன் ஆண்டர்சன் தலைமையிலான ‘ஹிண்டன்பர்க்’ நிறுவனம் ஆராய்ந்து வெளியிடுகிறது.
அதாவது ‘ஹிண்டன்பர்க்’ குறிவைப்பதே ‘மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளை’த்-தான்.
இதுவரை ‘ஹிண்டன்பர்க்’ மேற்கொண்ட ஆராய்ச்சிகளிலேயே மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது நிகோலா குழுமத்தின் மோசடிகள்தாம்.

கடந்த செப்டம்பர் 2020ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மோசடிகள் மீது மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டது ‘ஹிண்டன்பர்க்’-. தொழில்நுட்ப விவகாரங்களில் நிகோலா டிரக் நிறுவனம் தன் முதலீட்டாளர்களை ஏமாற்றி விட்டதாக ‘ஹிண்டன்பர்க்’ நிறுவனம் கூறியது. ‘நிகோலா நிறுவனம் தயாரித்த டிரக் அதி வேகமாகப் பயணிப்பது போன்ற காணொளி உண்மையானதுதானா?’ என நேதன் ஆண்டர்சன் கேள்வி எழுப்பினார்.
அதோடு, நிகோலா டிரக் ஒன்று மலையில் இருந்து உருண்டு விழுந்ததாகவும் பிற்காலத்தில் தெரிய வந்தது. இது, நிகோலா நிறுவனம், தன் முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாக எழுந்த சர்ச்சைக்குக் காரணமானது. அதனைத் தொடர்ந்து பல பங்குச் சந்தை தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நிகோலா நிறுவனர் ட்ரெவர் மில்டன் குற்றவாளி என அமெரிக்க ஜூரி தீர்ப்பளித்தார். அதே போல அமெரிக்காவின் பங்குச் சந்தையை நெறிமுறைப்படுத்தும் எஸ்.இ.சி. அமைப்புக்கு 125 மில்லியன் அமெரிக்க டாலரைச் செலுத்தி இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது நிகோலா நிறுவனம்.
இந்த விஷயத்திலும் பங்குச் சந்தை முக்கிய இடம் பிடித்தது. அதாவது இப்போது இந்திய பங்குச் சந்தையில் என்னவெல்லாம் நடைபெற்று வருகிறதோ, அதே நிகழ்வுகள் கமா, ஃபுல்ஸ்டாப் மாறாமல் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதமும் அமெரிக்க பங்குச் சந்தையில் நிகழ்ந்தன!

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 16 நிறுவனங்களின் மோசடிகளை வெளிக் கொணர்ந்துள்ளது ‘ஹிண்டன்பர்க்’ நிறுவனம்.