கட்டுரை: அரசியல்வாதிபோல் ஆளுநர் நடந்துகொள்வதா?

2023 கட்டுரைகள் ஜனவரி 16-31 ,2023

கி.வீரமணி

கடந்த 9.1.2023 அன்று இவ்வாண்டிற்குரிய தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் உரையாற்றித் தொடங்கி வைக்க வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி
அவர்கள் நடந்துகொண்ட முறை, மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அரசிற்கும், அதன் அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவமானம் ஏற்படுத்தும்-படியாக அமைந்தது.
வழக்கமான மரபுப்படி சட்டப் பேரவைத் தலைவர், செயலாளர் வரவேற்க, அமைச்சரவை தயாரித்த அரசின் கொள்கை உரையை, திட்டங்களை, தமிழ்நாடு அரசின் சாதனைகளை அவையோர்மூலம் நாட்டு மக்களுக்குப் பறைசாற்றுவது ஆளுநர் அறிக்கையாகும். அவர் எழுதிய உரை அல்ல; அமைச்சரவை தயாரித்துக் கொடுக்கும் உரையாகும்.
இதனை சட்டப் பேரவையில் ஆளுநர்-கள் வழமையாக வாசிப்பதற்குமுன், அமைச்-சரவையால் தயாரிக்கப்பட்ட அவ்வுரையின் வரைவு நகலை (Draft Speech) ஆளுநருக்கு அனுப்பி, அவரது இசைவினைப் பெற்றே இந்த உரை ஏற்பாடு செய்யப்படும்; தற்போதும் அவ்வாறே செய்யப்பட்டுள்ளது.

உரை நிகழ்த்தி முடிந்து, ‘நாட்டுப்பண்’ பாடி, எல்லோரும் எழுந்து நின்று, பிறகே ஆளுநர் விடை பெறுவது இதுவரை இருந்த நடைமுறை.
அரசியல் கட்சிகள் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்வதைப் புரிந்துகொள்ள முடியும்; ஆனால், ஆளுநர் அதைச் செய்யலாமா? ‘‘நானும் எதிர்க்கட்சிகளோடு சேர்ந்துவிட்டேன்’’ என்று காட்டுகிறாரா? அதற்கான உரிமை உண்டா என்பது முக்கிய கேள்வியாகும்.
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இப்படி வெளிநடப்பு செய்து, அவையை அவமதித்து – ஆளுநர்கள் வெளியேறிய வரலாறு உண்டா?
சட்டப்பேரவை மரபினை மிதித்ததோடு ஆளுநர் மாளிகையிலிருந்து -தாம் நடந்து-கொண்ட ஜனநாயக விரோத, அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்-பான நடவடிக்கைகளை நியாயப்படுத்த ஒரு விளக்க அறிக்கையொன்றைத் தந்துள்ளது ‘‘ராஜ்பவனம்.’’

ஆளுநரை நோக்கிய கேள்விகள்!
நாம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை நோக்கி சில கேள்விகளை முன்வைக்கிறோம். அதற்குத் தெளிவான விளக்கம் அளிக்கட்டும் அவர்.
மாண்புமிகு ஆளுநர் அவர்களே,
1. உங்களுடைய பதவி மக்களால், உங்களுக்குக் கிடைத்த பதவியா?
தேர்வின்மூலம் கிடைத்ததா?
நியமனம்மூலம் கிடைத்த பதவியா?
2. தமிழ்நாடு மக்கள் வரிப் பணத்திலிருந்து ஊதியம் பெறும் நீங்கள் அரசு ஊழியரா (Public Servant) – _ இல்லையா?
3. இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 159-இன்படி எடுத்த பதவிப் பிரமாணத்தின்படி அந்த அரசமைப்புச் சட்ட விதிகளைக் கடைப்பிடிக்கவேண்டியவர்; அதற்கு முரணாக நடப்பது – அரசியல்வாதிபோல், ஆட்சிக்கு எதிரான – கொள்கை முடிவு
களைக் கூட விமர்சிப்பதில் தொடங்கி, சட்டப்பேரவையில் ஒருமனதாக 1967 இல் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசால் ஒப்புக்கொள்ளப்பட்டு, சென்னை ராஜ்ஜியம் (Madras State) என்பது ‘‘தமிழ்நாடு’’ என்று மாற்றம் செய்து, அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில் இடம்பெற்றுள்ள பெயரை மாற்றிட வேண்டுமா? ‘‘தமிழ்நாடு என்பதற்குப் பதிலாக ‘தமிழகம்‘ என்று அழைக்கப்படவேண்டும்‘’ என்ற ஓர் அபத்தக் கருத்தை அடாவடி அரசியல்வாதியைப்போலக் கூறி, தமிழ் மக்களின் உணர்வுக்கு எதிராக ஒரு கொந்தளிப்பான கொதிநிலையை நாட்டில் உருவாக்கிடத் துடிப்பதன் பின்னணி என்ன?

யாருடைய தூண்டுதல்?
தமிழ்நாட்டு மக்களை வம்புச் சண்டைக்கு இழுப்பது தவிர, வேறு என்னவாம்?
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான ‘‘திராவிட முன்னேற்றக் கழகம்; எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்ற பல எதிர்க்கட்சிகளிலும் திராவிடம் என்ற சொல்லாக்கம் உண்டு என்ற நிலையில், திராவிடம், பிரிவினைவாதம் என்பது உண்மைக்கு மாறான கருத்தினைக் கொண்டது அல்லவா?
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுத் தீயை விசிறி விட்டுக் கொண்டிருப்பது, நாளும் ஒவ்வொரு புதுப்புது சர்ச்சைகளை குறிப்பாக ஆளும் கட்சிக்கு எதிரான பிரச்சினைகளைப் பேசுவது எல்லாம் எவ்வகையில் சரியானது? வகிக்கும் பதவிக்கு முறையானதா?

‘’தமிழ்நாடு வாழ்க’’ என்ற முழக்கம்!
இதனால் ஆத்திரப்பட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சியினர் பலரும், ‘‘தமிழ்நாடு, தமிழ்நாடு’’ என்று முழக்கமிட்டு, தாங்கள் வரும்பொழுது கூறும் நிலையை உருவாக்கியது அதன் விளைவுதானே! தூண்டியவர் நீங்கள்தானே_ – உங்கள் பேச்சுதானே!
Every Action has Its Own Reaction என்ற அறிவியல் விதிக்கேற்ப நடந்ததுதானே அது!
எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்ய உரிமை உள்ளதுபோல, அவர்களது உணர்-வினை கூட்டணிக் கட்சிகள் அறவழியில் வெளிப்படுத்துதல் தவறாகுமா? ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றப்பட்ட அன்று, முதலமைச்சர் அறிஞர் அண்ணா, அப்பெயர் மாற்றத்திற்குப் பின், ‘‘தமிழ்நாடு’’ என்று முழங்க, ‘‘வாழ்க, வாழ்க!’’ என்று முழங்கிய உறுப்பினர்களைக் கொண்ட வரலாறு படைத்த மாமன்றம் அல்லவா இது! மறக்கலாமா அதனை?
அரசு ஊழியரான ஆளுநர் திட்டமிட்டே இப்படிப் பேசினால், அவருக்கு அது தவறு – ‘‘நாங்கள் இதில் உறுதியாக இருப்போம்‘’ என்று காட்ட, அவர் பேசுவதற்குமுன் உறுப்பினர்கள் முழங்குவது எவ்வகையில் தவறாகும்?

அ.தி.மு.க. இனி ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ற எண்ணமோ!
இதற்குமுன்பு ஆளுநர் பேச்சை இடை-மறித்துப் பேசிய _ – வெளியேறிய நிகழ்வுகளைச் செய்தவர்கள் அதை வசதியாக மறந்துவிட்டு, இன்று ஆளுநருக்கு ‘‘வக்காலத்துப்’’ போட்டு – விசித்திரங்களை நியாயப்படுத்துவது விவேகம் உள்ள அரசியல் ஆகுமா?
நாளை இவர்கள் பதவிக்கு வந்தால்,
இப்படி ஒரு நிலையை அப்போதைய ஆளுநர் எடுத்தால், நிலைமை என்ன என்ற தொலைநோக்குச் சிந்தனைகூட இல்லையே!
(ஒருவேளை இனி பதவிக்கே வர முடியாத நமக்கு எதற்கு அப்படிப்பட்ட அதீதச் சிந்தனை என்று நினைத்தார்களோ, என்னவோ!)

ஆளுநர் தயாரித்த அறிக்கையா?
ஆளுநர் உரை என்பது அவரே தயாரிப்பதா?
அமைச்சரவை தயாரிப்பதா?
இதேபோல, ஓர் உரையை, நாடாளுமன்றத்தில் ஆற்ற வரும் குடியரசுத் தலைவர் – அரசின் அறிக்கையை விட்டுப் படித்தால், மாற்றிப் படித்தால், நாடாளுமன்ற ஆளுங்கட்சியினர் செரிமானம் செய்து, மவுனமாக இருப்பார்களா?
அதே நிலைதான் ஆளுநர்களின் நிலை; (இந்த அதிகாரம்பற்றிய விளக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு – பேரறிவாளன் வழக்கு) மாநிலங்களுக்கு எதிரானவற்றை ஏற்க முடியுமா?!
மத்திய அரசு என்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு என்று கூறுவது கூடாதாம்!
‘’The Word  ஒன்றியம்‘ Referred to a sub-district, sub-divisional level structure in the hierarchy and was used for the Union government perhaps with an intention to “belittle” and be “disrespectful” to the Union government.’’என்று கூறி-
யிருக்கிறார் தமிழ்நாடு அரசின் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள்.
எப்படிச் சிரிப்பது என்றே தெரியவில்லை!

Union Government என்ற சொல்லுக்குச் சரியான தமிழ்மொழி பெயர்ப்பு ‘ஒன்றிய அரசு’ என்பதே!
‘மத்திய அரசு’ என்ற சொல், அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரப்பூர்வ சொல் அல்ல.
ஆட்சிகளின் அதிகாரப் பகுப்புகளுக்கு மூன்று பட்டி-யல்களின் தலைப்பு என்ன?
1. ஆளுநர் அரசமைப்புச் சட்ட வரலாற்றையும் புரிந்துகொள்ளத் தவறக்கூடாது.
அரசமைப்புச் சட்டம் இயற்றிய அரசியல் நிர்ணய சபை (Constitutional Assembly) விவாதத்தின்போது, ‘’Central Government என்ற சொல்லுக்குப் பதிலாக Union Government என்ற சொற்றொடரைப் போடவேண்டும்; காரணம், சென்ட்ரல் கவர்ன்மெண்ட் (Central Government) என்றால் ‘’மத்திய அதிகாரக் குவிப்பு’’ என்ற பொருள் வந்துவிடக் கூடும். அதைத் தவிர்க்கவே ‘ஒன்றிய அரசு’ (Union Government) என்ற சொல்லாக்கம் இடம் பெற்றது’’ என்ற பழைய வரலாற்று நிகழ்வு 11.1.2023 தேதியிட்ட ‘இந்து’ ஆங்கில நாளேட்டிலும் வெளிவந்துள்ளது.

தமிழ்நாடு அரசு இலச்சினை புறக்கணிப்பு
திட்டமிட்ட பின்னணியோடு வம்பு வளர்ப்பதற்காகவே – பொங்கல் விழாவை ஏற்பாடு செய்த ஆளுநர் இரவி, அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தை உள்ளடக்கிய, தமிழ்நாடு அரசினைப் புறக்கணித்துள்ளார்.
இது வேண்டாத வேலை அல்லவா?
இவர் எங்கே கவர்னர்? தமிழ்நாட்டுக்-குத்தானே!
இவர் எந்த அரசின் நிதியிலிருந்து ஊதியம் வாங்குகிறார்?
எங்கே குடியிருக்கிறார்? டில்லியிலா?
அதுமட்டுமா?
2. Union List -ஒன்றிய அரசு பட்டியல் என்றுதான் குறிப்பிட்டுள்ளது. Central List என்று அல்ல என்பதை ஆளுநர் படித்துப் புரிந்து கொள்ளட்டும்!
ஒன்றியம் என்றால், அவருக்குச் சொல்லிக் கொடுத்த-வர்கள் ‘Panchayat Union’ என்ற சொல்லை நினைத்துக்-கொண்டு பாடத்தைத் தவறாகச் சொல்லிக் கொடுத்து, இவரும் அது புரியாமல் இப்படி குறுக்குச்சால் ஓட்டு
கிறார்!
இவர் இப்போது பிரச்சாரம் செய்யும் சனா தனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை விளக்க கர்த்தா
வான எம்.எஸ்.கோல் வால்கர் “Bunch of Thoughts’ நூலில் ‘ஞானகங்கை’ என்ற தலைப்பிட்டு, வெளியிடப்பட்டி-ருப்பதிலே ‘’ஒன்றிய அரசு’’ என்ற சொல் முன்பே இடம்- பெற்றுள்ளது- அதுவும் பிரிவினை எண்ணத்தோடு தானா?
எனவே, ஓநாய் _- ஆட்டுக்குட்டி தண்ணீர் குடித்தபோது, ஓநாய் குற்றச்சாட்டு கதைபோல இப்படி உளறாதீர்!
தமிழ் மொழியை அரைகுறையாகக் கற்று பேட்டி கொடுத்து கேலிக்கு ஆளாகியதை எண்ணி, தமிழ் நாட்டு மக்கள் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா?
அடுத்தடுத்து சர்ச்சை நாயகனாக மாறி, தமிழ்நாடு அரசினையும், தமிழ்நாட்டு மக்களையும் தூண்டுகிறாரா?
சந்திக்கத் தயாராவோம்! தயாராவோம்!!