பெண்ணால் முடியும்: 94 வயதில் தங்கப்பதக்கம்!

2022 அக்டோபர் 16-30 2022 பெண்ணால் முடியும்

தள்ளாத இந்த 94 வயதிலும் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு ஒரு தங்கப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கங்களையும் தட்டித் தூக்கியிருக்கிறார். அதுவும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் பக்வானிதேவி இந்தச் சாதனையை அநாயாசமாகப் படைத்-திருக்-கிறார். ஃபின்லாந்து நாட்டில் ‘தம்பேர்’ என்ற இடத்தில் உலக தடகள மாஸ்டர்ஸ் போட்டிகள் நடைபெற்றன. அதில் 100 மீட்டர் ஸ்பிரின்ட் பந்தயத்தில் 24.74 விநாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார்.
அதுமட்டுமா! குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். முன்னதாக டெல்லியில் மாநில அளவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களையும் அள்ளியிருக்கிறார். அத்துடன் சென்னையில் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் போட்டிகளிலும் 3 தங்கப்பதக்கங்களைக் குவித்திருக்கிறார் பக்வானி தேவி.
அரியானா மாநிலம் கிட்கா பகுதியைச் சேர்ந்தவர் பக்வானி தேவி டாகர். விளையாட்டு என்பது இவருடைய குடும்பத்தில் அனைவ-ரோடும் கலந்திருக்கிறது. பேரன் விகாஸ் டாகர் சர்வதேச பாரா அத்லெட் ஆவார். ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருது பெற்ற இவர்தான் தம்முடைய பாட்டிக்கு உற்சாகமும் பயிற்சியும் அளித்துள்ளார். பிறகு போட்டியில் கலந்துகொள்வதற்காக பேரனும் பாட்டியும் ஒன்றாக ஃபின்லாந்து சென்றனர்.

சாதிக்க வேண்டும் என்ற இலட்சியக் கனல் உங்களுக்கிருந்தால் வயதோ சூழ்நிலையோ ஒரு தடையே அல்ல. “ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி உங்களுக்குள் புகுந்துவிட்டால் வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே’’ என்று உற்சாகம் தொனிக்கச் சொல்கிறார் பக்வானி.
இவ்வளவு சாதனைகளுக்கு இன்று சொந்தக்காரராக இருக்கும் இவர் கடந்த ஆண்டு இதே சமயம் தமது விளையாட்டுப் பயணத்தைக் தொடங்ககூட இல்லை. கடந்த டிசம்பர் மாதம்தான் போட்டிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு தமது பயிற்சிகளை கடகடவெனத் தொடங்கி சிகரம் தொட்டிருக்-கிறார். பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வளவு ஒன்றும் எளிதாக இல்லை. பலவீனமாக நான் உணரும்போதெல்லாம் எனது உள்ளுணர்வும் தன்னம்பிக்கையும் என்னுள்ளே இருக்கும். முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டிக்கொண்டே இருந்தன’’ என்று நினைவுகூர்கிறார்.

வெற்றிகளைச் சுமந்துகொண்டு இந்தியா வந்து இறங்குகிற அவர் “உலகளவில் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்ததற்குப் பெருமைப்படுகிறேன். டெல்லிக்குப் பெருமை சேர்த்தாலும் எனக்கு மகிழ்ச்சியே! இன்னும் பல நாடுகளுக்குச் சென்று மேலும் பதக்கங்களை வெல்வேன்’’ என்கிறார்.
இவருடைய இளமையின் ரகசியம் என்னவாக இருக்கும்? “உடற்பயிற்சிகள் செய்வதுடன் காலை மாலை இருவேளைகளும் 5 கி.மீ. நடைப்பயிற்சி மேற்கொள்வேன். பெரிய விளையாட்டு வீரர் ஆக வேண்டும் என்ற என்னுடைய இளமைக்காலக் கனவை நனவாக்க உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் எனக்கு உதவி செய்திருக்கின்றன. அந்தக் காலத்தில் குடும்பச் சூழ்நிலை என்னுடைய இலட்சியத்திற்குத் தடையாக இருந்தது. ஆனால் இப்போது அதே குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறேன்’’ என்கிறார்.