வரலாற்றுச் சுவடு

2022 செப்டம்பர் 1-15-2022 வரலாற்றுச் சுவடு

52 ஆம் ஆண்டில் “The Modern Rationalist”
‘தன்மான இயக்கத்தின்
பகுத்தறிவுப் போர்க் கருவி’
வை.கலையரசன்

“அனைவருக்கும் அனைத்தும்”, “அறிவுக்கு விடுதலை” என்னும் உலகிற்கே பொதுவான சுயமரியாதைத் தத்துவத்தைத் தந்த தந்தை பெரியார், தமது பகுத்தறிவுக் கொள்கைகளை தமிழ் மண்ணைத் தாண்டியும் விதைக்க வேண்டும் என்னும் முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்தார்.
1928ஆம் ஆண்டு “revolt” என்னும் ஆங்கில வார இதழைத் தொடங்கினார். மூட நம்பிக்கைக்கும் சமத்துவமின்மைக்கும் எதிராகக் கொடும் போர் புரிந்தது ‘ரிவோல்ட்.’
இதன் புரட்சிக் கருத்துகள் லாகூரில் இருந்து வெளிவந்த “The light” பம்பாயில் இருந்து வெளிவந்த “The young leberator” நியூயார்க்கில் இருந்து வெளிவந்த The Truth Seeker என்னும் பகுத்தறிவு ஏடு, மலையாள நாட்டில் இருந்து வெளிவந்த “The Guardian” போன்றவற்றின் பாராட்டுகளைப் பெற்றன. அது தொடர்ந்து நடத்தப்பட முடியாமல் நிறுத்தப்பட்டது.
பின்னர் நீதிக்கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் ஒரே நேரத்தில் வழி நடத்த வேண்டிய நிலையில் இருந்த தந்தை பெரியாரால், 1944இல் “The Justicite” என்னும் ஆங்கில வார இதழ் தொடங்கப்பட்டு, சில காலம் அது தன் பகுத்தறிவுப் பணியைத் தொடர்ந்தது. அதுவும் குறுகிய காலத்தில் நிறுத்த வேண்டியதாயிற்று.

அதன் பிறகு 1971ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு The Modern Rationalist  இதழைத் தொடங்கினார்.
அதன் முதல் இதழில் பெரியார் விடுத்த வேண்டுகோள்:
‘த மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ எனும் பெயரிய (மாததி) இதழ் பகுத்தறிவுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களிடையே பகுத்தறிவு உணர்வுகளைத் தூண்டி விடுவதற்கென்று நடத்தப்படுகிறது. நம் நாட்டில் இதைத் தவிர இந்தக் கொள்கைகளுடன் வெளிவரும் வேறிதழ்கள் கிடையாது. எனவேதான் நாம் மூடநம்பிக்கைப் பீடிப்புக்கு இலக்காகியுள்ளோம்.
நம்முடைய சமுதாயத்தின் சமனற்ற தன்மைகளுக்கும் நம்மிடையே நிலவும் உயர்வு – தாழ்வுகட்கும் மூடநம்பிக்கைகளும் மூடநம்பிக்கைப் பரப்பல்களுமே காரணங்களாகும்.
‘த மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ எனும் நமது இதழானது உருவத்தில் சிறியதாக இருந்தாலும் நம் சமுதாயத்தில் நிலவி வரும் மடமையையும் ஏற்றத் தாழ்வுகளையும் ஒழித்தே தீரும். எவ்வாறு ஒரு சின்ன உளி பென்னம் பெரும் கற்பாளங்களை உடைத்துத் தள்ளுகிறதோ, அதைப் போலவே இங்கு நிலவும் சமுதாய முரண்பாடுகளையும் இச்சிற்றேடு தன்னந் தனியாகப் போராடி. வினைமுடிக்கும். எனவே, புத்துலகில் ஒவ்வொருவரின் கைகளையும் இவ்விதழ் எய்தி எழிலூட்ட வேண்டுமென்பதே எனது விழைவு!” என்ற வேண்டுகோளை விடுத்தார்.
பெரியாரின் முயற்சியினைப் பகுத்தறிவாளர் வரவேற்றுப் பாராட்டினர். அமெரிக்காவின் சுலிஃபோர்னியாவில் இருந்து வெளியாகும் ‘Truth Seeker’என்னும் பகுத்தறிவு ஏட்டின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹெர்வி ஜான்சன் குறிக்கத்தக்கது.

“இந்தியாவில் உரிமையுடன் கருத்து வெளிப்படுத்தும் ஒரு பகுத்தறிவுப் பருவ இதழ் மலருவதைக் கண்டு இன்புறுகிறோம்.
கடவுள் என்பது கிடையாது; இயற்கை இகந்தது என எதுவும் இல்லை. மன்பதையின் மதங்கள் அத்தனையும் மாபெரும் ஏய்ப்பு என்பது தோலுரித்துக் காட்டப்பட்டு, மூடநம்பிக்கைக்கு மாற்றாகப் பகுத்தறிவு ஆட்சி புரியுமாறு செய்யப்பட்டுவிட்டால் இவ்வுலகு அய்யாயிரம் ஆண்டுகளின் முன்னேற்றத்தை எய்தி விடும்.
இந்தியாவின் மக்கள் மூடநம்பிக்கை யென்னும் கொடுஞ்சுமையில் இருந்து விடுவிக்கப் பெற்று, முற்றிலும் கற்பனையான மறுவுலக வாழ்க்கை பற்றிய சிந்தனையின் இடத்தில் இவ்வுலக இன்பம் குறித்த குறிக்கோள் அமர்ந்து விட்டால் இந்தியா வியக்கத்தகுந்த நன்மை எய்துவது உறுதி!”

தந்தை பெரியாரின் சுயமரியாதை, மனிதநேய, சமத்துவ, பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி 52ஆம் ஆண்டில் தொடர்கிறது.
ஆசிரியரின் அளப்பரிய சாதனைகளில் இதுவும் ஒன்றாகும். பகுத்தறிவுக் கோட்பாடுகளைப் பரப்பும் ஒரு கொள்கை ஏட்டை ஆங்கிலத்தில் நடத்துவது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல…
சுயமரியாதை உலகைப் படைப்பதில் பெரும் பங்காற்றும் “தி மார்டன் ரேஷனலிஸ்ட்” இதழைப் பரப்பிடுவோம்!
பெரியார் காண விரும்பிய சமதர்ம புத்துலகைப் படைத்திடுவோம்!!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெரும் பணியைப் போற்றிப் பாராட்டுவோம்!!!