சிந்தனை குழந்தைகள் – விளையாட்டுகள் பண்பாடுகள்!

பிப்ரவரி 1-15,2022

இனியன்

பண்பாடு அதுவொரு சிக்கலான அணுகுமுறை என்றே அவ்வப்போது நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால், எதுவெல்லாம் பண்பாடு எனச் சிந்தித்தால், அது சிலந்தி வலையைச் சிக்கெடுத்து நேர் செய்வதற்குச் சமமான கடும் முயற்சி போன்றதே. அதிலும் அவற்றை குழந்தைகளுக்குக் கடத்துதல் என்பதைப் பற்றி சிந்திக்கும் போது கூடுதல் சிக்கல்களே முன் வந்து நிற்கின்றன.

இப்படிச் சொல்வதற்கான காரணங்கள் இல்லாமலில்லை. தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் ஒரு முறை விளையாடச் சென்றிருந்தேன். விளையாடக் குழுக்கள் பிரித்தாக வேண்டும். அனைத்துக் குழந்தைகளையும் உள்ளடக்கிய இரண்டு குழுக்கள் மட்டுமே போதுமானது. ஆனால், அங்கே குழந்தைகள் 5 குழுக்களாகப் பிரிந்து இருந்தனர். ஆண் குழந்தைகளில் 3 பிரிவினர், பெண் குழந்தைகளில் 2 பிரிவினர்.

அங்கிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களை அணுகி விசாரித்த போது, “இங்கே இப்படிதாங்க நிப்பாங்க. அந்த 2 குழுவும் பக்கத்துப் பக்கத்து தெருவில் இருந்து வருபவர்கள். அவர்களைக்கூட ஒரே குழுவாக மாற்றிட முடியும். அப்படி மாற்றும்போதுகூட குழுத் தலைவன் யார் என்னும் போட்டி வரும். மூன்றாவதாக நிற்பவர்கள் காலனிப் பசங்க. அவங்களை நாம உள்ளே கொண்டு வரவே முடியாது. அவர்களும் வரமாட்டார்கள். இவர்களும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அதேதான் பெண் குழந்தைகளுக்கும். அவங்களும் தனியாதான் இருப்பாங்க. பசங்க இருக்கும்போது ஏதாவது செய்தாலோ, இணைந்து நின்றாலோ, மற்றப் பசங்களோடு பேசினால்கூட இங்கிருந்து செய்தி போய்டும். யார்தான் சொல்வாங்கன்னே கண்டுபிடிக்க முடியாது. ஏதாவது பிரச்சனையாகிக் கேட்டால் பாதுகாப்பு, பண்பாடு, கலாச்சாரம், கவுரவம் என்றெல்லாம் பசங்களே பேசுவானுங்க’’ என்றனர்.

அதனால் கொஞ்சம் கூடுதல் கவனத்துடனே அன்றைய நாளை கடக்க வேண்டியிருந்தது. இருந்தும் முயற்சி செய்து இரண்டு குழுக்களாக மட்டுமே விளையாட அனுமதி. அதில் ஆண், பெண் என்றெல்லாம் பிரிக்க முடியாது எனச் சொல்லி, வருபவர்கள் வரலாம், வர விருப்பமில்லாதவர்கள் அமர்ந்து கொள்ளலாம் என்றெல்லாம் பேசி விளையாட முன்வந்தவர்களை மட்டும் வைத்து துவங்கியிருந்தோம். விளையாட்டுகள் துவங்கி நேரம் செல்லச் செல்ல விளையாடாமல் ஒதுங்கி இருந்த கூட்டம் குறைய ஆரம்பித்து, விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. ஆனால், முற்றிலும் இணைந்தார்களா என்றால், நிச்சயம் இல்லை என்பதுதான் பதில்.

அன்றைய நாளும் முடிந்தது. ஆரம்பத்தில் குழந்தைகள் பிரிந்திருந்த நிலையின்போது இருந்த இறுக்கம் நாளின் முடிவில் இல்லை. கூடுமான அளவு ஓர் இணக்கத்தை உணரமுடிந்தது. இருந்தாலும் நாள் முழுக்க ஒதுங்கியே நின்று, எவ்வளவு முயற்சித்தும் களத்துக்குள் வரவே மறுத்தவர்களை அழைத்துப் பேச முயற்சித்ததில் ஒருவர் மட்டுமே பேசினார். ஒதுங்கி நின்றதற்கான காரணம் கேட்ட போது, “வீட்டில் திட்டுவாங்க, ஊருக்குள் தெரிந்தால் திட்டுவாங்க, ஆம்பளப் பசங்களோட வெளையாடக் கூடாது’’ என்றெல்லாம் பதில் வந்தது.

இந்தப் பதில்களைப் பெற்றதோடு கிளம்பி வந்த பிறகும்கூட அன்றைய தினத்தின் ஆரம்ப நிமிடங்கள் கொடுத்திருந்த பயம் காரணமாக அங்கிருக்கும் ஆசிரியரிடம் தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருந்தேன். ஏதாவது பிரச்சனைகள் வந்ததா என்று. நல்வாய்ப்பாக பிரச்சனைகள் ஏதுமில்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு  “எங்களை யெல்லாம் யாரும் இப்படி விளையாட வைத்ததில்லை. மீண்டும் எப்போ பள்ளிக்கு வருவீங்க? நாங்க இப்போவும் விளையாடுறோம்’’ போன்ற நெகிழ்ச்சியான வரிகளுடன் சில கடிதங்கள் மட்டும் வந்திருந்தன. மகிழ்ச்சிதான்.

இதுபோல் பல சம்பவங்கள் வெவ்வேறு வடிவங்களில் அனுபவரீதியில் அனுபவித் திருந்தாலும் இவற்றை இங்கே சொல்லக் காரணம், பேசிய பதின்பருவத்துக் குழந்தைகளிடம் இருந்து வந்த கலாச்சாரம்,  பண்பாடு போன்ற வார்த்தைகள்தாம்!

அவர்களுக்கு அவ்வார்த்தைகள் என்னவாக கற்பிக்கப்பட்டு வருகின்றன. கட்டாயம் பள்ளிகளில் அக்கற்பிதங்கள் கிடையாது. மாறாக, வீடுகளும், வீதிகளுமே அவற்றைக் கற்றுக் கொடுக்கின்றன. ஆனால், அவற்றை கேள்வி கேட்கும் இடங்களாகவும் சரியான அர்த்தங்களைக் கற்பிக்கும் இடங்களாகவும் பள்ளிகள் இருக்கின்றனவா? என்பதை நாம் தான் சிந்தனை செய்து கொள்ள வேண்டும்.

கிராமங்களில் இதுதான் நிலை என்றால், நகரங்களின் தன்மை வேறானதாக இருக்கிறது. இங்கும் இதே பண்பாடு,  கலாச்சாரம் போன்ற பதங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், வேறு வடிவத்தில். அண்மைக் காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் கிளை வைத்துள்ள பிரபலமான தனியார் பள்ளி ஒன்று தனது புதிய கிளைக்கு இப்படியாக விளம்பரம் செய்கிறது. “ஏழாம் வகுப்பு முதல் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனித்தனி கட்டடங்கள்’’ என. அதேபோல் எங்கள் பள்ளியில் வகுப்பில் ஆண்_பெண் குழந்தைகள் ஒன்றாக இருந்தாலும் றிஜிணி வகுப்புகளில் தனித்தனி மைதானத்தில்தான் விளையாட அனுமதிப்-போம். 7ஆம் வகுப்பில் இருந்தே இதுதான் எங்கள் பள்ளியின் விதி எனக் கூறிய பள்ளி நிருவாகி சொன்ன காரணம் பண்பாடு, கலாச்சாரம் என்பதுதான். பெற்றோர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள் என ஆணித்தரமாக அடித்தும் பேசினார். அதே பள்ளியில்தான் குரு பூசைப் பண்பாடு எனச் சொல்லி ஆசிரியர்களுக்கு பாத பூஜையும் குழந்தைகளை வைத்து செய்யவும் வைக்கின்றனர். ஹிந்து மதப் பண்டிகைகளுக்கு குழந்தைகளை வேடமிட்டு வரவேண்டும் எனவும் கட்டாயமும் படுத்துகின்றனர். அதற்கும் பதிலாக, பண்பாட்டையே முன்னிறுத்தி குழந்தைகள் மீது திணிப்பும் நடைபெறுகிறது.

இப்படியாக பண்டிகைகள், பண்பாடுகள் என்றெல்லாம் சொல்லி நடத்தப்படுகின்ற விளையாட்டுப்  போட்டிகள் முதல் அனைத்து விதமான கொண்டாட்டங்களும் சிலருக்கு ஆதிக்கத்தையும், சிலருக்கு அச்சத்தையுமே, சிலருக்கு ஒழுங்கீனத்தையுமே கற்றுக் கொடுத்துக் கொண்டிருகின்றன. இவை சரிதானா என்னும் பகுப்பாய்வை மேற்கொண்டு இங்கு பண்பாடு என்பது சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மீள் கட்டமைப்புகள் செய்திடல் வேண்டும்.

இதுநாள் வரை பண்பாடு எனச் சொல்லப்பட்டு வருபவையெல்லாம் பாகுபாடு-களைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் மத்தியில் அதிகமாகவே அவற்றை ஆரம்பம் முதலே பாகுபாடு புகுத்தப்பட்டு வருகிறது. அவற்றைச் சீர் செய்ய குழந்தைகள் மத்தியில் எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து விதமான விளையாட்டுகளையும் எடுத்துச் சென்று அனைவரையும் விளையாட அனுமதித்து சமத்துவப் பண்பாட்டைக் கொண்டாட்டமாக அனுபவித்து மகிழ்விக்க வழிவகை செய்திடல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *