அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (286)

பிப்ரவரி 1-15,2022

பெரம்பலூர் விவசாயிகள் மாநாடு

கி.வீரமணி

பெரம்பலூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் மாநாடும், சிலைத் திறப்பு நிகழ்ச்சியும் 27.2.1998 அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டேன். பெரம்பலூரில் மதனகோபால சுவாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளின் நலனை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்-பட்டன. விவசாயிகள் சங்க மலரும் வெளியிடப்-பட்டது. பின்பு மண்டபத்திலிருந்து மாபெரும் விவசாயிகள் பேரணி சிலை திறப்பு விழா நடைபெறுகின்ற இடமான பெரம்பலூர் பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த சி.நாராயணசாமி நாயுடு உருவச் சிலையை விவசாயப் பெருமக்களின் வாழ்த்தொலியுடன் திறந்து வைத்தேன். அங்கு உரையாற்றுகையில், “அய்யா நாராயணசாமி அவர்கள் விவசாயி-களுக்காக உழைத்தார். அவர் இன்றைக்கு உருவமாக இல்லாவிட்டாலும் நமக்கு முன்னாலே உணர்வாக இருக்கின்றார். உழுபவர்கள்தான் நாட்டுக்கு அச்சாணி என்று சொல்லிக் கொண்டாலும், அச்சாணி கழன்று கொண்டே போகின்றதே என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. அதே மாதிரி,

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.’ (குறள் – 1033)

இப்படி எல்லாம் குறளைப் பலர் அழகாகப் பேசுவார்கள். ஆனால், நடைமுறையிலே விவசாயிகளினுடைய நிலை என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? விவசாயப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய விவசாயிகளுக்கு உரிமை தர வேண்டும். இங்கு இருக்கும் விவசாயிகள் நெல்லிக்காய் மூட்டையாக இருக்காதீர்! அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே உங்கள் போராட்டமும் வெற்றி பெறும். நீங்கள் நிறைவேற்றிய தீர்மானங்களை வழிமொழியக் கடமைப்பட்டிருக்கின்றேன். விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு முன் வரவேண்டும்’’ என்பன போன்ற பல கருத்துகளை அந்த மாநாட்டில் எடுத்துக் கூறினேன்.

மாநாட்டில் பல்வேறு விவசாய அமைப்பு சார்ந்த சங்கங்கள், விவசாயப் பெருமக்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் கோமாகுடி கு.பிச்சையப்பா இல்ல மணவிழா 1.3.1998 அன்று திருச்சி அரிஸ்டோ ஓட்டலில் நடைபெற்றது. விழாவுக்கு தலைமை-யேற்று நடத்தி வைக்கையில், தி.பிச்சையப்பா _ பி.விசாலாட்சி ஆகியோரின் செல்வி பி.கவிதாவுக்கும், சென்னை கே.அப்பு_ அ.தங்கபாப்பா ஆகியோரின் செல்வன் அ.கணேஷ்குமாருக்கும், இருவரையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினைப் பின்பற்றிக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து நடத்தி வைத்தேன். சிறப்புரையில் மணமக்களை வாழ்த்தியும், சுயமரியாதைத் திருமணத்தின் அவசியத்தையும் எடுத்துக் கூறினேன். விழாவுக்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்களும், கழகப் பொறுப்-பாளர்கள் மற்றும் மணமக்களின் உறவினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெரியார் திடலிலேயே தங்கி, பெரியார் கொள்-கையைப் பரப்புவதையே வாழ்க்கைப் பணியாக செய்து வந்த-வருமான தோழர் சிங்காரம், உடல் நலக்குறைவு ஏற்பட்டு நமது திடல் மருத்துவமனையிலும் பிறகு சுந்தரவதனம் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பயன் தராது, 2.3.1998 அன்று இயற்கை எய்தினார்.

பெரியார் திடல் காப்பாளர் போல் தொண்டு புரிந்த ஒரு தோழர் சிங்காரம் ஆவார். எவரிடத்திலும் கண்டிப்புடன் பேசுபவர்; நமது எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் ‘நமது இயக்கத்தின் கண்ணுக்குத் தெரியாத’ பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களில் இவரும் ஒருவர்!

அம்மா காலத்திலிருந்தே அவர்களிடமும், என்னிடமும், கழகத் தோழர்கள் _ பொறுப்பாளர்களிடமும் மிகுந்த வாஞ்சையுடன் பழகியவர். மாலை நேரம் எழும்பூர் புகைவண்டி நிலையம். இரவு _ பகல் தங்கல் பெரியார் திடல் என்பதே அவரது முகவரி. கையில் ஒரு பை. அதனை எப்போதும் விடமாட்டார்.

நமது தோழர்கள், கழகக் குடும்பத்தவர்கள் அனைவரும் கூடி இறுதி மரியாதை செலுத்தி, அவரை அடக்கம் செய்தோம்! திடலைக் காத்த அந்தத் தீரருக்கு வீரவணக்கம் செலுத்தி நன்றி தெரிவித்தோம்.

திருச்சி துவாக்குடி மலையில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா 9.3.1998 அன்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக துவாக்குடி தெற்கு மலையில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் துவக்கி பொதுக்கூட்டம் நடைபெற்ற துவாக்குடி மலை பெரியார் திடலை வந்தடைந்தது-. விழாவிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் வந்திருந்தனர். சிலைத் திறப்பு இடத்தைச் சுற்றி வண்ண ஒளி விளக்குகளால் பெரியார் உருவம் ஒளிர்விக்கப்-பட்டிருந்தது. அங்கு மறைந்த ‘பெல்’ பொன்னன் அவர்களது படத்தைத் திறந்து வைத்தேன். இறுதியாக பல்லாயிரக்கணக்கான மக்களுடைய வாழ்த்தொலி முழக்கங்களுக்கிடையே தந்தை பெரியார் சிலைக்கு முன்னுள்ள திரையை விலக்கித் திறந்து வைத்து, சிறப்புரையாற்றினேன். கழகப் பொறுப்பாளர்கள் விழாவினை சிறப்பாக அமைத்திருந்தனர்.

மதுரையில் ஜாதி மறுப்புச் சாதனையாளர்-களுக்கு சிறப்பானதொரு பாராட்டு விழா 10.3.1998 அன்று திராவிடர் கழகத்தினரால் நடத்தப்பட்டது. அதில் எனது இணையர் மோகனாவுடன் கலந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் மகேந்திரன் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். மதுரையில் ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்துகொண்ட பல சாதனையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களைப் பாராட்டி சிறப்புச் செய்தோம். நிகழ்வில் ‘தீக்கதிர்’ நாளிதழின் செய்திப் பிரிவில் பணிபுரியும் வி.பரமேசுவரன், சண்முகவடிவு, ஜனதா தள மாநில செயலாளர் க.ஜான்மோசஸ், மேரி, இ.ரெ.பன்னீர்செல்வம், பிரேமலதா, டாக்டர் கயிலைராசன், டாக்டர் ரேவதி மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தங்கும் விடுதி மண்டபம் முழுவதுமே நிரம்பியிருந்தது.

அங்கு வி.பரமேசுவரன் உரையாற்றுகையில், “பொது வாழ்க்கையில் நான் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை. நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருக்கும் திராவிடர் கழகத்தினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சனாதனவாதிகளிடம் அரசு அதிகாரம் சிக்கினால் நாடு நாசமாகிவிடும் என்று தந்தை பெரியார் அவர்கள் அன்றைக்குச் சொன்னது இன்றைக்கு நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணியை தலைவர் வீரமணி அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்து கொண்டு வருகின்றார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வடபுலத்திலும் தந்தை பெரியார் கருத்துகள் பரவி வருவதோடு, சமூகநீதி நிலைநாட்டப்-பட்டதற்கு முக்கியக் காரணமாக வீரமணி திகழ்கிறார்’’ என கழகத்தின் பணிகளை மனதாரப் பாராட்டி உரையாற்றினார். நிறைவாக சிறப்புரையாற்றுகையில் ஜாதி மறுப்புத் திருமணங்களின் அவசியத்தை விளக்கி உரையாற்றினேன்.

தஞ்சையில் கழகத் தூண்களில் ஒருவர் என்று திராவிடர் கழகத்திற்கு 50 ஆண்டு காலத்திற்கு முன்பிருந்தே கருதப்பட்ட, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், தளபதி அழகிரி போன்ற சுயமரியாதை வீரர், தஞ்சை

சி. இராசகோபால் அவர்கள் 16.3.1998 அன்று மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையும் துன்பமும் அடைந்தேன்.

அருமைத் தோழர் இராசகோபால் அவர்கள், 1949இல் இயக்கம் பிளவுபட்ட நேரத்தில் தந்தை பெரியார்தம் உறுதி குலையாத உண்மைத் தொண்டராக, தஞ்சையில் கழகத்தைக் கட்டிக் காத்தவர்.

சீரிய செயல்வீரர், சிறந்த பேச்சாளர், அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களிடத்திலும், அன்னை மணியம்மையார் அவர்களிடத்திலும் மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்டு செயல்பட்ட கழக மாவீரர்.

என்னைப் பொறுத்தவரையில் எனக்கு அவர் மிகவும் உற்ற தோழர். தஞ்சையில் அவரது கடையே, இயக்கப் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது தங்கும் இடம்! எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற பல திராவிட இயக்கத்தின் இன்றைய முன்னணித் தலைவர்களுக்கும் அவர் அன்றைய புரவலர்; உபசரிப்பாளர்!

எந்த எதிர்ப்பையும் கண்டு அஞ்சாத தீரர். அரசியல் சட்டத் தாளைக் கொளுத்தி ஆறுமாதம் சிறைத் தண்டனை பெற்று, ஜாதி ஒழிப்பு சரித்திர முத்திரை பொறித்தவர். தஞ்சையில் இன்றைய கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி போன்ற தோழர்களுடன் தானும் முன்னின்று உழைத்தவர். பாசத்துடன் பழகும் பான்மையர்.

அவர் சில ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே இருக்கும் நிலையில், முதுமை அடைந்தது இயக்கப் பணிகளுக்கு மிகப் பெரும் குந்தகம். இன்று அவரது இழப்போ, இயக்கத்திற்கும், சுயமரியாதை உலகுக்கும் ஈடு செய்ய இயலாத பெரும் இழப்பு ஆகும். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள், தமது 89ஆம் வயதில்  19.3.1998 அன்று திருவனந்தபுரத்தில் இயற்கை யெய்தினார் என்பதை அறிந்து நமது ஆழ்ந்த இரங்கலைத் திராவிடர் கழகத்தின் சார்பில், அவரது குடும்பத்திற்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் தெரிவித்துக்கொண்டோம்.

காங்கிரஸ் அல்லாத முதல் அய்க்கிய முன்னணி மார்க்சிஸ்ட் அமைச்சரவையை இந்தியாவில் அமைத்தவர் அவர்; சிறந்த சிந்தனையாளர்; வரலாற்றை மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆராய்ந்து சிறப்பான நூலை எழுதியவர்.

அவரது மறைவு மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல; முற்போக்குச் சிந்தனை உலகத்திற்கே ஒரு பெரும் இழப்பாகும் என இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், ‘விடுதலை’ மேலாளராக இறுதிவரை பொறுப்பில் இருந்தவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஆகிய பெரியார் அறக்கட்டளையின் உறுப்பினரு-மாகிய திருச்சி சி.ஆளவந்தார் அவர்கள் – தமது 85ஆம் வயதில் 23.3.1998 அன்று நம்மைவிட்டுப் பிரிந்தார் என்ற செய்தி என் செவிகளில் விழுந்தபோது, தேள் கொட்டியது போன்று மிகுந்த துன்பத்தைப் பாய்ச்சிய செய்தியாக அமைந்தது! –

அவருக்கு சில காலமாக உடல்நலக் குறைவு என்றாலும், அவர் இறுதிவரை, நினைவுடனும், அன்றாடம் ‘விடுதலை’ ஏட்டின் செய்தி, அறிக்கை முதலியவற்றைப் படித்து, கருத்துக் கூறும் அளவுக்கு மிகவும் மனத் தெளிவுடனும் இருந்த கொள்கை மாவீரர் ஆவார்!

தந்தை பெரியார் அவர்களுக்கு திருச்சி ரயில்வே தோழர்கள் அணி ஒன்று மிகுந்த கொள்கைப் பற்றுடனும், விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் இருந்த ஒன்றாகும். அந்தக் குழுவினர் 1949-இல் இயக்கம் பிளவுபட்ட போதும், மிகுந்த இராணுவக் கவசம்போல் இயக்கத்திற்குப் பயன்பட்டவர்கள் ஆவார்கள். அக்குழுவின் தலைவர் ஆளவந்தார் என்ற தகுதிக்கு ஆளானவர். அதில் இருந்த ஒரு சிலர் தடுமாற்றத்திற்கும், சபலத்திற்கும் ஆளாகியும், ‘குருவுக்கு மிஞ்சிய சீடர்களாக ஆனபோதிலும் கூட, அய்யா மானமிகு ஆளவந்தார், மறைந்த ஸ்டேஷன் மாஸ்டர் தர்மராஜன், திருவாரூர் தாஸ், மூத்த பெரியார் பெருந்தொண்டர் ‘பி.வி.ஆர்.’ என்று அழைக்கப்படும் பிச்சாண்டர்-கோவில் பி.வி.இராமச்சந்திரன் ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்!

மானமிகு சி.ஆளவந்தார் அவர்கள் கட்டுப்பாடுமிக்க ஒரு மாபெரும் லட்சிய வீரர் ஆவார்! கொள்கையால் மட்டுமே எவரையும் மதிப்பார், தலைமைக்கு அவரைவிட விசுவாசம் காட்டியவர்களைக் காண்பது அரிது! அரிதினும் அரிது!!

அய்யா தந்தை பெரியார் அவர்களால் மிகவும் விரும்பப்பட்டவர், நம்பிக்கைக்குப் பாத்திரமான நாணயமானவர் என்பதால்தான் -_ அய்யா அவர்கள் முன்னின்று நடத்திய எந்த கழக மாநாடு என்றாலும், அதில் டிக்கெட் விற்குமிடத்தில் ஆளவந்தார் குழுவினரிடமே அய்யா நம்பி ஒப்படைப்பார்!

மாநாட்டைக் கவனிக்கும் வாய்ப்புக்கூட அவருக்குக் கிட்டாது; கருமமே கண்ணாயிருப்-பார், அவரது அந்த நாணயம் காரணமாக அவர் ரயில்வேயில் பணியாற்றிய போது பார்ப்பன மேலதிகாரிகள்கூட அவரைப் பெரிதும் மதித்தார்கள். பெரிய அளவில் அவரிடம் பொறுப்பினைக் கொடுத்தார்கள், நிருவாக ரகசியம் என்பதை அவர்தம் குடும்பத்தாரிடமோ, தன்னைத் தவிர வேறு யாரிடமோ வெளியிடாத அவ்வளவு சிறப்பான கட்டுப்பாட்டின் சிகரமாக எந்தப் பொறுப்பிலும் இருந்தவர்!

அம்மா அவர்களுக்கு நெருக்கடி கால பிரகடனத்தின் போது, ஒத்துழைக்க வந்தார்; தொடர்ந்து ‘விடுதலை’க்கு தனது தொண்டினை அளித்து வந்தார்.

எனக்கு மிகவும் நம்பிக்கையான தளகர்த்தராகவும், ஆலோசகர்களில் ஒருவராகவும் இறுதிவரை இருந்தவர். அவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு எவ்வளவு பெரும் இழப்போ, அதைவிட நம் இயக்கத்திற்கு மாபெரும் ஈடு செய்ய முடியாத இழப்பு!

அத்தகைய அபூர்வ லட்சிய வீரர்களை _- கைம்மாறு வேண்டாக் கடப்பாடு கொண்ட கொள்கை வீரர்களை எளிதில் எந்த இயக்கத்திற்கும் காலம் தந்துவிடாது.

இயக்கத்திற்கு தனது தொண்டு என்பதே இலட்சிய வீரர்களின் அணுகுமுறை நம் இயக்கத்தில்.

இயக்கத்தால் தனது _- எனது வாழ்வு, தொண்டு என்பவர்களுக்கு இடமில்லாத ஓர் அற்புத இயக்கம் அய்யா பெரியாரின் இயக்கம்!

இந்த இயக்கக் கொள்கை மாணிக்கங்களில் இன்று ஒன்றை இழந்தோம். ஆறுதல் பெற முடியாமல் அவதியுறுகிறோம்; பகுத்தறிவு வாதிகள் நாம் என்பதால் இயற்கையை எண்ணி, ஆறுதல் பெற்றுத்தானே ஆகவேண்டும்?

வயதில் குறைந்த என்னிடத்தில் அவர் காட்டிய மரியாதை என்னை மெய்சிலிர்க்க வைக்கும்; சங்கடப் படவும் வைக்கும்! அந்த இராணுவக் கட்டுப்பாடு தலைமைக்கு அவர் காட்டிய மரியாதையாகும்; தனிப்பட்ட முறையில் எனக்கு அல்ல என்றே எடுத்துக் கொள்வேன். –

டாக்டர் அய்யப்பன் அவர்கள் திரு.ஆளவந்தார் அவர்களைத் தொடர்ந்து கவனித்து மருத்துவ உதவிகளைச் செய்ததற்கு இயக்கத்தின் சார்பிலும், ஆளவந்தார் அவர்களின் குடும்பச் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது துணைவியாரும், அவரது மகள்களும், அவரது மருமகன்களும் (மகன்களாகவே அவர்கள் அவருக்கு இருந்தனர்) அவரைக் கடைசிவரை காத்தனர். கண்ணை இமை காப்பதுபோல கடமையை முழுமையாக ஆற்றினர். முழு வாழ்வு வாழ்ந்தார். நம் நெஞ்சங்களில் தொண்டறத்தின் தூய உருவமாக என்றும் வாழ்வார் என்ற துயரத்துடன் அவருக்கு நாம் இயக்கச் சார்பில் வீர வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறினோம்.

சென்னை பெரியார் திடலுக்கு 27.3.1998 அன்று இங்கிலாந்து யு.கே.யார்க் யுனிவர்-சிட்டியைச் சேர்ந்த அம்மையார் மேரிமெனால்ட், இங்கிலாந்து திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தைச் (Educational Open University) சேர்ந்த அம்மையார் பார்பரா அக்சன் ஆகிய மகளிர் இயல் துறையாளர்கள் வருகை தந்தனர். அவர்களை கழகத்தின் சார்பில் வரவேற்று, சால்வை அணிவித்து, தந்தை பெரியாரின் ஆங்கில நூல்களையும் கொடுத்-தோம். பின்னர் பெரியார் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செய்தனர். அருங்காட்சியத்தையும் சுற்றிப் பார்த்தனர். மேலும், தந்தை பெரியாரின் சமூகநீதித் தத்துவங்களை அவர்களிடம் எடுத்துக் கூறினேன். முழுமையாகக் கேட்ட அவர்கள் பெரும் வியப்பும் மகிழ்வும் கொண்டனர். இந்த நிகழ்வின் போது எமரால்டு எம்.டி.கோபாலகிருட்டினன், சேலம் புலவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *