உடல்நலம்: நோய் எதிர்ப்பு சக்தி என்னும் காப்பரன்

ஆகஸ்ட் 1-15,2021

கரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் வாழ்கிறோம். நாள்தோறும் புதிது புதிதாகப் பெயரிட்டு ‘வைரஸ்’ மாற்றமடைந்து வருவதாகத் தொலைக்காட்சி வாயிலாகவும், செய்தித் தாள்கள் மூலமும் அறிகிறோம். நோய்த் தொற்று பரவும் காலத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி என்னும் சத்து உடலில் சரியான அளவு இருப்பின், கரோனா அலைகளிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முடியும்!

ஒரு குறிப்பிட்ட நோயை அல்லது பொதுவாக ஏற்படும் சில நோய்களை நம் உடலே எதிர்த்துப் போராடும். அதற்காக வெளியிலிருந்து சிகிச்சைகளோ, மருந்துகளோ கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி உடலிலேயே இயல்பாக இருக்கும் தடுப்பாற்றல், ‘நோய் எதிர்ப்பு சக்தி’ எனக் கூறப்படுகிறது.

நம் உடலில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளெட்லெட் என மூன்று வகையான செல்கள் இருக்கின்றன. இதில், ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 4,500 _ 11,000 ஆக இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையின் அளவு குறைந்தால், கிருமிகளுக்கு எதிராகப் போராடும் நம் உடலின் ஆற்றல் குறைந்துவிடும். இதனால், ஒருவருக்கு அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம் போன்ற தொற்றுகள் ஏற்படுகின்றன. அவர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது என அர்த்தம். ஒவ்வொரு வயதிலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வேறுபடுகிறது. பிறந்த குழந்தைக்கு, அனைத்து விதமான நோய் எதிர்ப்பு ஆற்றல்களும் தாய்ப்பாலில் கிடைக்கின்றன. பிறகு, முறையான உணவு, ஊட்டச்சத்துகள், உடற்பயிற்சிகள் எனச் சீரான ஒரு வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். வயதானவர்களின் உடலில்நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதால், அவர்களுக்குத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் அறிகுறிகள் என்னென்ன?

முதலில் ஏற்படுவது சோர்வு. சிறு வேலைகளைச் செய்தாலும் உடல் சோர்வாவதை உணரலாம். அது மட்டுமல்லாமல், வானிலையில் மாற்றம் ஏற்பட்டால், தலைச்சுற்றல், வாந்தி வருவது போன்றவை குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியின் அறிகுறிகளாகும்.

அடிக்கடி தொற்று ஏற்படுவதும் மிக முக்கியமான அறிகுறி. சிறுநீரகத்தில் ஏற்படும் சிறு தொற்றுகள், அடிக்கடி வயிற்றுப் போக்கு, ஈறுகளில் வீக்கம் மற்றும் ரத்தம் கசிவது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஜலதோஷம், காய்ச்சல் வருவது இயல்பு. ஆனால், மாதத்துக்கு ஒருமுறை என்றால் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். வெள்ளை அணுக்கள் குறைந்திருந்தால்தான், மாதம் ஒருமுறை அல்லது இருமுறை காய்ச்சல், ஜலதோஷம் வரும். அடிக்கடி ஒவ்வாமை ஏற்படுவது. காயங்கள் ஆற நீண்ட நாள்கள் ஆவது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

¨           உணவில் தேவையான அளவுக்கு மட்டுமே சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

¨           நாட்டுச் சர்க்கரை, தேன், வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றைச் சர்க்கரைக்குப் பதிலாக உட்கொள்வது மிகவும் நல்லது.

¨           காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைக் கழுவி விட்டுத்தான் சாப்பிட வேண்டும்.

¨           மன அழுத்தம் ஏற்பட்டால், வீட்டிலோ நண்பர்களிடமோ பேசலாம். அப்படி முடியாத பட்சத்தில், மனநல மருத்துவரிடமோ ஆலோசகரிடமோ சொல்லலாம். தனிமையில் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். அதனால், முடிந்தவரை தனிமையைத் தவிர்க்கலாம்.

¨           பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பாலே போதுமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்துவிடும்.

¨           கோடைக்காலத்தில் உப்பு சேர்த்த மோர், தர்பூசணி, வாழைத்தண்டு ஆகிய உணவுகளை உட்கொள்ளலாம்.

¨           ஏதேனும் ஓர் உடற்பயிற்சி, விளையாட்டில் ஈடுபடுவது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி, உடலைச் சீராக வைத்திருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

¨           நடைப்பயிற்சி, ஜாகிங், நீச்சல், சைக்கிளிங் போன்ற கார்டியோ பயிற்சிகள் நமது இதயத்தையும் நுரையீரலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

¨           மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மசாலா தூள்கள் ஆகியவற்றை வீட்டிலேயே தயாரிப்பது சிறந்தது.

¨           உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ சூரிய ஒளியிலிருந்து கிடைக்கிறது. இது தோல் நோய்கள் உள்பட பல்வேறு பிரச்சினைகளிலிருந்து காக்கிறது. தினமும் குறைந்தது 15_20 நிமிடங்களாவது வெயில் உடலில் படும்படி இருப்பது மிகவும் நல்லது.

¨           சராசரியாக ஒரு நாளைக்கு நம் உடலுக்கு 50 மி.கி முதல் 60 மி.கி புரதச்சத்து அவசியம். பருப்பு மற்றும் பயறு வகைகள், மாமிச உணவுகள், சோயா பீன்ஸ், கறுப்பு உளுந்து, கொள்ளு, பச்சைப் பயறு, பட்டாணி, ராஜ்மா, கடலைப் பருப்பு ஆகியவற்றில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் உட்கொள்ளலாம்.

¨           மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், ஏலக்காய் போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் மனிதர்கள் தங்கள் சேமிப்பில் பெரும்பகுதியை மருத்துவத்திற்குச் செலவு செய்ய வேண்டிய சூழலில் வரும்முன் காக்கும் முறையில் நமது உணவுப் பழக்கத்தையும் மாற்ற வேண்டும்.

(தகவல்: மகிழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *