பெண்ணால் முடியும் : ஏழ்மையிலும் லட்சியத்தை வென்ற ரேவதி வீரமணி

ஆகஸ்ட் 1-15,2021

மதுரை சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர், 23 வயதாகும் ரேவதி வீரமணி. தனது 4 வயதில் பெற்றோரை இழந்தார். அதற்குப் பின் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறார் ரேவதி. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், 2ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கிப் படித்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு படித்தபோது, காலில் ஷூ இல்லாமல் மாநில அளவிலான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றிருக்கிறார் ரேவதி. அப்போது மதுரை அரசு பந்தயத் திடல்  பயிற்சியாளராக இருந்த கண்ணன், ரேவதியின் திறமையைக் கண்டு பயிற்சியளிக்க முன்வந்தார். தொடக்கத்தில் அவரது பாட்டி ஆரம்மாள் ரேவதியை விளையாட்டுக்கு அனுப்ப முன்வராத நிலையில், அவரிடம் மாணவியின் திறமையைப் பற்றி எடுத்துக் கூறி பின்னர் சம்மதிக்க வைத்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தேர்வு செய்து பயிற்சி அளித்திருக்கிறார் கண்ணன். ரேவதி கல்லூரிப் படிப்பைத் தொடரவும் அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்துள்ளார். கல்லூரிப் படிப்புக்கு மட்டுமன்றி, உணவு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில், ரேவதியின் பாட்டிக்குத் தேவையான ஆதரவையும் வழங்கியிருக்கிறார் கண்ணன்.

தனக்கு கிடைத்த உதவியை முறையாகப் பயன்படுத்திக் கொண்ட ரேவதி, தன் சாதனைப் பயணத்தை 2016 கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் தொடங்கினார். அந்தப் போட்டியில், 100 மற்றும் 400 மீட்டர் தடகளப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தார். பின் 2019இல் ஆசிய அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று, அதோடு 2019இல் உலக சாம்பியன்ஷிப்பிலும் கலந்துகொண்டார்.

இதன் பலனாக, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பாட்டியாலா பயிற்சி மய்யத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்தார். இம்மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 400 மீட்டர் போட்டியின் இலக்கை 53.55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் ஒலிம்பிக் தடகளப் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட தடகளப் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டார்.

தன் சாதனைப் பயணம் குறித்துப் பேசிய ரேவதி, “குடும்பச் சூழலால் பாட்டி என்னை சிறு வயதிலேயே விடுதியில் சேர்த்துவிட்ட நிலையில், பல சிரமங்களுக்கு இடையில் போட்டியில் கலந்துகொண்டேன். ஷுகூட இல்லாமல் வெறும் காலில் போட்டியில் கலந்துகொள்வேன். அதைப் பார்த்த பயிற்சியாளர் கண்ணன், எனக்கு ஊக்கமளித்து தொடர் பயிற்சியும் அளித்தார். தொடர் பயிற்சியால், தற்போது ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளேன். இதில் வெற்றி பெற்று நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பேன்’’ என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட ரேவதி வீரமணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்ததோடு, அவரை ஊக்கப்படுத்தும் வகையில் அவரது பாட்டியை அழைத்து ரூபாய் அய்ந்து லட்சத்துக்கான காசோலையும் வழங்கி வாழ்த்தியுள்ளார்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் கடின பயிற்சியும், விடாமுயற்சியும், நம்மால் முடியும் என்னும் தன்னம்பிக்கையோடும் வறுமையை வென்று சாதனை இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார் ரேவதி வீரமணி.                                                                                  தகவல் : சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *