100கிலோ மூட்டையை தானே தூக்கும் அய்ம்பத்தைந்து வயது பெண்ணின் அதிசய உழைப்பு!

ஜூன் 16-30

“பூ, காய்கறி, பாத்திரம் மட்டுமல்ல… சித்தமருந்துக் கடைகளின் குடோனில் உள்ள மூலிகை, வேர்வகைகள், மரப்பட்டைகள் அடங்கிய 100 கிலோ எடையுள்ள மூட்டைகளைக்கூட அய்ந்து கி.மீ. தூரத்துக்கு அப்பால் உள்ள லாரி செட்களுக்கு தனி ஆளாகச் சென்று ஏற்றி இறக்கி வருவேன்’’ என்று கூறும் சுசிலாமேரி.

“திண்டுக்கல் அருகில் உள்ள கோமையம்பட்டி கிராமம்தான் பொறந்த ஊரு. வாக்கப்பட்ட ஊரு திண்டுக்கல் முத்தழகுபட்டி. வீட்டுக்காரர் ஜோசப். இப்ப என் இரண்டு பெண் பிள்ளைகளோட திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள ஒரு சிறிய வீட்டில் குடியிருக்கேன்’’ என்றார்.

‘பெண்ணாக இருந்தும் நீங்க மூட்டை தூக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?’ என்று கேட்டதற்கு,
“என் கணவர் டிரைசைக்கிள் ஓட்டிதான் எங்க வாழ்க்கை ஓடிக்கிட்டிருந்துச்சு. அந்த நிலைமையிலே கல்யாணமாகி 3 வருஷத்துல அவருக்குப் பார்வை குறைய ஆரம்பிச்சுது. அப்புறம் அவரை தனியா வேலைக்கு அனுப்ப எனக்குப் பயமா இருந்துச்சு. நானும் அவர் கூடவே போக ஆரம்பிச்சேன். அவருக்கு உதவியா சைக்கிளிலேர்ந்து மூட்டை ஏத்தி எறக்குவேன்.

அவரு சைக்கிளை மிதிக்கும்போது, நான் பின்னாடி தள்ளிக்கிட்டே போவேன். இப்படியே நாளாக நாளாக நானும் மெல்ல மெல்ல டிரைசைக்கிள் ஒட்டிப் பழகிக்கிட்டேன். அப்புறம் நாளடைவில் என் வீட்டுக்காரருக்குப் பார்வைக்குறைவு ரொம்பவும் அதிகமாச்சு. அதுக்கப்புறம் நானே டிரைசைக்கிள் ஓட்றது, மூட்டை தூக்கறதுன்னு முழுநேரமா இறங்கிட்டேன். என் வீட்டுக்காரர் சாயங்காலத்துக்கு மேலே வருவார். அதிகமா அவருக்கு வேலை கொடுக்க மாட்டேன்.

“ஒரு பெண் இப்படியொரு வேலையைச் செய்யலாமா?’ன்னு நிறையப்பேர் கேட்டாங்க. ‘திருடுறது, பொய் சொல்றதுதாங்க தப்பு. வண்டியோட்டி உழைச்சு சம்பாதிக்கிறது ஒண்ணும் தப்பில்லை’ன்னு சொல்லிட்டேன். நான் சொன்னது சரிதானுங்களே?’’ என்று நம்மிடம் அபிப்பிராயம் கேட்டவர், “இப்ப 20 வருஷமா இந்த வேலையை மனநிறைவோடு செஞ்சிட்டு இருக்கேன்.

காலைல நாலேமுக்கா மணிக்கெல்லாம் ஸ்டாண்டுக்கு வந்துருவேன். நைட் ஒன்பது மணிவரைக்கும் வேலை பார்ப்பேன். காலைல அஞ்சு மணிக்கு முதல் வண்டி வரும். அதுல பூ, காய்கறி மூட்டைகள் வரும். பூ மூட்டைகளை எங்க ஸ்டாண்டுக்கு எதிர் மாடில இருக்கிற அண்ணா வணிக வளாக பூ மார்க்ட்டுக்கு முதுகுல தூக்கிட்டுப் போய் போடுவேன். மூட்டை சைஸை பொறுத்து முதலாளிங்க கூலி கொடுப்பாங்க.

காய்கறிகளை வண்டில ஏத்துக்கிட்டு காந்தி மார்க்கெட், அரசமர மார்க்கெட்டுக்கு கொண்டு போவேன். அதுக்கும் மூட்டை சைஸை பொறுத்து கூலி கிடைக்கும். இப்படியாக ஒரு நாளைக்கு நானூறிலிருந்து அய்நூறு ரூபா வரைக்கும் கூலியா கிடைக்குது’’ என்ற சுசீலாமேரி, “சார் ஒரு நிமிஷம். அதோ கவர்மெண்ட் பஸ் வந்துருச்சு’’ என்று ஓடினார். பஸ் பின்புற ஏணி வழியாக சரசரவென்று மேற்கூரையில் ஏறி, அதில் இருந்த இரண்டு மூட்டைகளை கீழே தள்ளி ஓரமாக எடுத்து வைத்துவிட்டு வந்தார்.

“வர்ற வருமானத்த வெச்சு ரெண்டு புள்ளைங்களையும் நல்லா படிக்க வெச்சிருக்கேன். மூத்தவ அந்தோணியம்மாள், காலேஜ்ல பி.காம். படிக்கிறா. சின்னவ வேளாங்கன்னி, பிளஸ் டூ எழுதியிருக்கா. ரிசல்ட் வரணும். ரெண்டு பேரும் நல்லா படிக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாம் உழைப்பின் பலன்’’ என்றவர் கண்கலங்கினார்.

அவரது கணவர் ஜோசப், உணர்ச்சிவப்-பட்டு, “எனக்கு, என் புள்ளைங்களுக்கு எல்லாமே அவதான். தாயிக்குத் தாயாகவும் தந்தைக்குத் தந்தையாகவும் இருந்து என்னையும் என் புள்ளைகளையும் காப்பாத்துக்கிட்டு இருக்கா’’ எனச் சொல்லி சுசீலாமேரியின் கைகளை நெகிழ்ச்சியுடன் பற்றினார்.
பெண்ணால் எதுவும் முடியும் என்பதற்கு இவர் ஒரு சான்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *