மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் மக்கள் 7,21,38,958

ஜூன் 16-30

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக 1872 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. அதனைத் தொடக்கமாகக் கொண்டு தற்போது 2011ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பு 15 ஆவது கணக்கெடுப்பாகும். அதன் விவரங்களைத் தற்போது அரசு வெளியிட்டுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி (2011 மார்ச் 1 அன்று உள்ளவாறு)  தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர்கள் உள்ளனர். இதில், ஆண்களின் எண்ணிக்கை 36,158,871 பெண்களின் எண்ணிக்கை 35,980,087 மொத்த மக்கள்தொகையில் பெண்களைவிட 1,78,784 ஆண்கள் அதிகமாக உள்ளனர்.

நகர்ப்புறங்களில் 3,49,17,440 பேர்களும் கிராமங்களில் 3,72,29,590 பேர்களும் வசிப்பதாகப் பதிவாகியுள்ளது. அதாவது, 2011ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் 23 லட்சம் பேர்களும் நகர்ப்பகுதிகளில் 74 லட்சம் பேர்களும் அதிகரித்து தற்போது 97 லட்சம் மக்கள் அதிகரித்துள்ளனர்.

46.5 லட்சம் மக்களுடன் சென்னை மாவட்டம் மாநிலத்தில் முதலாவது இடத்திலும் 39.99 லட்சம் மக்களுடன் காஞ்சிபுரம் மாவட்டம் 2ஆம் இடத்திலும், 39.3 லட்சம் மக்களுடன் வேலூர் மாவட்டம் 3ஆம் இடத்திலும் உள்ளன. பெரம்பலூர் மாவட்டம் 5.6 லட்சம் மக்களுடன் கடைசி இடத்தில் உள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சியில் கிராமப் பகுதிகள் 15.6 சதவிகிதத்தையும் நகர்ப்பகுதிகள் 27 சதவிகித வளர்ச்சியையும் பெற்றுள்ளன. நீலகிரி மாவட்டத்தின் மக்கள் தொகை 3.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. தற்போது, 6 வயதிற்குட்பட்ட 68,94,821 ஆண் குழந்தைகளும் 35,42,351 பெண் குழந்தைகளும் உள்ளனர். 33,52,470 தாழ்த்தப்பட்டோர் (ஷெட்யூல்டு வகுப்பினர்) உள்ளனர். இது, 2001ஆம் ஆண்டைவிட 26 லட்சம் அதிகரித்திருப்பதுடன் வளர்ச்சி விகிதமும் 21.8 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.

பழங்குடியினர் 7,94,697 பேர்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 1.4 லட்சமாக அதிகரித்துள்ள இவர்களின் வளர்ச்சி விகிதம் 22 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.

எழுத்தறிவுள்ளவர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் முதலிடத்தில் கன்னியாகுமரியும் (91.7%), இரண்டாமிடத்தில் சென்னையும் (90.2%), மூன்றாமிடத்தில் தூத்துக்குடியும் (86.2%) உள்ளன. கடைசி மூன்று இடங்களில் கிருஷ்ணகிரி (71.5%), அரியலூர் (71.3%), தர்மபுரி (68.5%) மாவட்டங்கள் உள்ளன.
சென்னை மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 26,553 பேர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,111 பேர்களும், திருவள்ளூரில் 1,098 பேர்களும் வசித்து வருகின்றனர்.

நீலகிரியில் ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 287 பேர்களும், சிவகங்கையில் 316 பேர்களும் வசித்து வருகின்றனர்.

தமிழகத்தில் எழுத்தறிவுள்ளவர்கள் 5,18,37,507 பேர்கள் உள்ளனர். இது 80.1 சதவிகிதமாகும். வேலை செய்யும் 28,84,681 பேர்களில் 42.5 சதவிகித மக்கள் விவசாயம் செய்பவர்களாகவும் 96 லட்சம் மக்கள் விவசாயக் கூலிகளாகவும் உள்ளனர். 2001ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 8.7 லட்சம் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தும் விவசாயக் கூலி வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 9.7 லட்சமாக அதிகரித்தும் காணப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்து தொழில் செய்வோர் எண்ணிக்கை 1.4 லட்சமாக குறைந்தும் மற்ற வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்தும் பதிவாகி உள்ளதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறையின் தமிழ்நாடு இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், 1,000 ஆண்களுக்கு நிகரான பெண்கள், 996 என்று உள்ளது. இந்த விகிதம் கிராமப்புறங்களில், 993 எனவும், நகர்ப்புறங்களில், 1,000 எனவும் உயர்ந்துள்ளது. கோவை, சிவகங்கை, பெரம்பலூர், வேலூர், விருதுநகர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சை ஆகிய 16 மாவட்டங்களில், ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளனர்.

பெண்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில், நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 1,000 ஆண்களுக்கு, 1,042 பெண்கள் உள்ளனர். தஞ்சையில், 1,035 பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,025 பெண்களும் உள்ளனர்.
பெண்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில், தருமபுரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 1,000 ஆண்களுக்கு, 946 பெண்களே உள்ளனர். அடுத்து, சேலத்தில், 954 பெண்களும், கிருஷ்ணகிரியில், 958 பெண்களும் உள்ளனர் என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளதாக அதன் இயக்குநர் கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *