உற்சாக சுற்றுலாத் தொடர் – 21

டிசம்பர் 16-31

– மருத்துவர்கள் சோம&சரோ இளங்கோவன்

வரலாற்றில் பலவற்றைப் படித்திருக்-கின்றோம்! அமெரிக்க வரலாறு ஒரு உழைப்பின் சிகரம் என்று தான் சொல்ல வேண்டும். 200 ஆண்டுகளில் பல அற்புதங்களைப் படைத்துக் காண்பித்துள்ளனர்! அந்த உழைப்பையும் வளர்ச்சியையும் நேரில் காண்பது தான் எங்கள்  வட மேற்கு அமெரிக்கப் பயணமாக இருந்தது.

கலிபோர்னியாவிலிருந்து அடுத்த வடக்கு மாநிலமான ஆரிகனுக்குச் (Oregan) சென்றோம். அந்த மாநிலம் உருவானதே அமெரிக்காவின் வளர்ச்சியின் ஒரு எடுத்துக் காட்டாக அமையும். கிழக்கு மாநிலங்களான நியுயார்க், பென்சில்வேனியாவிலிருந்து  நடுப்பகுதி மாநிலங்களான இல்லினாய், மிசவுரி வந்தவர்கள் பின்னர் மேற்கு நோக்கிச் சென்றனர்.

கலிபோர்னியாவில் தங்கம் கிடைக்கின்றது என்றதும் அங்கே பலர் விரைந்தனர்! தங்கம் கிடைத்தைவிட பெரும் வளர்ச்சியால் தங்கத்தை வாங்க வழி செய்து கொண்டனர். அது போலவே அமெரிக்காவின் சிறந்த பகுத்தறிவுத் தலைவரான ஜெஃபர்சன் 1803இல் அமெரிக்காவின் ஆறுகளையும் ஏரிகளையும் வணிகத்திற்காகப் பயன்படுத்தும் வழிகளைக் கண்டறிய ஆராய்ச்சிக் குழுக்களை அனுப்பினார். அத்துடன் மிகவும் பணக்கார வணிகர் ஆச்டர் மிருகங்களின் தோல்களிலான (fur) கம்பளி மேலாடைகள் நிறுவனத்திற்கு வேண்டிய மிருகங்கள் மேற்கு மாநிலங்களில் மிகுதி என்பதால் ஆட்களை அனுப்பினார் . இதுவே “ஆரிகன் பயணம்’’ என்ற பெரிய மக்கள் குடியேற்றத்திற்கு வழி காட்டியது .ஒற்றையடிப் பாதையாக ஆரம்பித்து இன்று பெரிய நான்கு வழி சாலைகளில் நாங்கள் பயணம் செய்யுமாறு வளர்ந்துள்ளது.
1803இல் அங்கு சென்று பார்த்தால் ஒரே சாக்கடை போன்ற இடந்தான் நிறைந்திருந்தது!

ஆனால் அங்கு மரங்கள் அடர்ந்திருந்தன! இரண்டு ஆறுகள் ஓடின .கொலம்பியா ஆறு மிகவும் பெரிதாக உள்ளது. அவ்வளவுதான்! மரம் வெட்டுந் தொழிலும், மரத்தை ஆற்றின் வழியே கடலுக்கு எடுத்துச் செல்லவும் வழியும் கண்டனர். அதுவே பெரிய வணிகமாகி போர்ட்லேண்ட் என்ற வணிக நகரம் ஆகி விட்டது. அமெரிக்காவின் பட்டதாரிகள் மிகுதியாக வாழும் நகரங்களில் இரண்டாவது இடம் போர்ட்லேண்டிற்கு! அதன் விளைவு தான் அமெரிக்காவிலேயே மிகுதியாக 42% மக்கள் மத நம்பிக்கையற்றவர்களாக அங்கே இருக்கின்றனர்! படித்தது மட்டுமன்றி பகுத்தறிவுடனும் உள்ளனர்.

பகுத்தறிவுடன் பல சாதனைகள் படைத்துள்ளனர். இன்டெல் (Intel)கணினி நிறுவனம் அங்கு தான் உள்ளது.

திட்டமிட்ட வளர்ச்சி. சாக்கடையாக இருந்த இடம் இன்று சரித்திரங்கள் பல படைத்து விளங்குகின்றது. ரயில், பேருந்து பொது போக்குவரத்து, நல்ல பூங்காக்கள். நடை, மிதிவண்டிப் பாதைகள் என்று மக்களின் தேவைகள் நிறைந்து காணப்படுகின்றன! இயற்கையை வளப்படுத்தி இயற்கையுடன் இணைந்து வாழும் வழி கண்டவர்கள், அங்கே விளையும் பொருட்களைப் பயன்படுத்தி, உணவுக் கூடங்கள், அமெரிக்காவிற்கே இயற்கையாக விளைய வைத்த பழங்கள் அனுப்பும் பழத்தோட்டங்கள், அமெரிக்காவிற்கே வழி காட்டியாக பல முன்னேற்றங்கள் செய்து காட்டியுள்ளனர். வயது மூப்பு, குணப்படுத்த முடியாத நோயினால் வாடுபவர்கள் தங்கள் உயிரை இரண்டு மருத்துவர்கள் சரியென்று சொன்ன பின்னர் மருத்துவ உதவியுடன் முடித்துக் கொள்ளும் உரிமை அங்குதான் முதலில் ஆணையாக வந்தது. இப்போது ஆறு மாநிலங்களில் உள்ளது.

அங்கு எங்கள் மருத்துவக் கல்லூரி தோழர் குடந்தையைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்று வாழ்கின்றார். அவருடன் தங்கி அங்குள்ள அழகிய நீர் வீழ்ச்சிகள் பூங்காக்களுக்குச் சென்றோம்! இளைய தலைமுறை நிறைந்து காணப்படும் நகரமாக இருந்தது. பல வெளிநாட்டு மக்கள் குறிப்பாக வியட்நாம், கொரியா போன்ற நாட்டின் வாழ்கின்றனர். பல்கலைக் கழகமும் மிகவும் சிறப்பு பெற்றது. மருத்துவ ஆராய்ச்சியும் அங்கு புகழ் பெற்று விளங்குகின்றது.

அங்கு இந்தியர்கள் நிறையவே வாழ்கின்றனர். அதை அறிந்து கொள்ளும் படி அமைந்தது அங்கு சென்று பார்த்த திரைப் படம். அங்குள்ள திரயரங்குகளில் தெலுங்கிலும், தமிழிலும் “பாகு பலி” படம் அரங்கம் நிறைய ஓட்டப்பட்டுக் கொண்டிருந்தது! குடும்பங்களாக அங்கே மக்கள் குழுமியிருந்தனர்! தமிழ்ச் சங்கமும் அங்குள்ளது. பல நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

வாழட்டும் தமுழும், தமிழரும் !

மீளட்டும் சென்னை! சாக்கடையிலிருந்து சரித்திரம் படைக்க!

பேரிடரிலிருந்து மக்களைக் காப்பாற்றிய அத்துனை அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *